ஸூனன் நஸயீ
பிரயாணத்தின் போது காலுறைகள் மீது மஸஹ் செய்தல்.


125, நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிராணயத்தின் போது இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''மக்களே! நீங்கள் செல்லுங்கள்! முகீராவே! நீ நில்!'' என்று கூறினார்கள். நான் தண்ணீர் பாத்திரத்துடன் பின்தங்கினேன். மக்கள் சென்றுவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் தன் தேவையை நிறைவேற்றச் சென்றுவிட்டு திரும்பிய போது அவர்களுக்கு நான் தண்ணீர் ஊற்றலானேன். கைகள் இருக்கமாக அமைந்த ரூம் (இத்தாலி) நாட்டு சட்டையை அவர்கள் அணிந்திருந்தார்கள். சட்டைக்கையிலிருந்து தன் கையை வெளிப்படுத்த முயன்றார்கள் அது சிரமமாக இருந்தது. சட்டையின் கீழ்புறமாக தன் கையை வெளிப்படுத்தி தமது முகத்தையும், இருகைகளையும் கழுவி, தமது தலைக்கும், காலுறைகளுக்கும் மஸஹ் செய்தார்கள் என முகீரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

பிரயாணத்திலிருப்போர் காலுறைகள்மீது மஸஹ் செய்வதற்கு காலவரம்பு!

126, நாங்கள் பயணத்தில் இருக்கும் போது மூன்று இரவு மூன்று பகல்கள் (எங்கள் காலுறைகளை கழற்றாமல்) காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள் என ஸப்வான் இப்னு அஸ்ஸால் (ரலி) அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:- திர்மிதியிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

127, காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி ஸப்வான் இப்னு அஸ்ஸால் (ரலி) அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள் ''நாங்கள் பிரயாணத்திலிலுக்கும் போது மலஜலம் கழித்தால், உறங்குதல் போன்ற காரணங்களுக்காக (ஒளூச்செய்தால்) மூன்று நாட்களுக்கு கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்ய எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள். கடமையான குளிப்பு தவிர (அதாவது கடமையான குளிப்பு ஏற்பட்டுவிடுமானால் குளிப்பதற்காக காலுறைகளைக் கழற்றிவிட்டு கால்களையும் கழுவவேண்டும் என்று ஸப்வான் இப்னு அஸ்ஸால் (ரலி) கூறியதாக 'ஸிர்ரு' அவர்கள் அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:- திர்மிதி, இப்னுமாஜா, இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், தாரகுத்னீ, பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

பிரயாணிகள் அல்லாதவர்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்வதற்குரிய காலவரம்பு

128, (காலுறைகள் மேல்) மஸஹ் செய்வதற்கு பிரயாணிகளுக்கு மூன்று நாட்கள் எனவும், பிரயாணிகள் அல்லாதவர்களுக்கு ஒரு நாள் எனவும் நபி (ஸல்) அவர்கள் காலக் கோடு நிர்ணயித்தனர். என்று அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:- இந்த ஹதீஸின் கருத்து முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.

129, காலுறைகள்மீது மஸஹ் செய்வது பற்றி ஆயிஷh (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு ஆயிஷh (ரலி) அவர்கள் ''நீ அலியிடத்தில் செல்' என்னைவிட இதுபற்றி அவரே மிக அறிந்தவர்'' என்றார்கள். நான் அலி (ரலி) அவர்களிடம் சென்று மஸஹ் பற்றி கேட்டேன். ''பிரயாணத்திலிருப்பவன் மூன்று நாட்கள், பிரயாணத்திலில்லாதவன் ஒரு நாள் (காலுறைகள்மீது) மஸஹ் செய்ய நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள் என்று அலி (ரலி) கூறியதாக ஷ_ரைஹ் இப்னு ஹானீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:- முஸ்லிமில் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.

ஒளூவிருக்கும்போதே மீண்டும் ஒளூ செய்யும் முறை

130, அலி (ரலி) அவர்கள் லுஹர் தொழுதுவிட்டு மக்களின் தேவைகள் (குறைகள் பற்றி விசாரிப்பதற்காக) உட்கார்ந்தார்கள். அஸர் நெருங்கியபோது தண்ணீர் பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதிலிருந்து ஒரு கையளவு தண்ணீர் எடுத்து முகத்திலும், கைகளிலும் தலையிலும், கால்களிலும் தடவிக்கொண்டார்கள். மீதமிருந்த தண்ணீரை எடுத்து நின்றுகொண்டே குடித்தார்கள். சில மனிதர்கள் இதை வெறுக்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ய நான் கண்டிக்கிறேன் மேலும் இதுதான் ஒளூ முறியாதவர்கள் ஒளூ செய்யும் முறையாகும் என்று கூறினார்கள் என நஸ்ஸால் இப்னு ஸப்ரா அறிவிக்கிறார்.

ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளு செய்தல்

131, ''நபி (ஸல்) அவர்களிடம் சிறிய பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. (அதில்) அவர்கள் ஒளூச் செய்தார்கள்'' என்று அனஸ் (ரலி) கூறியபோது ''நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்பவர்களாக இருந்தார்களா? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ''ஆம்'' என்றனர். ''நீங்கள் (எவ்வாறு நடந்துகொள்வீர்கள்?) என்று கேட்டேன்! ஒளூ முறியும் காரியங்கள் ஏற்படாதவரை நாங்கள் ஒரு ஒளூ மூலம் பல தொழுகைகள் தொழுபவர்களாக இருந்தோம்'' என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அம்ரு இப்னு ஆமிர் குறிப்பிடுகிறார்.

குறிப்பு:- புகாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

132, நபி (ஸல்) அவர்கள் மலம் கழித்துவிட்டு வெளிப்பட்டார்கள். அவர்களுக்கு அருகே உணவு வைக்கப்பட்டு ''ஒளு செய்யும் தண்ணீரை உங்களிடம் கொண்டு வரட்டுமா?'' என்று நபித் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''தொழுகைக்கு தயாராகும்போதுதான் ஒளு செய்யுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்'' என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:- அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

133, நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளு செய்பவர்களாக இருந்தனர். (மக்கா) வெற்றியின் போது ஒரு ஒளுவின் மூலம் பல தொழுகைகளைத் தொழுதனர். அதைக்கண்ட உமர் (ரலி) அவர்கள் ''(இதற்கு முன்) நீங்கள் செய்திராத ஒரு செயலை (இன்று) செய்கிறீர்களே!'' என்று கேட்டார்கள், உமரே! வேண்டுமென்றே இவ்வாறு செய்தேன்'' என நபி (ஸல்) கூறினார்கள் என புரைதா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

குறிப்பு:- முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.
134, நபி (ஸல்) அவர்கள் ஒளு செய்யும் போது தண்ணீரில் சிறிதளவு எடுத்து தன் மர்ம ஸ்தானத்தில் தெளித்துக் கொள்பவர்களாக இருந்தனர்'' என ஹகம் (ரலி) அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:- இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் வரிசை குழப்பம் நிறைந்ததாகும். இதன் விபரம் திர்மிதீ 50-வது ஹதீஸின்கீழ் இடம் பெற்றுள்ளது.

135, 'நபி (ஸல்) அவர்கள் ஒளு செய்யும் போது தன் மர்ம ஸ்தானத்தில் தண்ணீர் தெளிக்க நான் பார்த்திருக்கிறேன்' என்று ஹகம் இப்னு ஸூப்பான் (ரலி) அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:- இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் விபரம் ஏற்கனவே திர்மிதீ 50-வது ஹதீஸின் கீழ் முன்பே கூறப்பட்டுள்ளது.
ஓளு செய்து எஞ்சிய தண்ணீரைப் பயன்படுத்துதல்

136, அலி (ரலி) அவர்கள் மும்மூன்று தடவை ஒளு செய்து பின்னர் எழுந்து நின்று ஒளு செய்து எஞ்சிய தண்ணீரைக் குடிக்க நான் கண்டேன். நான் செய்ததுபோல் ரஸூல் (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்திருக்கிறேன் என்றும் கூறினார்கள் என அபூஹய்ய அறிவிக்கிறார்.

137, நபி (ஸல்) அவர்களுடன் 'பத்ஹா' என்னும் இடத்தில் நானும் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஒளு செய்த எஞ்சிய தண்ணீரை பிலால் (ரலி) வெளிப்படுத்தினார்கள். மக்கள் (அதைப் பெறுவதற்கு) விரைந்தார்கள். நானும் அதில் சிறிதளவு பெற்றுக் கொண்டேன். (அவர்கள் தொழுகைக்கு மறைப்பாக) கைத்தடியை (தரையில்) ஊன்றினேன். கழுதைகள், நாய்கள், பெண்கள் ஆகியோர் அவர்கள் முன்னிலையில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்கு நபி (ஸல்) தொழுகை நடத்தினார்கள்'' என அபூஜூஹைபா (ரலி) அறிவிக்கிறார்கள்.

137, ''நான் நோய்வாய்ப்பட்டபோது நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரு (ரலி) அவர்களும் என்னை நோய் விசாரிக்க வந்தனர் எனக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் ஒளு செய்து அதில் எஞ்சிய தண்ணீரை என்மீது ஊற்றினார்கள் என ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:- புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

ஓளு செய்தலின் அவசியம்!

''மோசடிக்காரனிடமிருந்து தர்மத்தையும், ஒளுவின்றி தொழும் தொழுகையையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்'' என்று நபி (ஸல்) கூறியதாக உஸாமா இப்னு உமைக் (ரலி) அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:- முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா, திர்மிதீ, தப்ரானி ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு