சமுதாய அமைப்பு 2


மனிதனைப் படைத்தான் என்று சொல்லும் அல்லாஹ் அடுத்து சொல்கிறான் அல்லமஹுல் பயான் (அல் குர்ஆன் 55:4) என்று.


இந்த வசனத்திற்கு 1. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.         2. அவனுக்கு(ப் பேச்சையும்) விளக்கத்தை(யும்) கற்றுக் கொடுத்தான். 3. அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான். 4. அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான். இப்படி பல மொழி பெயர்ப்புகள் உள்ளன. அதாவது அல்லாஹ்தான் மனிதனுக்கு விளக்கும்  திறனை கற்பித்தான் என்கிறான் அல்லாஹ்.


மார்க்க விளக்கக் கூட்டம். இதை அரபி கலந்து சொல்லும்போது மார்க்க பயான் என்போம். அல்லமஹுல் பயான். பயான்(விளக்கம்) செய்வதை அல்லாஹ் கற்றுக் கொடுத்தான் என்று அரபி கலந்த மொழி பெயர்ப்பு இன்னும் நமக்கு நன்றாகப் புரிய வைக்கும். தான் அறிந்ததை விளங்கியதை பிறருக்கும் விளக்கி சொல்லுதல் மனிதனால் மட்டுமே முடியும்.  இதில்தான் மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து வித்தியாசப்பட்டு உயர்ந்து நிற்கிறான்.


அதுதான் விஞ்ஞான முன்னேற்றத்துக்கு காரணமாக இருக்கிறது. நடந்து சென்ற மனிதன் வாகனத்தை கண்டு பிடித்தான். ஒரு மனிதன் தான் கண்டு பிடித்ததை பிறருக்கு விளக்குகிறான். அவனிடம் இருந்து விளங்கியவன் அதே போல் தயாரிக்கிறான். அடுத்த மனிதன் அதை விட முன்னேற்றமானதை தயாரிக்கிறான். அதுதான் மாட்டு வண்டி போன்றவைகளிலிருந்து சைக்கிள்களாக ஆகி ராகெட் வரை போய் நிற்கிறது.


மற்ற உயிரினங்கள் படைக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அப்படியேதான் உள்ளன. மனிதனின் நிலையோ மொத்தத்தில் எல்லா வகையிலும் விஞ்ஞான  முன்னேற்றம் வளர்ச்சி. காரணம் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய வித்தியாசமான அறிவான அல்லமஹுல் பயான் தான்.


மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய வித்தியாசமான மூளையைக் கொண்டு நல்லதுக்கும் பயன்படுத்தலாம். கெட்டதுக்கும் பயன்படுத்தலாம். இப்படி இரண்டு விதமாக பயன்படுத்தக் கூடிய நேரத்திலே கெட்டதுக்கு பயன்படுத்தினால், ஒருவனுடைய சொத்தை அபகரிக்க முயன்றால் அவனை யாராவது தடுத்து நிறுத்த முடியும். தடுத்து நிறுத்த வேண்டும். தடுத்து நிறுத்தா விட்டால் அநியாயத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறாயே நீ ஒரு மனிதனா? என்ற கேள்வி வரும். மற்ற உயிரினங்களில் இந்த நிலை கிடையாது.


ஒரு மிருகத்துடைய சொத்தை இது அபகரித்து விட்டது என சொல்ல முடியுமா? ஏதோ கிடைத்ததை சாப்பிடும். படுக்க வேண்டி நேரத்தில் படுக்கும். அல்லது துாக்கம் வந்தால் துாங்கும். பசி வந்தால் சாப்பிடும். அதுதான் அவற்றின் வாழ்க்கை. மனிதனுடைய வாழ்க்கை அப்படி அல்ல. மனிதன் அப்படி வாழ முடியாது.


அதனால் மனித இனத்துக்கு ஒரு கூட்டு அமைப்பு, கூட்டு வாழ்க்கை, கூட்டணி என்பது வேண்டியது இருக்கிறது. ஒரு கூட்டமாகச் சேர்ந்து ஒருவரின் உரிமையை பறித்து விடலாம். பொருளை திருடி விடலாம். ஒருவரின் சொத்தை அல்லது ஒரு சாராரின் சொத்தை, டிரஸ்ட்டை  மோசடி செய்து விடலாம். இப்படி ஒவ்வொருத்தரும் தனித் தனியாகவோ அணி அணியாகவோ அமைப்பாகவோ ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள், பாதிக்கப்படுகிறார்கள். 


அதனால் யாராலும் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் ஒரு ஏற்பாடு செய்து கொள்வோம். அதற்கான சட்ட திட்டங்களை உருவாக்கிக் கொள்வோம். ஒரு கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வோம். இந்த அடிப்படையில்தான் சமுதாய அமைப்பு, ஜமாஅத், இயக்கம் என்பது தேவைப்படுகிறது.


மனிதனுக்கு வித்தியாசமான அறிவு இருக்கிறதாலே  இயற்கையானதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ள முடியாது. மனிதனுக்கு செயற்கையான கண்டு பிடிப்புகளும் தேவை. வித்தியாசமான அறிவான அல்லமஹுல் பயான் இருக்கிறதாலேதான் விஞ்ஞானம் என்ற செயற்கையான கண்டு பிடிப்புகளை கண்டு பிடிக்கிறான்.


பசி வந்து விட்டது மனிதன் சாப்பிட வேண்டும் என எண்ணுகிறான். உடனே சாப்பிட முடியாது. அடுப்புகளை அமைத்து பாத்திரங்களை கொண்டு வந்து சமைத்துதான் சாப்பிட வேண்டும். வித விதமான உணவு வேண்டும். வித்தியாசமான உணவு வேண்டும். படைத்த இறைவனே சாப்பிட தயாராக உள்ள உயர் தரமான உணவை கொடுத்தாலும் வேறு விதமான உணவு தேவை என கேட்கக் கூடியவனாக மனிதன் இருக்கிறான். (திரு குர்ஆன்2:61)


மூஸா நபி(அலை) அவர்களின் சமுதாயத்திற்கு அல்லாஹ் மன்னு, ஸல்வா எனும் இருவகைாயன உணவுகளை அளித்து வந்தான். (திரு குர்ஆன்2:57) அல்லாஹ் அளித்த மிகச் சிறந்த உணவான அந்த உணவையே விமர்சித்தார்கள்.


அல்லாஹ் அளித்த மிகச் சிறந்த உணவை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். சகித்துக் கொள்ள மாட்டோம். பொறுத்துக் கொள்ள முடியாது என்ற பொருள்பட ”லன்னஸ்பிற அலா தஆமின்” என்றான். காரணம் நன்றாக இல்லை ருசி இல்லை என்பதா கிடையாது. ஒரே வகையானது என்பதுதான். வித்தியாசமானது தேவை. புதுமை தேவை. மாற்றம் தேவை. அணி மாற்றம் தேவை என்றால் மிகச் சிறந்ததற்கு பதிலாக மனிதன் மிகத் தாழ்ந்ததை கேட்பான் தேர்வு செய்வான் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே மிகச் சிறந்த உதாரணமாகும்.


அந்த வித்தியாசமான உணவும் நவீனமான முறையில் தேவை. அதற்கு தகுந்தால் போல் வித விதமான அடுப்புகளும் வித்தியாசமான நவீன அடுப்புகளும் தேவை. அதன் பிறகுதான் சாப்பிட முடியும்.


மற்ற உயிரினங்களுக்கு அந்த நிலை கிடையாது. பசி வந்து விட்டது சாப்பிட வேண்டும் என எண்ணுகிறது என்றால் என்ன செய்யும்? எதுவும் செய்யாது. ஆதம் (அலை) காலத்திலிருந்து ஒரே நிலைதான். என்ன கிடைக்கிறதோ அதனை அப்படியே பச்சையாக இயற்கையாக சாப்பிடும். . என்ன என்ன இயற்கையாக இருக்கின்றதோ அவற்றையெல்லாம் அவைகள் சாப்பிட்டு விடும். உள்ளூர் வெளியூர் வித்தியாசம் கிடையாது. துாக்கம் வந்தால் இயற்கையான இடத்தில் துாங்கி விடும்.


உணவில் வித்தியாசங்களையும் நவீனங்களையும் விரும்பும் மனிதன் உறங்குவதற்கும் வித்தியாசங்களையும் நவீனங்களையும் தகுதிக்கு தக்கவாறு தேவை உடையவனாக இருக்கிறான். தொட்டிலில் இருந்து கட்டில் வரை பல் வேறு மாறுபாடுகள் வேறுபாடுகள் தேவை. மெத்தையிலும் வித்தியாசங்கள் தேவை.


விஞ்ஞான முன்னேற்றத்தின் நவீன கண்டு பிடிப்புகளில் அத்தியவச தேவையான வாகனங்கள் போன்றவை தேவை. அது மட்டுமல்ல ரேடியோ, டேப் ரிக்கார்டர், டி.வி, வீடியோ, கம்யூட்டர், லேப்டப், டேப்லெட், கேஸட், சி.டி, பென் டிரைவ் என புதியவை பயனுள்ளவைகளாக வருகின்றன. அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்தாமல் பொழுது போக்காக பயன்படுத்த  அத்தனையும் தேவை என உள்ளான்.


மிக மிக அடிமட்டத்தில் உள்ள ஏழையாக இருந்தால் குறைந்த பட்சம் ஆடை தேவை. மற்ற உயிரினங்களுக்கு ஆடை தேவையா? ஆடை அணிந்து கொண்டுதான் அவைகள் நடமாட வேண்டுமா? என்றால். இல்லை தேவையும்  இல்லை. அந்த கலை அவைகளுக்கு தெரியவும் செய்யாது.


அடிமட்டத்தில் உள்ள ஏழைக்கு ஆடை தேவை என்றாலும். வசதியுள்ளவர்களுக்கு நவீன கண்டு பிடிப்புகள் தேவை என்றாலும் அவர்களாகவே அந்த தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியாது. ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனின் உதவி இல்லாமல் வாழ முடியாது. மற்ற உயிரினங்களாக இருந்தால் ஒன்றின் உதவி இன்னொன்றுக்கு தேவைப்படாது. மனிதனால் சமுதாயம் தேவை இல்லை என்று வாழ முடியாது


உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் கட்டாயம் தேவை. தானே விவசாயம் செய்து எல்லா உணவையும் பெற முடியுமா? தானே பருத்தியை விதைத்து, பஞ்சாக்கி, நுாலாக்கி பாவாக்கி, தறியில் நெய்து, ஆடையாக தைத்து அணிய முடியுமா? முடியாது. குருவி தனக்கு தானே கூடு கட்டிக் கொள்ள முடியும். மனிதன் சமுதாய உதவி இன்றி வீடு கட்ட முடியுமா? சமுதாய உதவி இல்லாமல் முயற்சித்தால் எதையும் அனுபவிக்காமல் வாழ் நாள் முடிந்து விடும்.


மனிதனால் தனித்து வாழ முடியாது. இயற்கையாக அல்லாமல் செயற்கையாகவும் பல தேவைகள் உள்ளவன் மனிதன். சமுதாய ஒத்துழைப்பு இன்றி இந்த தேவைகளை பெற முடியாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவர் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் மூலம் இன்னொருவர் பயன் பெற வேண்டும். இந்த மாதிரி பரஸ்பர ஒத்துழைப்புடன்தான் மனிதன் தேவைகளை அடைய முடியும்.


அதனால் மனிதனுக்கு சமுதாயம் என்று ஒன்று தேவை. சமுதாயம் இன்றி தனித்து வாழவே முடியாது. சமுதாயம் வேண்டாம் சமுதாய அமைப்பு வேண்டாம் என பிரிந்து போவதை தனித்து போவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
தொடரும் இன்ஷாஅல்லாஹ்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு