'முதஷாபிஹாத்'
(நன்றி அல் ஜன்னத். 1989 ஜனவரி)
முதல் சாராரின் ஏழாவது ஆதாரம்.
'முதஷாபிஹ்' வசனங்களுக்குப் பொருள் கூறுவதில் அறிஞர்கள் அனைவரும் ஒருமித்து ஒரே கருத்தைக் கூறமுடியவில்லை. பல் வேறுபட்ட விளக்கங்களை ஒவ்வொருவரும் கூறுகின்றனர். 'முதஷாபிஹ்' வசனங்களில் பொருளை விளங்க முடியும் என்றால் அனைவரும் ஒரே கருத்தைக் கூறியிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு ஒரே கருத்தைக் கூறாமல் பலவேறு கருத்துக்களை கூறியிருக்கின்றனர். அறிஞர்கள் இவ்வாறு கருத்து வேறுபாடு கொண்டிருப்பதே 'முதஷாபிஹ்' எவருக்கும் விளங்காது என்பதற்கு மற்றொரு சான்றாகும் என்று முதல் சாரார் வாதிக்கின்றனர்.
இரண்டாம் சாராரின் மறுப்பு
இந்த வாதமும் பொருளற்றதாகும். ஏனெனில் கருத்து வேறுபாடுகள் 'முதஷாபிஹ்' வசனங்களில் மட்டுமல்ல முஹ்கம் என்று முதல் சாராரும் ஒப்புக் கொள்ளக்கூடிய வசனங்களிலும் கருத்து வேறுபாடுக்ள உள்ளன. தொழுகை, நோன்பு இன்னபிற சட்டத்திட்டங்களைக் கூறக்கூடிய வசனங்களை முதல் சாராரும் 'முஹ்கம்' வசனங்கள் என்பர். சட்ட திட்டங்கள் பற்றிய அந்த வசனங்களிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மத்ஹபுகள் என்ற பெயரால் முரண்பட்ட சட்டத் திட்டங்கள் நிலவி வருவது இதற்குப் போதிய சான்றாகும்.
கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் 'முதஷாபிஹ்' வசனங்கள் விளங்காது என்ற முடிவுக்கு முதல்சாரார் வருவார்களானால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள ஏராளமான முஹ்கம் வசனங்களும் விளங்காது என்று கூறவேண்டிய நிலைமை ஏற்படும். அல்லது முதல் சராரும் 'முஹ்கம்' என ஏற்றுக்கொண்ட பல வசனங்கள் 'முதஷாபிஹ்' வசனங்களாகும் நிலைமை ஏற்படும். முஹ்கம் வசனங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் எல்லாக் கருத்துக்களையும் அலசி சரியான கருத்தை முடிவு செய்வது போல் 'முதஷாபிஹ்' வசனங்களிலும் செய்ய முடியும்.
இன்னும் சொல்வதென்றால் முதல் சாரார் 'முதஷாபிஹ்' வசனங்கள் எனக் கூறுகின்ற சுவர்க்கம், நரகம், மறுமை போன்றவற்றைக் குறிப்பிடும் வசனங்களில் உள்ள கருத்து வேறுபாடுகளைவிட முஹ்கம் என்று முதல் சாரார் முடிவு செய்துள்ள சட்டத்திட்டங்கள் பற்றிய வசனங்களில் கருத்து வேறுபாடுகள் அதிகம் உள்ளன.
கருத்து வேறுபாடுகள் நிலவுவதைக் காரணம் காட்டி 'முதஷhபிஹ்' வசனங்கள் விளங்க முடியாதவை என்று முதல் சாரார் கூறுவார்களானால் முஹ்கம் வசனங்களும் விளங்காது என்று கூறவேண்டிய நிலைமை ஏற்படும். முதல் சாராரும் அவ்வாறு கூறத்துணிய மாட்டார்கள். எனவே அவர்களின் இந்த வாதமும் அர்த்தமற்றது என்று இரண்டாம் சாரர் மறுக்கின்றனர்.
முதல் சாராரின் ஒன்பதாவது ஆதாரம்.
'முதஷாபிஹ்' வசனங்கள் விளங்காது என்றால் அறவே விளங்காது என்று நாங்கள் கூறவில்லை. ஓரளவு அனுமானம் செய்ய முடியும். திட்டவட்டமாக இதுதான் விளக்கம் என்று கூற முடியாது என்பதே அதன் பொருள், முதஷாபிஹ் வசனங்களைச் சிந்திக்கவே கூடாது என்று நாங்கள் கூறவில்லை என்று முதல்சாரார் தங்களின் கூற்றுக்கு விளக்கம் தருகின்றனர்.
இரண்டாம் சாராரின் மறுப்பு
இவர்களின் இந்த வாதமும் சரியானதல்ல. பெரும்பாலான முஹ்கம் வசனங்களின் நிலையும்கூட இத்தகையதுதான். திட்ட வட்டமாக அல்லாஹ் இதைத்தான் நாடியுள்ளான் என்று கூறமுடியாத முஹ்கம் வசனங்கள் பல உள்ளன. நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு அறிஞர்கள் பல வசனங்களிலும் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றனர். திட்டவட்டமாக அதன் விளக்கத்தை அறிய முடியாதனாலேயே அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர்.
'முதஷாபிஹ்' வசனங்களும் விளங்கத்தக்கவை எனவும், விளங்கத்தக்காதவை எனவும் கூறுகின்ற இரு சாராரும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் 3:7 வசனத்தையே இதற்கு உதாரணமாகக் கூறலாம். அந்த வசனத்திற்குப் பொருள் செய்யும் போது ''அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் விளங்கமுடியாது'' என்று சிலரும், ''அல்லாஹ்வும், கல்வியில் உறுதி மிக்கவர்களும் விளங்குவார்கள்'' என்று வேறு சிலரும் கூறுகின்றனர். திட்டவட்டமாக அதன் பொருளைக் கூற இயலாததினலேயே இரு அர்த்தங்கள் செய்யும் நிலை. 'திட்டவட்டமாக விளங்காது என்ற நிலைமை முதஷாபிஹ் வசனங்களில் மட்டுமல்ல. மேற்கூறிய 3:7 போன்ற முஹ்கம் வசனங்களின் நிலையும் இதுதான்.
'முதஷாபிஹ்' வசனங்கள் பற்றி குறிப்பிடக்கூடிய 3:7 வசனம் 'முஹ்கம் அல்ல' என்று முதல் சாரார் ஒருவேளை கூற முற்பட்டால், அவர்கள் கூற்றுப்படி முஹ்கம் அல்லாத 3:7 வசனத்தை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாதத்தை எழுப்பவே இயலாது போகும். ஏனெனில் 'முஹ்கம்' வசனங்களின் அடிப்படையிலேயே வாதங்களை எடுத்து வைக்க வேண்டுமென்பது முதல் சாராரும் ஏற்றுக் கொண்ட உண்மை. இவ்வாறு இரண்டாம் சாரார் மறுக்கின்றனர்.
முடிவுரை - 1
இது வரை முதல் சாரார் எடுத்து வைத்த வாதங்களையும் அதற்கான மறுப்புக்களையும் மீண்டும் துவக்கத்திலிருந்து படித்தால் 'முதஷhபிஹ்' வசனங்கள் இவைதான் என்று கூறும் அவர்கள் அதற்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து எந்த ஒரு ஆதாரத்தையும் எடுத்து வைக்கவில்ல என்பதை உணரலாம். முதஷாபிஹ் வசனங்கள் விளங்கிட இயலாதவை என்ற அவர்களின் கூற்றுக்கும் சரியான ஆதாரங்கள் எடுத்து வைக்கவில்லை என்பதை விளங்கலாம். அவர்களின் வாதங்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதையும் உணரலாம்.
''விளக்காத வசனங்களை இறைவன் ஏன் இறக்கியருளவேண்டும்? என்று முதல் சாரார் அளிக்கும் விளக்கத்தை நாம் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் குர்ஆனில் விளங்காதவை உண்டு என்று அவர்கள் நிரூபித்த பின்பே அந்த விளக்கங்கள் தேவைப்படலாம். எல்லாமே விளங்கத்தக்கவை தான் என்று முடிவாகி விட்டால் அவர்களின் அந்த விளக்கம் அவசியமற்றுப் போய்விடும்.
(இனி இரண்டாம் சாராரின் வாதங்களை விரிவாகப் பார்ப்போம்)
(வளரும் இன்ஷா அல்லாஹ்)
Comments