துரு பிடித்த வாள்களையா துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வைத்து இருந்தார்கள்?

நிர்ப்பந்தத்தில் நடந்த அந்தப் பத்ருப் போர் வேண்டும் என்று அன்சாரிகளும் விரும்பவில்லை. முஹாஜிர்களும் விரும்பவில்லை. ஏன் அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூட அந்த ஏற்பாட்டில், அந்த எண்ணத்தில் போகவில்லை. போர் வராமல் தடுப்பதற்காக எப்படி எட்டு முயற்சிகளை செய்தார்களோ அது போல். பத்தோடு பதினொன்றாக அத்தோடு ஒன்றாக என்பார்களே அது போல். எட்டு முயற்சிகளுக்குப் பிறகு ஒன்பதாவதாக சென்ற அந்த போர் தடுப்பு முயற்சி போராக ஆகி விட்டது.




அந்த வரலாறை நாம் தெளிவாக நினைவு கொள்ள வேண்டும். அதற்கு முன்னால் மதீனாவிலே ரசூல்(ஸல்) அவர்கள் ஆட்சியாளராக இருந்த அந்த பகுதியிலே வாழ்ந்த யூதர்களோடு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துகிறார்கள். இதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இறைத்துாதர்(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த போர்கள் அனைத்தும் தற்காப்பு போர்களே என்பதை இந்த பின்னணிகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். தற்காப்புக்காக செய்த செயல்களை போர் செய்தார்கள் என்று சொல்ல முடியாது. எதிர்த்துப் போராடினார்கள். அதாவது போராட்டங்கள் செய்தார்கள் என்றே சொல்ல முடியும்.


ரசூல்(ஸல்) அவர்கள் தனது தோழர்களோடு போய் கலந்த கொண்ட போர்கள் தற்காப்புக்கான அறப்போர்களே. அறவழிப் போராட்டங்களே. அவற்றுக்கு அரபு  வரலாற்று வல்லுனர்கள் பதிவு செய்த பிரிவில் கஸ்வா என்று பதிந்து உள்ளார்கள். தோழர்களை அனுப்பி வைத்த அறப்போர்களுக்கு ஸய்யா என்றும் பதிந்து உள்ளார்கள். கஸ்வா என்பது 19. ஸய்யா என்பது 38. மொத்தம் 57 அறப்போர்கள்.


57 போர்களிலேயும் ஆயிரத்துக்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டார்கள். ஒரு கலிங்கத்துப் போரில் கோடிக்கணக்கானவர்கள் வெட்டப்பட்டு ரத்த ஆறு ஓடியது. அந்த வரலாற்றையும் பார்க்கிறோம். ஒரு சிலுவைப் போரில் எண்ணிலடங்கா மக்கள் கொல்லப்பட்டார்கள். அதையும் வரலாற்றில் பார்க்கிறோம். இன்றும் நடக்கக் கூடிய போர்களில் மனித உயிர்கள் பலியாவது சர்வ சாதாரணமாக ஆகி விட்டது.


இன்று விஞ்ஞான முன்னேறி விட்டது ஆயுதங்கள் அதிகமாக ஆகி விட்டது என்று சொல்லலாம். கோடிக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட அன்றைய காலத்தில் என்ன ஆயுதம் இருந்தது. அசோகர் ஒரு குண்டிலா ஒரு லட்சம் பேரை கொன்றான். ஜப்பானில் அமெரிக்க போட்ட அணு குண்டு மாதிரியா குண்டு போட்டான். எல்லாம் அந்த நாளில் இருந்த ஆயுதமான வாள் ஏந்திதான் போர் செய்தார்கள்.


அறப்போர்களைப் பற்றி எழுதும்போது மற்ற போர்களை ஏன் எழுதுகிறோம். பாகு படுத்திக் காட்டவா? பகுத்துப் பார்க்கவா? நோக்கம் என்ன? பாகு படுத்திப் பார்ப்பது அல்ல நோக்கம். பகுத்துப் பார்ப்பதே நமது நோக்கம். பகுத்து அறிந்தால்தான் வித்தியாசத்தை அறிய முடியும். வித்தியாசத்தை அறிந்தால்தான் உண்மையை உணர முடியும். அதனால்தான் மற்றவற்றையும் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.


ரசூல்(ஸல்) அவர்கள் காலத்துக்கு முன்னாள் நடந்த போர்களில், அசோகர் காலத்தில் நடந்த போரில். எத்தனையோ பேர்களை கொல்வதற்கு சாத்தியக் கூறுகள் இருந்திருக்கின்றது. அதே சாத்தியங்கள் ரசூல்(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாமல் போனதா? துரு பிடித்த வாள்களையா துாதர் முஹம்மது(ஸல்) வைத்து இருந்தார்கள்? இல்லை. 


வெட்டினால் வெட்டு ஒன்று துண்டுகள் இரண்டு என்று ஆகும் கூர்மையான வாள்கள் தான் அவர்களிடம் இருந்தது. ஆனால் அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அதனை விரும்பவில்லை. ஏனென்றால் வரம்பு மீறி விடாதீர்கள் என்பது அல்லாஹ்வின் கட்டளை. வரம்பு மீறக் கூடியவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டேன் என எச்சரிக்கை செய்துள்ளான்.


உங்களை எதிர்த்து போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் 2:190)


உன்னை கொல்லாமல் இருப்பதற்கு தடுத்துக் கொள். தற்காப்பு செய்து கொள். இதுதான் ஒவ்வொரு போரின் அம்சமாக இருந்தது. இதைத் தவிர  மக்களை கொல்ல வேண்டும். அவர்களை அழித்து ஒழித்து விட வேண்டும். அவர்களது பெண்களை சூறையாட வேண்டும். அவர்களின் பொருள்கள் மீது ஆசை கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கோ அவர்களது தோழர்களுக்கோ இருக்கவில்லை. இருந்ததாக ஒரு சிறு குறிப்பும் கிடையாது. எதிரிகள் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதி வைத்த வரலாற்றிலும் காண முடியாது.


முஹம்மது நபியின்(ஸல்) அந்த வரலாறுகளை கொச்சைப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதியவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் கூட குற்றம் சாட்ட முடியவில்லை. அவர்களை அறியாமல் இந்த அறப் போர்களை பாராட்டுகிறார்கள். வியக்கிறார்கள் இப்படியுமா ஒருவர் போர் செய்ய முடியும்! என்று. கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தைச் சார்ந்த முஸ்லிம் பெயர் தாங்கிகள். யூதக் கைக் கூலிகள் கொச்சைப் படுத்தித் திரிகிறார்கள் என்பது தனி விஷயம்.


சும்மா தெருவில் போகிறவனை உதைக்கக் கூடியவானாக ஆணவம் கொண்டவனாக சாதாரண மனிதன் இருக்கிறான். சிறு கூட்டம் பின்னால் வந்து விட்டால் தலைக்கணம் வந்து விடுகிறது. மிகப் பெரிய சாம்ராஜ்யங்களே பயப்படக் கூடிய சக்திமிக்க மிகப் பெரிய ஒரு அரசை முஹம்மது நபி (ஸல்) அமைத்து இருந்தார்கள் அதன் பிறகும் அவர்களிடம் இருந்த தன்னடக்கம் என்ன? மனிதர்களை நேசிக்கக் கூடிய பண்பு என்ன? இதையெல்லாம் பார்த்து வியக்கத்தான் செய்கிறார்கள்.


உலகத்தில் நடந்த அத்தனை போர்களையும் விட இறைத் துாதரின் (ஸல்) ஒவ்வொரு அறப்போரும் வித்தியாசமாக இருக்கின்றது. நியாயமாகவும் இருக்கிறது. எப்படிப்பட்ட நியாயம்? ரசூல்(ஸல்) அவர்களும் முஹாஜிர்களான ஒட்டு மொத்த தோழர்களும் 13 ஆண்டுகள் மக்காவாசிகளால் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கிறார்கள். சொல்ல முடியாத அளவு துன்பப்படுத்தி இருக்கிறார்கள். கொடுமைப் படுத்தி இருக்கிறார்கள். அந்தக் கொடுமைகளை பத்ருக்கு முன்னால் விபரமாக நினைவுக்கு கொண்டு வருவோம்.


அப்படி இருந்தும் போர்க் களத்தில் எதிரிகளான மக்காவாசிகள் எதிரில் கிடைத்த பிறகும். அவர்களை கொன்று விட வேண்டும் என்ற எண்ணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஏற்படவில்லை. அவரது தோழர்களுக்கும் ஏற்படவில்லை. தம்மை கொன்று விடாமல் காத்துக் கொள்ள தடுக்கிறார்கள். அப்பொழுதுதான் எதிர் தரப்பினர் உயிர் இழந்தார்கள்.  நாம் வெட்டப்பட்டு விடுவோம் என்ற ஒரு உச்ச நிலையை அடையும்பொழுதுதான் அவர்கள் எதிரியை கொல்கிறார்கள்.


போர் என்று சொன்னால் நாம் எப்படி விளங்கி வைத்து இருக்கிறோம். இந்தக் காலத்தில் இராணுவம். இந்திய ராணுவத்தில் பணி புரிவதற்கு ஹைட் பார்ப்பார்கள். ராணுவத்தில் பணி புரிவதற்கும் மனிதனுடைய உயரத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? உலகில் உள்ள நாடுகளில் குட்டை மனிதர்கள் உள்ள நாடுகளும் பல இருக்கிறது. அங்கும் மிகச் சிறந்த ராணுவம் இருக்கிறது. அங்கே எல்லாம் ஹைட் பார்த்து ஆள் எடுப்பது இல்லை. இந்தியாவில் ஏன் ஹைட் பார்க்கிறார்கள்? தேவைக்கு அதிகமானவர்கள் வருகிறார்கள். அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் தேவை இல்லாத விதிகளை வைக்கிறார்கள். உயரத்தை ஒரு காரணமாக வைக்கிறார்கள்.


இதனால் போர் தந்திரம் தெரிந்த அறிவாளிகள் பணிக்கு வர முடியாமல் வாய்ப்பை இழந்து போகிறார்கள். ஆயிரம் பேர் தேவை என அறிவித்தால் பத்தாயிரம் பேர் வருகிறார்கள். என்ன செய்வது வேறு வழி இல்லை. ஹைட்டில் ஆயிரம் பேரை கழித்து விடு. வெயிட்டில் ஆயிரம் கழித்து விடு இப்படி கழித்து ஆள் எடுக்கிறார்கள்.


இந்த மாதிரி பொறுக்கி எடுத்து ரசூல்(ஸல்) அவர்கள் காலத்தில் ராணுவத்துக்கு ஆள் எடுக்கவில்லை ஏன்? அவர்கள் சம்பளத்துக்காக வேலைக்கு வந்தவர்கள் அல்ல. உயிரைப் பணயம் வைத்து அறப்போர் செய்ய வருகிறார்கள். அவர்களாக வந்தால்தான் உண்டு. யாரையும் கட்டாயப்படுத்தி படையில் சேரச் சொல்லவில்லை.


எந்த ஒரு போருக்கும் எல்லாரும் வந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தையும் செய்யவில்லை. பத்ருக்கு பிறகுதான் ஒரு கட்டத்தில் அல்லாஹ் கட்டளை இடுகிறான். பத்ருக்கு சில காலங்களுக்கு முன்புதான் போரை அல்லாஹ் கடமை ஆக்குகிறான். அதற்கு முன்பு வரை போரை கடமை ஆக்கவில்லை. அதனால்தான் போர் செய்யவுமில்லை. இது சம்பந்தமான ஆதாரங்களை பின்னர் பார்ப்போம்.


இந்த மாதிரியான அந்த கால கட்டத்திலேயும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய நிலையைப் பாருங்கள். ஒருவர் வந்து கேட்கிறார். அல்லாஹ்வின் துாதரே என்னுடைய மனைவி இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு போக வேண்டும் என்று நிய்யத்துஎண்ணம் கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்தில் நடக்கக் கூடிய போரில் கலந்து எனது பெயரை கொடுத்து இருக்கிறேன். எனது மனைவி ஹஜ்ஜுக்கு போகிறார்களே நான் என்ன செய்வது? மனைவியுடன் ஹஜ்ஜுக்குப் போவதா? போரில் கலந்து கொள்வதா? என்று. அவருக்கு அல்லாஹ்வின் துாதர்(ஸல்) என்ன பதில் சொன்னார்கள்?


அதே மாதிரி தாயும், தந்தையும் உடைய இன்னொரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப் போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். இவருக்கு இறுதித் துாதர்(ஸல்) என்ன பதில் சொன்னார்கள்? போர்க் காலங்களில் எந்த அரசும் வீரர்களுக்கு விடுமுறை தராது. அதுதான் விதி. இந்த விஷயத்தில் இறைத்துாதர் (ஸல்) அவர்கள் வைத்திருந்த விதி என்ன?
தொடரும் இன்ஷாஅல்லாஹ்


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு