ஊசித் முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும்?

ஊசித் துவாரத்தில் (காதில், துளையில்ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள் அல்குர்ஆன்: 7:40  

அல்லாஹ் தன்னுடைய அளப்பரிய கருணையினாலும், ஆற்றலினாலும் ஒரு நாள் ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழையச் செய்து அன்றைய தினம் சிலரை மன்னித்து சுவனம் புக அருள் புரிய வாய்ப்பிருக்கிறதா?  என்பது ஒரு சகோதரின் கேள்வி. 

https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_14.html

இது அல்லாஹ்வின்  அளப்பரிய கருணை, ஆற்றல்  மீது உள்ள ஈமானால் (நம்பிக்கையால்) வந்துள்ள கேள்வி.  ஏக இறைவன் அல்லாஹ் அவன் கருணை மீது உள்ள நல்  எண்ணத்திற்கு  ஏற்ற  நல்லருள்  செய்வானாக  ஆமீன். 



என்னிடம் கேள்வி கேட்கும் பெரும்பாலானவர்கள் சுருக்கமான பதில் தாருங்கள் என்றுதான் கேட்பார்கள்.  விரிவான விளக்கம்  கேட்ட மிகச் சிலரில்  இவரும் ஒருவர். நிறைய தெரிவதை விட நிறைவாக தெரிவதே மேல். அகல உழுதலில் ஆள உழுதலே நன்று.  விவரமாக விளக்கும் போது  ஆரம்பத்தில்  சம்பந்தமில்லாதவற்றை கூறுவது போல் தோன்றும். முடியில் தான் அதற்கான விடை கிடைக்கும். என்பதை மனதில் கொள்ள வேண்டும்.


குர்ஆனின் ஒரு வசனத்துக்கு விளக்கமாக வேறு வசனங்கள் குர்ஆனில் இருக்கும். அது முன் பின் வசனமாகவோ வேறு வேறு அத்தியாயங்களிலோ இருக்கும்.  இறைத்துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அருள் மொழிகளிலும் குர்ஆனுக்கு   விளக்கங்கள்  இருக்கும். 

நெருப்பின் தன்மை சுட்டு எரிப்பதுதான். தீ ஜுவாலையிலிருந்து குளு குளு காற்று வருவது சாத்தியமா? அப்படி எதிர் பார்ப்பது அதன் இயல்புக்கு மாற்றமானது. ஆனால் இப்றாஹீம்(அலை) அவர்கள் நெருப்புக் கிடங்கில் எறியப்பட்டதும்.  "நெருப்பே! இப்ராஹீமின் மீது சுகம் தரும் விதத்தில் குளிராகவும், சாந்தமாகி பாதுகாப்பாகவும் ஆகி விடு'' 21:69  என்று அல்லாஹ் கட்டளை இட்டதும் என்ன நடந்தது?

ஆகவே ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழையச் செய்வது என்பது அல்லாஹ்வுக்கு சாத்தியமான ஒன்றுதான். மனிதனுக்கு சாத்தியமா? நிச்சயமாக சாத்தியமே இல்லை.  இந்த உதாரணம் மனிதர்கள் புரிவதற்காக சொல்லப்பட்டுள்ள உதாரணம் தான். இதை நாம் யூகித்து சொல்லவில்லை.

   وَلَقَدْ صَرَّفْنَا فِىْ هٰذَا الْقُرْاٰنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ‌ ؕ وَكَانَ الْاِنْسَانُ اَكْثَرَ شَىْءٍ جَدَلًا‏ 

இந்த வசனத்தில் லின்னாஸி மின்  குல்லி மத(ஸ)லின் இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காகவே ஒவ்வோர் உதாரணத்தையும் (முன்மாதிரியையும்)   கூறி வித விதமாக விவரித்து  விளக்கியுள்ளோம் என்று 18:54ல் அல்லாஹ்வே தெளிவுபடுத்தி விட்டான். ஆகவே அந்த உதாரணம் மனிதர்கள் புரிவதற்காக சொல்லப்பட்டது தான்.

அல்லாஹ் நாடினால் மன்னிக்கவும் தண்டிக்கவும் உரிமை உடையவன். யாரை  தண்டனைகளிலிருந்து மன்னித்து சுவனம் புக அருள் புரிய வாய்ப்பிருக்கிறது  என்பது பற்றி  அல்லாஹ்வும் அவனது துாதரும் முடிவாக சொல்லி விட்டார்கள். அந்த வரம்புக்குள் நின்றுதான்  இந்த மாதிரியான வசனத்திற்கு விளக்கம்  காண வேண்டும். 

வரம்பு என்ன? அல்லாஹ்வை கடவுள் என்று ஏற்காத  காபிர்களுக்கும் முஷ்ரிக் என்ற இணை வைப்பவர்களுக்கு மட்டும் தான் நிரந்த நரகம் என்று பெரும்பாலானவர்கள் விளங்கி வைத்து உள்ளோம். அல்லாஹ்வை நம்பி  இணை வைக்காதவனுக்கு கூட செயல்களின் அடிப்படையில் மீளவே முடியாத நிரந்தர நரகம்  உண்டு. 
.  

செயல்கள் என்றால் அநியாயமான கொலை, தற்கொலை, வட்டி போன்ற தடுக்கப்பட்டவைகளை செய்த செயல்கள் மட்டுமா? இல்லை. மேலே சொன்ன மாதிரி இணை வைக்காத தவ்ஹீதிக்கும் செயல்களின் அடிப்படையில் மீளவே முடியாத நிரந்தர நரகம்  உண்டு. அப்படிப்பட்ட செயல்கள்தான் அந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன செயல்?

ஆதம் (அலை) அவர்களை படைத்ததும் முதன் முதலில் காபிராக ஆனவன் இப்லீஸ். அந்த இப்லீஸ் ஏன் காபிராக ஆனான். நீ அல்லாஹ் இல்லை என்று சொன்னானா? இணை வைத்தானா? இல்லை இரண்டும் இல்லை. 

நிச்சயமாக  அல்லாஹ்தான் கடவுள் என்பதையும் அந்த அல்லாஹ்வின்  அனுமதியின்றி அணுவும் அசையாது என்பதையும் சந்தேகமற,  தெளிவாக, உறுதியாக அறிந்து அல்லாஹ் பற்றி ஈமான் (நம்பிக்கை) கொண்டுள்ளவன் தான் இப்லீஸ்.

இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. தனது  விருப்பத்தை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு தரும்படி இப்லீஸ் அல்லாஹ்விடம்தான் வேண்டி பிரார்த்தித்துள்ளான். வேறு யாரிடமும் வேண்டி பிரார்த்தித்து இணை வைத்து முஷ்ரிக் ஆகவில்லை. 

இதற்கு அல்குர்ஆனின் 15:36,39. 17:64 , 7:16,17. ஆகிய வசனங்கள் ஆதாரங்களாக உள்ளன.  கடவுள் கொள்கையில் மிகச் சரியாகவும் அசைக்க முடியாத ஈமானும் உடையவன்தான் இப்லீஸ்.

அந்த இப்லீஸே அல்லாஹ்வை அழைக்கும்போது, படைத்து வளர்த்து பரிபாலித்து காத்து வரும் இறைவனே என்ற பொருள்படும் ரப்பு என்ற வார்த்தையால் தான் அல்லாஹ்வை அழைத்து பிரார்த்தித்துள்ளான். 

அதுவும் இறைவனே, கடவுளே என்ற பொருள்படும் ரப்பு என பொதுவாக அழைக்கவில்லை. ரப்பீ  என்னுடைய இறைவனே - என்னுடைய கடவுளே என்றுதான் அல்லாஹ்வை நோக்கி ஷய்த்தான் அழைத்துள்ளான். இதை திருமறை குர்ஆனின் 15:36,39 ஆகிய வசனங்களில் அல்லாஹ் சொல்லிக் காட்டியுள்ளான்.

அல்லாஹ்தான் கடவுள் என்ற ஈமானில் உறுதியாக உள்ள இப்லீஸ். அல்லாஹ்வை ரப்பீ! (என்னுடைய இறைவனே) என்று அழைத்து பிரார்த்தித்த இப்லீஸ். ஏன் காபிராக ஆனான்?

ஆதமுக்கு பணியுங்கள் என்று அல்லாஹ் கட்டளை இட்டான். அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை இப்லீஸ் செயல்படுத்த மறுத்து வாதம் வைத்தான். இது அல்லாஹ்வின் சொல் (கட்டளை) இல்லை என்று நம்பாமலா மறுத்தான்?

ஆதமுக்கு பணியுங்கள் என்பது அல்லாஹ்வின் சொல்(கலாம்)தான் கட்டளை தான் என்று (ஈமான் கொண்டு) நம்பித்தான் அதை செயல்படுத்த மறுத்து புறக்கணித்தான். அதனால் அவன் காபிராக ஆனான். 

இதை திருமறை குர்ஆனின் 2:34. 38:74. ஆகிய வசனங்கள் மூலம் அறியலாம்.  இந்த வசனங்களில் இடம் பெற்றுள்ள அதே வஸ்தக்பர 2:34. ஸ்தக்பர 38:74. என்பதிலுள்ள வஸ்தக்பரூ என்ற வார்த்தை தான் 7:40. லும் இடம் பெற்றுள்ளது. 

 وَاسْتَكْبَرَ اِسْتَكْبَرَ  وَاسْتَكْبَرُوْ

ஆணவம் – பெருமை - வறட்டு கவுரவம் – அகந்தை - அதிகார போதை - அகம்பாவம் -  கர்வம் -  பெருமிதம் - பெருமை-  தற்பெருமை – செருக்கு - இறுமாப்பு போன்ற பொருளுடைய இந்த வார்தைகள் இடம் பெற்றுள்ள வசனங்களை 04-01-2020 அன்று வெளியிட்டுள்ள 

7. அகங்காரம் (இதை படிப்பவர்களில் தமிழ் அறிஞர்களுக்கு ஒரு சவால்) 

என்ற தலைப்பிலான குர்ஆன் பொருள் அட்டவணை - இண்டக்ஸ் 7ல் காணலாம். 

ஆதமுக்கு பணியுங்கள் என்ற அல்லாஹ்வின் அந்த ஒரு கட்டளைக்கு மட்டும் பெருமையின் காரணமாக பணிய மறுத்தான் இப்லீஸ்.  அந்த ஒன்றுக்காகவே அவன் காபிராக ஆகி நிரந்தர நரகத்துக்கு உரியவனாக ஆனான். அந்த இப்லீஸானோ அல்லாஹ்வின் சொல்லை பொய் என்று பொய்ப்படுத்தவில்லை. 

 كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا

7:40.  வசனத்தில் அல்லாஹ் ஆயாத்   என்கிறான்.  ஆயாத் என்றால் அத்தாட்சி என்று அர்த்தம் என்பதை அனைவரும் அறிவோம். பிஆயாதினா - நம்முடைய அத்தாட்சி.யை என்று குறிப்பிட்டு.    தன்னுடைய அத்தாட்சியை  1.கத்(ர்)த(ர)பூ - பொய்யாக்கி, 2. அஸ்தக்பரூ  புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்கள் என்று இரண்டு குற்றங்களை  குறிப்பிட்டுள்ளான்.

ஒரு செயலை, (அமலை) கட்டளையை செய்யாமல் இருப்பது  ஒரு விதமான  தவறு. . . செய்ய மறுத்து புறக்கணித்து பெருமை அடிப்பது பெருங்குற்றம்.  எனவே நாம் ஆதாரமாகக் கண்ட ஆயத்துகளின் அடிப்படையில் ஓரிறைக் கொள்கையில் தவ்ஹீதில் உறுதியாக இருந்து கொண்டு ஷய்த்தான் வாதம் வைத்து மறுத்து புறக்கணித்த மாதிரியான செயலை செய்தால் அவர்கள் யார்அவர்களும் ஷய்த்தானைப் போன்று காபிர்கள்தானே. 

காபிர்களுக்கு நிரந்தர நரகம் என்பதில் நம்மில் யாருக்கும் மாற்றுக் கருத்து உண்டா? இல்லையே. இனி நபி மொழிகளிலிருந்தும் பார்ப்போம். 

புகாரி 1338, 1369, 1374. 4699, முஸ்லிம் 5505, 5508, 5509,  அஹ்மத் 18063, அபூதாவூத் 4753   மற்றும் திர்மிதீநஸாயீ,  இப்னுமாஜா போன்ற நுால்களில் மிக நீளமாகவும் சுருக்கமாகவும்  ஹதீஸ்கள் உள்ளன.  அதன் சாராம்சம். 

.... கெட்டவனின் உயிர் துர்நாற்றம் உடையதாக இருக்கும். வானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது அந்த உயிருக்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி விட்டு, இந்த  7:40 வசனத்தைத் தான் ஓதிக் காட்டி உள்ளார்கள்.

இந்த  நபி மொழியே  7:40 வசனத்தில் கூறப்பட்டுள்ளவர்கள். ஊசித் முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும்   சுவனம்புக    அருள்புரிய  வாய்ப்பு  இல்லை என்பதற்கு ஆதாரமாகும். இந்த ஹதீஸே சரியான போதுமான விளக்கமும் கேள்விக்கான பதிலும் ஆகும். இன்னும் விரிவாக அறிய 7:40 வசனத்துக்கு விளக்கமாக  குர்ஆனின் மற்ற இடங்களில் உள்ள வசனங்களையும் ஹதீஸ்களையும் இன்ஷாஅல்லாஹ் அடுத்து பார்ப்போம்.






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு