''என் மரணதிற்குபின் என் கப்ரை (மண்ணறையை) தரிசிப்பவன் என்னை உயிருடன் சந்தித்தவன் போலாவான்''
ஹதீஸ்களின் பெயரால்--
நபி (ஸல்) அவர்கள் பெயரால் இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் திட்டமிட்டு பொய்களை ஒருபுறம் அறங்கேற்றிட, இன்னொருபுறம் ஆர்வக் கோளாறு காரணமாக நம்மவர்களும் ஹதீஸ் தயாரிப்பில் ஈடுபடலானார்கள். சின்னச் சின்ன நற்கருமங்களுக்கு கால்குலேட்டர் வைத்து கணக்கு பார்க்கும் அளவுக்கு நன்மைகளை வாக்களிக்கும் விதமாக அமைந்துள்ள ஹதீஸ்கள் தயாரிக்கப்பட இந்த ஆர்வக் கோளாறே காரணமாக இருந்திருக்கிறது. நன்மைகளை செய்ய மக்களை தூண்டும் நல்லெண்ணத்திலேயே இவ்வாறு செய்வதாகக் காரணமும் கூறினார்கள்.
மற்றவர்களை நன்மை செய்யத் தூண்டி அவர்களை சுவர்க்க வாழ்வின் பக்கம் அழைக்கும் இத்தகையோர் ''என்பெயரால் வேண்டுமென்றே பொய் சொல்பவனின் தங்குமிடம் நரகமே'' என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது தங்களை நரகத்துக்கு முன்பதிவு செய்கிறார்கள்.
இதுபோன்ற ஆர்வக் கோளாறு காரணமாக உருவாக்கப்பட்ட சில ஹதீஸ்கள் விபரீதமான கருத்துகளைத் தெரிவிப்பதோடு பொய்யான செய்திதான் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகின்றன.
''என் மரணதிற்குபின் என் கப்ரை (மண்ணறையை) தரிசிப்பவன் என்னை உயிருடன் சந்தித்தவன் போலாவான்'' நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புனையப்பட்ட ஹதீஸ்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. தப்ரானி, தாரகுத்னீ, பைஹகீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையிலும், தெரிவிக்கும் கருத்திலும் அனேக குறைபாடுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. அறிவிப்பாளர் வரிசையை முதலில் கவனிப்போம்.
இதன் அறிவிப்பாளர் வரிசைத் தொடரில் ''லைஸ் இப்னு அபீ ஸூலைம்'' என்பவர் இடம் பெறுகிறார். ''இவர் ஆரம்ப காலத்தில் நம்பகமானவராக இருந்து பின்னர் குழம்பிப் போனவர், மேலும் இவர் ஆரம்ப காலத்தில் அறிவித்தவை எவை? பிற்காலத்தில் அறிவித்தவை எவை? என்பதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை. எனவே இவரது ஹதீஸ்கள் ஏற்கத் தகுந்தது அல்ல'' என்று ஹாபிழ் அவர்கள் தமது 'தக்பீர்' எனும் விமர்சன நூலில் குறிப்பிடுகிறார்கள். ''இதே காரணத்துக்காகவே இவரது அறிவிப்புகள் பலவீனமானவை'' என ஹாபிழ் ஹைஸமீ அவர்கள் தமது 'மஜ்ம உஸ்ஸவாயித்' நூலில் குறிப்பிடுகிறார்கள். ஹாபிழ் இராகீ அவர்களும் இதை ஊர்ஜிதம் செய்கிறர்கள். குறைபாடு இத்துடன் முடியவில்லை. இன்னும் தொடர்கிறது.
மேற்கூறிய 'லைஸ் இப்னு அபீ ஸூலைம்' வழியாக அறிவிப்பவர் 'ஹப்ஸ் இப்னு ஸூலைமான்' என்பவர். ''இவரது ஹதீஸ்களைத் தள்ளுபடி செய்யவேண்டும்'' என்று ஹாபிழ் அவர்கள் தமது ''தக்ரீப்'' நூலில் குறிப்பிடுகிறார்கள். பெரும் 'பொய்யர்' என இப்னு முயீன் அவர்களும், தமது 'அல்காமில்' எனும் நூலில் இந்த ஹதீஸை பதிவு செய்துள்ள இப்னு அதீ அவர்கள் இவரைப் 'பொய்யர்' எனவும் அதே இடத்திலேயே அடையாளமும் காட்டுகிறார்கள். ''திட்டமிட்டு இட்டுக் கட்டக் கூடிய பெரும் பொய்யன்'' என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள். இப்னு ஹர்ராஷ; அவர்கள் தமது நூலில் இதை பதிவுசெய்துள்ள பைஹகீ அவர்களும்கூட ''அதன் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது'' என்பதை தெளிவுபடுத்திவிடுகிறார்கள்.
பலவீனமான-இட்டுக்கட்டப்பட்ட-ஹதீஸ்களையும் நியாயப்படுத்தும் இன்றைய 'குராபி'களின் முன்னோடியாகத் திகழ்கின்ற இப்னு ஹஜர் ஹைத்தமீ என்பவர் (ஹாபிழ் இப்னு ஹஜர் அல்ல) இந்த ஹதீஸையும் அன்றே நியாயப்படுத்தத் துணிந்துள்ளனர். பச்சைப் பொய் ஒன்றைக் கூறி அதனடிப்படையில் இவர் நியாயப்படுத்த முயன்றுதான் வேதனையானது.
''இப்னு அதீ அவர்கள் தமது 'அல்காமில்' எனும் நூலில் ஆதாரப்பூர்வமான வரிசையுடன் இதைப் பதிவு செய்துள்ளார் என்று ஹத்தமீ கூறுகின்றார். இப்ன அதீ தமது நூலில் இதைப் பதிவு செய்திருப்பது உண்மையே! 'ஆதாரப்பூர்வமான வரிசையுடன்' என்பது தான் பச்சைப் பொய். இப்னு அதீ அவர்கள் பதிவு செய்ததோடு நிற்காமல் அதே ஹதீஸின் முடிவில் 'பொய்யர்' ஒருவர் இடம் பெறும் ஹதீஸ் எனவும் கூறிவிடுகிறார்கள்.
இதே ஹதீஸ் மற்றொரு அறிவிப்பாளர் வரிசையுடனும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசை இதைவிடவும் மோசமான தரத்தில் அமைந்துள்ளது. அதையும் காண்போம்.
அந்த அறிவிப்புத் தொடரில் அலீ இப்னு ஹஸன் இப்னு ஹாரிஸ் என்பவர் இடம் பெற்றுள்ளார். ஆனால் இவர் யாரென்று எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. இந்த தொடரில் அபுல்லைஸ் உடைய மகளுடைய பேரன் ஒருவர் அறிவிப்பதாக உள்ளது. அபுல்லைஸ் உடைய மகள் என்றால் என்ன? அவரது பேரன் யார்? அவர்களின் பெயர்களும், அவர்களைப் பற்றிய விபரங்களும் யாவை? என்பதற்கு எந்த ஒரு குறிப்பும் இல்லை. மேலும் 'ஆயிஷh பின்த் யூனுஸ்' என்ற பெயரிலும் ஒருவர் இடம் பெறுகிறார். இவரைப்பற்றியும் தகவல் எதுவும் இல்லை. முகவரி இல்லாத கற்பனை பெயர்களை அதன் அறிவிப்பாளராக கூறப்படுகிறார்கள். தப்ரானி அவர்களுக்கு சில காலம் ஆசிரியராக இருந்த 'அஹ்மத் இப்னு ருஷ;தின்' என்பவரும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் வருகிறார். இவர் பொய்யர் என்பது ஹதீஸ் கலை வல்லுனர்களின் முடிவாகும்.
ஒரு பொய்யரும், முகவரி இல்லாத மூன்று நபர்களும் இடம் பெறும் இந்த ஹதீஸ் சரியான கருத்துக்களைக் கூறினால் ஏற்கத் தகாதது தான். ஆனால் இந்த ஹதீஸின் கருத்தோ ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களை மறுக்கும் விதமாக வேறு அமைந்து 'இட்டுக்கட்டப்பட்டது' என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களை உயிருடன் கண்டு மகிழ்ந்த நபித்தோழர்களும், அவர்களின் மரணத்திற்குபின் அவர்களின் மண்ணறையை சந்திக்கும் பிற்காலத்தவரும் சமமானர்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. நபித்தோழர்களின் அந்தஸ்தை அறிந்து வந்திருக்கின்ற எந்த முஸ்லிமாவது இந்த நச்சுக்கருத்தை நம்பமுடியுமா? 'கப்ருஸியாரத்' என்ற சுன்னத்தை சிறப்பிக்கிறோம். என்ற பெயரில் நபித்தோழர்களை இழிவுபடுத்தும் அளவுக்கு அல்லது தங்களை நபித்தோழர்களின் நிலைக்கு உயர்ந்தவர்களாக ஆக்கும் அளவுக்கு துணிந்திருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களை சந்தித்து தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணித்த இந்த தியாகச் செம்மல்களின் நிலையை கப்ரு ஜியாரத் மூலம் அடைந்து விடலாம் என்ற கருத்தை எவராவது ஏற்கமுடியுமா?
''என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மேல் ஆணை'' உங்களில் எவரேனும் உஹது மலை அளவு தங்கத்தை செலவு செய்தாலும், என் தோழர்கள் ஒரு கை அளவு அல்லது பாதி அளவு செய்த தர்மத்துக்கு ஈடாக முடியாது'' (புகாரி, முஸ்லிம்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்வமான செய்தியை ''ஜியாரத்'' செய்பவன் அவர்களின் நிலையை அடையமுடியும் எனச் சாதிக்கின்ற பொய்யான ஹதீஸ் மறுக்கும் விதமாக அமைந்துள்ளது.
நபித்தோழர்களின் காலத்துக்குப் பின் வருபவர்கள் கடமையான தொழுகை, நோன்பு இன்னபிற கடமைகளைச் செய்வதால் கூட அவர்களின் நிலையை அடையவே முடியாது. என்றால் ஸூன்னத்தான இந்த 'ஸியாரத்' முலம் எப்படி அந்த நிலையை அடையமுடியும்? இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
ஜியாரத் சம்பந்தமாக புனையப்பட்ட இன்னும் சில ஹதீஸ்களையும் காண்போம். (வளரும் இன்ஷா அல்லாஹ்)
இதனை கம்யூட்டரில் டைப் செய்து அனுப்பித் தந்த செல்வன் முஃமின் பில்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ் அவர்களுக்கு புரிவானாக. ஆமீன்.
Comments