உள்ளிருந்தே போராடும் TNTJ முன்னாள் தலைவர் அல்தாஃபி To கம்புளி அப்துன்னாஸர் +தரங்கெட்ட ஒருத்தி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உயர்நிலைக் குழு உறுப்பினர்களுக்கு அல்தாஃபி எழுதிக் கொள்வது…



என் மீதான நடவடிக்கை குறித்து பொதுக்குழுவில் பேசப்பட்ட செய்திகளைக் கேள்விப்பட்டேன். வாழ்வில் இதுவரை சந்தித்திராத பெரும் மனத் துயருக்கு ஆளாகி நிற்கிறேன்.


என் மீது இவ்வளவு வெறுப்பையும், வன்மத்தையும் சுமந்து கொண்டு தான் இவர்கள் என் சக நிர்வாகிகளாக இருந்தார்களா? என்ற கேள்வியும், அது தந்த அதிர்ச்சியும் என்னை விட்டு விலக மறுக்கிறது.


என்னை எப்படியாவது ஜமாஅத்தின் உறுப்பினர்கள் முன்பு எதிரியாக நிறுத்தி விட வேண்டும் என்ற உங்களின் உள்ளுணர்வு உங்கள் வார்த்தைகளில் அப்பட்டமாய் தெரிந்தது. இன்ஷா அல்லாஹ் உங்கள் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை. இந்த உறுதியை இறுதி வரை எனக்குத் தர வேண்டுமென்று என் இறைவனிடத்தில் நான் பிரார்த்திக்கிறேன்.


உங்களில் ஒருசிலர் எனக்கு எதிராகச் செய்யும் சூழ்ச்சிக்கு ஒட்டுமொத்த ஜமாஅத்தும் பொறுப்பேற்க முடியாது என்பதை நான் அறிவேன். ஆகையால் எனக்கு அநீதம் செய்யப்படுவதாக நான் உணரும் போது எனக்கான நியாயத்தை வெளியில் போய்த் தேட மாட்டேன். நானும் சேர்ந்து வளர்த்த என்னுடைய ஜமாஅத்தில் தான் அதை முறையிடுவேன். தீர்வு பெற முயற்சிப்பேன். நியாயத்தைப் பெற உள்ளிருந்தே போராடுவேன். அதன் ஒரு பகுதி தான் இந்தக் கடிதம்.


பொதுக் குழுவின் பேச்சுக்களைக் கேட்டேன். என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டு அதற்குக் காரணம் தேடியிருக்கிறீர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.


அல்தாஃபி விவகாரம் அனைவருக்கும் தெரிந்து விட்டதால் விளக்குகிறோம் என்கிறீர்கள். அனைவருக்கும் தெரிந்ததை விளக்கத் தான் அவையின் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டீர்களா? எல்லோருக்கும் தெரிந்ததை எளிதாகக் கடந்து விடலாமே. இதில் நெருக்கடி என்பதற்கான பொருள் எனக்கு விளங்கவில்லை.


நாங்கள் எவ்வளவோ மறைக்க முயன்றோம். ஆனால் அவளது தற்கொலை முயற்சி, காவல்துறை, உளவுத் துறை, கல்யாண ராமன் வழியாக உலகமெல்லாம் சென்று சேர்ந்து விட்டது என்று கூறியிருக்கிறீர்கள்.

உளவுத் துறை வழியாகப் போனது மெய்யோ, பொய்யோ அந்த விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. 


சகோ பீஜேவிடமும், தலைமையகத்தில் உங்களுக்கு முன்பாகவும் மட்டுமே நான் சொன்ன செய்தி உளவுத்துறைக்கு தெரிந்தது எப்படி? 


தொலைபேசி வழியாக நம் உரையாடல் நிகழ்ந்திருந்தது என்றால், அதை உளவுத்துறை ஒட்டுக்கேட்டு, தெரிந்து கொண்டார்கள் என்று கூற நியாயம் உண்டு. ஆனால், தனியறையில், நான்கு சுவர்களுக்குள் நேரடியாக நாம் பேசிக்கொண்ட விஷயம் எப்படி வெளியே போகும்? 

நாம் பேசிக்கொண்ட விஷயங்களை, உளவுத்துறையின் பெயரால் என்னிடம் ஒன்றுவிடாமல் துல்லியமாகப் பதிவு செய்தது யார்? அது உண்மையில் உளவுத்துறை தானா அல்லது அதன்  பெயரால் வேறு யாரும் நடத்திய ராஜதந்திர நாடகமா என்பது அல்லாஹ்வுக்கே வெளிச்சம். 


இது ஒருபுறம் இருக்க. உயர்நிலைக் குழு உறுப்பினர்களில் சிலர், குறிப்பாக செய்யது இப்ராஹீம், ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் உண்மையுடன் பல அவதூறுகளையும் இணைத்து, அனைவர் காதிலும்  போட்டு வைத்து விட வேண்டுமென்ற வெறியோடு வேலை செய்ததை நான் அறிவேன்.


அதுகுறித்த புகாரை ஏற்கனவே சகோதரர் பீஜேவிடமும் அப்துன் நாசர் அவர்களிடமும் தெரிவித்தும் இருக்கிறேன்.  ‘எனது ஒழுக்கத்திற்கு களங்கம் சுமத்த வாய்ப்பு கொடுக்கும் வகையில், ஒரு பெண்ணைத் தனியே என் வீட்டுக்குள் அனுமதித்துவிட்டேன் என்ற குற்றத்தைத் தவிர சையது இப்ராஹீமும், ரஹ்மதுல்லலாஹ்வும் கூறியதாக என் கவனத்திற்கு வந்த அத்தனை விஷயங்களையும்  நான் மறுக்கிறேன்.  



அவை என்மீது சொல்லப்பட்ட அவதூறுகள் என்கிறேன். நீங்கள் விரும்பும் முறைப்படி  அதைச் சந்திக்கத் தயாராகவும் இருக்கிறேன் என்பதைத் தெரிவித்திருந்தேன். 


இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தும், அவர்களின் அவதூறுகள் நிற்கவில்லை. தோண்டத் தோண்ட வண்டி வண்டியாக வந்து கொண்டிருக்கிறது என்று போகிற இடங்களில் எல்லாம் கொழுத்திப் போட்டு விட்டு வந்திருக்கிறார்கள். இதுவெல்லாம் என் மீதும், ஜமாஅத்தின் மீதும் கொண்ட அக்கறையால் பேசியிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது என்னை புதைகுழிக்குள் அனுப்ப புத்துணர்ச்சியோடு செயல்படுகிறார்கள் என்று புரிய வேண்டுமா?


இந்த நிலையில் நாங்கள் மறைக்க நினைத்தோம் அது கைமீறிப் போய் விட்டது என்று பொதுக்குழு உறுப்பினர்களிடம் நீங்கள் செய்த அறிவிப்பை நான் எப்படி  எடுத்துக் கொள்வது?  என்பதை நீங்கள் தான் எனக்கு விளக்கித் தர வேண்டும்.


என் ராஜினாமா, சகநிர்வாகிகளின் சதி என்று எதிரிகள்  கூறியதற்காக கொந்தளிக்கிறீர்கள். இது இன்று நேற்றா பரப்பபடுகிறது? என்னை சம்பந்தப்படுத்தியே இதற்கு முன் இதுபோன்ற விமர்சனங்கள் வந்த போது என்ன செய்தோம்? என் மீது மட்டுமா வருகிறது? எத்தனையோ பேர் மீது வந்திருக்கிறதே. மற்றவர்கள் மீது வந்ததை என்ன செய்தோம்? எப்படி விளக்கமளித்தோம்? எதிரிகள் பேசிவிட்டார்கள் என்பதற்காக பொதுக்குழுவில் வைத்து என்னை நாறடிக்க வேண்டிய தேவை என்ன வந்தது?



அந்தச் சுமையை நீங்கள் சுமக்க வேண்டாம் என்று தான், எனது பிரச்சனையை நானே சுமக்கிறேன் என்றேன். நேரில் பொதுக் குழுவுக்கு வந்து விளக்கமளிக்கிறேன் என்றேன். தலைமையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எனக்கு அனுமதி வழங்கியிருந்தால் அங்கு வந்து உண்மையை மட்டும் பேசி, தவறு என்னுடையது. இதற்காக யாரையும் குறை சொல்லாதீர்கள் என்று புரிய வைத்திருப்பேன்.


நான் செய்த தவறை உள்ளதை உள்ளபடி சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. தவறு செய்யத் தான் தயங்க வேண்டும். செய்த தவறை ஒத்துக் கொள்ளவோ அதற்கான தண்டனையை ஏற்கவோ தயங்கக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். 


மக்கள் மத்தியில் அதை ஒத்துக் கொள்ளும் போது மற்றவர்களுக்கும் அது ஒரு பாடமாக அமையும் என்று  எதிர்பார்த்தேன். அந்த வாசலை அடைத்த நீங்கள் பொதுக் குழுவில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.


நடந்தது என்ன என்ற பெயரில் பொய்யான, ஒருதலைபட்சமான தகவலை, பொதுக் குழு உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளீர்கள் .


எனக்கும் அந்த சதிகாரிக்கும் நீண்ட காலம் தொடர்பிருந்ததாகவும், சேலத்தில் இருந்தே தொடர்ந்து வந்த எங்கள் நட்பை, சென்னை வந்து புதுப்பித்துக் கொண்டதாகவும், போனிலே பல நாட்களாகப் பேசி, ஒருகட்டத்தில் அது எல்லை மீறிச் சென்று விட்டதாகவும் சொன்னீர்களே இது பச்சை அவதூறு இல்லையா? 



அவள் சொன்னாள் அவள் சொன்னாள் என்று இப்படியொரு தகவலைப் பதிவு செய்தீர்களே இதை உறுதி செய்தீர்களா? இதற்கு என்ன ஆதாரம்? 


கேட்டதையெல்லாம் பரப்புவதே ஒருவனைப் பொய்யன் என்பதற்கு போதுமானதாகும் என்ற நபிமொழி உங்களுக்குப் பொருந்தாதா?


என் மீது உங்களுக்கு இருந்த வெறுப்பு உங்களை எந்த எல்லைக்கு கொண்டு சென்றிருக்கிறது என்றால், அவள் சொன்னது உண்மையா?’ என்று கேட்கக் கூட மனமில்லாத நிலையை உங்களுக்கு ஏற்படுத்தி விட்டது.


சம்பந்தப்பட்டவன் சபையில் இல்லை என்ற எண்ணத்தில் உங்கள் வெறுப்பைக் குதூகலமாகக் கொட்டித் தீர்த்திருக்கிறீர்கள். ஆனால் நம்மையெல்லாம் படைத்த இறைவன் இதை கவனிக்கிறானே என்ற உணர்வு உங்களில் ஒருவருக்கு கூடவா இல்லாமல் போய் விட்டது.


இதையெல்லாம் பார்த்த பிறகு இப்பொழுது கூடுதலாக ஒரு சந்தேகம் எழுகிறது. அந்த சதிகாரி சொன்னதைக் கேட்டு நீங்கள் சொன்னீர்களா? அல்லது அவள் சொன்னதாக நீங்களே சொன்னீர்களா? இறைவனுக்கே வெளிச்சம்.


அவளுக்கும் எனக்கும் வெறும் ஒருநாள் அறிமுகம் தான் என்று தெளிவாக கூறியிருந்தேனே! அன்றைய தினத்திற்கு முன் அவளைப் பார்த்ததில்லை, அவளோடு பேசியதில்லை, அவள் யாரென்றே எனக்குத் தெரியாது என்று நான் சொன்ன எனது வாக்குமூலத்திற்கு நீங்கள் அளித்த மரியாதை என்ன?


குறைந்த பட்சம் என் வாக்குமூலத்தையும் சேர்த்து பதிவு செய்திருந்தால் கூட ஏதோ எங்களுக்கு வந்த இரு தரப்பு தகவலையும் சொல்லி விட்டோம். முடிவு மக்களைச் சார்ந்தது என்றாவது நீங்கள் எஸ்கேப் ஆகியிருக்கலாம். 


அதைக் கூட செய்யவில்லை. அவதூறுகளைக் காசாக்குகிற நாலாந்தர பத்திரிக்கையாளன் கூட இதற்கு எதிராளி என்ன பதில் சொன்னார் என்பதை ஓரஞ்சாரத்திலாவது போட்டு விடுகிறான். நீங்கள் அதையும் விட தரம் தாழ்ந்து விட்டீர்கள்.


அவளை விசாரித்த வரையில் உங்கள் மீது வெறி கொண்டவளாக இருக்கிறாள். அல்தாஃபி மனைவி என்று சொல்லிக் கொள்ள வேண்டும் என்பது தான் அவள் நோக்கம். விபச்சாரம் நடந்ததாகச் சொன்னால் உங்களை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று நாடாகமாடுகிறாள். 



அதுபோல திருமணம் ஆகிவிட்ட சிலர் குறித்து தெரிந்தும் வைத்திருக்கிறாள். எனவே இவளும் அந்த வழியில் வருகிறாள் என்று அவளைப் பற்றி நீங்களும் என்னிடம் சொன்னீர்கள். அவளது நடவடிக்கையை ஊராரும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட தரங்கெட்ட ஒருத்தி கூடுதல், குறைவாகச் சொல்வாள் என்ற குறைந்த பட்ச அறிவு கூடவா இல்லாமல் போய் விட்டது? 


அல்லது உங்கள் ஆணவமும், வெறுப்பும், பொறாமையும் அந்த அறிவை மழுங்கடித்து விட்டதா?


விசாரணை என்றதும் அஞ்சி நடுங்கி விட்டார். அதிலிருந்து தப்பிப்பதற்காக பீஜேவைத் தனியாகச் சந்தித்து, விசாரணை வேண்டாம். அதை சந்திக்கும் துணிவு எனக்கு இல்லை அதற்கான தகுதியும் எனக்கு இல்லை என்று கூறி விசாரணைக்கு உட்படாமல் ஓடி விட்டதாகப் பதிவு செய்துள்ளீர்கள்.


வீரத்திற்கும் கோழைத்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாத மூடனால் மட்டுமே இப்படிப் பேச முடியும். குற்றத்தை மறைக்க நினைப்பவன் தான் அஞ்சுவான். விசாரணைக்குப் போனால் குட்டு வெளிப்பட்டு விடுமே என்று பயந்து அதைத் தவிர்க்க வழிதேடுவான். எனது நிலை நேர் எதிரானது. 


எதையும் நான் மறைக்க விரும்பவில்லை. நானாக முன்வந்து நடந்ததைத் கூடுதல் குறைவில்லாமல் சொல்லி விட்டு, அதற்கான தண்டனையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று செய்த தவறை துணிச்சலோடு ஒத்துக் கொண்டவன் நான்.


எதிராளியிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிந்த பிறகும், இவள் யாரென்றே தெரியாது என்று கூறிவிட்டால் வழக்கு நிற்காது என்று மறைமுக சமிக்கைகள் சொல்லப்பட்ட போதும் உலகின் சிறு கேவலத்திலிருந்து தப்பிப்பதற்காக நேர்மையை இழக்க வேண்டாம் என்று உறுதியோடு நின்றதற்குப் பெயர் கோழைத்தனமா?


இத்தனை ஆண்டுகால பொது வாழ்வில் நான் அறிந்து, தெரிந்து ஒருமுறை கூட நான் நேர்மை தவறி நடந்ததில்லை. இதற்கு நான் தவறே செய்யாதவன் என்று பொருளல்ல. மனித பலவீனத்தால் தவறுகள் நிகழ்ந்தாலும் அதிலே நீடித்து, நிலைத்து, நியாயப்படுத்தி அதிலேயே வீழ்ந்து கிடக்க மாட்டேன். சிறிது கால அவமானம் தான், சிரமம் வந்தாலும் தாங்கிக் கொள்வோம் என்ற கொள்கையை ஒவ்வொரு கட்டத்திலும் உடும்புப் பிடி போல உறுதியாகப் பிடித்துக் கொண்டு வருகிறேன்.


மன்னர் ஹிர்கலுக்கும் அபூசுஃப்யான் அவர்களுக்கும் நடந்த உரையாடலை உளமாற அறிந்து படித்த போது எடுத்த உறுதி அது. இவர் இதற்கு முன் உங்களிடம் பொய் பேசியிருப்பார் என்று சந்தேகப்பட்டிருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு இல்லையென்று அபூசுஃப்யான் பதிலளிப்பார். பொய் சொல்லியிருக்கிறாரா என்று கேட்கவில்லை. கேள்வி அதைவிட ஆழமானது. பொய் சொல்லியிருப்பாரோ என்ற நெருடல் கூட எழாத வாழ்க்கை நபியவர்களுக்கு உரியது. அதை சத்திய வாக்காக மனதில் ஏந்திக் கொண்டு கடைபிடித்துக் காட்டியதற்குப் பெயர் வீரமா? கோழைத்தனமா? நீங்களே பதில் சொல்லுங்கள்.


நான் பீஜே அவர்களிடம் விசாரணை வேண்டாம் என்று எதுவும் சொல்லவில்லை. நான் கூறிய அனைத்து விஷயங்களையும் பொறுமையாகக் கேட்டு விட்டு அவர்கள் ஒரு தந்தையின் இடத்திலிருந்து எனக்கு ஆறுதல் கூறினார்கள். மன நெருக்கடியிலும், தூக்கமின்றியும் அவதிப்படுவேன் என்பதை உணர்ந்து தன்னிடம் இருந்த மாத்திரைகள் சிலதைத் தந்து என்னை ஆசுவாசப்படுத்தினார்கள். 


இனிமேல் விசாரிப்பதற்கு என்ன இருக்கிறது? மறுத்தால் தானே விசாரணை தேவை. பெரும்பாவம் செய்யவில்லை என்றாலும், யாருமில்லாத நேரத்தில் பெண்ணை வீட்டுக்குள் அனுமதித்தாக ஒத்துக் கொண்ட பிறகு விசாரணை எதற்கு? அப்படியே விசாரணையில் உட்கார்ந்தாலும் கூடுதல் குறைவாகப் பேச்சுக்கள் வரும். அதனால் விசாரணை தேவையில்லை. அதை நானே சொல்லி விடுகிறேன். 


தாமதமில்லாமல் உயர்நிலைக் குழுவைக் கூட்டச் சொல்லி என்னவென்று பேசிக் கொள்கிறோம் என்று சகோ பீஜே சொன்னார்கள். நான் அதை மறுப்பின்றி ஏற்றுக் கொண்டேன். இந்த உண்மையை மறைத்து விட்டு நான் என்னமோ கெஞ்சிக் கூத்தாடி விசாரணையில் இருந்து தப்பித்து ஓடிவிட்டதைப் போல வாய் கூசாமல் புளுகியிருக்கிறீர்கள்.


தவறே செய்திருந்தாலும் அல்தாஃபிக்கு விலக்களித்திருக்க வேண்டும் என்று சிலர் பேசிக் கொள்கிறார்களாம். அது எப்படி? சட்டத்தில் யாருக்காவது நாம் பாரபட்சம் காட்டியிருக்கிறோமா? என் மகளாக இருந்தாலும் கையைத் தரிப்பேன் என்றுரைத்த நபிவழிக்கு மாறு செய்ய முடியுமா? என்று அணல் பறக்க உரை நிகழ்த்தியிருக்கிறீர்கள்.


ஆள் பார்த்து சட்டம் வளையக் கூடாது என்பதை முழுமையாக நான் ஏற்கிறேன். அதில் காட்டும் உறுதியை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் உங்கள் நெஞ்சுக்கு நெருக்கமாக ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். என்னோடு பழகிய இத்தனை ஆண்டுகளில், ஒரே ஒரு முறையாவது, எந்த விஷயத்திலாவது, பொது விதிக்கு மாற்றமாக, எனக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறேனா? அதற்கு ஆசைப்பட்டிருப்பேன் என்றாவது உங்களால் கூற முடியுமா? அற்பத்திலும் அற்பமான விஷயங்களில் கூட சட்டத்திற்கும், நடைமுறைகளுக்கும் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் முதலாமவனாக இருந்ததில்லை என்று உங்களால் மறுக்க முடியுமா?


கடைசியாக இந்த ரமழானில் நடந்த ஒரு சம்பவம். பள்ளியில் ஐந்து மணிக்குப் பிறகு வந்தவர்களுக்கு நோன்புக் கஞ்சி இல்லை என்று அனுப்பியிருக்கிறார்கள். அது தெரியாமல் 5:10 க்கு வந்த எனக்கு பணியாளர்கள் மறுப்பேதும் சொல்லாமல் ஊற்றிக் கொடுத்து விட்டார்கள். இந்த விபரம் தெரிந்த பின் நான் அடைந்த துயரம் எப்படிப்பட்டது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிவார்கள். 


இனி யாருக்கும் இல்லை என்று அனுப்பக் கூடாது. கடைசி வரை வருபவர்களுக்கும் ஊற்றிக் கொடுக்க வேண்டும் என்று, நடைமுறையை மாற்றிவிட்டு அதன் பிறகு பத்து நாட்களுக்கும் மேலாக நாலரை மணிக்கே வந்து வாங்கிச் செல்வதை எனக்கான வழக்கமாக ஆக்கிக் கொண்டேன். சிறியது முதல் பெரியது வரை நான் அறிந்தவரை அனைத்திலும் இப்படித் தானே நடந்து கொண்டிருக்கிறேன். 


இந்நிலையில் நம் சகோதரர்களுக்கு பதிலளிப்பதற்காக என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்று ஏன் முடிவெடுத்தீர்கள்? அவர்களுக்கு வேறு வகையில் அதை விளக்கியிருக்க முடியாதா?


நான் நீண்ட காலம் காத்திருந்து, என் மனைவி ஊருக்குப் போன தருணம் பார்த்து, வீட்டுக்கு வா என்று அழைத்து, மனைவி மக்களெல்லாம் இருப்பார்களே என்று அவள் கேள்வி கேட்டு, இல்லை வெக்கேஷனுக்கு ஊருக்குப் போயிருக்கிறார்கள் என்று நான் கூறி, வருவதற்கு வழி சொல்லிக் கொடுத்து, எங்கே இறங்க வேண்டும், எப்படி வரவேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததாகவும், உங்கள் அபார்ட்மெண்டில் தவ்ஹீத்வாதிகள் இருக்கிறார்களே என்று அவள் கேட்டதாகவும், ஆள் வந்தால் மேலே போய்விடு,  இல்லாவிட்டால் உள்ளே நுழைந்து விடு என்று சில டெக்னிக்களையும் கற்றுக் கொடுத்ததாகவும்…… 


அப்பப்பா என்ன அபாரம்! உங்கள் கடமை உணர்ச்சி என்னைக் காரித்துப்ப வைக்கிறது. நாலாயிரம் பேர் கூடியிருக்கும் ஒரு சபையில், அவர்களில் ஒருவனாக கொள்கையால் நேசிக்கப்பட்டவனைக் குறித்து, இப்படி அவிழ்த்து விடுகிறீர்களே அதற்கான தேவை என்ன என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், நமக்கும் எதிர்காலம் இருக்கிறது, நாளை மறுமையில் அல்லாஹ்வின் விசாரணையும் இருக்கிறது என்ற அச்சம் உங்கள் நெஞ்சங்களை அறுக்கவில்லையா?


அண்ணன் பெயரில் அவதூறு என்றதும் ஆடிப் போன ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். எத்தனை நாள் தூக்கம் இழந்தேன் என்பது எனக்கும் என் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். அது அவர் மீது கொண்ட தனிப்பட்ட பாசம் என்பதைத் தாண்டி அவர் பேசி, எழுதி, கஷ்டப்பட்டு, கட்டமைத்து, உருவாக்கியிருக்கிற ஏகத்துவக் கோட்டையையே ஏளனமாகப் பேசுவார்களே! இதுகாறும் பேசிய அனைத்து விஷயங்களுக்கும், காரணம் கற்பித்து கழுவி ஊற்றுவார்களே என்ற கவலை தான் அதிகம் இருந்தது.


அங்கே அண்ணனின் உணர்வுகளுக்கு ஆறுதலாக இருந்து, அரும்பாடு பட்ட நீங்கள், என் விஷயத்தில் உள்ளதைத் தாண்டி இல்லாத பழிகளையும் சுமத்தி விட்டது ஏன்? இரண்டையும் நான் சமப்படுத்தவில்லை. அவர் மீது சொல்லப்பட்டது அவதூறு. என் மீது தவறு இருக்கிறது. என் தவற்றை ஏன் சொன்னீர்கள் என்று நான் கேட்கவில்லை. அது நான் அனுபவித்தே தீர வேண்டிய கடன். அதில் உங்கள் கைச்சரக்கை ஏன் கலந்து விட்டீர்கள் என்று தான் கேட்க விரும்புகிறேன்.


நீண்ட காலம் என்னை நினைத்து உருகிக் கொண்டிருந்த ஒருத்திக்கு, பல ஆண்டுகளாக என்னோடும், என் குடும்பத்தோடும், தொடர்பில் இருந்த ஒருத்திக்கு, எனது குடியிருப்பில் தவ்ஹீத் சொந்தங்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து வைத்திருந்த ஒருத்திக்கு, என் வீட்டு முகவரி மட்டும் தெரியாமல் போன மர்மம் என்னவோ? 



எல்லாவற்றிலும் லாஜிக் ஓட்டைகளை கண்டுபிடிக்கும் உங்களுக்கு, இந்த லாஜிக் மட்டும் புரியாமல் போனது ஏனோ?  நான் என் வீட்டு முகவரியைச் சொல்லிக் கொடுத்து, இப்படி வா அப்படி வா என்று விபச்சாரத்துக்கு வழிகாட்டி, திட்டமிட்டேன் என்ற பொய்யை எப்படி உங்களால் துணிந்து கூற முடிகிறது? அவள் சொன்னதாய் எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா?  


ஒருநாள் எனக்கு கால் செய்கிறாள். ஏதோ ஒரு மார்க்க சந்தேகம்  கேட்பது போல் பேச்சை தொடங்குகிறாள். அதன் பின்னர் சபலப்படும் வகையில் கூடுதலாக சில வார்த்தைகளைப் பேசுகிறாள். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்கள் உரைகளை விரும்பிக் கேட்பேன். பல்லாவரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உங்களை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். உங்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் அது நிறைவேறாமல் போய் விட்டது. என்றெல்லாம் சொல்லி பேச்சை வளர்த்தாள்.



அதற்கு நான் சற்று எரிச்சலுடன் இவ்வாறு பதிலளித்தேன். இந்தப் பேச்சு எந்த ஆணையும் சலனப்படுத்திவிடும். இது நல்லதல்ல. என்னிடம் மட்டுமல்ல, எந்த ஆணிடமும் இப்படிப் பேசாதே என்று அறிவுரை கூறினேன். அப்போது நான் விட்ட ஒரு தேவையற்ற வார்த்தை எனக்கு பேரிழப்பு ஏற்பட காரணமாகி விட்டது. பேசிக் கொண்டிருக்கும் போதே, என் மனைவியும் ஊரில் இல்லாத இந்த நேரத்தில் இதுபோல பேச்சுக்களைக் கேட்டால் ஷைத்தான் புகுந்து விளையாடி விடுவான் என்றேன். உடனே நல்லவள் போல நாடகமாடிய அவள், மனைவி எங்க பாய் என்று கேட்டாள். பையனுக்கு விடுமுறை என்பதால் ஊருக்கு போயிருக்கிறாள் என்று சொல்லி விட்டு, இனி இப்படி பேசாதே என்று  போனை வைத்து விட்டேன். 


சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைப்பு. சற்று நேரத்திற்கு முன் பேசினேனே என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, பாய் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். பல நாட்களாக என் மனதில் இருந்ததை சொல்லி விட்டேன். தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என்றாள். நானும் முதலில் கூறிய அறிவுரையை நினைவுபடுத்தி விட்டு போனை வைத்து விட்டேன். 


அதே நாளின் மாலை நேரத்தில் மீண்டு அழைப்பு. உங்களிடம் மார்க்க சந்தேகம் கேட்க வேண்டும் என்கிறாள். சந்தேகம் கேட்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள் என்கிறேன். இல்லை நேரில் கேட்க வேண்டும் என்கிறாள். நிர்வாகிகளுக்கு சந்திக்க வாய்ப்பிருந்தால் கேட்டு விட்டு சொல்கிறேன் என்றேன். இல்லை உங்களிடம் தான்  கேட்க வேண்டும் என்றாள். எனக்கு நேரம் ஒதுக்க முடியாது என்று மறுத்தேன். மீண்டும் மீண்டும் வலியுறுத்தி முக்கியமான விஷயம். இல்லையென்றால் வேறு யாரிடமாவது கேட்டிருப்பேன் தயவு செய்து ஒரு பத்து நிமிடங்கள் எனக்காக ஒதுக்குங்கள். அதிக நேரத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று கெஞ்சியும், வலியுறுத்தியும் கேட்டுக் கொண்டே இருந்தாள்.


கடைசியில் சரி வரட்டுமே பேசி அனுப்புவோமே என்று சிறிது ஆட்டம் கண்ட உள்ளத்தோடு அனுமதி கொடுத்து விட்டேன். மறுநாள் மதியம் நான் வீட்டிலிருக்கும் போது, பாய் நான் கிட்ட வந்துட்டேன். எங்கே இருக்கீங்க என்று போன் செய்தாள். வீட்டில் என்றதும் வீட்டுக்கு வருகிறேன் என்று வந்து விட்டாள். 


ஷைத்தானின் சூழ்ச்சிக்கு பலியாகி விட்ட நான், தனிமையில் இருக்கிறேன். நீ அலுவலகத்துக்குப் போ. நான் அங்கு வந்து சந்திக்கிறேன் என்று கூறியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் சரி வர்றேன் என்கிறாள் வரட்டும் என்று சபலத்தோடு அங்கீகரித்து  விட்டேன்.


இது தான் அவள் என் வீட்டுக்கு வந்த கதை. இதை நான் உங்களிடம் அப்படியே கூறிய போது, அதை ஏற்று அங்கீகரித்து, மனிதன் தவறு செய்யக் கூடியவன் தான். இப்படியொரு சூழலில் நானாக  இருந்தாலும் தப்பித்திருக்க முடியாது. பெண்கள் மோசமானவர்கள். விஷயத்தைத் தலைகீழாகத் திருப்பி விடுவார்கள். யூசுஃப் நபி வரலாற்றில் நாம் பார்க்கவில்லையா? அனைத்தையும் செய்து விட்டு, நபி மீது பழிபோடவில்லையா? அவர்கள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று எனக்கு ஆறுதலெல்லாம் அளித்தீர்களே!


இப்போது பொதுக் குழுவில்  அவள் சொன்னாள் என்ற பெயரில் கதை வேறு வடிவம் எடுத்திருக்கிறதே இதை நான் எப்படிப் புரிந்து கொள்வது? அவள் அப்படிச் சொன்னாள் என்பதோடு இவர் இப்படிச் சொன்னார் என்று இரண்டு தகவல்களையும் இணைத்திருந்தால் கூட மனம் ஆறிவிடும். அல்லது அவள் கூறுவது தான் உங்களுக்கு நம்பும்படி இருக்கிறதென்றால் நேரில் என்னை விசாரணைக்கு வரச்சொல்லி உத்தரவிட்டு, அதை உறுதிப்படுத்தி விட்டு அந்தத் தகவலைப் பதிவு செய்திருக்க வேண்டும்.  குறைந்த பட்சம் தொலைபேசியிலாவது உறுதி செய்திருக்க வேண்டும். எதையும் செய்யாமல் பொய்யையும், புரட்டையும் அவிழ்த்து விட்டு, என்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது ஏன்?


சொல்ல விரும்பிய அனைத்தையும் சொல்லி முடித்து விட்டு இவை அனைத்தையும் அவர் ஒத்துக் கொண்டார் என்று ஓரு போடு போட்டீர்களே அதுதான் அனைத்திலும் ஹைலைட். நீங்கள் சொன்ன இந்தக் கதைகளை நான் எப்போது ஒத்துக் கொண்டேன்? யாரிடம் ஒத்துக் கொண்டேன் என்பதை நீங்கள் தான் எனக்குச் சொல்ல வேண்டும். 


எவ்வளவு அழகான காய் நகர்த்தல். விபச்சாரத்தை தவிர அனைத்தையும் அவரே ஒத்துக் கொண்டார் என்று கூறிவிட்டால் எதிர் கேள்விக்கு வேலையில்லாமல் போகும் என்று எண்ணியிருக்கிறீர்கள். இறைவனிடமுமா கேள்வி இல்லாமல் போகும்? 


அதைவிட இன்னொரு கொடுமை. இவற்றையெல்லாம் எனது ஒப்புதலுடன் தான் பொதுக்குழுவில் சமர்பிப்பதாகச் சொன்னீர்கள். என்னிடத்தில் சொல்லப்பட்டது என்ன?


ஒருநாள் ஹாமீன் இப்ராஹீம் அவர்களிடம் பேசினேன். அப்போது பொதுக்குழுவில் என் விஷயத்தை நேரில் சென்று நானே விளக்கி விடலாம் என்று நினைக்கிறேன். உண்மை தெரியாமல் மக்களும் குழம்புகிறார்கள். சிலர் பரப்பும் அவதூறுகளையும் நம்பும் நிலை ஏற்படுகிறது.  உயர்நிலைக் குழு மட்டத்தில் இருக்கும் சிலரே  என் மீது பல்வேறு அவதூறுக் கதைகளை பேசிக் கொண்டிருப்பதாகக் கேள்விப்படுகிறேன். எனக்கு திருச்சியில் ஒரு செட்டப், கும்பகோணத்தில் ஒன்று, காரைக்காலில் ஒன்று, எப்போது பார்த்தாலும் பெண் சிந்தனையிலே சுற்றித் திரிந்ததாக கூறி வருகிறார்கள். அவை அனைத்திற்கும் எனது நேரடி ஒப்புதல் வாக்குமூலம் பதிலாக அமைந்து விடும். அதோடு நிர்வாகிகள் என்னை சதி செய்து வீழ்த்தி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் அடிபட்டுப் போய் விடும் என்றேன்.


இந்தச் செய்தி பீஜே அவர்களுக்குச் சொல்லப்பட்டு, மூன்று வழிகள் உள்ளன, அதில் அவர் எதைத் தேர்ந்தெடுக்கிறார் என்று அவரிடமே கேளுங்கள் என ஹாமீன் அவர்களின் வழியாகவே பதில் வந்தது.


அதன் பின் அண்ணனைத் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது உங்கள் விஷயத்தைப் பொதுக்குழுவில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. யாராவது ஒரு நிர்வாகியை வைத்து விளக்கினால் அவர் ஏதாவது கூடுதல் குறைவாகப் பேசி விட்டால் பெரும் விபரீதமாகி விடும். அந்த வழி ஆபத்தானது. நீங்களே வந்து விளக்க நினைத்தால் அதை நிர்வாகிகள் சிலர் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். நடவடிக்கைக்கு உள்ளானவரைப் பொதுக் குழுவில் அனுமதிக்க முடியாது என்கின்றனர். அதைத் தாண்டி நீங்கள் வரும் போது உறுப்பினர்கள் உங்களை நோக்கி  ஏடாகூடமாகப் பேசி, தள்ளுமுள்ளாகி விட்டால் அசிங்கமாகி விடும் எனவே அந்த வழியும் சரியில்லை. மூன்றாவது வழி, நீங்கள் பேசிச் சென்ற வீடியோ இருக்கிறது. அதை இப்போது தான் கேட்டேன். உங்கள் நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறீர்கள். அதை ஒளிபரப்பி விட்டு இவ்வளவு தான். இதைத் தாண்டி வேறொன்றும் இல்லை என்று முடித்து விட்டு அடுத்த அஜண்டாவிற்குப் போய்விடலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.


நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என் விவகாரத்தை அட்டெண்ட் செய்கிற பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைக் கையாளுகிற பொறுப்பு உங்களைச் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றேன். 


முடியாது. நான் நிர்வாகி இல்லையே. நிர்வாக ரீதியான எதிலும் நான் சம்பந்தப்படவும் மாட்டேனே என்று மறுத்தார். இறுதியாக என் விருப்பமும் கோரிக்கையும் அதுதான். அதைத் தாண்டி ஜமாஅத்தின் நன்மையை நாடி வேறு யாரிடமாவது நீங்கள் பொறுப்பை வழங்கினால் எனக்கு சம்மதம் தான். நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். 


பிறகு அரைகுறை மனதோடு, நானே போய் விளக்குகிறேன் என்று என்னால் எப்படிச் சொல்ல முடியும் என்று கேட்டார்கள்.  அப்படியானால் மேலாண்மைக் குழுவிடம் பேசுகிறேன் என்று அப்துன் நாசரைத் தொடர்பு கொண்டு விபரம் சொன்னேன். அதன் பின் கலந்து பேசி விட்டு அண்ணன் அவர்கள் என் லைனுக்கு வந்தார்கள். நானே விளக்கி விடுகிறேன். முடிந்தவரை ஹிக்மத்தாக அந்த விஷயதைக் கொண்டு செல்ல முயற்சிக்கிறேன். முடியவில்லையென்றால் உங்கள் வாக்குமூலத்தைத் தாண்டி எதுவும் இல்லை என்பதை மட்டும் கூறி முடித்து விடுவேன். கவலைப்பட வேண்டாம் என்று மீண்டும் ஆறுதல் சொல்லி, வியாபார விஷயமாக சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு முடித்துக் கொண்டார்கள். அப்துன் நாசரும் உறுதியளித்தார். இதை யார் விளக்கினாலும் நீங்கள் பேசியதைத் தாண்டி ஒரு வார்த்தை கூட கூடுதலாக இருக்காது என்றார்.


என்னிடம் பெறப்பட்ட ஒப்புதல் இது தான். ‘அல்தாஃபியிடம் ஒப்புதல் பெற்றே சொல்கிறோம் என்று கூறி விட்டு,  தான் சொன்னதை மட்டும் சொல்ல வேண்டும் என்று அல்தாஃபி கேட்டுக் கொண்டார்’ என்றும் அறிவித்தீர்கள்.

 ஆனால் நடந்தது என்ன? 

அதிலும் அவதூறுகளை அள்ளி வீசிவிட்டு இறுதியில் என் வீடியோ. இது என்ன எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தியது, அவ்வளவு நேரம் நீங்கள் சொன்ன விஷயங்களுக்கு நான் ஒப்புதல் அளித்து விட்டேன் என்பதைத் தானே. 


இழிவின் உச்சத்தில் என்னை நிறுத்த வேண்டும் என்பதற்காக உங்கள் பேச்சிலும், குரலிலும் நீங்கள் பிடித்த அபிநயம் அபாரம். ஆரம்பம் முதல் கடைசி வரை என்னை மகா கெட்டவனாகக் காட்ட பெரும் முயற்சி எடுத்து அதில் குறுகிய கால வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள். இஸ்லாத்தின் பலமான சட்டங்களை பலவீனமாகக் காட்ட முயலும் காவிகளைப் போல எனக்கு கண்ணியம் தரும் செய்திகளைக் கூட கேவலமானதாக மக்கள் மன்றத்தில் முன் வைத்து விட்டீர்கள்.


அவளிடம் ஆதாரம் கேட்ட போது என்னை சாட்சியாக்கியது உங்களுக்கு பேரதிர்ச்சி என்கிறீர்கள். நான் பொய்யுரைக்க மாட்டேன் என்பது தானே அதன் பொருள். இப்படியொரு பெயர் வாங்குவது நல்லதா? கெட்டதா? அதை சொல்லும் தொனியிலும் என்னைக் கேவலப்படுத்துகிறீர்கள். 


நெருங்கிச் சென்றது தவறு தான். ஆனால் அந்த கட்டத்தில் கூட  பெரும்பாவத்தில் விழாமல் தப்பித்து விட்டேன் என்பது என் சகோதரனை அல்லாஹ் காப்பாற்றினான் என்ற குறைந்தபட்ச மகிழ்ச்சியைக் கூட உங்களுக்குத் தரவில்லையா? 

குகைத் தோழரின் வரலாற்றில், விபச்சாரத்தை நெருங்கியபின் அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் அதிலிருந்து அவர் விலகிவிட்டதாகப் படித்தால் மகிழ்ச்சியடைவீர்கள். சக தோழனின் வாழ்வில் அதே சம்பவம் நடந்தால், அவனை இப்படித்தான் கோரப்படுத்துவீர்களா? 


அல்தாஃபிக்கே உரிய  ஸ்டைலில் எகிறி அடிச்சு மறுப்பார். கர்ஜிப்பார் என்று எதிர்பார்த்தோம்; ஆனால், அவரோ குற்றத்தை ஆம் என ஒத்துக் கொண்டார் என்று என்னை சிறுமைப்படுத்துகிறீர்கள். செய்த தவறை ஒத்துக் கொள்வது அவ்வளவு கேவலமா? அல்லது தப்பே செய்தாலும் இல்லை என்று அடித்து மறுப்பது தான் ஜமாஅத்துக்கு கண்ணியம் என்று நினைத்துவிட்டீர்களா?


இந்த விவகாரத்தை ஜமாஅத்துக்கே உரிய கண்ணியத்தோடும், பொது சபையின் நாகரீகத்தோடும் தான் விளக்கியிருக்கிறோம் என்று உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்ல முடியுமா? கேவலமான முறையில் முன்வைக்கப்பட்ட இவ்விளக்கம், பொதுவெளியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நீங்கள் சிந்திக்கவில்லையா?


பொதுக் குழுவுக்கு மறுநாள் என் சொந்த ஊரிலுள்ள நமது மர்கஸில் கிளை நிர்வாகி ஒருவர், தொழுகைக்குப் பின் கூடியிருந்த மக்கள் மத்தியில், அல்தாஃபி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு விட்டார். அதற்காக ஐந்தாண்டுகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கிறார். எங்கள் குடும்பத்து சிறுவர்கள், உறவினர்கள், பால்ய வயது நண்பர்கள், வயது முதிர்ந்த என் தந்தை, உட்பட ஊர்ப் பெரியவர்கள் பலரும் இருக்கிறார்களே என்ற உறுத்தல் ஏதுமின்றி அறிவித்திருக்கிறார்.



நிமிடத்திலே ஊர் முழுக்கப் பரவி விட்ட இச்செய்தி, ஜமாஅத்திற்கே பெரும் அவமானமாக மாறியிருக்கிறது. முச்சந்திகளில் நின்று கொண்டு பார்த்தீர்களா! தவ்ஹீத் ஜமாஅத்தில் ஏன் சேர்கிறார்கள் என்று இப்போது தெரிகிறதா? என்று எதிரிகள் பேச ஆரம்பித்து விட்டார்கள்.


என் சொந்த சகோதரிகளும் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரிகளும் வெளியில் தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள் குமுறி அழுது கொண்டிருக்கிறார்கள். 


இந்த நிலை இன்னும் எத்தனை ஊர்களில் ஏற்பட்டதோ தெரியவில்லை. இதற்காகத் தான் இப்படி அறிவித்தீர்களா? எனது தவறை சொல்ல வேண்டிய முறைப்படி சொல்லியிருந்தால் அனைவரும் அதைச் சுமக்க வேண்டிய நிலை வந்திருக்குமா? இது ஜமாஅத்தின் தலையில் போய் விடிந்து விடுமே என்று கூட நீங்கள் யோசிக்கவில்லையா?


உறுதியாக நூற்று, பின்னர் அதைத் துண்டாக்கியவளைப் போல ஆகாதீர்கள் எனும் திருமறையின் வசனம் தான் இப்போது நினைவுக்கு வருகிறது.


 எதிரிகளின் அவதூறுகளை ஒழிக்க எவ்வளவு பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போது நீங்களே அவர்களுக்கு அடியெடுத்துக் கொடுத்திருக்கிறீர்களே இது முறையா?


குடும்பம், நட்பு, உறவு என அனைத்து மட்டத்திலும் கேவலப்படுத்தி, என் நிம்மதியையும், என் குடும்பத்தார் நிம்மதியையும் நிர்மூலமாக்கி விட்டீர்கள். இவை அனைத்திற்கும் உங்கள் பதில் என்ன? இவற்றை சீர்செய்ய வழியென்ன?             
 உங்கள் பதிலை எதிர்பார்த்தவனாக  வஸ்ஸலாம்                                                                                  அல்தாஃபி

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.