புனிதமிகு கஅபாவும் அதன் மீது போர்த்தப்பட்டு வரும் ரூபாய் 20கோடி மதிப்புள்ள 'கிஸ்வா'வும்.



பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அனைவருக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

கஅபாவை நோக்கி தொழுமாறு ஏக இறைவன் அல்லாஹ் அணுமதி அளித்தான்.

ஆதி மனிதர் என்று அழைக்கப்படும் முதல் மனிதர் ஆதம்(அலை) என்ற நபியும் அவரது குடும்பத்தாரும் தொழுவதற்காக கட்டப்பட்ட பள்ளிவாசலே இன்று கஅபா என்று அழைக்கப்படுகிறது. முதலில் முஸ்லிம்கள் ஜெரூஸலத்தில் உள்ள பைத்துல் முகத்திஸ் என்ற பள்ளியை நோக்கியே அல்லாஹ்வை தொழுது வந்தனர். இறைவனை வணங்குவதற்காக பூமியில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசலான கஅபாவை நோக்கி தொழ இறைத் இதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனவே அல் குர்ஆன் 2:144ஆவது வசனத்தின் மூலம் கஅபாவை நோக்கி தொழுமாறு ஏக இறைவன் அல்லாஹ் அணுமதி அளித்தான்.

முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல்.

இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் வீடு (ஆலயம்) நிச்சயமாக பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதுதான். அல் குர்ஆன் 3:96. அது பழமையான ஆலயம். அல் குர்ஆன் 22:33. பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் மக்கா நகரிலுள்ள புனித பள்ளிவாசல் என்று இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூதர் (ரலி) நூல் புகாரி 3366.

கஅபா எனும் கடவுள் ஆலயம் என்றும் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.

கஅபா எனும் கடவுள் ஆலயம் முதலில் தோன்றியது உலகில் முதலில் தோன்றியது என்பதை இந்த ஆயத்து ஹதீஸ்கள் மூலம் அறிகின்றோம். ".. அல்லாஹ் கஅபாவையும் மனிதர்களுக்கு நிலையானதாக ஆக்கி விட்டான்.. " என்ற அல் குர்ஆன் 5:97ஆவது வசனத்தின் மூலம் கஅபா என்றும் நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்பதையும் முஸ்லிம்கள் அறிவார்கள்.

கிஸ்வாவைப் பற்றி வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படும் தகவல்கள்.

புனிதமிக்க நிரந்தரமான இந்த கஅபாவின் மீது மிகவும் விலை உயர்ந்த தங்க இழைகளால் பின்ப்பட்ட கருப்புத் துணி போர்த்தப்பட்டிருப்பதை பார்க்கிறோம். இந்த போர்வைக்கு கிஸ்வா என்று பெயர் குறிப்பிடப்படுகிறது. இறை இல்லமான இந்த கஅபாவை முதன் முதலில் ஆதம் (அலை) கட்டினார்கள். இபுறாஹீம் (அலை) அவர்களைக் கொண்டு மறு நிர்மாணம் செய்ய அல்லாஹ் கட்டளை இட்டான் (அல் குர்ஆன் 22:26). அப்பொழுதும் சரி, கிஸ்வா எனும் இந்தப் போர்வையைப் பற்றி எதுவும் குறிப்பிட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இருந்தாலும் நீண்ட நெடுங்காலமாகவே கஅபா மீது மிகவும் விலை உயர்ந்த கிஸ்வா என்ற போர்வை போர்த்தப்படுகிறது. இதை ஒரு சம்பிரதாய நிகழ்ச்சியாக வழி வழியாகவே பல ஆட்சியாளர்களும் நடத்தி வந்துள்ளார்கள். இப்படித்தான் வரலாற்றுக் குறிப்புகளில் கிஸ்வாவைப் பற்றி காண முடிகிறது. அந்த கிஸ்வாவைப் பற்றி வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படும் அரிய தகவல்களை தருகிறோம் பாருங்கள்.

கஃபாவை இடித்துத் தள்ள எண்ணினான் மன்னன் ஹுமைரி.

ஹிஜிரி 210 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு 170 ஆண்டுகளுக்கு முன்னால். யமன் நாட்டை ஆண்ட ஹுமைரி என்ற மன்னன் மக்கா வந்தார். அப்போது மக்காவிலுள்ள மக்கள் அந்த மன்னனுக்கு உரிய மரியாதை செய்யவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்தான் யமன் நாட்டு மன்னன் ஹுமைரி. எனவே கஃபாவை இடித்துத் தள்ள எண்ணினான் மன்னன் ஹுமைரி. இவ்வாறு எண்ணிய அந்த நேரத்தில் கடுமையான நோய் ஏற்பட்டு உடல் நிலை பாதிப்புகளுக்குள்ளனான் மன்னன் ஹுமைரி.

கஅபாவில் போர்த்தப்பட்ட முதல் கிஸ்வா.

அரசவை மந்திரி பிரதானிகள் உம்ரா செய்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும்படி ஆலோசனை கூறினார்கள். அவர்களின் ஆலோசனையின்படி உம்ரா செய்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டார் யமன் நாட்டு மன்னன் ஹுமைரி. அல்லாஹ்வின் அருளால் நோய் நீங்கியது.. உடல் நலத்தை நல்கிய அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் நோக்குடன் கிஸ்வா எனும் போர்வையை போர்த்தியுள்ளார். இதுதான் கஅபாவில் போர்த்தப்பட்ட முதல் போர்வை - கிஸ்வா. இந்த போர்வை - கிஸ்வா உலர்ந்த பனை ஓலையாலும் நூலாலும் நெய்யப்பட்டதாக இருந்துள்ளது.

கஅபாவில் போர்த்தப்பட்ட இரண்டாவது கிஸ்வா.

இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சிறுவராக இருந்தபொழுது கஅபாவை போர்த்தி இருந்த திரையை சாம்பிராணிப் புகையால் வாசைன ஊட்டும் வழக்கம் மக்காவில் இருந்தது. திடீரென சுழன்றடித்த சூறாவளியினால் சாம்பிராணி சட்டியின் நெருப்புக் கங்குகள் கஅபாவின் திரையில் பட்டு தீப்பற்றி எரிந்து விட்டது. இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பிறகு ஹஜ் செய்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம். அந்த ஹஜ்ஜின் போது யமன் நாட்டவர்கள் கோடிட்ட கிஸ்வாவை கொண்டு வந்தார்கள். அந்த கிஸ்வாவை கஅபா மீது போர்த்தினார்கள். இது கஅபாவில் போர்த்தப்பட்ட இரண்டாவது கிஸ்வா.

ஹிஜிரி 13இல் எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட கிஸ்வாவை இரண்டாம் கலீபா உமர்(ரலி) அவர்கள் அணிவித்தார்கள். இது கஅபாவில் போர்த்தப்பட்ட மூன்றாவது கிஸ்வா.

ஆண்டுக்கு இருமுறை கிஸ்வா அணிவிக்கும் வழக்கம்.

மூன்றாம் கலீபா உஸ்மான்(ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் ரமழான் மாதம் 27அன்றும் துல்ஹஜ் மாதம் ஹஜ்ஜுக்கு முன்னரும் என ஆண்டுக்கு இருமுறை கிஸ்வா அணிவிக்கும் வழக்கம் வந்தது.

கட்டித் துணி, பட்டுத் துணி கிஸ்வாக்கள்.

கலீபா முஆவியா(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில். ரமழான் மாதக் கடைசியிலும் முஹர்ரம் 10-ம் நாள் அன்றும் கஃபாவுக்கு கிஸ்வாவை போர்த்தலனார்கள். ரமழான் மாதத்தில் போர்த்த கபாத்தி என்ற கட்டித் துணியிலும் முஹர்ரம் மாதத்தில் போர்த்த பட்டுத்துணியிலும் கிஸ்வாவை தயாரித்தார்கள்.

கிஸ்வாக்களில் "லாயிலாஹ இல்லல்லாஹ்"

ஓரிறைக் கொள்கைக் கலிமாவான ஷஷலாயிலாஹ இல்லல்லாஹ்' இல்லை கடவுள் அல்லாஹ்வைத் தவிர, வணக்கத்துக்கு உரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் எதுவும் இல்லை என்ற வார்த்தை கலீபா முஆவியா(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில்தான் கிஸ்வாக்களில் இடம் பெறச் செய்யப்பட்டது.

கஃபாவின் மீது மிகப் பெரும் பளு சேர்ந்தது.

காலப் போக்கில் ஏற்கனவே அணிவிக்கப்பட்டிருந்த கிஸ்வாவை அகற்றாமலேயே அதன் மீது மீண்டும் புதிய கிஸ்வாக்களை அணிவித்து வந்தனர். இதனால் கஃபாவின் மீது மிகப் பெரும் பளு சேர்ந்தது. ஹிஜ்ரி 160இல் கலீபா அல்மஹ்தீ அல் அப்பாஸி பழைய கிஸ்வாக்களை அகற்றி விட உத்தரவிட்டார்.

வெள்ளை, சிகப்பு, பச்சை கிஸ்வாக்கள்.

வெள்ளை, சிகப்பு, பச்சை ஆகிய நிறங்களில் தான் ஆரம்ப காலங்களில் கிஸ்வாக்கள் போர்த்தப்பட்டு வந்தன.

கறுப்பு நிற கிஸ்வா.

கலீபா அல் நாஸிருல் அப்பாஸி காலத்தில் ஹிஜ்ரி 575 இல் தான் முதன் முதலில் கிஸ்வாவுக்கு கறுப்பு நிறம் பயன்படுத்தப்பட்டது. அதுதான் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

கிஸ்வா தயாரிப்பிற்காகவும் கஃபாவின் பராமரிப்புக்காகவும்.

ஹிஜ்ரி 743ஆம் ஆண்டு எகிப்தை ஆண்ட சுல்தான் கலாவூன் கிஸ்வா தயாரிப்பிற்காகவும் கஃபாவின் பராமரிப்புக்காகவும் எகிப்து நாட்டில் உள்ள மூன்று விவசாய கிராமங்களின் வருமானத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

கஃபாவுடன் மதீனாவும் பராமரிப்பில் சேர்க்கப்பட்டது.
சுல்தான் கலாவூன் அவர்களின் ஆட்சிக்கு 300 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த உஸ்மானிய சுல்தான் சுலைமான் மேலும் ஏழு கிராமங்களின் வருமானங்களை வழங்கினார். கஃபாவுடன் மதீனாவும் பராமரிப்பில் சேர்க்கப்பட்டது.

கிஸ்வாக்களை கொண்டு வர 15-க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள்.

இவ்வாறு பல நூறு ஆண்டுகளாக கிஸ்வாக்கள் எகிப்தில் தயாரிகப்பட்டு மக்காவுக்கு கொண்டு வரப்பட்டன. கிஸ்வாக்களை கொண்டு வர 15-க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு போர்வையை -கிஸ்வாவை கொண்டு வர 15 ஒட்டகங்களா! என ஆச்சரியப்படுகிறீர்களா? ஒரு ஒட்டகம் போதா? ஏன கேட்கிறீர்களா? அவசரப்படாதீர்கள். தொடர்ந்து படியுங்கள். இதற்காண விடை கிடைக்கும்.

கிஸ்வாக்களை சுமந்து கொண்டு வரும் ஒட்டகங்களை மக்கா வாசிகள் வரவேற்பார்கள்.

'மஹ்மல்' என்று அழைக்கப்படும் அழகிய பல்லாக்குகளை ஒட்டகங்கள் மேல் வைத்து அவைகளில் கிஸ்வாவின் பகுதிகளை கொண்டு வருவர். கிஸ்வாக்களை சுமந்து கொண்டு 15-க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் செல்லும்போது பார்ப்பதற்கு ஊர்வலம் போல் காட்சிகள் இருக்கும். இந்த ஊர்வலம் புறப்படும் போது எகிப்தே விழாக்கோலம் பூண்டு விடும். கிஸ்வாக்களை சுமந்து கொண்டு வரும் ஒட்டகங்கள் மக்கா வந்தடையும்போது இசைத் தாளங்களுடன் ஆடிப்பாடி மக்கா வாசிகள் கிஸ்வாக்களை சுமந்து கொண்டு வரும் ஒட்டகங்களை வரவேற்பார்கள்.

கிஸ்வா அனுப்புவதை எகிப்து அரசு நிறுத்திக் கொண்டது.

ஹிஜ்ரி 1343 இல் அதாவது 85 ஆண்டுகளுக்கு முன் சவூதியை ஆண்ட மன்னர் அப்துல் அஸீஸ் இப்னு ஸுவூது அவர்கள் இதனை கண்டித்தார்கள். ஆடிப்பாடிக் கிஸ்வாவை கொண்டு வரும் நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு முரணானது என்று சுட்டிக் காட்டி கண்டித்தார்கள். அதனால் மினாவில் வைத்து எகிப்தியர்களுடன் மோதல் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு முதல் கிஸ்வா அனுப்புவதை எகிப்து அரசு நிறுத்தி விடுவதாக அறிவித்தது. அது போல் கிஸ்வா அனுப்புவதை எகிப்து அரசு நிறுத்திக் கொண்டது.

இந்திய தொழிலாளிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கிஸ்வா.

அந்த ஆண்டே மன்னர் அப்துல் அஸீஸ் அவர்கள் இந்தியாவிலிருந்து கை தேர்ந்த நெசவுத் தொழிலாளிகளை சவூதிக்கு கொண்டு வந்தார். கிஸ்வா தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். ஹிஜ்ரி 1344, 45 ஆகிய இரு ஆண்டுகள் கஅபாவுக்கு புதிய கிஸ்வாக்கள் போர்த்தப்படவில்லை. இந்திய தொழிலாளிகளைக் கொண்டு சவூதி தொழிற்சாலையில் தயாரிக்கப்;பட்ட முதல் சவூதி கிஸ்வா ஹிஜ்ரி 1346 ஆம் ஆண்டுதான் தயாராக ஆனது. இந்தியர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் கிஸ்வா ஹிஜ்ரி 1346 ஆம் ஆண்டு அதாவது 83 ஆண்டுகளுக்கு முன் துல்ஹஜ் மாதத்தில் கஅபாவில் போர்த்தப்பட்டது. இப்படி பத்து ஆண்டுகள் நடந்தது.

எகிப்து மீண்டும் கிஸ்வாவை அனுப்பும் உரிமையப் பெற்றது.

58 ஆண்டுகளுக்கு முன்னால் ஹிஜிரி 1370 இல் உலக அளவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. அதன் பயனாக எகிப்து மீண்டும் கிஸ்வாவை அனுப்பும் உரிமைய சவூதியிடமிருந்து பெற்றது. இது ஹிஜிரி 1382 வரை தொடர்ந்தது. திறந்தவெளி ஹோட்டல்களிலும் மேடைகளிலும் ஆடிப் பாடும் பிரபல எகிப்து பாடகிதான் உம்மு குல்ஸும் என்ற பெண். இந்த பெண்ணின் நன்கொடையையும் கிஸ்வாவை தயாரிக்க எகிப்து அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு எகிப்து கிஸ்வாவுக்கு சவூதியில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது.

கிஸ்வாவை தயாரிக்க பயன்படுத்தப்படும் பட்டு நூலின் எடை.

மன்னர் ஸவூது பின் அப்துல் அஸீஸ் அவர்கள் ஆட்சியில் மக்காவிலேயே கிஸ்வாவை தயாரிக்கும் தொழிற்சாலையை மீண்டும் தொடங்கினார். இந்த தொழிற்சாலையில் சுமார் 240 சவூதி கைவினைஞர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இந்த தொழிற்சாலை மற்ற பள்ளி வாசல்களில் விரிக்க பயன்படும் விரிப்புகளையும் தயாரித்து வருகிறது. கிஸ்வாவை தயாரிக்க தூய வெள்ளைப் பட்டு நூல் பயன்படுத்தப்படுகிறது. கிஸ்வாவை தயாரிக்க பயன்படுத்தப்படும் பட்டு நூலின் எடை 670 கிலோ ஆகும். கிஸ்வாவை கொண்டு வர 15 ஒட்டகங்களா! என்ற உங்கள் கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்து விட்டதா?

கிஸ்வாவின் மொத்த பரப்பளவு.

கிஸ்வாவை தயாரிக்க பயன்படுத்தப்படும் பட்டு நூலுக்கு உயர்தர கறுப்புச் சாயம் பூசப்படுகின்றது. 47 பகுதிகளைக் கொண்டதுதான் ஒரு கிஸ்வா. கிஸ்வாவின் ஒவ்வொரு பகுதியும் 14 மீட்டர் நீளமும் 95 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். கிஸ்வாவின் மொத்த பரப்பளவு 650 சதுரமீட்டர் ஆகும்.

கிஸ்வா என்ற இந்த ஒரு போர்வை தயாரிக்க இந்திய ருபாய் 20 கோடி.

24 கிலோ தங்கம் 96 கிலோ வெள்ளி மொத்தம் 120 கிலோ தங்கமும் வெள்ளியும் 1க்கு 4 விகிதத்தில் கலந்த இழைகளால் திருகுர்ஆன் வசனங்கள் மிக நுட்பமான முறையில் கிஸ்வாவில் பின்னப் படுகின்றன. கிஸ்வா என்ற இந்த ஒரு போர்வையின் மொத்த எடை 790 கிலோ. ஒரு கிஸ்வா தயாரிக்க ஆகும் மொத்தச் செலவு 170 லட்சம் சவூதி ரியால்கள். கஅபா மீது போர்த்தப்படும் ஒரு போர்வையின் மதிப்பு இந்திய ருபாய். சுமார் 20 கோடி.

தங்கத்தில் கதவு.

நாற்பது அடி நீளமும், முப்பத்து இரண்டு அடி அகலமும், இருபத்தொண்பது அடி உயரமும் கொண்ட கஅபாவுக்கு ஜன்னல் கிடையாது. கஃபாவின் தரைமட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரத்தில் நுழைவாயில் இரு கதவுகள் கொண்டது இருக்கிறது. இதில் நுழைய வெள்ளி ஏணிப் படி கொண்டு வரப்படும். கஃபாவின் இரு கதவுகளும் தங்கத்தினால் செய்யப்பட்டவை. இந்த வாயிற் பகுதியை மறைக்கும் திரை 7.5 X 4 மீட்டர் அளவுடையது.
அதுவும் சிறந்த வேலைப்பாடுகளால் ஆனவை. கஃபாவின் உள்ளே செல்ல நகரும் ஏணிப்படிகளை பயன்படுத்துகின்றனர். கஃபாவின் உட்சுவர்களையும் அதன் கூரைப் பகுதிகளையும் பச்சை நிற பட்டுத் துணியால் அலங்கரிக்கின்றனர். அவைகளிலும் திருக்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்படுகின்றன. 3 தேக்கு மரத் தூண்கள் உள்ளன. முந்தைய காலத்தில் உபயோகிக்கப்பட்ட வித விதமான 13 விளக்குகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
வட கிழக்கு முனையிலிருந்து மேல் கூரைக்குச் செல்ல படிக்கட்டுகள் உள்ளன.

கஃபாவை கழுவும் வாய்ப்பை பெற்ற தமிழர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஷஃபான் மாத்திலும், துல்ஹஜ்ஜு மாதத்திலும் கஃபாவின் உட்தளம் சந்தனத்தாலும், உயர்ரக வாசனைத் திரவியங்களாலும் கழுவப்படும். உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம் ஜனாதிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் இஸ்லாமியப் பிரதி நிதிகளும் தலைவர்களும் பங்கேற்று கழுக வாய்ப்பு அளிக்கப்படுகிறது.கஃபாவை கழுவும் வாய்ப்பை பெற்ற தமிழர்கள். மு.லீக் முன்னாள் தலைவர் அ.கா.அ. அப்துஸ்ஸமது. சவூதியில் இந்திய தூதராக இருந்த முன்னாள் ஐ.ஜி. அப்துல்லாஹ் ஆகிய இரு தமிழர்கள்தான். மற்றவர்கள் பற்றி அதிகாரப் பூர்வமான எந்த ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை.

'கஃபாவையா கழுகினேன். என் பாவக்கறையை அல்லவா கழுகினேன்'

மாமன்னர் பைசல் தலைமையில் கஃபாவை கழுகியது பற்றி அ.கா.அ. அப்துஸ்ஸமது அவர்கள், 'கஃபாவையா கழுகினேன். என் பாவக்கறையை அல்லவா கழுகினேன்' என்று கண்ணீர் மல்க பல முறை கூறி இருக்கிறார்கள். புனித ஹஜ்ஜின் இனிய நினைவுகள் என்ற நூலை எழுதிய அ.கா.அ. அப்துஸ்ஸமது அவர்கள் அதிலும் மனம் நெகிழ இதனை குறிப்பிட்டுள்ளார்கள். அதன் சுருக்கத்தை தருகிறோம் பாருங்கள்.

பன்னீரால் கழுவுகிறார்களா, கண்ணீரால் கழுவுகிறார்களா.

ஒரு கையிலே பன்னீர் நிறைந்த பக்கட், மற்றொரு கையிலே ஓலையிலான துடைப்பம். இவற்றை எடுத்துக் கொண்டு கஅபாவினுள்ளே நுழைகிறார்கள். நுழைந்தவர்கள் பன்னீரால் கழுவுகிறார்களா, கண்ணீரால் கழுவுகிறார்களா எனச் சொல்ல முடியவில்லை. உயரிய சலவைக் கற்களால் ஆன தரை. எனக்கு, பன்னீர் பக்கெட்டும் கிடைக்கவில்லை: துடைப்பமும் கிடைக்கவில்லை: என்ன செய்வதென்று ஒரு கணம் ஏக்கம் தோன்றிது. இஹ்ராம் தரித்திருந்த என் வெள்ளுடையின் மேலாடையை எடுத்துத் தரை முழுவதையும் துடைத்தேன்! கஅபாவின் தரையையா துடைத்தேன்? என் பாவக் கறைகளையல்லவா துடைத்தேன்! இவ்வாறு அ.கா.அ. அப்துஸ்ஸமது அவர்கள் அனுபவத்தை எழுதியுள்ளார்கள்.

கஃபாவின் வாசல் திரையினைப் போன்ற திரைச் சீலை UNO வில்.

ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுக்கு முன்பாக துல்ஹஜ் 8ஆம் நாள் கழுகும்போது புதிய கிஸ்வா அணிவிக்கப்படுகிறது பழைய கிஸ்வா பல சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு முஸ்லிம் பிரதிநிதிகள், இஸ்லாமிய கலாசாலைகள், தொல் பொருட்காட்சியங் களுக்கு என அன்பளிப்பாக அளிக்கப்படுகிறது. கஃபாவின் வாசல் திரையினைப் போன்ற வேலைப்பாடுகள் அமைந்த 9 X 2.5 மீட்டர் அளவுடைய திரைச் சீலையை ஹிஜிரி 1403 ஆம் ஆண்டு சவூதி மன்னர் ஃபஹ்து அவர்கள் உலக முஸ்லிம்கள் சார்பில் அமெரிக்காவில் உள்ள உலக நாடுகள் மன்றத்து -UNO வரவேற்பு அறையில் தொங்கவிட அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

தொகுத்தளித்தவர்:-
செய்னபு பின்த் முஹம்மது
மாணவி:- மேல்நிலை முதலாம் ஆண்டு, வரலாற்றுப் பிரிவு.
முஸ்லிம் பெண்கள் மேல் நிலைப் பள்ளி,
மேலப்பாளையம்.

நன்றி:- மக்கள் உரிமை வார இதழ்,
தினமலர்,நெல்லை.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.