குர்'ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்; பீஜே அன்றும்-இன்றும்!

மார்க்கத்தை தூய வடிவில் சொல்லக் கிளம்பிய அறிஞர் பீஜே அவர்கள், தனது ஆய்வின் உச்சகட்டமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் சிலவற்றை பட்டியலிட்டு இவைகள் குர்'ஆனுடன் மோதுகின்றன என்றும், வேறு சில காரணங்கள் மற்றும் உவமானங்களை கூறி நிராகரிப்பதை அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்'ஆனோடு ஒரு போதும் மோதாது என்பதும், குர்'ஆனோடு முரண்படுவது போல் தோற்றமளித்தாலும் அந்த ஹதீஸை சரியான வகையில் விளங்க வேண்டுமே தவிர, ஹதீஸை ஒருபோதும் நிராகரிக்கக் கூடாது என்பதுதான் அறிஞர் பீஜேயின் முந்தைய நிலைப்பாடக இருந்தது. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பீஜெயிக்கு அன்று இருந்த உறுதியை அறிய பல ஆதாரங்கள் இருந்தாலும் குறிப்பாக ஒன்றைத் தருகிறோம்.
பிப்ரவரி 95அல்ஜன்னத் மாத இதழில், ''இணைவைக்கும் இமாமைப் பின்பற்றி தொழுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அறிஞர் பீஜே எடுத்து வைத்த ஹதீஸில் 'ஏனெனில் இமாம் உங்களுக்கும் உங்கள் இறைவனுக்கும் மத்தியில் தொடர்பாளர்களாக உள்ளனர்'' என்ற வரியும் உள்ளது. இதையொட்டி, முஹம்மது கஸ்ஸாலி என்ற சகோதரர் ஏப்ரல் 95 அல்ஜன்னத் இதழில் கேள்வி எழுப்புகிறார். அவர் தனது கேள்வியில், 'இமாம் நமக்கும் இறைவனுக்கும் தொடர்பாளராக உள்ளார் என்ற ஹதீஸை வெளியிட்டுள்ளீர்களே! இது புரோகிதத்தை காட்டவில்லையா? என்று கேட்க, அவருக்கு பதிலளித்த பீஜே, ''புரோகிதத்தைக் காட்டுகிறது என்று அந்த ஹதீஸை நிராகரிக்கவேண்டும் என்கிறீர்களா? புரோகிதத்தை காட்டாத வகையில் விளங்கவேண்டும் என்று சொல்கிறீர்களா? என்று கேட்டுவிட்டு அடுத்து பீஜே சொல்வதை கவனியுங்கள். ''ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமனதாக இருக்கும் போது அதை நிராகரிக்க காரணங்களை தேடவேண்டாம்' என நேத்திய்யடியாக சொல்லி, ஹதீஸை குர்'ஆனுக்கு முரண்படாமல் விளங்க வேண்டுமே தவிர நிராகரிக்க கூடாது என்று ஆணித்தரமாக கூறுகிறார் அறிஞர் பீஜே.
பீஜேயின் இன்றைய நிலை என்ன? ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று அவரே ஒருபுறம் ஒப்புக்கொள்கிறார். மறுபுறம் அதை நிராகரிக்க அவரே காரணங்களை தேடுகிறாரா இல்லையா?  இறைவனுக்கும்-மனிதர்களுக்கும் இடைத்தரகர்களாக இமாம்கள் திகழ்கிறார்கள் என்ற பாரதூரமான அர்த்தம் தரும் ஹதீஸை கூட, புறக்கணிக்காமல்  பக்குவமாக விளங்கவேண்டும் என்று அன்று சொன்ன பீஜே, இன்று எடுத்தேன் கவிழ்த்தேன் என ஹதீஸ்களை படுகுழியில் தள்ளுகிறாரா இல்லையா? குர்'ஆனுக்கு முரண்படுகிறது என்று இவராலும் இவரது தரப்பு அறிஞர்களாலும் கடும் ஆய்வுக்கு[!] பின் எழுதப்பட்ட ''ஹதீஸ்கள் குர்'ஆனுக்கு முரண்படுமா? என்ற நூலில் சில ஹதீஸ்களை பட்டியலிட்டு இவைகள் குர்'ஆனோடு மணிக்கு பல்லாயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதுவதால் குர்'ஆன் சேதமடையக் கூடும். எனவே இந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அதை நிராக்ரிகக்வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தாரே! இதிலாவது பீஜெயால் உறுதியாக நிலைத்து நிற்க முடிந்ததா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.
மேற்கண்ட நூலில், குர்'ஆனுடன் மோதுவதாக மேற்கோள் காட்டப்பட்ட, பீஜெயாலும் அவர் தரப்பு அறிஞர்களாலும் பல மேடைகளில் முழங்கப்பட்ட ஹதீஸ் இன்று சரியான ஹதீஸாக 'ஞானஸ்தானம்' பெற்றுள்ளதை கீழே படியுங்கள்;
மிகச் சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் சொல்கிறோம்.
10. பயணத்தொழுகை
அல்லாஹ் தொழுகையை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும் பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (350)
இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது பிரயாணத்தொழுகை எந்த விதமான மாற்றத்திற்கும் உள்ளாகாமல் தொழுகை கடமையாக்கப்பட்ட காலத்திலிருந்து இரண்டு ரக்அத்தாகவே இருந்தது என்றக் கருத்தைத் தருகிறது. ஆனால் திருக்குர்ஆன் பயணத்தொழுகையைப் பற்றி பேசும்போது நான்கு ரக்அத்துகளிலிருந்து இரண்டு ரக்அத்துகளாக பயணத்தொழுகை சுருக்கப்பட்டது என்று கூறுகிறது.
நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக்கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.
அல்குர்ஆன் (4 : 101)
முழுமையான ஒன்றிலிருந்து தான் சுருக்கமுடியும். பயணத்தில் தொழுகையை சுருக்குவதாக இருந்தால் முதலில் நான்கு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்று சட்டம் இருந்திருக்க வேண்டும். இந்த நான்கு ரக்அத்துகளிலிருந்து இரண்டாக பயணத்தில் தொழுகை குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் பயணத்தொழுகையை குறிப்பிடும் போது நான்கிலிருந்து சுருக்கப்பட்டது என்று கூறாமல் தொழுகை கடமையாக்கப்பட்ட காலத்திலிருந்தே பயணத்தொழுகை எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இரண்டுரக்அத்துகளாகவே இருப்பதைப் போன்று கூறியுள்ளார்கள். எனவே இவர்கள் கூறும் கருத்து குர்ஆனிற்கு முரண்பாடாக இருப்பதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறினோம்.

இந்த ஹதீஸை சரிகாணுபவர்கள் இதற்கு கூறிய விளக்கத்தையும் நாம் ஆராய்ந்ததன் மூலம் கிடைத்த விளக்கத்தையும் வைத்துப் பார்த்தால் இந்த ஹதீஸை முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. இவர்கள் கூறும் விளக்கத்திற்கு முறையான ஆதாரங்கள் இருப்பதால் இந்த விளக்கத்தை நாம் ஏற்றுத் தான் ஆகவேண்டும்.
சத்தியத்தை தெரிவது தான் நம்முடைய நோக்கமே தவிர நாம் கூறிய கருத்துக்களை எப்படியாவது சரிகாண வேண்டும் என்று நாம் பிடிவாதம் பிடிக்கமாட்டோம். எனவே ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை பின்வரும் முறையில் முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழும் போது கடமையானத் தொழுகை இரண்டு ரக்அத்துகளாக இருந்தது. மதீனாவிற்கு அவர்கள் வந்தவுடன் நான்கு ரக்அத்துகளாக மாற்றப்பட்டது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(மக்காவில்) தொழுகை இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பின் நான்கு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. மேலும் பிரயாணத் தொழுகை மட்டும் முன்பு கடமையாக்கப்பட்டிருந்தவாறே (இரண்டு ரக்அத்தாகவே இருக்கட்டுமென்று) விட்டுவிடப்பட்டது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (3935)
மதீனாவிற்கு வருவதற்கு முன்பு மக்காவில் இரண்டு ரக்அத்துதான் கடமையாக்கப்பட்டிருந்தது என்றக் கருத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் சொல்லவில்லை. அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்களும் இந்தக் கருத்தை கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை லுஹர் தொழுகையை இரண்டு இரண்டாகத் தான் தொழுதுவந்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா (ரலி)
நூல் : சஹீஹு இப்னி ஹிப்பான் பாகம் : 6 பக்கம் : 143
தொழுகையை இரண்டாக சுருக்கிக் கொள்ளுவதற்கு அனுமதியளிக்கும் வசனம் மதீனாவில் இறங்கியது என்றக் கருத்தை இப்னுல் அசீர் தவ்லாபீ மற்றும் சுஹைலீ போன்ற அறிஞர்கள் பதிவுசெய்துள்ளார்கள் .
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த உடன் தொழுகை நான்காக மாற்றப்பட்டது. இதன் பிறகு பயணத்தில் இரண்டு ரக்அத்தை சுருக்கிக்கொள்ளலாம் என்று வசனம் இறங்கியது. இதனால் ஊரில் நான்கு ரக்அத்துகளாகவும் பிரயாணத்தில் இரண்டு ரக்அத் தொழுகவும் கடமையாக்கப்பட்டது. இறுதியில் முடிவாக்கப்பட்ட இந்த நிலையைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் முரண்பாடு வராது.
தொழுகை நான்கு ரக்அத்துகளாக மாற்றப்ட்டது. பின்பு வசனம் இறங்கியதால் இரண்டாக குறைக்கப்பட்டது என்ற விளக்கம் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் இல்லாததால் அது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறினோம். ஆனால் இந்த விளக்கம் வேறு ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகிவிட்டதால் முரண்பாடு எதுவும் இல்லாமல் இதை விளங்கிக்கொள்ள முடியும்.
முதலில் இரண்டு ரக்அத் கடமையாக இருந்தது. மதீனாவிற்கு வந்த உடன் நான்காக மாற்றப்பட்டதால் முன்பிருந்த தொழுகையை விட இரண்டு ரக்அத் அதிகமாக்கப்பட்டது. இதன் பிறகு பயணத்தில் குறைத்துக்கொள்ளும் படி வசனம் இறங்கியதால் மதீனாவில் இருக்கும் போது பயணத்தில் இரண்டு ரக்அத் தொழவேண்டும் என்ற பழைய சட்டம் இறுதியாக அப்படியே வைக்கப்பட்டுவிட்டது என்பதே ஆயிஷா (ரலி) அவர்களுடைய கூற்றின் விளக்கம்.
முரண்பாடு நீங்கிவிட்டதால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளலாம். 

காய்தல் உவத்தல் இன்றி நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே! புகாரியில் இடம்பெற்ற அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் ஒரு ஹதீஸை எடுத்து வைத்து, இந்த ஹதீஸ் அதாரப்பூர்வமனதுதான்; ஆனாலும் குர்'ஆனோடு மோதுகிறது. எனவே இந்த ஹதீஸை நபி[ஸல்] அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள். எனவே இதை நிராகரிக்கக் வேண்டும் என்று சொல்லியதன் மூலம், நபியவர்கள் சொன்ன செய்தியை அவர்கள் சொல்லவில்லை என்றும், அன்னை ஆயிஷா அவர்கள் நபியவர்கள் சொல்லாத ஒன்றை இட்டுக்கட்டி விட்டார்கள் என்றும், நபியவர்கள் சொல்லாத ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் தெரியாமல் நற்சான்று வழங்கி விட்டார்கள் என்றும், நபியவர்கள் சொல்லாத ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று இமாம் புகாரி அவர்கள் அறியாமையினால் பதிவு செய்துவிட்டார் என்றும் நினைக்கும் அளவுக்கு இவர்களின் இந்த 'ஹதீஸ் நிராகரிப்பு' காட்டியதே!

இன்றைக்கு அதே புஹாரியில் இடம்பெறுள்ள அதே அன்னை ஆயிஷா அவர்கள் அறிவிக்கக்கூடிய வேறு ஒரு ஹதீஸை கொண்டுவந்து போட்டு, முன்னர் தாங்கள் நிராகரித்த ஹதீஸை இன்று சரிகான்கிறார்கள் என்றால், புஹாரியைக் கூட இவர்கள் முழுமையாக படிக்காமல் ஹதீஸ்களை நிராகரிக்கும் போடுபோக்குடையவர்கள் என்று விளங்குகிறதா? அதோடு இவர்களின் இன்னொரு கருத்தையும் இங்கே கவனிக்கக் வேண்டும். இவர்களின் இந்த ஹதீஸ் நிராகரிப்பைக் கண்ட யாரோ ஒரு சிலர், பீஜெயிக்கு இந்த ஹதீஸ் குறித்து அளித்த விளக்கம் ஏற்புடையதாக இருந்ததாக கூறுகிறார். அப்படியானால் இவருக்கு விளங்காத ஒன்று வேறு யாருக்கேனும் விளங்கக் கூடும் அல்லவா? அப்படியானால் இவர் செய்யவேண்டியது என்ன? எந்த ஹதீஸ் குர்'ஆனுக்கும்-வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கும் முரண்படுவதாக இவருக்கு தோன்றுகிறதோ, அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என தூக்கி விசாமல், அந்த ஹதீஸின் நிலை குறித்து தனது தரப்பு அறிஞர்கள் மட்டுமல்லாது மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள், உலக ரீதியில் உள்ள சிறந்த அறிஞர்கள் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்று விளக்கம் கானுவதுதானே இவர் செய்ய வேண்டியது. அதை விடுத்து தனது கருத்துக்கு ஒத்த கருத்துடைய சிலரோடு மட்டும் ஆலோசித்து ஹதீஸ்களை நிராகரித்தால் இந்த நிலைதான் ஏற்படும் என்பதோடு, இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என நம்பும் ஒரு சாராருக்கு தவறான வழிகாட்டியமைக்கும் பீஜே பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். 

அடுத்து, மேற்கண்ட ஹதீஸை நிராகரிப்பதில் இவரும், இவர் தரப்பு அறிஞர்களும் காட்டிய வேகத்தை இன்று ஹதீஸை சரி கண்ட பின்னால் மக்களிடம் அதே வேகத்தோடு கொண்டு போய் சேர்க்கவில்லையே? கேட்டால் சொல்லுவார். நான் இணையதளத்தில் திருத்தி விட்டேனே என்று. இவர் இணையதளத்தில் சத்தமின்றி திருத்தியது எத்தனை பேருக்குத் தெரியும்? மார்க்க விசயத்தில் முன்னர் சொன்ன ஒரு கருத்தை மாற்றுவதாக இருந்தால் அதை பகிரங்கமாக அறிவிப்பதுதான் முறை. ஏதேதோ வெட்டியான செய்திகளுக்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து 'பிளாஸ் நியூஸ்' போடும் இவர் உயிரினும் மேலான தூதரின் ஒரு சொல்லை நேற்று மறுத்தேன்; அது தவறு. அது சரியான சொல்தான் என்று இவரது அத்தனை மீடியாக்கள் மட்டுமன்றி, இவரது மார்க்கஸ்களில் அறிவிப்புப் பலகை வைத்து எழுதுவதோடு, இவரது மற்றும் இவர் தரப்பு பேச்சாளர்களின் நிகழ்ச்சியிலும் அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து சத்தமின்றி நூலை உருவுவதுபோன்று 'நூலில்' இருந்து வார்த்தைகளை உருவுவதால் எந்த பலனுமலில்லை என்பதை பீஜே தெரிந்து கொள்ளட்டும்.
நன்றி முகவை அப்பாஸ் 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு