அந்தக் காலத்தில் மக்காவில் செய்தி அறிவிக்கும் முறை எப்படி இருந்தது?

முஹாஜிர்களின் படையில் கொடியை ஏந்திச் செல்லக் கூடிய அந்த பொறுப்பை அலீ இப்னு அபூ தாலிப் (ரழி) அவர்களிடம் ரசூல்(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். இந்தக் கொடிக்கு உகாப்என்று சொல்லப்பட்டது. ந்தக் கொடியின் நிறம் கருப்பு. ஏற்கனவே சென்ற 8 முயற்சிகளிலும் பயன்படுத்திய கொடி வெள்ளை நிறம் என்பதை அறிந்து இருக்கிறோம். இங்கேதான்  கருப்பு வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் கொடிகள் வருகிறது.


அன்ஸாரிகளுடைய அந்த படைக்கும் கொடி கருப்பு நிறமுடையதாக இருந்தது.  இந்தக் கொடியை ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களிடம் ரசூல்(ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். இந்தப் படைகளை ரசூல்(ஸல்) அவர்கள் தங்களின் வலது பக்கம் ஒரு அணியையும். இடது பக்கம் ஒரு அணியையும். அணி வகுத்து வரச் செய்தார்கள்

பொதுத் தளபதியும் படைகளை வழி நடத்துபவருமான மாநபி (ஸல்) நடுவில் வந்தார்கள். பொதுவாக படை என்று சொன்னால் முன்னால் போவது குதிரைப் படையாகாத்தான் இருக்கும்

இருப்பது இரண்டு குதிரைகள் தான். எனவே வலது பக்கம் ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களை முன்னிறுத்தினார்கள்.டது பக்கம் மிக்தாது இப்னு அம்ர் (ரழி) அவர்களை முன்னிறுத்தி விட்டு புறப்பட்டார்கள்.

அந்தக் காலத்தில் படை நடத்தி போகும்பொழுது எப்பொழுதும் ஒரு கடைசிப் பிரிவு வரும். பின்னால் யாரும் பின் தொடர்ந்து வந்து விடக் கூடாது என்பதற்காக இடை வெளி விட்டு ஒரு அணியை வரச் செய்வார்கள். 

இவர்கள் ஒரு இடத்தில் தங்கி விட்டு போகும்போது. தங்கிய இடத்தில் பொருட்கள் விடுபட்டுப் போகலாம். அல்லது இவர்கள் தங்கி விட்டு போகக் கூடிய அந்த இடத்தை ஆய்வு செய்வதற்கு யாரும் வரலாம். அப்படி வந்தால் அவர்களை கண்காணிக்க வேண்டும். இது போன்ற காரணங்களுக்காக கடைசியாக இடைவெளி விட்டு ஒரு அணி வரும்.  கடைசியாக வரும் அந்த அணிக்கு கைஸ் இப்னு அபூ ஸஃஸஆ (ரழி) அவர்களை ரசூல்(ஸல்) அவர்கள் தளபதியாக  ஆக்கினார்கள்.

இப்போருக்கான பொதுவான தலைமைத்துவத்தின் வெள்ளைக் கொடியை முஸ்அப் இப்னு உமைர் அல்குறைஷி அல்அப்த’ (ரழி) அவர்களிடம் ரசூல்(ஸல்) அவர்கள் வழங்கினார்கள். 

2 கருப்புக் கொடி ஒரு  வெள்ளைக் கொடியுமாக ரசூல்(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். (இந்த அடிப்படையில்தான் த.மு.மு.. கொடியை கருப்பு வெள்ளையாக வடிவமைத்தார்கள். இதை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்வோம்)


இந்த நிலையில் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டம் திரும்பி வந்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே பல முறை தடுக்கப்படுவதிலிருந்து தப்பித்து இருக்கிறார்கள். எனவே முஹம்மது (ஸல்) அவர்கள். மீண்டும் முயற்சிப்பார் என்று எண்ணி ரொம்பவும் எச்சரிக்கையுடனும் மிகுந்த ஜாக்கிரதையாகவும் வந்து கொண்டிருக்கிறார்கள். 

தலைமை ஏற்று பொறுப்பாக வருபவர் அபு ஸுப்யான். அவர் ரொம்ப விபரமான புத்தி கூர்மையான ஆள். அவரது அறிவுக் கூர்மை பிரம்மாண்டமானது. அப்பொழுது அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவராக இருக்கவில்லை. அவர் என்ன செய்கிறார்.?

ஹழ்ரமிக்கு நடந்தது மற்றுமுள்ள சம்பவங்கள். 8 முறை நடந்த முயற்சிகள். எல்லாம் அவருக்குத் தெரியும். மக்காவின் பாதை இப்போது ஆபத்துகள் நிறைந்தது என்பதையும் அறிந்திருந்தார். அதனால் அவற்றை எண்ணிப் பார்த்து வரும்போதே முன்னெச்சரிக்கையாகவே வந்தார்.

செய்திகளைச் சேகரித்தவராகத் தனக்கு எதிர் திசையிலிருந்து வரும் மற்ற வியாபாரிகளிடம் நிலைமைகளை விசாரித்துக் கொண்டே பயணித்தார். சாதாரணமாக வரவில்லை. அவரும் ஆங்காங்கே உளவு பார்த்தே வந்தார். ஒரு ஊருக்குள் வந்ததும் ஒரு ஆளை முன்னாடி அனுப்பி ஏதாவது தெரிகிறதா என்று பார்த்து விட்டு வா

ஆங்காங்கே ஆடு மேய்ப்பவர்கள், ஒட்டகம் மேய்ப்பவர்கள் நிற்பார்கள். அவர்களிடம் முஹம்மது உடைய ஆட்கள் வந்தார்களா? போனார்களா? என விசாரித்து விட்டு வா என அனுப்பி வைத்தார். ரொம்பவும் முன்னெச்சரிக்கை உடையவர்  விபரமானவர் அபு ஸுப்யான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் விசாரித்தார். 

பார்த்தவர்கள் சொன்னார்கள். உங்களை தடுக்கத்தான் முஹம்மது வந்து கொண்டு இருக்கிறார். அவரே தலைமை தாங்கி வருகிறார். ஒரு கூட்டத்தோடு வருகிறார். இந்த மாதிரியான தகவல்களும் அபு ஸுப்யான் அவர்களுக்கு கிடைத்து விட்டது.

உடனே அவர் அம்ருல் கிபாரி என்ற ஒருத்தரை பிடிக்கிறார். ழம் ழம் என்பது அவருடைய பெயர். அந்த வழியில் இருக்கக் கூடிய கிபாரி கோத்திரத்தை சார்ந்தவர். அவரை அணுகி. உனக்கு கூலியாக நான் பெரும் தொகை தருகிறேன். எப்படியாவது நீ மக்காவுக்கு போ. 

நாங்கள் வரும் வழியில் முஹம்மதுவால் இடைஞ்சல் வரும். இன்னும் கொஞ்சம் துாரம் சென்றால் முஹம்மதுவும் அவரது ஆட்களும் எப்படியாவது எங்களை தடுத்து விடலாம். இந்த பொருளாதாரத்தை முடக்கி விடலாம். அதற்கு முன்னாடி  இதைக் காப்பாற்ற மக்காவில் இருந்து அவர்கள் பெரும் படையாக வந்தால்தான் நாங்கள் தப்பிக்க முடியும். எனவே மக்காவிற்குச் சென்று தங்களின் வியாபாரக் கூட்டத்தை காப்பாற்றிக் கொள்ள விரைந்து வருமாறு குறைஷிகளுக்கு அறிவிப்புச் செய்யச் சொல்லி அபுசுப்யான் அனுப்பி வைத்தார்.

மக்காவுக்கு செய்தியை எத்தி வைக்கச் சென்ற ழம்ழம் அந்தக் கால முறைப்படி செய்தியை எத்தி வைக்கும் பணியைச் செய்தார். நமது நாட்டில் கூட முன்பு இருந்தது. இப்பொழுது மலை வாழ் கிராமங்களில் மட்டும் இருக்கிறது. அதற்கு தண்டோரா போடல் என்றும் பறை அடித்தல், பறை அறிவித்தல் என்றும் சொல்வார்கள். டும் டும் டும் என்றும் டண்டணக்கா என்றும் கலைஞருக்கு  தக்கவாறும் அந்தந்த கருவிக்கு தக்கவாறும்  ஓசைகள் வரும்.

இந்த சப்தத்தை கேட்ட உடன் மக்கள் அவரை சுற்றி கூடுவார்கள். மக்கள் கூடிய உடன் இதனால் சகல விதமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் என்று ஆரம்பிப்பார். சொல்ல வேண்டிய செய்தியை சொல்லி விட்டு போய் விடுவார். இப்படியே ஒவ்வொரு தெருவாக, பகுதியாகப் போய் சொல்லி விட்டு போவார்கள். இதுதான் செய்தி அறிவிக்கும் முறையாக இருந்தது. விஞ்ஞான முன்னேற்றம் தெருவில் நின்ற செய்திகள் பேப்பர், ரேடியோ, டி.வி. பெட்டிகளாக வீட்டுக்குள் வந்தன.

ஒரு காலத்தில் செய்தியை கேட்க ரேடியோ முன்பும் பிறகு டி.வி. முன்பும் நாம் காத்து இருந்தோம். அதில் சொல்லும்போதுதான் கேட்க முடியும். விஞ்ஞானத்தின் அதிமுன்னேற்றம் நாம் காத்து இருந்ததை மாற்றியது. செய்திகள் வந்து நமக்காக காத்திருக்க வைத்து விட்டது. 

ஆம் இ.மெயில், பேஸ்புக், வாட்ஸ்அப்களில்  வந்து காத்து இருக்கின்றன. இருந்தாலும் இயற்கை பேரிடர்கள், ராணுவப் புரட்சி, மக்கள் புரட்சி போன்றவைகள் மீண்டும் தண்டோரா போடவும்  பறை அடிக்கவும் வைத்து விடுகின்றன. ஜாஹிலிய்யா காலத்தில் மக்காவில் இருந்த செய்தி அறிவிக்கும் முறை எப்படி இருந்தது




ஒட்டகத்தின் மீது இருந்து கொண்டு கூப்பாடு போட்டுக் கொண்டு தெருத் தெருவாக  ஓடுவான். ஒட்டகம் எப்படி ஓடும்? அதன் இயல்புக்கு மாற்றம் ஆயிற்றே என்ற கேள்வி வரலாம். ஒட்டகம் எப்பொழுதும் பொறுமையாக போகக் கூடியதுதான். அதற்கு கோபம் வந்தாலோ ஏதாவது நடந்தாலோதான் அது ஓடும். எனவே ஓட வைக்க வேண்டும் என்றால் ஏதாவது செய்ய வேண்டும்.

அதனால் ஒட்டகத்தின் மூக்கையோ, காதையோ அறுத்து விடுவார்கள். அறுத்து விட்டால் அது வலி தாங்க முடியாமல் ரத்தம் சிந்த கத்திக் கொண்டே ஓடும். செய்தி அறிவிப்பவனும் தனது சட்டையை கிழித்து விட்டு ஹா, ஹு, கா, கூ என கண்டபடி கத்தி அலறுவான். இதுதான் ஆபத்தை அறிவிக்கக் கூடிய முறையாக அந்தக் காலத்தில் இருந்தது. அதன்படி  ழம்ழம் ஒட்டகத்தின் மூக்கை அறுத்து விட்டார். அதன் மேலுள்ள கஜாவா பெட்டியையும் மாற்றி அமைத்து தனது சட்டையையும் கிழித்துக் கொண்டார்.

அது மாதிரி செய்து மக்காவை ஒரு சுற்று சுற்றினார். பத்னுல் வாதிஎன்ற இடத்தில் ஒட்டகத்தின் மீது நின்றவராக  ஆபத்து ஆபத்து என்று கத்தினார். குறைஷிகள் கூடினார்கள்.குறைஷிகளே! வியாபாரக் கூட்டம்! வியாபாரக் கூட்டம்! அபூ ஸுஃப்யானுடன் வந்து கொண்டிருக்கும் செல்வங்களை முஹம்மது தன் தோழர்களுடன் வழிமறிக்கக் கிளம்பிவிட்டார். அது உங்களுக்குக் கிடைக்குமென்று நான் கருதவில்லை. உதவி! உதவி! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!என்று உரக்கக் கத்தினார் ழம்ழம்.

இந்தச் செய்தியைக் கேட்டதும் மக்காவாசிகள் கதி கலங்கி விட்டனர். அங்குமிங்கும் ஓடினார்கள். என்ன! முஹம்மதும் அவரது தோழர்களும் எங்களது வியாபாரக் கூட்டம், இப்னுல் ஹழ்ரமியின் வியாபாரக் கூட்டத்தைப் போன்று ஆகிவிடுமென்று எண்ணுகிறார்களா? ஒருக்காலும் அவ்வாறு ஆகாது. இறைவன் மீது ஆணையாக! அவர் எதிர்பார்க்காதது நடக்கப் போகிறது. அதை அவர் நன்கு அறிந்து கொள்வார்என்று வீரமாக பேசிக் கொண்டனர்.

மிகப் பெரிய பொருளாதாரம். அதை வைத்துதான் முஸ்லிம்களுக்கு எதிராக போர் செய்ய எண்ணி இருந்தார்கள். அவர்களது ஒரு வருட உணவுக்குரிய பொருளாதாரம். அவர்களது ஓராண்டு உணவு கேள்விக் குறியாக ஆகிவிடும். அது மட்டுமல்ல. ஏதாவது ஒரு விபத்தில் போய் விட்டது என்றால் மனித இயல்புப்படி அதை ஏற்றுக் கொள்வார்கள். 

அவர்களிடத்தில் சாதாரணமானவராக இருந்தவர், அவர்களால் விரட்டப்பட்டவர். மதீனாவில் போய் ஆட்சி அமைத்துக் கொண்டார். அதை வைத்து அவர்களது பொருளாதாரத்தை முடக்கி விட்டார் என்று சொன்னால். அது அவமானமும் கூட. எனவே இதை ஒரு போதும் விட்டு விடக் கூடாது என்று மக்காவாசிகள் எல்லாரும் ஒன்று கூடி. ஆலோசனை நடத்தினார்கள். யார் தலைமையில் கூடினார்கள்?
தொடரும் இன்ஷாஅல்லாஹ் 

http://mdfazlulilahi.blogspot.ae/2016/08/blog-post_8.html 

நன்றி ; மக்கள் உரிமை
அடுத்த தலைப்பு 
பத்ருக்குப்  போவோம், பத்ருக்குப்  போவோம் என்று சொன்னது யார்?
முந்தைய தலைப்பு

அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும் 




Comments

பாதுகாக்க வேண்டிய தொடர்.

மற்ற விஷயங்களை இதற்குக் கூடுதல் நேரம் ஒதுக்கவும்.

அல்லாஹ் உங்களுக்கு அதிக்மதிகம் அருள் செய்வானாக!
அருமையான பதிவு

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு