”தக்வா”வா? ”பத்வா”வா? மறுமை வெற்றிக்கு எது முக்கியம்?

முஸ்லிம்கள் பல  குழுக்களாக இருக்கிறார்கள். எத்தனை குழுக்களாக இருந்தாலும் மார்க்கத்தில் ஈடுபாடு உடையவர்கள் குறைவாகவே உள்ளார்கள். அவர்களையும் 2 பிரிவாகவே பிரித்துப் பார்க்கும் சூழல்தான் நிலவி வருகிறது. ஒரு சாரார் அமல்களில் அதிகம் ஈடுபாடு உடையவர்கள். இன்னொரு சாரார் ஆய்வுகளில் அதிகம் ஈடுபாடு உடையவர்கள்.

அமல்களில் ஈடுபாடுடையவர்கள் தக்வா எனும் இறை அச்சத்துடன் இருக்க வேண்டும்என்று சொல்லி அவர்கள் செயல்பாட்டை வணக்க வழிபாடுகளாக அமைத்துள்ளார்கள். இன்னொரு சாரார் இஸ்லாத்தை தெளிவாகவும் சரியாகவும் அறிந்திருக்க வேண்டும்” என்று கூறி. அதன் அடிப்படையில் பத்வா எனும் தீர்ப்புகளை வழங்கும் வண்ணம் அவர்கள் செயல்பாடுகள் அமைந்து உள்ளன.



தக்வாவுடன் இருக்க வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள். ஆய்வில் குறைவு இருந்தாலும், கடமையான வணக்கங்களில் மட்டும் அல்ல. சுன்னத்தான வணக்க வழிபாடுகளிலும் பேணுதல் உடையவர்களாக இருக்கிறார்கள்.

ஆய்வாளர்கள் மார்க்கத் தீர்ப்பு (பத்வாக்)களைக் கூறுவதில்தான் குறியாகவும் மும்முரமாகவும் இருக்கிறார்கள். பத்வாவில் உள்ள ஈடுபாடுகள். வணக்க வழிபாடுகளில் இல்லை. சுன்னத்தான வணக்க வழிபாடுகளை மட்டுமல்ல கடமையான வணக்கங்களிலும் ஈடுபாடு அற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

நாமே உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம். நாமே இரவை (மூடிக்கொள்ளக்கூடியதாபோர்வையாக-) ஆடையாக ஆக்கினோம். (78:9,10)  என்கிறான் அல்லாஹ்

அந்த துாக்கத்தைக் கூட  தியாகம் செய்து விட்டு விடிய விடிய ஆய்வுகளில் ஈடுபடுகிறார்கள். தூக்கத்தைவிட தொழுகை மேலானது என்ற அழைப்பைக் கேட்டதும் துாங்கி விடுகிறார்கள். இது நமது விமர்சனம் அல்ல. மக்களிடம் பேசப்பட்டு வரும் தினச் செய்திகளில் ஒன்றாக இருக்கிறது. உடன் இருப்பவர்களால் பரப்பப்பட்ட செய்தி மட்டுமல்ல. உண்மையான செய்தியும் கூட.

பத்வா அறிஞர்கள் ஆய்வுரைகள், அறிவுரைகள் நன்றாக இருக்கிறது. உபதேசங்கள் இருப்பவர்களை ஈர்க்கும்படியாக இருக்கிறது. ஆனால் அந்த உபதேசங்கள் ஊருக்குத்தான் எங்களுக்கு இல்லை என்பதுபோல் அவர்கள் செயல்பாடுகள் உள்ளன

காரணம் ஆய்வுரைகள் பெரும்பாலும் மற்றவர்களின் வணக்க வழிபாடுகளில் உள்ள குற்றங் குறைகளைத் துருவித் துருவிப் பார்த்து விமர்சிப்பதாகவே உள்ளது. சுய பரிசோதனை என்பது இல்லை

கூடி இருப்பவர்களுக்கு செய்ய வேண்டிய உபதேசங்கள் என்பதே இல்லை. சபையில் இல்லாதவர்கள் பற்றிய விமர்சனங்கள்தான் அதிகம் உள்ளது. அதனால் கூடி இருப்பவர்கள் ரசிக்கிறார்கள். ரசிகர்களாக ஆகிறார்கள்.

தக்வா தரப்பு அறிஞர்கள் பேசும்பொழுது எனக்கும் உங்களுக்கும் வஸிய்யத்(உபதேசம்) செய்கிறேன் என்றுதான் உரைகளைத் துவங்குகிறார்கள்.  எனவே தொழ வேண்டும் என்று சொன்னால் முதலில் அவர்கள் தொழக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே மறுமை வெற்றிக்கு எது முக்கியம்? “தக்வாவா? “பத்வாவா? என்ற சந்தேகம் கேள்வியாகவும் விவாதங்களாகவும் மக்களிடம் உலவி வருகிறது.

இதற்கு ஆய்வு உடையவர்கள் தரப்பில் கூறும் பதில் என்ன? 

இஸ்லாம் இரண்டு வகையாக உள்ளது. முதலாவதாக உள்ளது,   நாம் மனதால் நம்ப வேண்டிய நம்பிக்கைதான். இரண்டாவதாக உள்ளதுதான் அமல்கள் எனும் செயல்பாடுகள். 

முதலில் உள்ளது உள்ளத்தில் ஏற்பட வேண்டிய  நம்பிக்கைதான். இறைவன் என்றால் யார்? அவனது இலக்கணம் என்ன? இறைத் துாதர்கள் என்றால் யார்? அவர்கள் எதற்காக அனுப்பப்பட்டார்கள். அவர்கள் கொண்டு வந்த செய்திகள் என்ன? என்பதை தெளிவாக நம்பிக்கை கொள்ள வேண்டும்

மலக்குகள், மறுமை விசாரணை, விதி, மண்ணறை வாழ்வு, மறுமை வாழ்வு சொர்க்கம், நரகம் எல்லாம் நம்பிக்கை சார்ந்தது. இவை யாவும் மனதால் நம்ப வேண்டிய விஷயங்கள். செய்கின்ற செயல்கள் அல்ல.

இறைவன் ஒருவனே! என்பதை நம்பத்தான் முடியும். செய்து காட்ட முடியாதுமுஹம்மது (ஸல்) இறைவனின் துாதர் என்பதையும் மனதால்  நம்பத்தான் முடியும். செய்து காட்ட முடியாது. நம்புதல் என்ற ஒரு வகையும் செயல்படுதல் என்ற ஒரு வகையும் ஆக இரண்டாக மார்க்கம் நமக்கு தரப்பட்டுள்ளது. நம்புவதற்கு  ஈமான் நம்பிக்கை என்று சொல்லப்படுகிறது.

செயல்படுவதற்கு இஸ்லாம் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாம் என்றால் கட்டுப்பட்டு நடத்தல் என்று பொருள். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் மற்றும் தான தர்மங்கள் இவை எல்லாம் இஸ்லாம் என்பதில் அதாவது கட்டுப்படுதல் என்பதில் அடங்கி விடுகிறது

இப்படி ஈமான் என்றும் இஸ்லாம் என்றும் நமது மார்க்கம் வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. இதை நாமாக வகைப்படுத்தி பிரிக்கவில்லை, புகாரியில் உள்ள 50ஆவது  ஹதீஸின் மூலம் அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்களும். அவர்களுக்கு துாதுச் செய்தி கொண்டு வந்த ஜிப்ரீல்(அலைஅவர்களும்தான் வகைப்படுத்தி கற்றுத் தந்துள்ளார்கள்அவர்கள் மூலம்தான் இந்த வகைப்படுத்தலை அறிகிறோம்.

இஸ்லாம் என்ற செயல்பாடுகளில் குறை இருந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டான். குறைவு இருந்தால் அல்லாஹ் மன்னிக்கக் கூடியவனாக இருக்கிறான். அது மன்னிப்புக்குறிய ஒரு விஷயமாக உள்ளது

ஈமானில் குறை இருந்தாலும் குறைவு இருந்தாலும் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். செயல்கள் என்றுள்ள விஷயத்தில் ஒருவன் முழுமையாக இருக்கிறான். அதாவது ஒன்று விடாமல் எல்லா அமல்களும் செய்கிறான். அல்லாஹ்வைப் பற்றி சரியாக நம்பவில்லை. அல்லாஹ்விடத்தில் கூலி கிடைக்குமா? ஈமான் என்ற நம்பிக்கையில் குறையோ, குறைவோ இருந்தால் அமல்களுக்கு அறவே கூலி கிடைக்காது. அடித்தளம் நம்பிக்கைதான்.

மார்க்கம் நம்ப சொல்லி உள்ளவற்றை முழுமையாக நம்ப வேண்டும்இஸ்லாத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மிகத் துாய்மையானது. மிகத் தெளிவானது. எந்தவிதமான குழப்பத்திற்கும் தடுமாற்றத்திற்கும் அதில் இடமில்லை. 

அகீதாக்கள் எனப்படும் கொள்கைகள் தான் இஸ்லாத்தின் அடித்தளம். அமல்களில் குறைவு ஏற்படலாம். ஆனால் கொள்கையில் குழப்பம் வரக்கூடாது. ஒரு முஃமின் எந்த சூழ்நிலையிலும் தன் கொள்கையை இழக்கக்கூடாது. இவ்வாறு ஆய்வாளர்களான பத்வா தரப்பினரின் விளக்கம் உள்ளது.

ஆய்வுடையவர்களின் இந்த விளக்கத்திற்கு மாறுபடும் அமல்கள் தரப்பு என்ன பதில் சொல்கிறார்கள்? 

முதன் முதலாவதாக வழி கெட்டவன் இப்லீஸ்தான். அவன் அல்லாஹ்வையும், மறுமையையும், சுவர்க்கத்தையும், நரகத்தையும்  நம்மைவிட அதிகம் நம்பிக்கை கொண்டவன்தான். அவன் கெட்டுப்போனது கொள்கையில் அல்ல. கட்டுப்படுதல் என்ற செயல்பாட்டில்தான். அவனை கட்டுப்படாமல் ஆக்கியது அவனது ஆய்வுதான்.

அல்லாஹ் திரு மறையில்   சுமார்  250க்கும் மேற்பட்ட  இடங்களில்  தக்வா பற்றி   பல்வேறு  வார்த்தைகள்  வடிவில்  குறிப்பிடுகின்றான்.   அதிலும் குறிப்பாக,   சுமார்  70  இடங்களில்  நீங்கள்  அல்லாஹ்வைப்   பயந்து வாழுங்கள்   என்று   முஃமின்களை   நோக்கி  நேரடியாக  கட்டளை இட்டுள்ளான்.

மனிதர்களிலேயே கண்ணியத்திற்குரியவர் தக்வா உடையவர்தான் என்று அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) நுால்  புஹாரி3374.

உங்களில் தக்வா உடையவரே நிச்சயமாக அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவர் -சிறந்தவர்   என்று அல்லாஹ்வும் கூறி உள்ளான் (அல் குர்ஆன்: 49:13)

சொர்க்கத்தைப் பற்றி  வாக்களிக்கும் அல்லாஹ் பல இடங்களில் தக்வாவை பற்றியும் கூறுகிறான். அவற்றை 3:133, 50:31-33, 52:17-18, 68:34, 16:31, 25:15,-16,  ஆகிய வசனங்களில் பார்க்கலாம். இப்படி ஆயத்துகளும் ஹதீஸ்களுமாக அவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 

இப்படி ஒவ்வொரு கூட்டத்தாரும் தரும் விளங்கங்களுக்கு திருமறைக் குர்ஆன் தரும் அருமையான பதில் என்ன?

ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பவற்றைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றார்கள். (30:32) இதுதான் உண்மை.

அதிகமாக பிரயாணம் செல்லக் கூடியவர்கள் அடிக்கடி காண்பார்கள். 60 அல்லது 70 வயதைத் தாண்டிய தம்பதிகள். தள்ளாடிய நிலையிலும் ஒரு நாள் இரண்டு நாள் அல்ல பல நாள் பயண துாரத்தைக் கடந்து செல்வார்கள். கேட்டால் இன்ன கோயிலுக்குப் போகிறோம். எங்கள் குல தெய்வ கோயிலுக்குப் போகிறோம் என்று சொல்வார்கள்

காசியிலிருந்து கன்னியாகுமரிக்கும். ராமேஸ்வரத்திலிருந்து ஹரித்துவாருக்கும் செல்வார்கள். அவர்களை இப்படி கஷ்டப்பட்டு போக வைத்தது எது? அவர்களின் இறையச்சம். இதை அரபியில் எப்படி சொல்வோம் தக்வா என்று. இதைப் படித்தவுடன் உங்களுக்கு வேகமோ, கோபமோ வந்து விடக் கூடாது.

 “(தம் அமல்களில்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.

இவ்வுலக வாழ்க்கையில் அவர்களது முயற்சி பயனற்று (வீணாகி) விட்டது.  அவர்களோ தாங்கள் அழகான செயல்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். (அல் குர்ஆன் 18:103-104)

அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும். அவைகள் (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை. (அல் குர்ஆன் 88:2,3)

தக்வாவும் தேவை. தெளிவான, சரியான பத்வாவும் (தீர்வும்) தேவை. தவறான தக்வாவும் (இறையச்சமும்) அமல்கள் இல்லாத மார்க்க அறிவும் பத்வாவும் நஷ்டங்களையே ஏற்படுத்தும்

ஆகவே அல்லாஹ் நம் அனைவரையும் மார்க்கத்தை மிகத் தெளிவாக, மிகச் சரியாக அறியக் கூடியவர்களாகவும். அறிந்தபடி சொல்லக் கூடியவர்களாகவும் சொன்னபடி அமல்களை செய்யக்  கூடியவர்களாகவும் ஆக்கி வைப்பானாக.

http://mdfazlulilahi.blogspot.ae/2016/08/blog-post_13.html 

நன்றி; மக்கள் உரிமை 

படித்து விட்டீர்களா?

பத்ருக்குப்  போவோம், பத்ருக்குப்  போவோம் என்று சொன்னது யார்?

பத்ருப் போர், பத்ருப் போர் என்று கர்ஜித்தவர்களுக்கு ஏற்பட்ட முதல் தோல்வி

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு