ஜும்ஆ தொழ பள்ளிவாசல் வேண்டுமா?
முஸ்லிம்களின் முதல் ஜும்ஆ எங்கு நடந்தது?
முதல் ஜும்ஆவை யார் ஆரம்பித்து வைத்து நடத்தினார்கள்?
எப்பொழுது நடந்தது?
எங்கு நடந்தது?
வாடகை இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா?
தனியார் இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா?
சொந்த கட்டிடத்தில் ஜும்ஆ நடத்தலாமா?
கட்டிடமோ மேற்கூரையோ இல்லாத இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா?
ஊருக்கு வெளியே ஜும்ஆ நடத்தலாமா?
வக்பு செய்யப்படாத இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா?
2 ஆவது ஜும்ஆ எங்கு நடந்தது?
குபா பள்ளியில் நடந்தது முதல் ஜும்ஆவா?
குபா பள்ளியில் நடந்தது யாருக்கு முதல் ஜும்ஆ?
ஜும்ஆ உடைய நாள் என்பதால் வெள்ளிக்கிழமை சிறந்ததாக ஆனதா?
வெள்ளிக்கிழமை சிறந்தது என்பதால் ஜும்ஆ நாளாக ஆனதா?
[முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையை ஜும்ஆ உடைய
நாளாக அல்லாஹ் தேர்வு செய்து தந்தது ஏன்?
முந்தைய சமுதாயங்களுக்கு (யூதர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு) ஜும்ஆ நாள் இருந்ததா?
இவற்றுக்கு விடையளித்து ஜும்ஆ ஒரு ஆய்வு என்ற தலைப்பில் 17.02.2017 அன்று துபை
சோனாப்பூர் லேபர் கேம்பில் நாம் ஜும்ஆ உரை ஆற்றினோம்.
அந்த ஜும்ஆவில் கலந்து கொண்ட
பிரமுகர்களும் மவுலவிகளும் உங்கள் ஜும்ஆ
உரை வித்தியாசமாக இருந்தது. பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டோம் என்றார்கள்.
இன்று ஜும்ஆ ஒரு விவாதப் பொருளாக ஆகி விட்டதால் 17.02.2017
அன்று துபை
சோனாப்பூர் லேபர் கேம்பில் ஆற்றிய உரையிலிருந்து முக்கிய பகுதிகளை தருகிறோம்..
...... இத்தனை
சிறப்புகள் மிகுந்த இந்த நாளில் முதன் முதலில் முஸ்லிம்களின் ஜும்ஆ எப்பொழுது ஆரம்பித்தது?
இஸ்லாமிய வரலாற்றில் முதல் ஜும்ஆவை நடத்தி வைத்தது யார்? என்று
கேட்டால் உடனே பெரும்பாலானவர்கள்
தரும் பதில் நபி (ஸல்) அவர்கள் என்பதாகத்தான் இருக்கும்.
முதல் ஜும்ஆ நடந்த பள்ளி குபா என்றும் சொல்வார்கள்.
சூரத்துல் ஜும்ஆ என்ற அத்தியாயத்தில் மதனீ என்று போடப்பட்டுள்ளதால். மதீனாவில்
வைத்துதான் ஜும்ஆ கடமையாக்கப்பட்டது என்று எண்ணுபவர்களும் உண்டு.
நபி (ஸல்) அவர்கள் குபா பள்ளியில் அவர்களது முதல் ஜும்ஆவை
நடத்தினார்கள் என்பது உண்மை. நபி (ஸல்) அவர்கள் அவர்களது முதல் ஜும்ஆவை எங்கு
நடத்தினார்கள் என்பது அல்ல கேள்வி?
முஸ்லிம்களின் முதல் ஜும்ஆ எங்கு நடந்தது? யார்
ஆரம்பித்து வைத்தது? யார் நடத்தினார்கள்? எப்பொழுது
நடந்தது? என்பதுதான் கேள்வி. அறிய வேண்டிய விஷயமும்
கூட.
முதல் ஜும்ஆவை நடத்தும் பாக்கியத்தை அல்லாஹ் ஒரு
ஸஹாபிக்குத்தான் கொடுத்தான். அவர் யார் என்று என்று தெரிந்து கொள்வதற்கு முன்னால்
இஸ்லாமிய வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும்.
40 ஆவது வயதில் நபியாக ஆன முஹம்மது(ஸல்) அவர்கள் மக்காவில்
13 ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள். இந்த 13 ஆண்டுகளும் இருண்ட காலம் என்றால் அது
மிகையாக ஆகாது..
ஐந்து வேளை தொழுகையைக் கூட பகிரங்கமாக தொழ முடியாத காலம் அது.
எனவே நபி(ஸல்) அவர்கள் மக்காவில் ஜும்ஆ நடத்தவே இல்லை. நடத்த முடியவில்லை.
13 ஆண்டுகளாக ஹஜ்ஜுக்கு வரும் மக்களிடம் மடைமைகளுக்கும்
சிலை வணக்கங்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள்.
சிலர் சிந்திப்பார்கள். பலர் நிராகரிப்பார்கள். நபியின் 50
ஆவது வயதில், அதாவது
நபியான பின் 10 ஆவது ஆண்டில் மதீனாவில் இருந்து ஒரு குழு ஹஜ் செய்ய வந்தார்கள்.
அதில் 6 பேர் இடம் பெற்று இருந்தார்கள்.
அந்த 6 பேரையும் பார்த்து நபி(ஸல்)
அவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
அல்லாஹ்வின் அருளால் 6 பேருக்கும் சிறிய மனமாற்றம் ஏற்பட்டது. ஏற்கனவே இருந்த
கொள்கையிலிருந்து தடுமாற்றம் ஏற்பட்டது.
மதீனா திரும்பிய அந்த 6 பேரும் சிலருக்கு எத்தி
வைத்தார்கள். 6 இரட்டிப்பாகி 12 பேராக ஆனார்கள். இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற
முடிவுடன் மக்கா வர முடிவு செய்தார்கள்.
உடனே நபியை பார்க்க வர முடியாது. வந்தால்
மக்கா காபிர்கள் விட மாட்டார்கள். எனவே ஹஜ் நேரத்தில்தான் ஹஜ் செய்வது போல் வந்து
நபியை பார்க்க முடியும். ஹஜ் காலத்தில் வந்தால் சந்தேகப்பட மாட்டார்கள்.
நுபுவ்வத்தின் 11ஆம் ஆண்டில் அந்த 12 பேரும் நபியைப்
பார்க்க காத்து இருந்தார்கள். ஹஜ்ஜுடைய நேரம் வந்ததும் கஸ்ரஜ் கோத்திரத்தை சார்ந்த அஸ்அத்பின்ஸுராரா அவர்கள் தலைமையில் மக்காவுக்கு வந்தார்கள். வந்து இஸ்லாத்தை ஏற்றார்கள்.
ஒரு உடன்படிக்கையையும் செய்தார்கள்.
உடன்படிக்கை என்றதும் இப்பொழுது உங்களில் பலருக்கு அகபா
உடன்படிக்கை என்ற நிகழ்ச்சி நினைவுக்கு வந்து இருக்கும். இவர்கள்தான் இஸ்லாமிய
சாம்ராஜ்யம் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைய அடித்தளம் வகுத்தவர்கள்.
பத்ருப் போரில் அபுஜஹ்லை கொன்ற முஆது(ரலி) அவர்கள் உட்பட பல
முக்கிய தோழர்கள்தான் இந்த 12 பேரில் இடம் பெற்று இருந்தார்கள். இந்த 12 பேரிடமும்
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். இங்கு மக்காவில் ஜும்ஆ நடத்த முடியவில்லை என்று.
குழுவின் தலைவர் அஸ்அத்பின்ஸுராரா(ரலி) அவர்களுக்கு கட்டளை இட்டார்கள். “நீங்கள் போய் உங்கள் ஊரில்
ஜும்ஆ நடத்துங்கள்” என்று அவர் போய் நபி(ஸல்) அவர்களின் 52
ஆவது வயதில் மதீனாவில் ஜும்ஆவை நடத்தினார்.
நபியாகி 12 ஆண்டுகள் ஆனதில் இருந்து மதீனாவில் ஜும்ஆ நடக்க
ஆரம்பித்து விட்டது. நபி(ஸல்) அவர்கள் இருக்கும் மக்காவில் ஜும்ஆ நடக்கவில்லை.
காரணம் நடத்த முடியவில்லை. நடத்த முடியாது.
முதன் முதலில் ஜும்ஆ என்ற இந்த தொழுகையை நபியின்
கட்டளைப்படி ஆரம்பித்து வைத்தவர் அஸ்அத்பின்ஸுராரா(ரலி) என்ற நபி தோழர்தான்.
கியாம நாள் வரை உலகில் எத்தனை ஜும்ஆக்கள் நடந்தாலும் அத்தனை
ஜும்ஆவிலிருந்தும் ஒரு பங்கு நன்மை அவருக்குப் போய் சேரும். நல்ல காரியத்தை யார்
துவக்கி வைத்தாலும் அவருக்கு ஒரு பங்கு கியாம நாள் வரை கிடைக்கும் என்பதுதான்
இஸ்லாமிய நியதி.
இந்த சோனாப்பூர் ஜும்ஆவிலிருந்தும் ஒரு பங்கு அஸ்அத்பின்ஸுராரா(ரலி) என்ற நபி தோழருக்கு கிடைக்கும். அதனால்
நமக்கு உள்ள நன்மையில் எதுவும் குறைந்து விடாது.
தபூக் போரில் கலந்து கொள்ளாததால் சமூக பகிஷ்காரம்
செய்யப்பட்டவர் கஃபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள். அவர்களை அல்லாஹ் மன்னித்து
ஆயத்துகளை இறக்கினான்.
அந்த ஸஹாபி வயதான காலத்தில் கண் தெரியாத நிலையை அடைந்தார்.
அவரை அவரது மகன்தான் பள்ளிக்கு அழைத்துச் செல்வார். இன்று இந்த மாதிரி மகன்களை பார்ப்பது கடினம்.
அந்த மகனார் அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் சொல்கிறார். எனது தகப்பனார் கஃபு இப்னு
மாலிக்(ரலி) அவர்கள். வெள்ளிக்கிழமை ஜும்ஆ உடைய அழைப்பைக் கேட்டால் ஒரு துஆ
செய்வார். வெள்ளிக்கிழமை மட்டும் இந்த துஆ செய்வார். அது என்ன துஆ?
வெள்ளிக்கிழமை ஜும்ஆ உடைய அழைப்பைக் கேட்டால்
அஸ்அத்பின்ஸுராராவுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக என்று கஃபு இப்னு மாலிக்(ரலி)
அவர்கள் துஆச் செய்கிறார்கள். மகனாருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன வாப்பா யாரும்
சொல்லாத கேட்காத ஒரு துஆவை அதுவும் வெள்ளிக்கிழமை தோறும் கேட்கிறாரே என்று
வாப்பாவிடம் கேட்டு விட்டார்.
தந்தையே வெள்ளிக்கிழமை தோறும் ஜும்ஆ பாங்கு சொல்லி முடிந்த
உடன் அஸ்அத்பின்ஸுராராவுக்கு துஆச் செய்கிறீர்களே என்ன விஷயம் என்று. அதற்கு கஃபு
இப்னு மாலிக்(ரலி) அவர்கள் பதில் சொன்னார்கள்.
அவர்தான் இஸ்லாத்தில் முதன் முதலில்
ஜும்ஆவை ஆரம்பித்து வைத்தவர். அவரது ஜும்ஆ உரை மூலம்தான் நாங்கள் இஸ்லாத்தை
அறிந்து கொண்டோம் என்று பதில் கூறி உள்ளார்கள்.
முதல் ஜும்ஆ எங்கு நடத்தினார்கள்? மதீனாவிலும்
இது புது மார்க்கம்தானே அதனால் அங்கும் ஊருக்குள் நடத்த முடியாது. எனவே ஊருக்கு
வெளியில் பனுாபயாளா
என்ற சமுதாயத்திற்கு சொந்தமான "ஹஸ்முன் நபீத்" என்ற இடத்தில்.
அதாவது தனியாருக்கு சொந்தமான கருங்கற்கள்
நிறைந்த ஒரு நிலத்தில். மதீனாவிலிருந்து சுமார் ஒண்ணரை கி.மீ. தொலைவில் உள்ள
இடத்தில் ஊருக்கு வெளியே அந்த ஜும்ஆவை நடத்தினார்கள். (அபூதாவுத் 903)
வாடகை இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா? தனியார்
இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா? சொந்த கட்டிடத்தில் ஜும்ஆ நடத்தலாமா? கட்டிடமோ
மேற்கூரையோ இல்லாத இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா? ஊருக்கு வெளியே ஜும்ஆ நடத்தலாமா? வக்பு
செய்யப்படாத இடத்தில் ஜும்ஆ நடத்தலாமா?
இது போன்று ஏராளமான கேள்விகள் உலவி வருகின்றன. அத்தனைக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க
சம்பவமான நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி நடந்த இந்த முதல் ஜும்ஆவிலேயே தெளிவான
பதிலும் தீர்ப்பும் இருக்கிறது.
ஆக ஜும்ஆ என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே அவர்கள்
நடத்துவதற்கு முன்னாடியே ஒரு நபித் தோழர் மூலம் மதீனாவில் நடத்தப்பட்டது என்பதை
அறிந்து கொண்டோம்.
சரி 2 ஆவது ஜும்ஆ எங்கு நடந்தது?. (இன்ஷா அல்லாஹ் உரையின் தொடரில் காண்போம்)
Comments