சமுதாய அமைப்பு

இறைவனின் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாய அமைப்பு எப்படி இருந்தது. அதை அறிந்து அதன் அடிப்படையில்தான்  முஸ்லிம்களின் சமுதாய அமைப்பு ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அதை இஸ்லாமிய சமுதாய அமைப்பு என சொல்ல முடியும்.


அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்பினங்களில் குறிப்பாக உயிரினங்களில் அதிலும் குறிப்பாக மனிதர்களில் இந்த சமுதாய அமைப்பை ஒருங்கிணைப்பை வலியுறுத்த வேண்டிய கட்டாய நிலையில் உலகம்  இருக்கிறது. சமுதாய அமைப்பு ஒருங்கிணைப்பு கட்டமைப்பு என்பது மனிதனுக்கு மாத்திரமே தேவையான ஒன்று.  மனிதனுக்கு மாத்திரமே சாத்தியமான ஒன்று.


மற்ற உயிரினங்கள் தங்களுக்கு இடையே ஒரு சமுதாயமாக ஒருங்கிணைந்த அமைப்பாக வாழ முடியாது. கூட்டமாக வாழலாம். காகம், புறா போன்ற பறவைகள் ஒரே மரத்தில் அந்த அந்த இனத்தோடு ஒன்றாகக் கூடலாம் பறக்கலாம்

ஆயிரம் மாடுகள் ஒரு கொட்டகையில் இருக்கலாம். நுாற்றுக்கணக்கான ஆடுகள் ஒரு மந்தையில் இருக்கலாம். ஒன்றாக ஓட்டிக் கொண்டு போகலாம். கோழிகள், வான் கோழிகள் என எல்லாமே ஒரே கூடாரத்தினுள் இருக்கலாம்.

சமுதாய அமைப்பு என்பது ஒன்றாகக் கூடுவது மட்டும் சமுதாய அமைப்பு ஆகாது. அனைவரையும் ஒன்றாகக் கூட்ட வேண்டும் கூட்டியவர்களையெல்லாம் லட்சியங்களைச் சொல்லி  கொள்கை அடிப்படையில் வார்த்து எடுக்க வேண்டும்.  

அந்த பை-லா (கொள்கை)  என்ற  கயிற்றால் கட்ட வேண்டும். அந்த ஒரு கட்டுப்பாட்டோடு ஒரு தலைமயின் கீழ் இயங்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அது சமுதாய அமைப்பு. ஒரு கட்டளையின் கீழ் இயங்கினால்தான் அதற்குப் பெயர் சமுதாயம்.

கூட்டமாக கூடுவதெல்லாம் சமுதாயம் கிடையாது. எத்தனையோ நிகழ்ச்சிகளில் லட்சக் கணக்கில் கூடுகிறார்கள். ரசிகர்களாகக் கூடலாம். பார்வையாளர்களாகக் கூடலாம். அனுதாபிகளாக, ஆதரவாளர்களாக, பக்தியாளர்களாக இப்படி பல வகையில் கூடலாம்.

இன்னும் பல வழிகளில் வகைகளில் கூடுகிறார்கள். கூடியவர்களெல்லாம் அமைப்பாகக் கூடினார்களா?  கூடியவர்களிடமெல்லாம் அமைப்பு உருவாகியதா? அமைப்பு உருவாகவில்லை. அமைப்பு இயக்கம் ஜமாஅத் என என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் சரி. கூட்டமைப்பு உருவாக வேண்டும். கட்டமைப்பு உருவாக வேண்டும். ஒரு கட்டளையின் கீழ் செயல்படுபவர்களாக ஆக வேண்டும். அப்படிப்பட்டவர்கள் இருப்பதுதான் சமுதாய அமைப்பு.

சமுதாய அமைப்பு என்பது மனிதனுக்கு மட்டுமே சாத்தியமாகும். மனிதனுக்கு மட்டுமே அவசியமானதும் தேவையானதும் கூட. வேறு எந்த உயிரினத்திற்கும் தேவை கிடையாது. ஏன் என்றால் மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்துள்ள மூளை- அறிவு  வித்தியாசமானது. 

மற்ற உயிரினங்களுக்கும் மூளையை – அறிவைக் கொடுத்து உள்ளான். அந்த மூளையைக் கொண்டு ஓரளவு அதன் தகுதிக்கும் தேவைக்கும் மட்டும் சிந்திக்கும் ஆய்வு செய்யும் செயல்படுத்தும். ஆனால் அந்த அறிவைக் கொண்டு மனிதனைப் போல் மற்றவற்றை செயல்படச் செய்ய முடியாது.

உயிரினங்களுக்கு ஐந்து அறிவு. மனிதனுக்கு ஆறறிவு.. மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் உள்ள வித்தியாசம் ஆறாவது அறிவுதான். அதுதான் பகுத்தறிவு என்பார்கள். பகுத்தறிவு என்றால் என்ன பகுத்து அறிதல் அதாவது வித்தியாசப்படுத்தி அறிதல் என்ற அறிவு

வித்தியாசப்படுத்தி அறிதல் என்ற அந்த பகுத்தறிவு உயிரினங்களிடம் இல்லை என்று காலம் காலமாக சொல்லப்பட்டதையே நாமும் சொல்கிறோம்.

வித்தியாசப்படுத்தி அறிதல் என்ற பகுத்தறிவு உயிரினங்களிடம் இல்லை என்றால் அவை எதைக் கொடுத்தாலும் திண்ண வேண்டும். அப்படி திண்பது இல்லை. தனது உணவு எது? தன்னால் உண்ண முடியாத உணவு எது. உண்ணக் கூடாத உணவு எது என வித்தியாசப்படுத்தி பகுத்து அறிந்து வைத்திருக்கின்றன.

வளர்ப்பு பிராணிகள் என்றால் தான் வளரும் வீடு எது? தன்னை வளர்க்கும் வீட்டவர்கள் யார்? அந்நியவர்கள் யார்? என பகுத்து அறிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் தெரிந்தவர்களைக் கண்டால் அன்பு சப்தம் போடுகின்றன. அந்நியர்களைக் கண்டால் அபாய சப்தம் போடுகின்றன.

கூடுகளில் வாழ்பவை தனது கூடு எது? மற்றவற்றின் கூடு எது? என்றும் பொந்துகளில் வாழ்பவை தனது பொந்து எது என்றும் மற்றவற்றின் பொந்து எது என்றும் பகுத்து அறிந்து வைத்திருக்கின்றன. கால் என்றால் நடக்கும் கால் அல்லது ஒன்றில் நான்கில் ஒரு பாகம் என்று மட்டும்தான் பெரும்பாலும் விளங்கி வைத்து இருக்கிறோம். கால் என்பதற்கு பொந்து என்ற பொருளும் உண்டு.


அந்த அடிப்படையில் உள்ள பழமொழிதான் பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது. பாம்பின் பொந்தை பாம்பறியும் என்பதுதான் அந்த பழமொழி. நாம் கால் இல்லாமல் ஊர்ந்து செல்லும் பாம்புக்கு நடக்கும் கால் இருப்பது போல் அந்த பழமொழியை விளங்கி வைத்து உள்ளோம். அது மாதிரி தான் மனிதனுக்கும் மற்றவற்றுக்கும் உள்ள வித்தியாசம் பகுத்தறிவு என்று விளங்கி உள்ளோம். வித்தியாசம் என்ன என்று அல்லாஹ் சொல்லி உள்ளதைப் பார்ப்போம். 
இன்ஷா அல்லாஹ். 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு