உணர்ச்சியை துாண்டி விட்டார்களா? கட்டுப்படுத்தினார்களா? துாண்டி விடுவது யாருடைய வழி முறை?


வாலிபமும் வாலிப வாழ்க்கையும் வீணாகி விட்ட உங்களிடம் நான் எதிர் பார்ப்பது என்ன?

24-08-2019 அன்று நான் ஒரு சிறைவாசியை எனது மனைவியுடன் சென்று பார்த்து நலம் விசாரித்தேன்.  சிறைவாசி என்றால் சிறையில் வசிப்பவர் சிறையில் இருப்பவர் என்றுதான் பொருள். சிறையிலிருந்து விடுதலையாகி பல ஆண்டுகள் ஆகி விட்டவர்களையும் சிறைவாசி என்று கூறுவது இன்றை நடைமுறையாகி விட்டது. நான் சந்தித்ததாகக் கூறும் சிறைவாசி இன்றும் விடுதலையாகாமல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர் சிறையில் இருக்கும் சகோதரர்தான்.

யாருமே உதவிக்கரம் நீட்டாத நேரத்தில், என்ன மாதிரியான நெருக்கடியான (2004,2005) கால கட்டத்தில், கோவை வழக்கு வகைக்கு பொருளாதார உதவி கிடைக்க வழி செய்தோம். எல்லா சிறைவாசிகள் விடுதலைக்கும் என்ன மாதிரியான முயற்சிகள் செய்தோம். நாம் செய்த  விடுதலை முயற்சிக்கு  (2007, 2008ல்) யாருடைய தவறான செயல்பாடுகள் தடையாக இருந்தன. போன்ற வரலாற்றை நினைவு கூர்ந்தார்.
அவரிடம் நான் சொன்னது உங்கள் வாலிபமும் வாலிப வாழ்க்கையும் வீணாகி விட்டது. உங்களிடம் நான் எதிர் பார்ப்பது அடுத்த தலைமுறையினருக்கு நீங்கள் சரியான வழிகாட்டியாக இருக்க வேண்டும்

இன்றைய இளைஞர்களுக்கு உங்கள் உள்ளத்தில் உள்ள உண்மையைக் கூற வேண்டும். நீங்கள் இழந்த  இளமை அனுபவத்தைக் கூற வேண்டும்.  தங்களைப் போல் அடுத்த தலைமுறை பாதிப்பு அடைந்து விடாத வண்ணம் அழகிய அறிவுரைகளைக் கூற வேண்டும்.

உணர்ச்சிகளை துாண்டி விட்டுப் பேசி தங்களை வீரர்களாகக் காட்டிக் கொண்ட மைக் மாவீர்களால்தான் உங்களைப் போன்றவர்களின் வாழ்க்கை வீணாகி விட்டது

உங்களைப் போன்றவர்கள் அடுத்த தலைமுறையினர் உணர்ச்சிகளை துாண்டி விட்டு உங்களை வீரர்களாகக் காட்டிக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை சீரழித்து விடக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தேன். அவரும் அவரும் அப்படித்தான் செயல்படுவதாக இனியும் செயல்பட உள்ளதாக வாக்குறுதி அளித்தார்.

அவர் அளித்த வாக்குறுதியை அவரது பெயருடன் பேஸ்புக்கில் போட்டு விடலாமா? என்று கேட்டேன். வேண்டாம் வாயால் சொல்லிக் கொள்ளுங்கள் என்றார். இது இன்றையச் செய்தி நாளைய வரலாறு. நேற்றைய செய்தி இன்றைய வரலாறு.

நான் சந்தர்ப்பத்திற்காக சிறைவாசிகளை சந்திப்பவன் அல்ல. சிறைவாசிகள் விடுதலை முயற்சி என்பது 1980 முதல் செய்து வரும் பணியாகும். இணைப்பில் உள்ள 1992 ஆண்டின் பைல் காப்பியைத்தான் சமுதாய துரோகிகள் என் மீது வழக்கு பாய பயன்படுத்தி தோற்றார்கள்.
நபிகள் நாயகத்தின் வராற்றில் உஹது போரில் அன்றையச் செய்தியை பார்ப்போம். உஹது போருக்கு குறைஷிகள் பெண்களுடன் வந்திருந்தார்கள். அந்தப் பெண்கள். கொட்டுகளை அடித்துக் கொண்டு, பாட்டுப் பாடிக் கொண்டு குறைஷி(ஆண்)களை உற்சாகப்படுத்தி துாண்டிக் கொண்டிருந்தார்கள். எப்படி பாடி துாண்டிக்  கொண்டிருந்தார்கள்?

நாங்கள் அதிகாலை நட்சத்திரத்தின் மகள்கள்

எங்களது பாதங்கள் புற்களின் மேல் நடந்து பழகியவை

நீங்கள் முன்னேறினால் உங்களை அணைத்துக் கொள்வோம்

நீங்கள் புறமுதுகிட்டுத் திரும்பினால் உங்களை விட்டும் சென்று விடுவோம். என்று பாடி துாண்டிக் கொண்டிருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கையில் தாயிப் நகர வீதிக்குப் பிற கடுமையாக பாதிக்கப்பட்டது உஹதில்தான். காலை பொழுதில் தொடங்கிய போர் முதலில் வெற்றி பிறகு சேதம் என்று ஒரு வழியாக மதிய வேளையில் முடிவுக்கு வந்தது. 

இப்போரில் நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட காயமும் களைப்பும் அனைவரும் தெரிந்ததே. எனவே, நபியவர்கள் லுஹர் (மதிய) நேரத் தொழுகையை உட்கார்ந்து தொழ, தோழர்களும் அவ்வாறே உட்கார்ந்து தொழுதார்கள். 

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சிறிது நேரம் படுகாயம் காரணமாக விழுந்து விட்டார்கள்.  இதனைக் கண்ட ஸஹாபாக்கள் கூட நபி(ஸல்)  அவர்கள் இறந்து விட்டதாகவே நினைத்தார்கள். அப்போது எதிரிகளின் தரப்பில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்து விட்டதாக சப்தமிட்டு புரளியைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டதாகக் கிளம்பி புரளியானது, முஸ்லிம்களை அச்சம் கொள்ளச் செய்தது, எங்கும் குழப்பம் தலைவிரித்தாடியது. சில முஸ்லிம்கள் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு, மதீனாவை நோக்கி விரைய ஆரம்பித்தார்கள்.

எதிர் அணியில் இருந்த அபூசுஃப்யான் அவர்கள் ஒரு குன்றின் மீது ஏறி நின்று கொண்டு, ''முஹம்மது இன்னும் உயிருடன் இருக்கின்றாரா?” என்று சப்தமிட்டு கேட்டார். 

இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,  இதற்கு மறுமொழி கூற வேண்டாம் என்று முஸ்லிம்களை தடுத்துக் கொண்டார்கள். எனவே முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை.

பின்பு அபூசுஃப்யான் உமர் இப்னு கத்தாப் இருக்கிறாரா?” என்று கூவினார். அதற்கும் முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை.

காரணம், நபி (ஸல்) பதிலளிக்க வேண்டாமென்று முஸ்லிம்களைத் தடுத்திருந்தார்கள். தில்தான் முஸ்லிம்களுக்கு படிப்பினை உள்ளது.

இஸ்லாமின் வலிமை இம்மூவரால்தான்என்று அபூ ஸுஃப்யானுக்கும் அவரது கூட்டத்தாருக்கும் தெரிந்திருந்த காரணத்தால்தான், அவர் இம்மூவரைப் பற்றியும் விசாரித்தார். முஸ்லிம்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

அதனால் என் மக்களே! அறிந்து கொள்ளுங்கள். இவர்களையே நீங்கள் கொன்று விட்டீர்கள் அது போதும்!''அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்களாஎன்று அபூ சுஃப்யான் சப்தமிட்டார்.

இதைக் கேட்ட உமர் (ரழி) தன்னை அடக்க முடியாமல் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் நபியின் கட்டளையை மறந்து ''அல்லாஹ்வின் எதிரியே, நாங்கள் அனைவரும் உயிருடன் தான் இருக்கின்றோம்   நீ யாரையெல்லாம் கூறினாயோ அவர்கள் எல்லாரும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அல்லாஹ் என்றும் உனக்குக் கவலையைத்தான் தருவான் என்றார்கள்.


அபூசுஃப்யான் ''ஹுப்பலுக்கே புகழனைத்தும்என்று  கத்தினார்,


உடனே உமர் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வே உயர்ந்தோனும், மிகப் பெரியவனுமாவான்என்று பதில் கூறினார்கள்.


அபூ சுஃப்யான், ''உஸ்ஸா எங்களுடன் இருக்கின்றது, இன்னும் உங்களுடன் எந்தக் கடவுளுமில்லை” என்று கூறினார்.


இப்பொழுது உமர் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வே எங்களது இறைவன், உங்களுக்குத் தான் வணங்கும் இறைவன் இல்லை” என்று கூறினார்.

முஸ்லிம்களின் தலைவரான நபியவர்களை இன்னும் உயிருடன் இருக்கின்றாரா என்று கேட்டபொழுது பதில் அளிக்கக் கூடாது என்று தடுத்த நபிகள் நாயகம் தான் அல்லாஹ்வுக்கு இணையாக ஹுப்பலையும் உஸ்ஸாவையும் கூறியபொழுதுதான் பதில் அளிக்க அனுமதி அளித்தார்கள்.

அப்பொழுதும் கூட உமர் (ரலி)  அவர்கள். அபு சுப்யானை கொன்று இருக்க வேண்டும் என்று கூறவில்லை. நபியவர்களை இன்னும் உயிருடன் இருக்கின்றாரா என்று கேட்ட அபு சுப்யானே நீதான் செத்து விட்டாய் என்று கூறவில்லை. அப்படி பேசி இருந்தால் நபிகள் நாயகம் கண்டித்து தடுத்து இருப்பார்கள். இதில் தான் முஸ்லிம்கள் பின்பற்றத்தக்க அழகிய முன் மாதிரி இருக்கிறது.

நபியவர்களின் அழகிய அணுகுமுறைதான் உஹதுப் போரில் எதிர் அணியில் இருந்து காலித் இப்னு வலீத், அபு சுப்யான் போன்றவர்களை பிற்காலத்தில்  இஸ்லாத்தில் இணைய வைத்தது.  

1993லிருந்து ஒன்றன் பின் ஒன்றான வழக்குகளின் மூலம் 25 ஆண்டுகளாக தொடர் சிறையில் இருப்பவர்களை மீட்க முடியாத மைக் மாவீரர்கள் உணர்ச்சியை மட்டுமே துாண்டுவார்கள். பொறுப்புள்ள தலைவர்கள் நபி வழியில் பொறுமையுடன் அணுகுவார்கள்.




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.