வலி நீக்கும் வாயு சிகிச்சை!வலி நீக்கும் வழிகள்
வாயுத் தொல்லையால் வலி என்பது பரவலாகப் பலரும்
சொல்கிற விஷயம். எதைச் சாப்பிட்டாலும் வாயு என்பதும், அதன் விளைவால் வலி வருகிறது என்பதும் உண்மையல்ல. வாயுவினால் வலி வரு மோ, வராதோ... ஆனால், ஒரு வாயுவினால் வலிகளை விரட்ட முடியும்! யெஸ்..! ஓஸோன் சிகிச்சையின் மூலம் வலியில்லாத வாழ்க்கைக்குத் திரும்பலாம்
என்கிறார் வலி நிவாரண சிறப்பு மருத்துவர் குமார்.
ஓஸோன் சிகிச்சையின் சிறப்புகளைப் பற்றியும், எந்த மாதிரியான வலிகளை அது விரட்டும் என்றும் விளக்கமாகப் பேசுகிறார் அவர்.
குடிக்கிற தண்ணீரில் கூட ஓஸோனின் உபயோகம் வந்து விட்டது. 18ஆம் நூற்றாண்டிலேயே பிரபலமாக இருந்த சிகிச்சைதான் இது. ஆனால், கடந்த 40 ஆண்டு களாகத்தான் வலி நிவாரணத்துக்கு அது உதவுவதாக
விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு, உபயோகத்திலும்
இருக்கிறது.
ஓஸோன் என்பது ஒரு வகை வாயு. நாள்பட்ட தசை வலி, பெண்களுக்கு வரும் ஃபைப்ரோமையால்ஜியா என்கிற வலி, இடுப்பு வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி
எனப் பல்வேறு வலிகளைப் போக்குவதில் இந்த சிகிச்சை உதவுகிறது. ஓஸோன் உண்டாக்கும்
ஒரு கருவியின் மூலம், மருத்துவ ஆக்சிஜனை ஓஸோனாக மாற்றி, குறிப்பிட்ட அளவு எடுத்து, பல்வேறு இடங்களுக்கும் ஊசி மூலம் செலுத்தினால்
அந்த இடத்தில் வலி குணமாகும்.
மிக முக்கியமாக வயதானவர்களுக்கு உண்டாகும்
முழங்கால் வலி, தோள்பட்டை வலிகளுக்கு இந்த ஓஸோனை ஊசி மூலம், ஜாயின்ட்டுகளில் செலுத்தும் போது, வலி நிவர்த்தியாகி, நிம்மதி பெறுவார்கள். முதுகுத்தண்டு அழற்சியினால் வரக்கூடிய முதுகுவலிக்கு
குறிப்பிட்ட அளவு ஓஸோனை சிறிய ஊசி மூலம் பாதிக்கப்பட்ட முதுகெலும்புத்தண்டின்
உள்ளே செலுத்தும் போது, அது சுருங்கி, வலி வருவது
தவிர்க்கப்படுகிறது.
குழந்தைகள் தவிர்த்து, மற்ற எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளக்கூடிய சிகிச்சை இது. பக்க விளைவுகள்
கிடையாது. 95 சதவிகித வலிகளை இந்த முறையில் நீக்க முடியும்.
வாயுத்தொல்லையினால் வலி என்பது மாறி, வாயுவினால் வலி
நீக்கம் என்பது வரவேற்கத்தக்க விஷயம்தானே!
நன்றி
வலி நீக்கும் வழிகள்
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள்
வரை வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற விஷயம் வலி. ஒவ்வொருவருக்கு
ஒவ்வொரு விதமான வலி. இந்தியாவில் 30 சதவிகித
மக்கள், குறிப்பாக பெண்களும் வயதானவர்களும் பல்வேறு வலிகளால்
அவதிப்படுகிறார்கள்.
வலியுடன் வாழ்க்கை என்பது
பலருக்கும் வாடிக்கையாகிப் போயிருந்தாலும், அது
அப்படி அலட்சியப்படுத்தக் கூடிய விஷயமில்லை என்கிறார் வலி நிர்வாக சிறப்பு
மருத்துவர் குமார். வலி ஏன் வருகிறது, அதைத்
தடுப்பது எப்படி, சிகிச்சைகள் என சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் அவர்.
‘‘எங்கேயாவது
அடிபட்டுக் கொள்வது, திசுக்கள் தேய்வது, நீரிழிவு, தைராய்டு
மாதிரி ஏதேனும் நோய் தாக்குவது, சூழ்நிலை...
வலிக்கான காரணங்கள் இந்த நான்கும்தான். வலி என்பது நாள்பட்ட வலியாக மாறினால், வாழ்க்கை
முழுவதும் அதன் அவதியை அனுபவிக்க வேண்டி வரும். உலகம் முழுக்க ஒன்றரை கோடி மக்கள்
தீராத வலியால் அவதிப்படுகிறார்கள்.
அவர்களில் 60 சதவிகிதம்
பேருக்கு நடைமுறை வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. 75 சதவிகிதத்தினருக்கு
மன உளைச்சலும் கவனக்குறைவும் சேர்ந்து
கொள்கிறது. 85 சதவிகிதம்
பேர் தூக்கமின்றித் தவிக்கிறார்கள்.
இத்தகைய வலியை எப்படித் தவிர்ப்பது?
சாதாரண வலியாக இருக்கும்போதே அதை
சரியாகக் கவனிக்காமல், சிகிச்சையளிக்காமல் விட்டால், அது
நிரந்தர வலியாக உடம்பிலேயே தங்குவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம்.
சாதாரண வலியை உடனடியாகக் கவனிக்காததே, அது
நாள்பட்ட வலியாக மாறுவதற்கான பிரதான காரணம். வலி வந்ததும் 48 மணி
நேரத்துக்குள் சிகிச்சையளிக்காவிட்டால், அது
உடலில் தங்கும் அபாயம் உண்டு.
நாள்பட்ட வலி என்பதே ஒரு நோய்தான்.
இந்த வலிக்கு, சாதாரண வலி நிவாரண சிகிச்சைகள் பலன் தராது. வலி நிவாரண
மாத்திரைகளோ, சுய மருத்துவமோ உதவாது. மாறாக வியாதியின் தீவிரம்தான்
அதிகரிக்கும். நாள்பட்ட வலிகளுக்கு சிறப்பு சிகிச்சைகள்தான் தீர்வு.வலிக்கான
காரணத்தைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற உடற்பயிற்சி, மனப்பயிற்சி
மற்றும் உணவுப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது முதல் கட்டம்.
சதை வலி, மூட்டு
வலி, முதுகு வலி, தலைவலி, நரம்பு
வலி, புற்றுநோய் வலி என எல்லா வலிகளுக்கும் இன்றைய நவீன
மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சைகள் உள்ளன. ஊசிகள், ஓஸோன்
சிகிச்சை, ரேடியோ சிகிச்சை போன்றவை உதவும்’’ என்கிற
டாக்டர் குமார், வலி இருக்கும் போது, தவிர்க்க
வேண்டிய விஷயங்களையும் வலியுறுத்துகிறார்.
அலட்சியம்
வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். எந்தக் காரணத்தினால் வலி உண்டானதோ, அதைத்
தவிர்க்க வேண்டும். உதாரணத்துக்கு நடந்தால் வலிக்கிறது என்றால் நடப்பதைத் தவிர்க்க
வேண்டும். உடற்பயிற்சியால் வலி என்றால் அதைத் தவிர்க்க வேண்டும். ஒருபோதும் சுய
மருத்துவம் வேண்டாம். ஓய்வெடுத்தால் வலி சரியாகி விடும் என்கிற அலட்சியம்
வேண்டாம். உடனடி ஓய்வா, தொடர் ஓய்வா எது தேவை என்பதை மருத்துவர் உங்களுக்குச்
சொல்வார்.
தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி
நன்றி
Comments