இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில்
இஸ்லாத்திற்கு முரணான போக்குகள்.
இனி ''போவோம் குணங்குடிக்கெல்லோரும்.'' அதற்கு முன்பாகத் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் சில உள்ளன. இஸ்லாமிய இலக்கியப் புலவர்கள் என்று சொன்னதுமே உமறுப் புலவரும் குணங்குடி மஸ்தானும் தாம் பலராலும் நினைக்கப்படுகின்றனர் உமறுப்புலவர் காப்பியம் பாடியவர். குணங்குடி மஸ்தான் மெஞ்ஞானக் கவிஞர் எனப் பலராலும் போற்றப்படுபவர்.
உமறுப்புலவரும் சரி, குணங்குடி மஸ்தானும் சரி, பிற முஸ்லிம் தமிழ்ப் புலவர்களும் சரி, இவர்களுடைய பாடல்கள் எல்லாமே முரணானவை என ஒரேயடியாகக் கண்ணை மூடிக்கொண்டு தூற்றித் தள்ளிவிடுவது நமது நோக்கமன்று.
இவர்களுடைய பாடல் தொகுப்புக்களில் பல நல்ல கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு வேட்டு வைக்கின்ற பல சமூக விதோரச் சங்கதிகளும் அடங்கிக் கிடக்கின்றன. இவர்களுடைய பாடல்களின் சிறப்பம்சங்களைப்பற்றி நாம் பல மேடைகளில் பேசியும் பல 'வால்யூம்'களில் எழுதியும் வந்துள்ளோம். நாளடைவில் இக்கவிஞர்களை நாதாக்கள், வலியுல்லாக்கய் எனப்போற்றிப் புகழ்ந்து இவர்களுக்கு உரூஸ்களும் நம்மில் பலர் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் புலவர்கள், வலியுல்லாக்கள்-இறை நேசர்கள் என்ற அடைமொழிகளோடு இன்றைய தமிழ் உலகுக்கு இனங்காட்டப்பட்டுள்ளனர். இதன் விளைவாக இந்த வலியுல்லாப் புலவர்களின் எல்லாப் பாடல்களுக்கும் ஒரு 'விலாயத்' என்னும் இறைநேச முத்திரை குத்தப்பட்டு இவையெல்லாம் பக்திப் பரவசத்தோடு இன்று நம்மில் பலரால் அணுகப்படுகின்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுவிட்டன. இந்தப் புலவர்களுடைய இறைநேசம்பற்றி நாம் பேசவரவில்லை. இவர்களுடைய பாடல்களாக இன்று நமக்குக்கிடைப்பவைகளை இஸ்லாமிய உரைகல்லில் உரசிப்பார்க்கிறோம். அப்படி பார்க்கும் போது குர்ஆன்-ஹதீஸ்களின் கோட்பாடுகளோடு நேரடியாக முரண்படுகின்ற எத்தனையோ கருத்துக்கள் இப்புலவர்களால் பாடப் பட்டுள்ளமையை நம்மால் அடையாளம் காண முடிகின்றது. இப்புலவர்களுடைய எல்லாப் படைப்புக்களும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. இவற்றுள் தள்ளத்தக்கவையும் இடம் பெற்றுள்ளன. என்பதை நம்மவருக்கு நினைவுபடுத்துவதே இத்தொடரின் நோக்கமாகும்.
நம்முடைய இஸ்லாமிய இலக்கியச் செல்வங்களிலேயே இஸ்லாத்துக்கு முரணான போக்குகளா? அது எப்படி இருக்க முடியும்? இதைப்பாடிய நாதாக்கள்-ஸூஃபிகள்- வலியுல்லாக்கள்-என்ன சாமான்யமானவர்களா? கால் குழியிலேயே கஃபத்துல்லாவைத் தரிசித்தவர்களல்லவா இவர்கள்? என்ற தனிமனித வழிபாட்டுத் திரைகளால் தங்கள் அறிவுப் பார்வையை மறைத்துக் கொண்டவர்கள் இத்தொடரைத் தொடத்தகாததாகக் கருதலாம்.
இன்னும் சிலர் என்ன எண்ணுகின்றனர்? அப்படியே நம்முடைய இஸ்லாமிய இலக்கியப் படைப்புகளில் இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தாலுங்கூட அவற்றை ஏன் நாமே பெரிதுபடுத்தவேண்டும் எனக் கேட்கின்றனர். நம்முடைய புலவர்களின் பாடல்களில் உள்ள முரண்பாடுகளை எடுத்தெழுதும் கோடாரிக்காம்புகளாக நாமே மாறி விடுவதா? எனவும் வாதிடுகின்றனர்.
ஒரு சல்மான் ரஷ்டியோ, ஒரு அருண்ஷோரியோ, ஒரு ராமஸ்வரூப்போ இஸ்லாத்துக்கு முரணாக எதையேனும் எழுதினால் ஒட்டு மொத்தமாகக் கொதித்தெழுகின்றனர் நம்மவர்கள். அதே வேளையில் நமதூர்ப் புலவர்கள் இஸ்லாத்தின் மீது பூசியுள்ள புழுதிகளைக் கண்டுகொள்ளாமலே இருக்கின்றனர். இஸ்லாமியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நோகடிக்கின்ற-சாகடிக்கின்ற இத்தகைய கவிதைகள் பல இஸ்லாமிய இலக்கியம் என்னும் போர்வையில் உலவி வரும்போது, அதிலிருந்து விலகிக் கொள்வதில் நாம் விழிப்பாயிருத்தல் வேண்டும்.
இந்த வகையில் குணங்குடி மஸ்தானின் நிலை என்ன என்பதை இனி காண்போம். இவருடைய பாடல்களில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால் இவரைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
சுல்தான் அப்துல் காதிர் என்பது இவருடைய இயற்பெயராகும். இவர் ஹிஜ்ரி 1207 ஆம் ஆண்டு தொண்டியில் பிறந்தார். கீழக்கரை சென்று ஷய்கு அப்துல் காதர் லெப்பை ஆலிம் என்னும் தைக்கா சாகிபு என்பாரிடம் கல்வி பயின்றார். பின்னர் திரிசிரபுரமடைந்து ஷாம் சாகிபிடம் தீட்சைபெற்று, தம் 17ஆவது வயதில் துறவுபூண்டார்.
அதன் பின் அவர்கள் காரைக்கால் சென்று அங்குள்ள குப்பை மேடுகளில் தங்கித் தம் காலத்தைக் கழித்து வந்தனர். மக்கள் குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டுவதையும் பொருட்படுத்தாது அங்கு தங்கியிருந்த அவர்களைச் சில ஆலிம்கள் அணுகி,அவர்கள் தொழாது தூய்மையற்ற இடத்தில் தங்கிப் போலித் துறவிவேடம் புனைந்திருப்பதாகக் குறைகூறினர். உடனே அவர்கள் தண்ணீர் கொணரச் செய்து ஒளூச்செய்து அங்கேயே தொழுதனர். ஆனால் தொழத்துவங்கியவர்கள் தாம் மூன்று நாட்கள் அவர்கள் உணர்வற்று நின்ற நிலையிலேயே நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அதைக்கண்டு அவர்களைக் குறை கூறிய ஆலிம்கள் அவர்களின் மகாத்மியத்தை உணர்ந்து அவர்களைப் போற்றிப் புகழ்ந்தனர். இந்நிலையில் அவர்களும் அவ்வூரைவிட்டும் நீங்கி விட்டனர்?''
பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்னை வந்து தம் வாழ்வின் கடைசிப் பன்னிரண்டு ஆண்டுகளையும் சென்னை ராயபுரத்தில் யோகநிஷ;டையில் கழித்த இவர், தம் 47-ம் வயதில் ஹிஜ்ரி 1254-ல்அங்கேயே காலமானார். இவருடைய பெயரால் தொண்டியார்பேட்டை இன்று தண்டையார்பேட்டை என மருவி வழங்குகிறது. இவர் காதிரியா தரீக்காவைச் சேர்ந்த ஸூபிக் கவிஞர் எனச் சுட்டப்படுகின்றார். இறைவனையும், நபி (ஸல்) அவர்களையும் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்), நாகூர் ஷாகுல் ஹமீது (ரஹ்) ஆகியோரைப் பற்றியும் இவர் பாடல்கள் பல பாடியுள்ளார்.
முஹ்யித்தீன் அப்துல்காதர் ஜீலானி (ரஹ்) அவர்களைத் தன்னுடைய ஆன்மீக குருவாகப் பாவித்தவர் இவர். இவருக்குக் 'குணங்குடியார்' என்ற பெயர் ஏன் வந்தது? அல்லாஹ்வைப்பற்றிச் சொல்லும்போதும் 'குணங்குடி ஆண்டவன்' என்கிறார்.
''ஆண்டவன் என்செய்வனோ - குணங்குடி ஆண்டவன் என்செய்வனோ ஆண்டவன் அணைத்து என்னை அருகில் வைத்திடுவனோ தீண்டியும் பார்க்காமல் விட்டிடுவனோ'' எனப்பாடுகின்றார்.
''நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு நாதன் முஹ்யித்தீனே'' எனப் போற்றும் போது முஹ்யித்தீன் அப்துல் காதர் (ரஹ்) அவர்களுக்குக் 'குணங்குடி' என்ற அடையைக் கொடுக்கிறார்.
சற்குணங்குடி கொண்ட ஷாகுல் ஹமீதரசரே'' எனச் சொல்லும்போது ஷாகுல் ஹமீது (ரஹ்) அவர்களோடும் 'குணங்குடி' யை இணைத்துப் பேசுகின்றார். இனி, தன்னைப் பற்றிப் பாடும் போதும் 'குணங்குடியான்' என சுட்டிக் கொள்கிறார்.
''ஐயன் குணங்குடியானை யன்றி வேறுண்டென்று உள் ஆய்ந்து பார்த்தேன் ஐயன் குணங்குடியானை யன்றி வேறொன்றும் என்னுள்ளாய்க் காணேன் ஐயன் குணங்குடியோனே யானே என்று அறிந்த பின்பு என் அறிவாய் நின்ற ஐயன் குணங்குடியானே யதிமோகத் திருநடன மாடுவானே'' என அமைகிறது பாடல்.
ஆக இவருடைய பார்வையில் அல்லாஹ்வும், முஹ்யித்தீன் அப்துல் காதர் (ரஹ்) அவர்களும் இவரும் குணங்குடியார்கள்தாம். இவருடைய பாடல் போக்கைப்பார்த்து, இந்த நால்வருள் யாரைக் குணங்குடியான் என்று சுட்டுகிறாய் என்பதைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியதுதான். (வளரும் இன்ஷா அல்லாஹ்)
1989 ஜனவரி அல் ஜன்னத்திலிருந்து இதை எடுத்தெழுதி அனுப்பியவர் செல்வன் முஃமின் பில்லாஹ். அவர்களுக்கு அல்லாஹ் அவர்களுக்கு புரிவானாக. ஆமீன்.
Comments