இன்பத் தமிழில் இஸ்லாமியத் தொண்டு!
(ஓரிறைக் கொள்கையை எடுத்துச் செல்வோர் இன்று ஓரம் கட்டப்படுகின்றனர். இத்தனை காலமாக முன்னோர்களுக்குத் தெரியாதது இன்று உங்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது? என வியக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் எல்லாக்காலங்களிலும் உண்மையைச் சொல்பவர்கள் இருந்தே வந்திருக்கின்றனர். இதற்குச் சான்றாக 1944ல் கவிஞர் கா. அப்துல் கபூர் அவர்கள் முஸ்லிம் நண்பன் நினைவு மலர் என்ற நூலில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி.)

நமது எழுத்துத் திறனை எடுத்துக் கொள்வோம். திருமுடியிறக்கிய ஹதீது, நஸீஹத்து நாமா, ஸைத்தூன் கிஸ்ஸா, ராஜ மணிமாலை, மிஃராஜ் மாலை, ஐந்து படைப்போர், காசிம் படைப்போர்- இவைகள்தான். தமிழிலே இஸ்லாமியத் தொண்டு புரிய முன்வந்த நமது முன்னோர்களது முயற்சியின் முழுப்பயன்! இன்பத் தமிழின் இலக்கண இலக்கியங்களை இரக்கமின்றி கொலை செய்து, இணையற்ற இஸ்லாத்தின் இனிமைக்கு இடுக்கண் கொடுக்கும் இத்தகைய நூல்களை அச்சியேற்றி வெளியிடுவதற்கு பதிப்பகங்களும் முன்வந்து விடுகின்றன. வெட்கம் வெட்கம்! அப்புத்தகங்களில் புதைந்துள்ள புளுகும் புரட்டும் புனித இஸ்லாத்தை புண்படுத்துவதையும் அறிவை அசட்டை செய்வதையும் இதோ காண்க:
''கூடும் பதிகளிலே குறாசனி என்னு நகர்
நாடு மதிலிறையாம் நடானி புளியந்தன்
அஞ்நூறு மாமுழந்தானாகு மவன் மார்பகலம்
அஞ்சா திருக்குமான விருநூறு முழம்
நெய்யான வாயகலம் நூற்றிருப தாகுமுழம்
கையாலளந்தாற் கணக்குச் சரியாகும்
ஒவ்வொரு பல்நூறு முழம் ஓர்முழந்தா னதினகலம்''
இவ்விதமாக, பத்திக்கும் பொருந்தாத புளுகுகளை வள்ளல் நபியிடம் வல்லோனின் வானவர் (ஜிப்ரீல்) வந்து சென்னதாக வரைந்து காட்டுகின்றது. இரக்கமற்ற இபுனியன் படைப்போர்.
''ஈமானிலே யழையு மியம்புமவன் வாரா விட்டால்
கேடுனக் கென்றேகூறி, கேளுந்திறையதுதான்
நீடும் தற்கவன்றான் நிச்சயத்துக் கொள்ளா விடில்
ஆடும்போர் செய்வோமென்றே அறிவித்து வாரும்''
இஸ்லாத்தில் சேர்வதற்கு யாரையும் வற்புறுத்த வேண்டாம் என்று வன்மையாகக்கூறிய கருணை நபி அவர்கள், தளபதி காலிதையழைத்து இபுனியன்பால் சென்று இவ்விதம் செய்யச் சொன்னதாக கந்தப் பிள்ளை மகன் அலியார் புலவனால் எள்ளளவும் அச்சமின்றி ஏடுகளிலே எழுதி வைக்கப்பட்டிருக்கின்றது.
''காபிர்களை வெட்டிக் கருவறுத்துத் தீனாக்கி
பாவந் துலைத்து பயிரேற்றினார்.''
பார்த்திபர் முகம்மது (ஸல்) என்று பகர்கின்றது பண்புறு இஸ்லாத்தைத் துன்புறச் செய்யும் பப்பரத்தியாரம்மானை ''ஒரு யானைக் காயிரம் தலைகளுண்டாம்'' என்பது போன்ற அறிவுக்கொவ்வாத செய்திகளையும் ஹஜரத் அலியவர்கள், நெற்றியிலே நாமமிட்டு, வளையல்செட்டி வேடமிட்டு, வீதிகளிலே அலைந்து கொண்டு, ஆணைப் பெண்ணாக்கி அவளை மணந்த வரலாற்றையும், கூறி மக்களை மயக்கி வாழ்ந்தனர், மதுரை செய்து மீறாப் புலவர்கள். ''அந்தச் சொல்லைக் காதிலே கேட்டார் முகம்மதனிபாவும் என்ற சொற்களால் ஏடுகளை நிரப்பி ஏழைகளை ஏய்த்துப் போயினர், ஸெய்த்தூன் கிஸ்ஸாக்கள் எழுதிய ஆம்பூர் அப்துல் காதர் சாய்புகள். இன்பத் தமிழிலே இஸ்லாமியத் தொண்டாற்றும் இலக்கியங்களின் தன்மையை விரிவாக விளக்க இடமின்மையால், இரண்டொரு சான்றுகளை இதோ காட்டினோம். இவைகளைத்தான் இரவு முழுவதும் கண் விழித்துப் பாடிப் பரவசமடைகிறோம். இவைகள் தான் நமது எழுத்துத் திறனின் சின்னங்களாக விளங்குகின்றன.
ஜனவரி 1989
அல் ஜன்னத்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.