பயணத் தொழுகை; பீஜே அன்றும்-இன்றும்!

பயணத்தில் 'கஸ்ர்' தொழுகை அதாவது சுருக்கித் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இந்த தொழுகை எத்தனை கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டால் தொழவேண்டும் என்று அறிஞர் பீஜேயிடம் அன்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலை படியுங்கள்;
 
கேள்வி : வெளியூர் பயணம் செல்வோர், நான்கு ரக்அத் தொழுகைகளை (மட்டும்) இரண்டு ரக்அத்களாக தொழ சலுகை உண்டு என்பதைத் தெரிந்திருக்கிறேன். அருகில் உள்ள ஊர்களுக்குப் பயணம் சென்றாலும் இவ்வாறு சலுகை உண்டா? அல்லது நீண்ட தொலைவு பயணங்களுக்கு மட்டுமே இந்த சலுகையா? நீண்ட தொலைவு என்றால் எத்தனை மைல்கள்? விரிவாக விளக்கம் தரவும்! "சிலர் 48 மைல்கள்" என்கிறார்களே! அது சரிதானா?

நெய்னா முகம்மது B.A., தஞ்சை மாவட்ட தவ்ஹீது கமிட்டி அமைப்பாளர். 

பதில் : "48 மைல்கள்" என்பதற்கு ஹதீஸில் அறவே ஆதாரம் கிடையாது. மூன்று நாள் பிரயாண தூரம் என்று கூறுவதற்கும் ஆதாரம் இல்லை. மாறாக முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், பைஹகீ ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் ஒன்றைக் கீழே தருகிறோம்.
யஹ்யா இப்னு யஸீத்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:-
தொழுகையைக் கஸர் செய்யும் தூரத்தைப்பற்றி அனஸ்(ரழி) அவர்களிடம் நான் கேட்ட போது "நபி(ஸல்) அவர்கள் மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று "பர்ஸக்" அளவு பயணம் செய்யும்போது கஸர் செய்பவர்களாக இருந்திருக்கின்றனர்" என்று அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள "மைல்" என்பதும் "பர்ஸக்" என்பதும் வெவ்வேறான தூரங்களைக் கொண்டதாகும். அதாவது மூன்று மைல்களைக் கொண்டது ஒரு "பர்ஸக்" ஆகும். இந்த ஹதீஸில், அறிவிப்பாளர் "மூன்று மைல்கள் அல்லது மூன்று பர்ஸக்கள்" என்று சந்தேத்திற்குரிய சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டில் ஏதொ ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். இந்த இடத்தில் அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை ஸயிது இப்னுமன்ஸுர் அவர்கள் பதிவு செய்து வைத்துள்ள, ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தனது "தல்கீஸ்" என்ற நூலில் எடுத்து எழுதியுள்ள ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது. அது வருமாறு:-

நபி(ஸல்) அவர்கள் ஒரு "பர்ஸக்" பயணம் செல்லும்போது கஸர் செய்வார்கள்". அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரி(ரழி)
இந்த ஹதீஸில் "ஒரு பர்ஸக்" என்ற சொல் இடம் பெற்றுள்ளதால், முந்தைய ஹதீஸில் "மூன்று மைல்" என்பதே சரியானதாக இருக்கும் என்று தெரிய முடிகின்றது. ஏனெனில் மூன்று மைல் என்பதும் ஒரு பர்ஸக் என்பதும் ஏறக்குழைய ஒரே தூரத்தைக் கொண்டவைதாம்.
ஹதீஸ் கலையின் மாமேதை ஹாபிழ் இப்னுஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் "அனஸ்(ரழி) மூலம் அறிவிக்கப்பட்ட அந்த ஹதீஸ்தான் கஸர் பற்றிய ஹதீஸ்களில் மிகவும் வலுவானது, தெளிவானது" என்று குறிப்பிடுகின்றார்கள்.

எனவே ஹதீஸ்களிலிருந்து மூன்று மைல்கள் தூரம் பயணம் செல்பவர்களே கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது.
அன்றைக்கு வழக்கில் இருந்த "அரபுநாட்டு மைல்" என்பது 1748 மீட்டர்களாகும். மூன்று மைல்களுக்கு 5244 மீட்டர்களாகின்றது. அதாவது ஐந்தேகால் கிலோமீட்டர் பயணம் செய்பவர்கள் கஸர் செய்யலாம் என்பதே ஹதீஸ்களிலிருந்து தெரிய வருகின்றது.

தெளிவான ஹதீஸ்கள் இருக்கும்போது எவருடைய சொந்த அபிப்பிராயங்களுக்கும் நாம் கட்டுப்படுவது மாபெரும் குற்றமாகும். "48 மைல்கள்" என்று கூறுவோர் அதற்கான ஹதீஸ்களை வெளியிடட்டும். நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் "ஒருமைல் தூரத்துக்கே நபி(ஸல்) கஸர் செய்திருப்பதாக இப்னு உமர்(ரழி) அவர்கள் மூலம் இப்னு அபீ ஷைபா பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹதீஸைவிட அந்த ஹதீஸ் பலமானதாக உள்ளதால் அதன் அடிப்படையில் நாம் விளக்கம் தந்துள்ளோம்.

48 மைல்கள் என்பவர்கள் நேரடியாக ஹதீஸ் எதனையும் கூறியதாக தெரியவில்லை.

தெளிவான ஹதீஸ் அடிப்படையில் ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளைக் கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது.
அந்நஜாத்.1986 ஜூன் இதழ் பக்கம் 35
 
மேற்கண்ட பீஜேயின் ஃபத்வா சொல்வது என்ன? மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று "பர்ஸக்" அளவு என்று ஹதீஸில் வந்துள்ளது. இதில் மைல் என்பதுதான் சரியானது. எனவே மூன்று மைல் தூரம் தூரம் அதாவது ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளைக் கஸர் செய்யலாம் என்று கூறுகிறது. இன்று அதே பீஜே மேற்கண்ட இதே ஹதீஸை ஆதாரமாக காட்டி,
 
''மூன்று மைலில் நபி[ஸல்]அவர்கள் கஸ்ர் செய்தார்களா என்பது சந்தேகத்திற்கு இடமானது. எனவே உறுதியானதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் மூன்று 'பர்ஸக்' என்பதை எடுத்துக் கொள்ளவேண்டும். அன்றைய கால மூன்று 'பர்ஸக்' என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கிலோ மீட்டர்களாகும்.  எனவே ஒருவர் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய நாடி ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்' என்கிறார்.
 
மேற்கண்ட பீஜேயின் இரு முரண்பட்ட ஃபத்வாக்களில் கவனிக்கவேண்டிய அம்சங்கள்;
  • தனது இரு முரண்பட்ட ஃபத்வாக்களுக்கும் ஒரே ஹதீஸைத் தான் ஆதாரமாக வைக்கிறார். 
  • முதல் ஃபத்வாவின் 'மைல்' என்பதுதான் சரி. எனவே  ஐந்தே கால் கிலோமீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளை கஸர் செய்யலாம் என்கிறார்.
  • இரண்டாம் ஃபத்வாவில் இல்லை 'மைல்' அளவு சரியல்ல; மூன்று 'பர்ஸக்' என்பதை எடுத்துக் கொள்ளவேண்டும். அன்றைய கால மூன்று 'பர்ஸக்' என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கிலோ மீட்டர்களாகும்.  எனவே ஒருவர் 25 கிலோ மீட்டர் பயணம் செய்ய நாடி ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்' என்கிறார்.
  • முதல் ஃபத்வாவில் ஐந்தே கால் கிலோமீட்டர் தான் நபி வழி. நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூமின் அதனை ஏற்க முடியாது என்றவர், பின்பு இரண்டாம் ஃபத்வாவில் 25 கிலோ மீட்டர் என்று சொல்லி அவருக்கு அவரே இல்லை இல்லை. இவரின் கூற்றுப்படி நபிவழிக்கு முரண்படுகிறார்.
சிந்திக்கும் மக்களுக்கு இவரின் முரண்பாடும், மார்க்க சட்டங்களில் இவர் காட்டும் பொடுபோக்கும்  உள்ளங்கை நெல்லிகணியாக விளங்கும்.
நன்றி -முகவை அப்பாஸ் 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن