வீடுகளே பள்ளியாகவா? வீடுகளே கிப்லாவாகவா?

கண்ணியத்திற்கு  கலீல் (நண்பர்) அவர்களே! *கொடுங்கோலர்களின் ஆட்சியிலே வீடுகளே கிப்லாவாக*...!  என்ற தலைப்பில் நீங்கள் எழுதியது வரப் பெற்றேன். *உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக *கிப்லாவாக* *ஆக்கி  என்று எழுதி இருந்தீர்கள். 

https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_94.html


1. பள்ளிகளாக, 2. கிப்லாவாக ஆகிய 2 விஷயத்தில் முதலாவதாக, உங்களுடைய வீடுகளை பள்ளிகளாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்றும் பொருள் கொள்ள முடியாது.

ஏனெனில்  பூமி அனைத்தும் பள்ளிகளாக - தொழுமிடமாக ஆக்கப்பட்டிருக்கிறது என்பது  முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உம்மத்திற்கு  மட்டும் கொடுக்கபட்டிருக்கின்ற தனிச் சிறப்புகளில் ஒன்று,

அதனால் மூஸா நபி உடைய உம்மத்திற்கு வீடுகளை பள்ளிகளாக  ஆக்கக் கூடிய  அந்த தன்மை  நிச்சயமாக இருந்திருக்காது. 

இது குர்ஆன் ஹதீஸ்களுக்கு முரண்படுகிறது. ஆகவே வீடுகளை பள்ளிகளாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்றும் பொருள் கொள்வது சரி இல்லை.


இரண்டாவதாக,  கிப்லாவாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில்,   மூஸா நபி உடைய  சமுதாயத்திற்கு கிப்லாவாக ஆக்கப்பட்டிருந்தது பைத்துல் முகத்திஸ்.


மூஸா நபி உடைய சமுதாயத்தவர்கள்  பைத்துல் முகத்திஸைத்தான் முன்னோக்கினார்கள் என்பதற்கு தெளிவான ஹதீஸ் ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் வீடுகளை கிப்லாவாக - முன்னோக்கும் திசையாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்றும் இந்த வசனத்திற்கு பொருள் கொள்ள முடியாது. இதுவே  சுருக்கமான விளக்கம்.

விரிவான விளக்கம்  விரும்புகிறவர்களுக்காக விரிவாகவும் பார்ப்போம். .10ஆவது அத்தியாயமான சூரத்துல் யூனுஸ் உடைய 87ஆவது வசனமாக உள்ளது. நீங்கள் ஆதாரமாக காட்டி உள்ள வசனம்.

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள கிப்லதன் என்ற வார்த்தைக்கு  தமிழ் மொழி பெயர்ப்பாளர்களில் பாதிப்பேர் பள்ளிகளாக - கிப்லாவாக  என்றே மொழி பெயர்த்துள்ளார்கள். அது போல்தான்  நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள தமிழாக்கமும்  இருந்தது

இந்த மாதிரி மொழி பெயர்ப்புகளில் ஏராளமாகவும் தாராளமாகவும் குழப்பங்களும் முரண்பாடுகளும் உள்ளன. அவற்றை  பட்டியலிட்டால் அவர்களுக்கு தெரியாதா உங்களுக்கு தெரிந்து விட்டது என்று (நண்பர்) கலீல்  அவர்களே!  நீங்கள் கேட்க மாட்டீர்கள்.  இப்படி கேட்டே பழக்கப்பட்டவர்கள்,  பழக்கி விடப்பட்டவர்கள்  கேட்பார்கள். 


மூஸாவுக்கும்அவரது சகோதரருக்கும் வஹீ - தூதுச் செய்தி அறிவித்தோம் என்பதன் மூலம். இந்த வசனம் மூலம் யூதர்களுக்கு இடப்பட்ட கட்டளையை எடுத்துச்  சொல்கிறான் அல்லாஹ் என்பது மிகத் தெளிவு. 

யூதர்களுக்கு பைத்துல் முகத்தஸ் தான் கிப்லாவாக இருந்தது என்பதற்கு குர்ஆன், ஹதீஸ் மற்றும் வரலாற்று நுால்களில் ஆதாரங்கள் உள்ளன. இந்த உண்மையை சிறிதளவு மார்க்கம் தெரிந்தவர்களும் அறிவார்கள். 

யூதர்கள் ஒவ்வொருவரும் தமது வீடுகளைக் கிப்லாவாக ஆக்கலாம் என்பது 10:87 வசனத்தின் பொருள் என்றால், யூதர்களுக்கு பைத்துல் முகத்தஸ் தான் கிப்லாவாக இருந்தது என்ற ஆதாரங்களுக்கு மாற்றமாக ஆகி விடுகிறது.

அது மட்டுமல்ல  இந்த மொழி பெயர்ப்புகள் எல்லாருக்கும் தெரிந்த   ஹதீஸ்களுடன் நேரடியாக மோதுகின்றன.

எனது சமுதாயம் தவிர மற்ற சமுதாயத்தினருக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்படவில்லை. 

வழிபாட்டுத் தலத்தில் மட்டும் தான் அவர்கள் வணங்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டனர். 

இந்தக் கருத்தில் உள்ள ஹதீஸ்கள் புகாரியில் (335, 438) உள்ளன.  முஹம்மது நபி (ஸல்) அவர்களை மட்டும் முழுமையாகப் பின் பற்றக் கூடிய நன் மக்களுக்கு இந்த ஆதாரமே போதுமானது.

நபி மொழிகளை இரண்டாம் பட்சமாக கருதுபவர்களும் புறக்கணிப்பவர்களும். ரசூலுல்லாஹ்வை விட மொழி பெயர்ப்பாளர்களை உயர்வாக கருதுபவர்களும் தான் மேற்கண்ட குழப்பங்களும் முரண்பாடுகளும்  நிறைந்த மொழி பெயர்ப்புகளை சரி கண்டு ஏற்பார்கள்.

பள்ளிகளாக -கிப்லாவாக  என்று மொழி  பெயர்த்தவர்களே  4 விதமான கருத்துக்களில்   உள்ளார்கள். 4 விதமாக மொழி  பெயர்த்து  நான்கு  சாராராக உள்ளார்கள்.  

கருத்து 1. ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி(1) அவர்கள் வீடுகளையே பள்ளிகளாக்கி   என்கிறார்.


றஹ்மத் அறக்கட்டளை (2),  ஸலாமத் பதிப்பகம் (3),  உமர் ஷரீப் காஸிமி(4)  ஆகியோர்  வீடுகளையே   தொழுமிடங்களாக    என்கிறார்கள்.


அன்வாருல் குர்ஆன் E.M.  அப்துல் றஹ்மான்(5)  அவர்கள்  வீடுகளில் தொழுவதற்குரிய  திசையையும்  ஆக்கிக்  கொள்ளுங்கள்  என்கிறார்.

S.S.முஹம்மது அப்துல் காதர் பாகவி அவர்கள் உங்கள் வீடுகளுக்கு கிப்லாவை ஏற்படுத்துங்கள்;  என்கிறார்.


ஆக இந்த  ஆறு  மொழி பெயர்ப்பாளர்களின் வார்த்தைகள் வேறு வேறாக இருந்தாலும் ஒரே  கருத்தில்  (அபிப்பிராயத்தில்) தான் உள்ளார்கள். அதாவது  வீடுகளை  பள்ளிகளாக்கி என்ற கருத்தில்  மட்டும்  ஒன்றாக  உள்ளார்கள்.

அவ்வீடுகளையே   கிப்லாவாகவும் ஆக்கி என்று  சொல்லவில்லை.  அந்த கருத்தில்  இவர்களுக்கு  உடன்பாடு  இல்லை  என்பதும்.  அதிலிருந்து முரண்படுகிறார்கள்   என்பதும்  தெளிவு.


கருத்து 2. I.F.T.யினர்(1) இல்லங்களை கிப்லா ஆக்கிக் கொண்டு  என்கிறார்கள்.  

இலங்கை மவுலவிகள் (2)  (வெளியீடு   தாருஸ்ஸலாம்,   ரியாத்,  (சவூதி1)  அவர்களும்  வீடுகளை     கிப்லாவாக  ஆக்கி  என்கிறார்கள்.


இரண்டாம் சாராரின் இந்த  இரண்டு  மொழி பெயர்ப்புகளில் இல்லங்களை -  வீடுகளை,  என  வார்த்தைகள் வேறு வேறாக இருந்தாலும்  கிப்லா ஆக்கி   என்ற கருத்தில்  மட்டும்  ஒன்றாக உள்ளார்கள்.


இவர்கள்  வீடுகளை  பள்ளிகளாக்கி  என்று சொல்லவில்லை. அந்த கருத்தில்  இவர்களுக்கு  உடன்பாடு  இல்லை என்பதும்  அதிலிருந்து    மாறுபடுகிறார்கள் என்பதும்   தெளிவு.


கருத்து 3. ஜான் டிரஸ்ட் வீடுகளையே பள்ளிகளாக    (ஃகிப்லாவாக)  ஆக்கி  என்கிறார்கள். அதாவது  (ஃகிப்லாவாக)  என்பதை அடைப்புக் குறிக்குள் கொடுத்துள்ளார்கள். 



பஷாரத் பதிப்பகம் A.முஹம்மதுசிராஜுத்தீன் நூரி,  அல்-மதீனா அல்-முனவ்வரா (சவூதி2ஆகியோர்    வீடுகளை   கிப்லாவாக  (பள்ளிகளாக)வும்  ஆக்குங்கள்என்கிறார்கள்.  அதாவது (பள்ளிகளாக) என்பதை அடைப்புக் குறிக்குள் கொடுத்துள்ளார்கள். 

கருத்து 4.  திரீயெம் பிரிண்டர்ஸ், K.முஹம்மது இக்பால் மதனி (சவூதி3), மலிவு பதிப்பு ஆகியோர் வீடுகளையே கிப்லாவாக-பள்ளிகளாக   என்கிறார்கள்.

இதே போல் வீடுகளையே பள்ளிகளாக *கிப்லாவாக* *ஆக்கி  என்று  தஃப்சீர் இப்னு கஸீரில் உள்ளதாக நீங்கள் எழுதி இருந்தீர்கள். அதாவது  வீடுகளையே  கிப்லா, பள்ளி  ஆகிய இரண்டாகவும்  ஆக்கி என்று .


முதல்  சாரார் கருத்துப்படி அவர்கள் வீடுகளையே பள்ளிகளாக்கி  என்பது  குர்ஆன் ஹதீஸுக்கு முரணானது என்றாலும் அவ்வளவு குழப்பம் இல்லை.

இரண்டாம்  சாரார் கருத்து  இல்லங்களை    கிப்லா ஆக்கி .  அவரவர்  வீடுகளே அவரவர்களுக்கு கிப்லா என்ற  இவர்களின் கருத்துப்படி ஒவ்வொருவரும் தங்கள் வீட்டையே கிப்லாவாக ஆக்கிக் கொள்ள வேண்டும். 

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டையே கிப்லாவாக ஆக்கும்போது. வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அதாவது வீதிக்கு வர வேண்டும்.   

வீதியில் நின்று   ஒவ்வொருவரும்    அவரவர்கள்   வீட்டை  முன்னோக்கி தொழ வேண்டும். இது அவர்கள் கூறும் *கொடுங்கோல்  ஆட்சியாளன் பிர்அவ்னுக்கு பயந்து என்ற காரணத்துடனும் முரண்படுகிறது. மேலும் ஏராளமான கிப்லாக்கள் ஏற்படும். 

இது கிப்லா என்றால் ஒரு சமுதாயம் முன்னோக்கும் ஒரே இலக்கை - திசையை குறிக்கும் என்ற காரணத்தோடும் முரண்படுகிறது.

.ஒவ்வொருவரின் வீடும் கிப்லா என்றால் எதுவுமே கிப்லா இல்லை என்றும் ஆகிவிடுகிறது. ஆகவே வீடுகளைக் கிப்லாவாக ஆக்கிக் கொள்வது என்பது பொருளற்ற செயலாக ஆகி விடுகிறது.

3,4 ஆம்   சாரார்  வீடுகளையே  கிப்லாவாகவும் பள்ளியாகவும்   ன்கிறார்கள். இந்தக்  கருத்துப்படி அதாவது   கிப்லா, பள்ளி ஆகிய இரண்டாகவும் அவரவரின் ஒரு வீட்டையே  ஆக்கி  தொழுவது  எப்படி? 

மூன்று சவூதி மொழி பெயர்ப்புகளும் 3 விதமாக உள்ளன என்பதும் இந்த இடத்தில் கவனிக்க  வேண்டிய ஒன்று.


இனி இந்த மொழி பெயர்ப்பாளர்கள் எப்படி தங்களுக்கு தாங்களே முரண்படுகிறார்கள். அவர்களே மொழி பெயர்த்த குர்ஆனின் மற்ற வசனங்களுடன் எப்படி முரண்படுகிறார்கள் என்பதை அடுத்த வெளியீட்டில் பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ். 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு