மதச் சுதந்திரமும் கிறிஸ்துமசும் -முக்ரின்

அன்புச் சகோதரர் ஃபள்லுல் இலாஹி அவர்களுக்கு, வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹஹ§. தங்களின் அஞ்சல் பெற்றுக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. உங்களது இணைய தளத்தில் அவற்றை இடம்பெறச் செய்ததற்காக அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.

நஜ்ரான் நாட்டிலிருந்து வந்த கிறிஸ்துவப் பாதிரிகள் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் கிறிஸ்துவக் கொள்கையை நிலைநாட்ட விவாதம் செய்தனர். சில நாட்கள் நடந்த இந்த விவாதத்தின்போது மஸ்ஜிதுன் நபவியிலேயே அந்த பாதிரிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அப்பாதிரிகள் அவர்களின் முறைப்படி மஸ்ஜிதுன் நபவியிலேயே வணக்க வழிபாடுகளில் ஈடுபட இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள்.

இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்கள் கிறிஸ்துவர்களின் ஆலயம் சென்று பாதிரிமார்களுடன் உரையாடி இருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களும் கலீஃபாக்களும் தமது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிற மத வணக்க வழிபாடுகளை தடை செய்யவில்லை.

இந்நிலையில் ஜமாஅத்தே இஸ்லாமி நிர்வாகத்திற்குட்பட்ட பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட அனுமதித்ததை எப்படி குறை கூறமுடியும்?

மேற்கண்ட கேள்விகள் மிகவும் நியாயமானவை. கேள்வியாளர்கள் குறிப்பிட்ட அத்தனை சம்பவங்களும் இஸ்லாம் வழங்கும் மதச்சுதந்தரத்திற்கும் அதன் சகிப்புத் தன்மைக்கும் உன்னதமான உதாரணங்களாகும். ஆனாலும் ஜமாஅத்தே இஸ்லாமி குறித்த எனது விமர்சனத்திற்கும் அதற்கும் எள் அளவும் தொடர்பு இல்லை.

மற்ற எந்த மதங்களையும் விட இஸ்லாம் தனி மனிதனுக்கு மதச்சுதந்தரத்தை வழங்குகின்றது. மதச்சுதந்திரத்தை வழங்கும் அதே வேளை தனது கொள்கையில் இஸ்லாம் மிக உறுதியாக உள்ளது. நபி (ஸல்) அவர்களும் கலீஃபாக்களும் தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த மாற்று மதத்தினருக்கு மதச்சுதந்திரத்தை வழங்கினார்களே தவிர கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை.

ஜமாஅத்தே இஸ்லாமியினர் நடத்தும் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடத்த அனுமதித்ததை மட்டும் நான் மட்டும் நான் விமர்சிக்கவில்லை. எனது விமர்சனத்துக்கு முக்கியக் காரணம் அதில் முஸ்லிம்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியதும் அங்கு கிராஅத் ஓதியதும் ஆகும்.

இது சம்மந்தமாக கேள்வி எழுப்பியவர்கள் அதனோடு தொடர்புடைய இன்னொன்றை கவனிக்கத் தவறிவிட்டார்கள். நஜ்ரான் நாட்டிலிருந்து வந்த கிறிஸ்தவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் விவாதம் செய்தார்கள் , கேள்வியாளர்கள் குறிப்பிட்டது போல் கிறிஸ்தவக் கொள்கையை நிலைநாட்ட. ஆனால் அங்கே இஸ்லாம் நிலைநாட்டப்பட்டது. அவர்கள் தங்கள் வரட்டு கவுரவத்தை விட முன்வராத நிலையில் அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் அவர்களை முபாஹலாவுக்கு அழைத்தார்கள். அவர்கள் பயந்து போய் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அபூகாஸிமே! உங்களுடன் முபாஹலா செய்வதில்லை என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம் நீங்கள் உங்கள் மார்க்கத்திலேயே இருங்கள் நாங்கள் எங்கள் மார்க்கத்திலேயே இருக்கின்றோம், எங்களது பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க நீங்கள் விரும்பும் ஒருவரை எங்களுக்குத் தீர்ப்பாளராக அனுப்புங்கள் என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நபி (ஸல்) அவர்கள் அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரழி) அவர்களைத் தீர்ப்பாளராக அனுப்பி வைத்தார்கள். (பார்க்க தஃப்ஸீர் இப்னு கஃதீர் 3:61 விளக்கம்)

இதில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடத்த என்ன ஆதாரம் இருக்கின்றது? கிறிஸ்துவத்தை நிலைநாட்ட முற்பட்டவர்களை நபி(ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்ற குறிப்பை இதிலிருந்து யாரேனும் நாடியிருந்தால் அவர்கள் விளங்கிக் கொள்ளட்டும் இஸ்லாத்தை மேலோங்கச் செய்யும் எண்ணத்துடனேயே அவ்வாறு விவாதம் நடத்தினார்கள். விவாதம் முபாஹலா வரை சென்று இறுதியில் அவர்கள் தோற்றதன் மூலம் இஸ்லாமே மேலோங்கியது. இப்போது சொல்லுங்கள் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துக் கூறுவதும் இதுவும் ஒன்றா ? கிறிஸ்துமஸ் விழாவில் விவாதம் செய்தார்களா ? சாபப்பிரார்த்தனை நடத்தினார்களா ? இல்லை. மாறாக இறைவனின் மகன் என்று கற்பனை செய்பவர்களின் விழாவுக்கு வாழ்த்துரை வழங்கியதோடு இறை வசனங்களையும் கேலிக்கூத்தாக்கினார்கள்.

கேள்வியாளர்கள் குறிப்பிட்டபடி நபி(ஸல்) அவர்களின் பள்ளியில் அவர்களின் மத முறைப்படி வழிபாடு நடத்த அனுமதி வழங்கிய சம்பவத்தை ஜமாஅத்தே இஸ்லாமி கல்லூரியில் நடைபெற்ற சம்பவத்துடன் அதனைத் தொடர்பு படுத்த முடியாது. அதற்கும் கிறிஸ்துமஸ் சம்மந்தமாக நான் அனுப்பிய கடிதங்களுக்கும் எள் அளவும் சம்மந்தம் இல்லை. இஸ்லாத்தின் தன்னிகரற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டு மதச்சுதந்தி ¬த்தை அளிக்கும் அதே வேளையில் எந்தச் சூழ்நிலையிலும் இஸ்லாம் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காது என்பதாகும். கொள்கையை விட்டுக் கொடுத்தல் என்பது கோழைத்தனமே தவிர அது மதச்சுதந்தரம் ஆகாது.

எனது விமர்சனத்துக்கு முக்கியக் காரணம் அந்நிகழ்ச்சியில் முஸ்லிம்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியதாகும். இறைவசனங்களைக் கேலிக்கூத்தாக்கும் விதமாக அந்நிகழ்ச்சிக்கு கிராஅத் ஓதியதாகும். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கினார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அவர்களின் வழிபாட்டில் கலந்து கொண்டு அல்லது அதற்கு வாழ்த்துரை வழங்கி கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை. எனவே இரண்டையும் இரண்டாகப் பார்க்கவும்.

மேலும் இன்னொன்றையும் கேள்வியாளர்கள் கவனிக்கட்டும். ஒரு நாட்டை ஆள்வதும் ஒரு கல்லூரியை நிர்வகிப்பதும் சமமாகாது. உதாரணமாக ஒரு நாட்டில் பல்வேறு மதத்தினர் வாழக்கூடிய சூழ்நிலையில் அவர்களுக்கு மதச்சுதந்திரத்தை வழங்குவது அந்நாட்டின் இறையாண்மைக்குட்பட்டதாகும். முஸ்லிம்கள் நிர்வகிக்கும் ஒரு கல்லூரியில் பயிலும் இந்து மாணவர்கள் பொட்டுவைத்துக் கொண்டு வருவதை அல்லது கிறிஸ்தவ மாணவர்கள் பிரார்த்தனைகள் நடத்துவதை அனுமதித்திருந்தால் அதனை மதச்சுதந்திரம் என்று கூறலாம். ஆதே சமயம் மதச்சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லிம் மாணவர்களும் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள் , கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் என்று எவரேனும் கூறினால் அது கொள்கையற்றவர்களின் கோழைத்தனம் ஆகும். அது போன்றே முஸ்லிம்களின் நிர்வாகத்திற்குட்பட்ட கல்வி நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடவேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. அவ்வாறு கொண்டாடவில்லையெனில் மதச்சுதந்தரம் பறிக்கப்பட்டது என்று எவரும் கூறப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்தவ மிஷனரிகள் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் முஸ்லிம்களின் பண்டிகைகளைக் கொண்டாட அவர்கள் அனுமதிப்பதில்லை. மாறாக இணைவைக்கும் பிரார்த்தனையை முஸ்லிம் மாணவர்களையும் செய்யவைத்து மதத் திணிப்பை செய்கின்றனர். கிறிஸ்தவப் பள்ளியில் பயிலும் முஸ்லிம் பிள்ளைகள் ஒவ்வொரு நாள் காலையிலும் கிறிஸ்தவர்கள் கூறும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் துஆ செய்து விட்டு தங்களின் பள்ளிப் பாடங்களைப் பயில ஆரம்பிப்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம். ஏன் தவ்ஹீது வாதிகளின் பிள்ளைகள் கூட. தங்கள் பிள்ளைகளுக்கு அந்தப் பள்ளிகளில் தான் நல்ல கல்வி கிடைக்கும் அவ்வாறு அதற்கு உடன்படாவிட்டால் அவர்கள் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்று சாக்குபோக்கு கூறி தங்கள் பிள்ளைகள் இணைவைப்பின் பிரார்த்தனையில் ஈடுபடுவதைக் கண்டும் காணாமல் இருந்து விடுவதையும் நாம் பார்த்து வருகின்றோம். ஆனால் இவற்றையெல்லாம் மதத்திணிப்பு என்று யாரும் கூறுவதில்லை. ஏன் உரிமைக்காகப் போராடும் எந்த இயக்கங்களும் முஸ்லிம்களின் மத உரிமை மீறப்படுவதற்கு எதிராகப் போராடுவதில்லை. வந்தே மாதரம் , ஜனகணமன , தாயின் மணிக்கொடி போன்ற இறைவனுக்கு இணைவைக்கும் பாடல்களைப் பாட முஸ்லிம்களை நிர்பந்திக்கக் கூடாது , கிறிஸ்தவப் பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாணவர்களை கிறிஸ்தவப் பிரார்த்தனை செய்ய நிர்பந்திக்கக் கூடாது என்று பேரணிகளோ , முற்றுகைப் போராட்டங்களோ சிறை நிரப்பும் போராட்டங்களோ நடத்துவதில்லை. மாறாக தாயிக்களாகத் தங்களை அறிமுகப்படுத்துபவர்களில் சிலர் கூட தன் கொள்கையில் விட்டுக் கொடுத்து ஈமானில் பலமிழந்து அதன் மூலம் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு பதிலாக இணைவைப்புக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் மோசமான சூழ்நிலையில் உள்ளது வேதனை அளிக்கின்றது. இந்நிலை மாறவேண்டும்.

இக்கடிதத்தை எனக்கும் இதனைப்படிக்கும் முஸ்லிம்களுக்கும் நல்லுபதேசமாக ஆக்கிக் கொள்கின்றேன். இதனை நீங்கள் வெளியிடுவதுடன் உங்கள் நண்பர்களுக்கும் ஃபார்வேட் செய்யுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கிடையே சாட்சியம் வகிக்கப் போதுமானவன். அவனிடமே நாம் மீளுவோம். அவனுக்கே எல்லாப் புகழும்.
அன்புடன்
முக்ரின்

Comments

good answer brother ... we should not leave our principles.. but v can adjust...

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு