சான்றோரின் பாட சாலை, செய்தி 30
சகோ. பாருக் உமரி செய்தி
>>>
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...
சான்றோரின் பாட சாலை, செய்தி 30
ஹசன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்று. எண்: 1475
நூல்: அஸ்ஸுஹ்து, ஆசிரியர்: இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ்.
1475 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا سَيَّارٌ حَدَّثَنَا جَعْفَرٌ حَدَّثَنَا أَبُو كَعْبٍ الْأَزْدِيُّ قَالَ سَمِعْتُ الْحَسَنَ يَقُولُ الْمُؤْمِنُ فِي الدُّنْيَا كَالْغَرِيبِ لَا يَجْزَعُ مِنْ ذُلِّهَا وَلَا يَأْنَسُ فِي عِزِّهَا لِلنَّاسِ حَالٌ وَلَهُ حَالٌ وَجِّهُوا هَذِهِ الْفُضُولَ حَيْثُ وَجَّهَهَا اللَّهُ عَزَّ وَجَلُّ (30)
துன்யாவில் – உலகில் வாழுகின்ற முஃமின் - நம்பிக்கையாளர் பரதேசியைப் போன்று – அந்நிய ஊரில் வசிப்பவரைப் போன்று இருப்பார். அதில் தனக்கு நிகழும் இழிநிலையைக் கண்டு பதட்டம் அடைந்து விடமாட்டார். அதில் தனக்குள்ள கண்ணியத்தை கண்டு நிம்மதியும் அடையமாட்டார். (பொதுவாக) மக்களுக்கு ஒரு நிலை உண்டு. அவருக்கு ஒரு (வித்தியாசமான) நிலை உண்டு. இந்த செல்வங்களை திருப்பிவிடுங்கள் அல்லாஹ் அவற்றை எங்கு திருப்பினானோ. (இந்த உலகத்தின் தேவையற்ற விஷயங்களை திருப்பிவிடுங்கள் அல்லாஹ் அவற்றை எங்கு திருப்பினானோ.)
கருத்து: இறை நம்பிக்கையாளர்களின் நிலைமை மற்றவர்களின் நிலைமையைப் போன்று அல்ல.
மற்றவர்கள் அவர்களுக்கு உலகம்தான் எல்லாம். இங்குள்ள செல்வம், மதிப்பு மரியாதை, சொத்து சுகம் இவைதான் அவர்களுக்கு முக்கியம்.
மறுமை நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அவர்கள் மறுமையை எதிர்பார்த்தவர்கள் இல்லை. அதை நம்பியவர்களும் இல்லை. இந்த உலகத்தோடு வாழ்க்கை முடிந்து விடுவதாக அவர்கள் கற்பனை செய்துள்ளார்கள்.
எனவே, அவர்களால் எந்த இழப்பையும் தாங்க முடியாது. துன்யா கிடைத்தால் பெரிதும் மகிழ்வார்கள். உலக கண்ணியத்தை வாங்க பெரிதும் பிரயாசைப்படுவார்கள்.
பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்படுவார்கள்.
ஆடம்பரத்திற்கு அல்லல்படுவார்கள்.
அழிந்துபோகின்ற இந்த துன்யாவிற்காக அடித்துக் கொள்வார்கள்.
நிலையற்ற இந்த துன்யாவிற்காக போட்டி பொறாமைக் கொள்வார்கள்.
உடலையும் வயதையும் செல்வத்தை சேகரிக்க செலவழிப்பார்கள்.
அறிவையும் ஆற்றலையும் செல்வத்தை சேகரிக்க செலவு செய்வார்கள்.
செல்வம் வாழ்க்கைக்கு!
வாழ்க்கை செல்வத்திற்கு!
செல்வம் எனக்கு!
நான் செல்வத்திற்கு!
சிரிப்பதற்காக செல்வம்!
செல்வத்திற்காக சிரிப்பு!
சிரமப்படாமல் இருக்க செல்வம்!
சிரமப்பட்டால்தான் செல்வம்!
செல்வத்திற்காக உறவுகள்!
உறவுகளுக்காக செல்வங்கள்!
இப்படியாக செல்வத்திற்காக பல காரணங்கள்!
பல காரணங்களுக்காக செல்வங்கள்!
மனிதரில் பலர் செல்வத்திற்காக எதையும் செய்கின்றனர்.
பலர் பதவிக்காக எதையும் செய்கின்றனர்.
பலர் பெயர் புகழுக்காக எதையும் செய்கின்றனர்.
ஆக, இந்த உலகம்தான் பலரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
அவர்கள் இந்த உலகத்திற்காக ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
எப்போதும் பிசி!
எப்போதும் டென்சன்!
எப்போதும் மீட்டிங்!
எப்போதும் அப்பாய்ன்ட்மென்ட்!
எப்போதும் ரஷ்ஷிங்!
எப்போதும் ஹரி!
எப்போதும் எங்கேஜ்மென்ட்!
ஆனால், ஒரு முஃமின் அப்படி இருக்க மாட்டார்.
பொருளைத் தேடுவார். ஆனால், பேராசைப்பட மாட்டார்.
செல்வம் அவருக்குத் தேவை. ஆனால், அதற்காக தவறான வழியில் செல்ல மாட்டார்.
தன்னை படைத்த இறைவனை மறக்க மாட்டார்.
அவன் தன்னை படைத்த நோக்கத்தை மறக்க மாட்டார்.
தான் நிரந்தரமாக தங்கப்போகின்ற மறுமையை மறக்க மாட்டார்.
இந்த அழிந்து போகும் துன்யா வாழ்விற்காக அவர் செல்வத்தை சேகரிப்பதற்கு செலவிடுகின்ற நேரத்தை விட அழியாத மறுமை வாழ்விற்காக நன்மைகளை சேகரிப்பதற்கு அவர் செலவழிக்கின்ற நேரம் மிக அதிகமாக இருக்கும்.
ஒரு ஜான் வயிற்றுக்காக அவர் படுகின்ற சிரமங்களை விட எட்டு ஜான் கப்ருக்காக அவர் படுகின்ற சிரமம் மிக அதிகமாக இருக்கும்.
துன்யாவில் தனக்காக, தன் குடும்பத்திற்காக அவர் செலவழித்ததைவிடவும் இங்கே துன்யாவில் விட்டுச் செல்கின்ற செல்வத்தைவிடவும் அவர் மறுமைக்காக அனுப்பி வைத்தது மிக அதிகமாக இருக்கும்.
தனக்கு, தன் குடும்பத்திற்கு, தன் உறவுகளுக்கு, தன் நண்பர்களுக்கு அவர் செலவழித்த நேரத்தைவிட தன் இறைவனுக்காக அவர் செலவழித்த நேரம் அதிகமாக இருக்கும்.
தனது உலக தேவைகளுக்காக நின்ற நேரத்தைவிட தன் இறைவன் முன் அவனை திருப்திபடுத்துவதற்காக நின்ற நேரம் மிக அதிகமாக இருக்கும்.
உலகத்திற்காக, அதன் வாழ்வாதாரத்திற்காக அவர் கவலைப்பட்டதைவிட மறுமைக்காக, சொர்கத்திற்காக அவர் கவலைப்பட்டது அதிகமாக இருக்கும்.
உலக துன்பங்களை பயப்படுவதைவிட அவர் நரகதுன்பங்களை பயப்படுவது அதிகமாக இருக்கும்.
ஆகவேதான், இமாம் கூறினார்கள்: மக்களுடைய நிலைமை வேறு! முஃமினுடைய நிலைமை வேறு!
அல்லாஹ்வே! எங்களை முஃமின்களின் கூட்டத்தில் சேர்ப்பாயாக!
எங்களுக்கு வலுவான, ஆழமான, உறுதியான ஈமானைத் தருவாயாக!
ஆமீன், ஆமீன், ஆமீன்!!
தமிழாக்கம் மற்றும் கருத்து:
அல்லாஹ்வின் அருளு
க்கும் மன்னிப்புக்கும் தேவையுள்ளவன் உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ்ஸலாம், தாருல் ஹுதா, மதராஸ்.
Comments