ஃபித்ரா பற்றி புதிய பழைய வெளியீடுகள்.

இது இந்த ஆண்டு மேலப்பாளையம் த.மு.மு.க. சார்பில் வெளியானது
2004இல்  அதிரை ஜமீல் காகா அவர்களால் தயாரிக்கப்பட்டு ஷார்ஜா I.A.C. சார்பாக வெளியிடப்பட்டது
பெரம்பலுார் நாஸர் அலி கான் அவர்களால் 2004இல் எழுதப்பட்டது.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
ஃபித்னாக்களை தவிர்க்க நபி வழியில் நம் ஃபித்ரா.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஒவ்வொரு வணக்கத்திலும் ஒரு நோக்கம் உண்டு. சிலவற்றை நாம் அறியும் விதத்தில் அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள். 

அதுபோல் ஃபித்ர் ஜகாத்தைப் பொருத்தவரை அதற்கென உள்ள ஒரு அழகான நோக்கத்தை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். அது பற்றிய  ஹதீஸை பாருங்கள்.

முஸ்லிமான ஆண்கள், பெண்கள், சிறியவர், பெரியவர், அடிமை, அடிமையல்லாதவர் ஆகிய அனைவர் மீதும் ரமழானில் நோன்புப் பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், கோதுமை ஆகியவற்றில் ஒரு 'ஸாவு”| கொடுப்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடமையாக்கி உள்ளார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) ஆதாரம் புகாரி 1503, முஸ்லிம் 984, முஅத்தா 1-283,  திர்மிதி676, அபுதாவூது1611-1615, நஸயீ 2501, இப்னுமாஜா 1826, அஹ்மத் 2-63

அவரவர் வசதிக்கேற்ப. 

கொடுக்கத் தகுதியுள்ள அனைவர் மீதும் கடமையான ஃபித்ராவை இறைத்தூதரின் தோழர்கள் கோதுமை பேரீட்சை மட்டுமின்றி கிஷ்மிஷ் (உலர்ந்த திராட்சை) மற்றும் பாலாடைக் கட்டியையும் ஃபித்ர் ஜகாத்தாக வழங்கி உள்ளதை புகாரியில் பார்க்கிறோம். 

அவரவர் வசதிக்கேற்ப அவரவர் உண்ணும் உணவின் மதிப்பை உணர்ந்து வழங்கப்பட வேண்டிய ஒரு தர்மம் என்பதை இந்த ஹதீஸ் மூலம் அறிகிறோம்.

அளவு எடை இருந்த காலகட்டத்தில்.

அளவு எடையில் மோசடி செய்வோருக்கு கேடுதான் 83:1 என்ற ஆயத்து நபி (ஸல்) காலத்தில் அளவு, எடை ஆகிய முறைகள் இருந்துள்ளது என்பதற்குரிய ஆதாரமாகும். 

அளவு எடை இருந்த காலகட்டத்தில்  இரண்டு கைகளால் நான்கு முறை அள்ளிப் போடும் ’ஸாவு’ என்ற அளவை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்துக் கூறி உள்ளதையும் கவனிக்க வேண்டும்.

ஏற்றுக் கொள்ளப்பட்ட பெருநாள் தர்மம்.

நோன்பாளிகளிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக பயன்படும் பொருட்டும் நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கினார்கள். 

யார் அதை பெருநாள் தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அது ஏற்றுக் கொள்ளப்பட்ட பெருநாள் தர்மமாக ஆகிவிடும். யார் அதை பெருநாள் தொழுகை தொழுத பின்பு கொடுக்கிறாரோ அது ஏனைய தர்மங்களைப் போன்ற ஒரு தர்மமாக ஆகும் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: அபுதாவூது1609, இப்னுமாஜா1827, தாரகுத்னி, ஹாக்கிம்)

ஜகாத்தை வசூலித்த முஆத்(ரலி)

அகீகா வினியோகிக்கும் முறையை குர்பானியிலிருந்து எடுத்துக் கொள்ளும்படி ரசூல்(ஸல்) அவர்கள் வழி காட்டி உள்ளார்கள். அது போலவே ஜகாத்துக்குரிய சட்டமும் ஃபித்ர் ஜகாத்துக்கும் பொருந்தும். 

முஆத் இப்னுஜபல்(ரலி) அவர்களை எமன் நாட்டுடிற்கு ஆளுனராக அனுப்பி வைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அங்கிருந்த மக்களுக்கு அல்லாஹ் ஒருவன் என்று உபதேசிக்கும்படியும் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் ஐந்து வேளை தொழுகை மற்றும் ஜகாத்தையும் அவர்கள் மீது கடமையாக்கும்படி கூறி அனுப்பினார்கள். 

அங்கு ஜகாத்தை வசூலித்த முஆத் (ரலி) அவர்கள் அதனை மதீனாவுக்கு (அதாவது இஸ்லாமிய ஆட்சியின் தலைமைக்கு) அனுப்பி வைக்கட்டுமா என்று கேட்டார்கள்.

அதற்கு, ஜகாத் என்பது அங்குள்ள பணக்காரர்களிடம் வசூலித்து அங்கிருக்கும் ஏழைகளுக்கு வினியோகிப்பதுதான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள்.
மீதமுள்ள ஜகாத்தை மதீனாவுக்கு (தலைமைக்கு) அனுப்பவா?

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு வினியோகித்தது போக மீதமுள்ள ஜகாத்தை மதீனாவுக்கு (தலைமைக்கு) அனுப்பவா என்று கேட்டபோது அதை ரசூல்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

பாவங்கள் மன்னிக்கப்படும் நோக்கமும் நிறைவேறும்.

இதன் அடிப்படையில் இன்று நாம் கொடுக்கும் ஃபித்ர் ஜகாத்தை நம்முடைய ஊரில் ஏழைகள் இருக்கும் பட்சத்தில் வேறு இடத்திற்கு நம்முடைய ஃபித்ர் ஜகாத்தை அனுப்புவது மார்க்கத்திற்கு முரணானது ஆகும். 

ஃபித்ர் ஜகாத்தின் மற்றொரு நோக்கம் நோன்பாளியின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. (ஆதாரம்: அபுதாவூது) 

அதை பெருநாள் தொழுகைக்கு முன்னதாக நிறைவேற்றினால்தான் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும் நோக்கமும் நிறைவேறும். 

ஆகவே நாம் கொடுக்கும் பித்ராவை கொடுப்பதோடு நம்முடைய கடமை முடிந்துவிட்டது என்று எண்ணாமல் அது முறையாக ஏழைகளை பெருநாள் தொழுகைக்கு முன் சென்றடைகிறதா என்பதையும் கவனிக்கக் கூடியவர்களாக நாம் இருக்க வெண்டும்.

எவ்வளவு கொடுப்பது?

கோதுமை, பேரீட்சை என இறைத்தூதர்(ஸல்) கூறிய போதும் இறைத்தூதரின் தோழர்கள் அதைவிட மதிப்பு உடைய பாலாடைக்கட்டி போன்றவற்றையும் கொடுத்திருப்தால் நம்முடைய சராசரி உணவுப் பொருளிலிருந்து நாமாகவே கணித்து கொடுப்பதுதான் சிறந்தது. 

அது நாட்டுக்கு நாடு வேறுபடும். நாம் பணிபுரியும் அரபு நாடுகளில் ஜகாத் வாங்கும் நிலையில் உள்ளவர்கள் சொந்த காரில் வந்து ஜகாத் வாங்கி செல்வதைப் பார்க்கிறோம். நமது நாட்டில் உள்ள ஒருவர் சொந்த காரில் வந்தால் அவருக்கு நாம் ஜகாத் கொடுக்க மாட்டோம்  என்பதையும் கவனிக்க வேண்டும்.

யாரிடம் கொடுப்பது?

ஃபித்ர் ஜகாத்தை வசூலித்து வினியோகிக்கும் பணியை தமிழ்நாட்டைப் பொருத்தவரை த.மு.மு.க. செய்து வருகிறது. இப்பணியில் மார்க்க அடிப்படையில் அந்தந்த இடத்தில் வசூலிப்பதை அங்கேயே வினியோகிக்க வேண்டும் என்ற தவறு மட்டும் உள்ளது. 

அதுவும் மார்க்க அறிஞர்களில் யாரும் இதைச் சுட்டிக் காட்டி அவர்கள் மறுக்கவில்லை. சுட்டிக் காட்டாத நிலையில் மார்க்கம் என்ற நம்பிக்கையில்தான் செய்து வருகிறார்கள். 

வேறு தவறுகள் எதுவும் இன்றி  கடந்த(1995இல் இருந்து) ஒன்பது ஆண்டுகளாக த.மு.மு.க. சிறப்பாக செய்து வந்துள்ளதை அனைவரும் அறிவோம். 

இந்த நிலையில் இப்போது செயல்படும் த.த.ஜ.வினர் இதே ஃபித்ர் ஜகாத்தை நாம் வசூலிப்போம் என களம் இறங்கியுள்ளார்கள். 

அத்துடன் நின்றுவிடாமல் ஃபித்ர் ஜகாத்தை தாமதமாகக் கூட விநியோகிக்கலாம் என நவம்பர் 05-11, 2004 உரிமை 09, குரல் 09 உணர்வு பக்கம் 14 பதில்கள் பகுதியில்  எழுதி உள்ளார்கள்.

மார்க்கத்தில் விளையாடுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருந்தால்.

தன்னால் முடியாத காரியத்தில் இறங்கி அதில் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு மார்க்கத்தில் ஆதாரம் தேடி சம்பந்தமே இல்லாத ஹதீஸை ஆதாரமாக காட்டி உள்ளதைப் பார்த்தோம். 

இயக்க ரீதியான பிரச்சனைகளை கண்டு கொள்ளாத நாம் மார்க்கத்தில் விளையாடுவதையும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. மார்க்கத்தில் விளையாடுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருந்தால் அல்லாஹ் நம்மை மன்னிக்க மாட்டான். எனவேதான் இதை நாம் எழுதி உள்ளோம்.

இயக்கத்தின் விருப்பப்படி நிறைவேற்றப்படும்?

தங்கள் ஃபித்ரா தொகை தங்கள் ஊரில்தான் வினியோகிக்கப்பட வேண்டும் என்று கருதும் சகோதரர்கள் அதைக் குறிப்பிட்டு தலைமைக்குத் தெரிவித்தால் அவர்களின் விருப்பமும் நிறைவேற்றப்படும் என்று அக்29 - நவ04, 2004 உரிமை 09, குரல் 08 உணர்வு பக்கம் 15ல் அறிவிப்பு செய்துள்ளார்கள். 

குர்ஆன்-ஹதீஸ்களின் அடிப்படையில் மார்க்கத்தை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட அமைப்பு என சொல்லிக் கொள்பவர்கள். அந்தந்த பகுதியில் வினியோகிக்க வேண்டும் என்ற மார்க்க விபரம் அறிந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவோம் என்பதும் பித்ரா வினியோகம் பற்றிய மார்க்கத்தின் நிலை என்ன என்ற விபரம் தெரியாதவர்களிடம் வசூலித்ததை இயக்கத்தின் விருப்பப்படி வினியோகிப்போம் என்பதும்  மிகுந்த வேதனை அளிக்கிறது. அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நேரான வழியைக் காட்டி அதில் நிலைத்திருக்கச் செய்வானாக ஆமீன்.

அன்புடன்:
பெரம்பலூர் நாஸர்அலிகான்,
00971505193052,
ஷார்ஜா,யு.ஏ.இ.

மக்கள் தொழுகைக்கு  புறப்படும் முன்பே ஃபித்ர்ஜகாத்தை கொடுத்து விடும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளை  இட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) ஆதாரம் புகாரி 1509, முஸ்லிம் 994, அபுதாவூது 1610, திர்மிதி 677, நஸயீ 2520, அஹ்மத்.

நபித் தோழர்கள் ஃபித்ர் ஜகாத்தை பெருநாளைக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) ஆதாரம் புகாரி 1511.

’ஷேக் மன்சூர், சிபதுல்லாஹ், பந்தல் காஜா, முஹம்மது காஜா, கல் அப்துல்காதர்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு