அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்

ரசூல்(ஸல்) அவர்கள் புறப்படுகிறார்கள் என்றதும் அவர்களுடன் செல்ல முன்னுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் தயாராகி விட்டார்கள் என்பதைப் பார்த்தோம். முன்னுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் எனும்பொழுது வரலாற்று குறிப்புகளிலும் ஹதீஸ்களிலும் எண்ணிக்கை வெவ்வேறாக இருக்கின்றது. 310, 313, 314, 317 இப்படி பல அறிவிப்புகள் உள்ளன.



இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் 313  என்று சொல்லி உள்ளார்கள். கலந்து கொண்டவர்களில் அவரும் ஒருவர் என்ற காரணத்தினால். அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து நம்மில் பெரும்பாலனவர்கள் 313 என்றே சொல்லி வருகிறோம்

இதற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் ஏனைய நம்பர்களை எப்படி எடுத்துக் கொள்வது? இது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம். இன்றைய மீடீயாக்களிடம் உள்ள மாதிரி  எல்லா மீடீயா சாதனங்களும்  இல்லாத காலம். இன்றைக்கு நடைபெறும் போர்களை எடுத்துக் கொண்டாலும். அதில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கையை அந்த அந்த நாடுகள் மறைமுகமாகத்தான் வைத்து இருக்கின்றன.

ஒன்று அதிகமாக வெளிக் காட்டிக் கொள்வார்கள். அல்லது குறைவாக வெளிக் காட்டிக் கொள்வார்கள். அதில் இறந்து போனவர்களுடைய செய்திகளும் அதே மாதிரிதான் இருக்கும். ஒன்று செய்திகளில் அதிகமாக வெளியில் வரும். அல்லது குறைவாக வெளியில் வரும்

அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இந்தக் காலத்தில் நடக்கக் கூடிய போர்கள் அந்தக் காலத்தை விட அழிவை அதிகமாக ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களையும் ரசாயன மருந்துகளையும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட இந்தக் கால போர் களத்திற்கும் துணிந்து போகக் கூடிய நிருபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சிரியா, துருக்கி, காஷ்மீர் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். உலகத்தில் உள்ள மிகச் சிறந்த மீடியாக்களெல்லாம் அவற்றை லைவ் பண்ணுகிறார்கள். போர்க் களத்திற்கே போய் பேட்டி கண்டு ஒளிபரப்புகிறார்கள்

பத்திரிக்கைகளில் பதிவு செய்கிறார்கள். இந்த அளவுக்கு செய்தி தொடர்புகளில் முன்னேறி விட்ட இந்தக் காலத்தில் கூட. போரில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கையை யாருமே சரியாகச் சொல்ல முடியவில்லை. அது ஆயிரக் கணக்கில் வித்தியாசப்படுகிறது. சில இடங்களில் நுாற்றுக் கணக்கில் வித்தியாசப்படுகிறது.

பத்ரில் வித்தியாசப்படுவது விரல் விட்டு எண்ணக் கூடிய வித்தியாசம்தான். அதில் கூட விபரம் இருக்கிறது. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் சொல்லக் கூடிய 313 என்பது போரில் கலந்த கொண்டவர்களின் எண்ணிக்கை. 314, 317 என்பது உதவிக் சென்றவர்களையும் சேர்த்து சொல்லக் கூடியது. 

இப்படி ஆய்வுக் கண்ணோட்டத்தில வரலாற்று ஆசிரியர்கள் இந்த முரண்பாடுகளை சமன் செய்துள்ளார்கள். எப்படி இருந்தாலும் ஒன்றிலிருந்து நான்கு வரையில் தான் இந்த வித்தியாசம் உள்ளது. நுாற்றுக் கணக்கிலோ ஆயிரக் கணக்கிலோ இந்த வித்தியாசம் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விஞ்ஞான முன்னேற்றம் நிறைந்த இந்தக் காலக்கட்டத்தில். போர் முனைக்குச் சென்று நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடிய இந்தக் காலத்தில். உலகின் பல்வேறு பகுதிகளில் அநியாயமாக பல போர்கள் நடந்துள்ளன. அதனை லைவில் பார்த்து உள்ளோம். 

அந்தப் போர்களில் கொல்லப்பட்டவர்கள் உடைய எண்ணிக்கை. முற்றிலும் மறைமுகமாகத்தான் இருக்கின்றது. அது அவர்களைச் சார்ந்த வீரர்களாக இருந்தாலும் சரி. அவர்கள் கொன்று குவித்த எதிர் நாட்டு  வீரர்களாக இருந்தாலும் சரி. உண்மையான அந்த எண்ணிக்கைகளை எந்த பத்திரிக்கைகளாலும் தர முடியவில்லை. எந்த தொலைக்காட்சிகளாலும் தர முடியவில்லை. 

அந்தந்த நாட்டு அரசு உடைய, அரசின் அங்கீகாரம் உடைய செய்தி தொடர்புளாலும் கூட முழுமையாகத் தர முடியவில்லை. இதைக் கண் கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பத்ருக்குப் போன 313 பேரில் முஹாஜிர்கள் குறைவாக இருக்கிறார்கள். கடந்த 8 முயற்சிகளில் முழுமையாக இடம் வகித்தவர்கள் முஹாஜிர்கள். இந்த முறை முஹாஜிர்கள் 82 அல்லது83 அல்லது 84 வரை. மீதி உள்ள அனைவரும் அன்சாரிகள் தான்

அன்சாரிகளில் இரண்டு மிகப் பெரிய கோத்திரம் இருந்தது. மிகப் பெரிய கவனத்தை ஈர்க்கக் கூடிய அவ்ஸ், கஸ்ரஜ் என்ற இரண்டு கோத்திரங்கள் அன்சாரிகளில் இருந்தார்கள். அவ்ஸ் கிளையைச் சார்ந்த அன்சார்கள் 61 பேர். கஸ்ரஜ் கிளையைச் சார்ந்த  அன்சார்கள் 170 பேர் வந்திருந்தார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆக ஒன்றுக்கு மூன்று மடங்கு அன்சாரிகள் உள்ளார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் அடிக்கடி சொல்லப்படும் போர் இது. இந்த போரில் எத்தனை குதிரைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். சற்று கற்பனை செய்து பாருங்கள். ஆயிரம் பேரை எதிர் கொண்டு வெற்றி கண்ட ஒரு போர் இது. இந்தப் போரில் எத்தனை குதிரைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று சொன்னால். அது ஒரு உலக மகா சிரிப்பாகத்தான் தெரியும்

ஆம் இரண்டே இரண்டு குதிரைகள்தான். 313 பேரில் இரண்டே இரண்டு குதிரை வீரர்கள்தான் இருந்துள்ளார்கள். இது நம்ப முடியாத ஆச்சரியமான உண்மைச் செய்தி. இரண்டு பேர்களிடம்தான் குதிரை இருந்தது. வேறு யாரிடமும் குதிரைகள் இல்லை. ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரை இருந்தது. இந்த இரண்டு பேர்தான் குதிரைக்கு சொந்தக்காரர்கள். அவர்கள் அவர்களது குதிரைகளைக் கொண்டு வந்திருந்தார்கள்.

இது போக வாகனமாக எழுபதே 70 ஒட்டகங்கள் மட்டும் இருந்தன. ஆனால் மக்காவில் இருந்து வந்தவர்களிடம் உள்ள ஒட்டகங்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வந்திருந்த நபர்களோடு ஒட்டகங்கள் எண்ணிக்கை பல மடங்குகளாக இருந்தது. ஒரு நாளைக்கு 10 ஒட்டகங்கள் அறுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 

15 நாள் முகாமிட்டு இருந்தார்கள். அப்படியானால் எத்தனை ஒட்டகங்கள் அவர்களிடம் இருந்தது எண்ணிப் பாருங்கள். தரையில் நடந்து போகக் கூடிய வீரனுக்கும் ஒட்டகத்தில் போகக் கூடிய வீரனுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கீழே நடந்து போகிற ஒருவரால் மேலே ஒட்டகத்தின் மீது இருந்து போகக் கூடியவரை தாக்கி விட முடியாது. இதையும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எழுபதே 70 ஒட்டகங்கள் தான் முஸ்லிம்கள் தரப்பில் இருந்தது. மூன்று பேருக்கு ஒரு ஒட்டகம் என்கிற அளவுக்கு கூட இல்லை. அதைவிட குறைவான ஒட்டகங்கள் தான் இருந்தது. அதில் ஓர் ஒட்டகத்திற்கு  மூவர் என மாறிமாறி பயணம் செய்தனர். நபி (ஸல்), அலீ(ரலி), மர்ஸத் இப்னு அபூ மர்ஸத் கனவி (ரழி) ஆகிய மூவரும் ஒரே ஒட்டகத்தில் மாறிமாறி பயணம் செய்தனர். 

இந்த பயணத்தின் போது மஸ்ஜிதுன் நபவியில் தொழுகை நடத்துவதற்கும் திரும்ப வருகின்றவரை மதீனாவிற்கு தனது பிரதிநிதியாகவும்  கண் தெரியாத ஸஹாபியான அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் நியமித்து விட்டுப் போனார்கள்.

மதீனாவிலிருந்து வெளியேறி ரவ்ஹாஎன்ற இடத்தை அடைந்த பிறகு  நபி (ஸல்) அவர்கள் என்ன நினைத்தார்களோ. (கண் தெரியாத ஸஹாபியான) அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்கள் தொழுது வைத்துக் கொண்டு இருக்கட்டும். மதீனாவுக்கு பிரதிநிதியாக வேறு ஒருவரை அனுப்புவோம் என முடிவு எடுத்தார்கள். 

அதன்படி அபூலுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். தங்களுடன் வந்திருந்தவர்களிலிருந்து அவரை மதீனாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தார்கள். 

அவர்கள் வேறுவிதமாக எண்ணி இருக்கலாம். அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்கள் பார்வை இல்லாதவராக இருக்கிறார்கள். வெளி விவகாரங்களை கண்காணிக்கக் கூடிய ஆற்றல் குறைவாக இருக்கும். பார்வை மிக அவசியம். முதலில் புறப்பட்டு போகும்போது இருந்த நிலை மாறி திரும்பி வருவதற்கு நாட்கள் அதிகமாகும் என்ற நிலை ஆகி விட்டது. எனவே அல்லாஹ் நபியின் மனதில் போட்டதை செயல்படுத்தி இருப்பார்கள். 

மீதி படையில் இருந்தவர்களை இறைத் துாதர்(ஸல்) அவர்கள் இரண்டு பிரிவுகளாக ஆக்கினார்கள்முஹாஜிர், அன்சார் ஆகிய இரண்டு பிரிவினருக்கும் அந்தந்த தரப்பிலிருந்தே படைத் தளபதிகளை நியமித்தார்கள்

ஏன் என்றால் குலம் கோத்திரம் என்பது இஸ்லாத்தில் புதிதாக வந்திருந்த நிலையில் மனிதர்கள் என்ற அடிப்படையில் சில எண்ணங்கள் ஏற்படலாம். முஹாஜிர்கள் நம்மை வழி நடத்துவதா? என்று அன்சார்களுக்கு வந்து விடக் கூடாது. அன்சார்கள் நம்மை வழி நடத்துவதா? என்று முஹாஜிகளுக்கு வந்து விடக் கூடாது

ஆகவே முஹாஜிர்களுடைய அந்த குழுவுக்கு அவர்களிலிருந்தே ஒருவரை தளபதியாக ஆக்கினார்கள். அன்சார்களுடைய  குழுவுக்கு அவர்களிலிருந்தே ஒருவரை தளபதியாக ஆக்கினார்கள். இப்படி கருத்துச் சொல்பவர்களும் உண்டு.

என்னதான் ஒரே மொழியாக இருந்தாலும்நாம் புரிவதற்காக ஒரு உதாரணம் தமிழ்நாட்டின் தலைநகரத் தமிழ் மற்ற மாவட்டத்தவருக்கு புரிவதே இல்லை. பேச்சு வழக்கு என்பது ஊருக்கு ஊர் மாறுபடும்

போர்க் கால சூழல் அவசர கட்டளைகள் இட வேண்டி இருக்கும். அவசர நேரத்தில் அந்தந்த ஊர்க்காரர்கள் சொல்தான் அவரவர்களுக்கு எளிதில் புரியும்அதனால் தான் இரு அணிகள். இப்படி கருத்துச் சொல்பவர்களும் உண்டு. 

எப்படி இருந்தாலும் அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும் என்ற புகழுக்கு உரியவராக அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் இருக்கிறார்கள். 8 முறையும் பயன்படுத்திய கொடியின் நிறம் வெள்ளை. இந்த முறைதான் இன்னொரு நிறத்திலும் கொடி பயன்படுத்தப்பட்டது. அது என்ன நிறத்தில் இருந்தது?
தொடரும் இன்ஷாஅல்லாஹ்  

http://mdfazlulilahi.blogspot.in/2016/08/blog-post.html

நன்றி ; மக்கள் உரிமை

அடுத்த தலைப்பு 
அந்தக் காலத்தில் மக்காவில் செய்தி அறிவிக்கும் முறை எப்படி இருந்தது?


முந்தைய தலைப்பு

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு