நபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா!
அறிஞர் பீஜே அவர்கள், ஒரு ஹதீஸை வைத்து ஒரு சட்டம் சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், பின்னாளில் அவரே அதே ஹதீஸை பலவீனம் என்று சொல்லி வேறு சட்டம் சொன்னால் அதையும் அப்படியே ஆமோதிப்பதையும் அவரது அபிமானிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு காரணம் பீஜேயிக்கும் தவறு ஏற்படும் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு, அவர் சொல்லும் அனைத்தையும் சரி காண்பது அவருக்கு தவறே ஏற்படாது என காட்டுவதாகவே பீஜேயின் அபிமானிகளின் செயல்பாடுகள் உள்ளது. ஆனால் பீஜே ஒரு சாமான்யனுக்கு புரிந்த விஷயத்தைக் கூட புரியாமல் பல விஷயங்களில் ஃபத்வா வழங்கக் கூயயவர் என்பதற்கு ஒரு சான்று;
நபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் சராசரி முஸ்லிமும் அறிந்த ஒன்றாகும். ஆனால் பீஜே இது குறித்து வழங்கிய ஃபத்வா பாரீர்;
- நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று எழுதி இருந்தீர்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது "ரஸுலுல்லாஹ்" என்ற வார்த்தையைக் காபிர்கள் ஆட்சேபணை செய்த போது தங்கள் கையாலேயே அந்த வார்த்தையை அழித்ததாகக் கூறப்படுகிறதே! குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்? இதில் எது உண்மை?
K.A. முஹம்மது கோரி, த.பெ.எண். 6930, ஜித்தா.
இரண்டுமே உண்மைதான், குறிப்பிட்ட சில வார்த்தைகள் படிக்கத் தெரியாதவர்களும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. என் மகனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் அவர் பெயரை Mohamed என்று எழுதுவான். அவன் பெயர் ஆங்கிலத்தில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் சரியாகக் கண்டு பிடித்து விடுவான். ஆனால் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது.
எழுதவும், படிக்கவும் தெரியாத எத்தனையோ கிராமவாசிகள் தங்கள் கையெழுத்தை மட்டும் போடுவார்கள். அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று கூற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இந்தக் கருத்தில் தான். அந்த மொழியில் உள்ள எல்லா சொற்களையும் எல்லா வார்த்தைகளையும் அவர்களால் எழுதவோ, படிக்கவோ இயலாது. அவர்கள் ஒரு சில சொற்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.1987 மே,அந்நஜாத்
மேற்கண்ட பீஜேயின் ஃபத்வாவில், நபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சில சொற்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று கூறியுள்ளார். இவரின் கூற்றுபடி நபி[ஸல்] அவர்கள் குறிப்பறிந்து அழித்தது 'முஹம்மது' என்ற வார்த்தை என்றால் ஓரளவு இவரது கூற்றில் அர்த்தமிருக்கும். ஆனால் நபியவர்கள் அழித்தது அல்லாஹ்வின் தூதர் என்ற வார்த்தையாகும். அவ்வாறாயின் தனது பெயர் அல்லாத வேறு சொற்களையும் நபி[ஸல்] அறியக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று பீஜே சொல்ல வருகிறாரா? சில சொற்களை நபியவர்கள் அறியக்கூடியவராக இருந்தார்கள் என்றால் இறைவன் 'உம்மி நபி' என்று சொன்னதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே, குர்'ஆன் வசனத்திற்கு எதிராக போய் விடுமே என்றெல்லாம் கூட பீஜே கவலைப்படவில்லை. ஆனால் உண்மை நிலை என்ன? நபி[ஸல்] அவர்களுக்கு எழுதவோ- படிக்கவோ- வார்த்தைகளை அறிந்து கொள்ளவோ[ அது முஹம்மத் என்பதாக இருந்தாலும்] அவர்களுக்கு தெரியவே தெரியாது. அப்படியாயின் ஒரு வார்த்தையை நபியவர்கள் அழித்தது எப்படி? இதோ விடை;
பராஉ(ரலி) அறிவித்தார்.
(ஹுதைபிய்யா ஆண்டில்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாள்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) எழுதலானார்கள். அப்போது அவர்கள், 'இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தமாகும்" என்று எழுதினார்கள். மக்காவாசிகளில், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்று) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, 'இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்த சமாதான ஒப்பந்தம்' என்று எழுதுங்கள்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்" என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ' 'இறைத்தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள்" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன்" என்று மறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்" என்று கேட்டார்கள். அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும் படி கூறுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ(ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆமாம் (புறப்பட வேண்டியது தான்)" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். நூல்; புகாரி எண்; 3184 ]
அலீ[ரலி]அவர்கள் சம்மந்தப்பட்ட வார்த்தையை அடையாளம் காட்டிய பின்பே நபியவர்கள் அதை அழித்தார்கள் என்று புகாரியிலேயே ஹதீஸ் இருக்கும் போது அதைக் கூட கவனிக்காமல் இவர் ஃபத்வா வழங்குகிறார் என்றால் இவரது பொடுபோக்கை விளங்கிக் கொள்ளலாம்.
குறிப்பு; வழக்கம் போல இப்போது இந்த விஷயத்திலும் பீஜே தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டார் என்றாலும், இவர் மார்க்க சட்ட விஷயத்தில் எவ்வளவு மேம் போக்கானவர் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவே இங்கே இதை பதிவு செய்கிறோம். எனவே பீஜே சொல்லும் சட்டத்தை அப்படியே நம்பி விடாமல் ஆய்வு செய்து அங்கரிக்க வேண்டும். இல்லையேல் அமல்கள் பாழாகும் என்று அவரது அபிமானிகளுக்கு அறிவுறுத்துகிறோம்.
நன்றி முகவை அப்பாஸ்
Comments