மாற்றாரின் பார்வையில் இஸ்லாம்.

ஆண்களும், பெண்களும் பல்வேறு வகைகளில் வித்தியாசப்படுகிறார்கள் என்பதையும், அந்த வித்தியாசங்களே பலதார மணத்தை ஆண்களுக்கு மட்டும் அனுமதிக்கக் காரணமாகின்றது என்பதையும் கண்டோம். மேலும் சில வித்தியாசங்களை காண்போம்.

மனிதன் என்ற முறையில் அனைவரும் சமம் என்றாலும், மனிதர்களிலேயே சிலர் சில காரணங்களால் அதிகப்படியான உரிமைகளைப் பெறுவதை உலகில் காண்கிறோம். அதை உலகமும் மாற்றார் உட்பட ஏற்றுக்கொள்வதையும் காண்கிறோம்.

ஒரு தந்தையும், மகனும் என்ற முறையில்-ஆண் என்ற முறையில் சமமானவர்களே. ஆனாலும் தன்னுடைய உழைப்பை-செல்வத்தை மகனது நலத்திற்காக தியாகம் செய்தவன் என்ற முறையில் தந்தை கொஞ்சம் அதிகப்படியான உரிமையை எடுத்துக் கொள்வதை உலகம் ஏற்றுக் கொள்கிறது. இதனால் சமத்துவம் செத்துவிட்டதாக எவரும் கூறுவதில்லை.

இதேபோல் குடும்ப வாழ்வில் கணவன், மனைவி இருவரில் கணவன் அதிக அளவில் கடமை பட்டிருக்கிறான். தனது மனைவியின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பையும் அவன் சுமக்கிறான். அவன்தான் சுமக்க வேண்டுமென இஸ்லாமும் அவனை நிர்பந்திக்கின்றது.

''தங்களின் பொருளாதாரத்தைச் செலவு செய்கிறார்கள் என்ற காரணத்தினாலும், சிலரைவிட சிலரை அல்லாஹ் சிறப்பாக்கி இருக்கிறான் என்ற காரணத்தாலும் ஆண்கள், பெண்கள் மீது நிர்வாகம் செய்பவர்கள்'' என்று அல்குர்ஆன் (4:34) வசனத்தில் மனைவியருக்காக கணவர்கள் செலவு செய்யவேண்டுமென்று கட்டளையிடுகிறது.

''மனைவிக்குக் கணவன் செய்யவேண்டிய கடைமைகள் யாவை? என்று ஒருவர் நபிகள் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது'' நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும், நீ அணியும் போது அவளை அணியச் செய்வதும், அவளது முகத்தில் அறையாதிருப்பதும், அவளை (இழி செற்களால்) இழிவுபடுத்தாதிருப்பதும் வீட்டில் தவிர வெளியில் அவளைக் கண்டிக்காதிருப்பதும் என்று நபி (ஸல்) கூறினார்கள். முஆவியா (ரலி) என்ற நபித்தோழர் அறிவிக்கும் இந்த செய்தி அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ ஆகிய நூல்களில் காணப்படுகின்றது. இந்தக் கருத்தில் இன்னும் ஏராளமான நபி மொழிகள் உள்ளன.

ஒரு தந்தை தன் மகனைக் கவனிக்கும் கடமைகூட அவன் பருவ வயது அடைந்ததும் முடிந்துவிடுகின்றது. ஆனால் மனைவியைக் காக்கும் கடமை அவள் மரணிக்கும் வரை கணவன் மீதே சுமத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மனைவி கணவனுக்கு எதுவும் கொடுக்க வேண்டுமென இஸ்லாம் வற்புறுத்தவே இல்லை. இந்தக் கணவனே அவளுக்கு உடைமையாக்கிய பொருளைக்கூட அவளிடமிருந்து அவள் விருப்பமின்றி எடுத்துக்கொள்ளும் உரிமையை ஆண்களுக்கு இஸ்லாம் வழங்கப்படவில்லை.

தன்னுடைய உழைப்பை-செல்வத்தை மனைவியின் அவசியத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற அதற்காக அர்ப்பணிப்பவனும், தன்னுடைய எந்தப் பொருளையும் கணவனுக்கு கொடுக்க கடமைப்படாதவளும் சமமானவர்கள். உரிமைகளில் எந்த வித்தியாசமும் இல்லை என்ற முடிவு நியாயமான முடிவாக முடியாது.

ஒரு மனிதனுக்குச் சொந்தமான நிறுவனத்தில் அவனது இரண்டு புதல்வர்களில் ஒருவன் மட்டும் பாடுபடுகிறான், மற்றவன் வீட்டில் இருந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் எனும் போது அந்த நிறுவனத்தில் அதற்காக உழைப்பவன் அதிகப்படியான உரிமையை எடுத்துக்கொள்வதை உலகம் நியாயப்படுத்துகின்றது. அதே போன்று நிலைக்குச் சற்றும் குறையாத விதத்தில் குடும்பதிற்காகவே உழைக்கக் கடமைப்பட்டவன் அதிக உரிமை எடுத்துக்கொள்ளும் போது விமர்சிப்பது என்ன நியாயம்? பலதார மணத்தை நியாயப்படுத்திட வந்தக் காரணம் வலுவுடையதாக இல்லை என்று சிலருக்குத் தோன்றினாலும் ஏற்கனவே நாம் கூறிய காரணங்களுடன் சேர்த்துப் பார்க்கும் போது பலதார மணத்துக்குரிய காரணங்களில் இதுவும் ஒரு காரணம் என்பதை மறுக்கமாட்டார்கள்.

பெண்களுக்கும் பலதார மணம் அனுடதிக்கப்படவேண்டுமென்றால் இந்த வித்தியாசத்தையும் மாற்றியமைத்தபின் அதற்காக குரல் எழுப்பட்டும்! ஆண்கள் அனைவரும் வீட்டில் அமர்ந்துகொள்ளட்டும்! பெண்கள் தன் கணவர்களுக்காகவும் சேர்த்து உழைத்துப்போடட்டும்! அவனது அத்தியாவசியத் தேவைகள் அனைத்துக்கும் பொறுப்பேற்கட்டும் அப்படிப் பொறுப்பேற்றுக் கொள்ளும் போது தான் இந்தக் காரணம் அடிபட்டுப்போகும்.

பெண்கள் ஆண்களுக்காகவும் உழைத்துப் போடுவது சிரம சாத்தியமான காரியம் என்பதை அறிவுடையோர் மறுக்கமாட்டார்கள். அவள் வெளியே உழைக்கச் செல்லும் போது அவள் வீட்டில் விட்டுச் செல்லும் குழந்தைக்கு கணவனால் பாலூட்ட முடியுமா என்ன? அவளைப் போல் பொறுமையுடன் குழந்தையின் குறும்பைச் சகித்துக் கொள்ள முடியுமா என்ன? இதையெல்லாம் புறக்கணித்து விட்டு இயல்புக்கு மாறாக சிலர் செய்யலாம். எல்லோராலும் இது சாத்தியமாகக்கூடியதில்லை. இந்தக் காரணத்தைக் களைந்து விடுவதற்கு பெண்கள் தயார் என்று முன்வந்தவுடனேகூட பலதார மணத்தை அவர்களுக்கு அனுமதிக்க முடியாது. மாறாக ஏற்கனவே நாம் எடுத்துக்காட்டிய காரணங்களும் களையப்பட வேண்டும்.

திருமணத்தின்போது பெண்கள் கேட்கும் மஹர் என்னும் திருமணக் கொடையை ஆண்கள் மீது இஸ்லாம் விதியாக்குகின்றது. திருமணத்திற்கு பின் அவளை காலம் முழுவதும் கவனிக்கும் கடமையோடு திருமணத்திற்கு முன்பு இந்தத் தொகையையும் வழங்கிட இஸ்லாம் கட்டளையிடுகின்றது. அவள் ஆயிரம் கேட்கலாம்! அதைக் கொடுக்க சம்மதிப்பவனே அவளை மணக்க முடியும். இந்த வகையிலும் ஆண் அதிகப்படியான உரிமையைப் பெறுகின்றான். (இஸ்லாத்தை இழிவுபடுத்தும் இஸ்லாமியப் பெயர் தாங்கிகள் பெண்களிடமே வரதட்சணை கேட்கும் ஈனச் செயலுக்கு இஸ்லாம் பொறுப்பல்ல என்பதையும் மாற்றார்கள் நினைவில் கொள்ள வேண்டும்.)

இந்த இரண்டு காரணங்களையும் கவனிக்கும் போது பலதார மணம் என்பது மிகக் குறைந்த சிலருக்கு மட்டுமே சாத்தியமாகும் என்பதை இங்கே உணரவேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். ஒருவனுக்கு இரண்டாவது மனைவியாக வாழ்கைப்படுபவள் தன் பூரண சம்மதத்துடன் தான் முன்வருகிறாள். சம்மதமின்றி அவளை யாரும் இரண்டாம் தரமாக வாழ்க்கைப்பட நிர்பந்திக்க முடியாது. அவ்வாறு நிர்பந்தம் செய்யும் திருமணங்களை இஸ்லாம் செல்லாதெனவும் அறிவிக்கிறது.

இரண்டாம் தரமாக வாழ்க்கைப்பட வருகிறாளே அவள் தான் இது பற்றிக் கவலைப்படவேண்டும். சம்மந்தப்பட்ட அவளே விரும்பி இந்த வாழ்வை ஏற்றுக்கொள்ள முன்வரும் போது அது பற்றி மற்றவர்கள் அலட்டிக்கொள்வானேன்? அலறுவானேன்?

சமீப காலமாக மாற்று மதத்தவர்களில் சிலர் எடுத்து வைக்கும் வினோதமான வாதத்தையும் நாம் கவனிக்ககடமைப்பட்டிருக்கிறோம். பலதார மணத்தினால் முஸ்லிம்கள் அதிகமாகி நாம் சிறுபான்மையாவோம். அதனால் பலதாரமணத்துக்குத் தடை விதிக்கவேண்டும் என்று கூறுகின்றனர். பலதார மணத்துக்கு நாம் எடுத்து வைத்த நியாயமான காரணங்களை அவர்கள் சிந்தித்தால் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதல்ல இதன் நோக்கம் என்பதை உணர்வார்கள்.

இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் இந்த உரிமையை இஸ்லாம் அல்லாதவர்களும் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். முஸ்லிம்கள் மட்டும் தான் பல திருமணங்கள் செய்யலாம் முஸ்லிம் அல்லாதவர்கள் செய்யக்கூடாது என்று இஸ்லாம் கூறினால் அவர்களின் கூற்று நியாயமாக இருக்கும். இஸ்லாமும் அப்படிக்கூறவில்லை முஸ்லிம் நாடுகளிலும் அப்படிச் சட்டம் எதுவுமில்லை.

மேலே நாம் இது வரை எழுதியுள்ள காரணங்களை அறிந்து பலதாரமணம் ஆண்களுக்கு மட்டும் அசாதாரண நிலையில் தேவைதான் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டால், தங்களுக்கும் இதுபோன்ற உரிமைகள் வேண்டுமென்று போராடலாம். முஸ்லிம்கள் அதிகமாவது போல் அவர்களும் அதிமாகிக்கொள்ளலாம். அதை யாரும் ஆட்சேபிக்கபோவதில்லை. இன்னும் சொல்வதென்றால் தங்களுக்கும் இந்த உரிமை வேண்டுமென அவர்கள் போராடினால் அந்த போராட்டத்துக்கு ஆதரவு தர முஸ்லிம்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஆண்களுக்கு பலதார மணத்தை அனுமதித்துப் பெண்களுக்கு மறுத்திட மிக மிக முக்கியமான காரணம் உண்டு. அதை விளக்கமாக எழுதினால் சிலருக்கு ஆபாசமாக தோன்றலாம். எனினும் மாற்றாரின் விமர்சனத்துக்குப் பதில் அளிப்பது அவசியம் என்பதனால், சுருக்கமாக அதையும் குறிப்பிடுவோம். புரிந்து கொள்ளலாம்.

ஒரு ஆண் அவன் விரும்பியபோது மனைவி விரும்பாவிட்டாலும் உடலுறவை நிறைவேற்றிட முடியும். ஒரு பெண் அவள் விரும்பியபோது கணவன் விரும்பாவிட்டால் அது சாத்தியபடாது. ஏனெனில் பெண்ணுடன் உறவு கொள்ள அவளிடம் மாறுதல் எதுவும் தேவையில்லை. ஆனால் ஒரு பெண் ஆணிடம் உறவு கொள்ள அதை விரும்பி அதற்குத் தயாராக வேண்டும் இல்லை எனில் அது சாத்தியமாகாது. (இதற்கு மேல் இதை விபரமாக எழுதமுடியாது.)

இந்த காரணத்தின் அடிப்படையில் பல மனைவியரை கட்டியவன் நினைத்தபோது விரும்பிய மனைவியுடன் உறவு கொள்ளமுடியும் ஒரு மனைவி அவள் விரும்பிய கணவனிடம் அவன் விரும்பாத போது உறவு கொள்ள இயலாது. இதுவும் முக்கிய காரணமாகும் இது போன்ற காரணங்களாலேயே இஸ்லாம் ஆண்களுக்கு மாத்திரம் பலதார மணத்தை அனுமதிக்கின்றது.

பலதார மணத்தை இஸ்லாத்தின் பலவீனம் என்பர் மாற்றார் அதுதான் இஸ்லாத்தின் பலம் என்கிறோம் நாம். ஏனெனில் இஸ்லாம் எல்லாவற்றையும் நுணுக்கமாக ஆராய்ந்து தன் சட்டங்களை உலகுக்கு வழங்கியுள்ளது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது. இனி நபி (ஸல்) மட்டும் மற்றவர்களைவிட அதிக எண்ணிக்கையில் மணம் செய்யக்காரணம் என்னவென்று பார்ப்போம். (வளரும் இன்ஷா அல்லாஹ்)
இதனை கம்யூட்டரில் டைப் செய்து அனுப்பித் தந்த செல்வன் முஃமின் பில்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ் அவர்களுக்கு புரிவானாக. ஆமீன்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு