பாபர் மசூதி தீர்ப்பு குறித்து டெல்லிக்கு கடிதம் எழுதிய சிங்கப்பெண்!
அனுப்புநர்
ஆ.நந்தினி BABL,
36, பாண்டியன் நகர்,
காந்திபுரம்,K.புதூர்,
மதுரை-7.
பெறுநர்
நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள்,
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,
புதிடெல்லி.
[ supremecourt@nic.in என்ற மின்னஞ்சலுக்கு இக்கடிதத்தை அனுப்பியுள்ளோம் ]
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post_91.html
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post_91.html
ஐயா
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உங்கள் தலைமையிலான உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவோ அக்கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவோ இந்திய தொல்லியல் துறை எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
மேலும் 1992-ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஆனால் அதே நேரத்தில் இந்துக்களின் மத நம்பிக்கையில் தலையிட முடியாது என்று சொல்லி மசூதி இடிக்கப்பட்ட 2.77ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அயோத்தியில் வேறு இடத்தில் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இடத்தில் 5 நூற்றாண்டுகளுக்கு முன்பாக மசூதி கட்டுவதற்கு முன் அந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததாக எவ்வித ஆதாரத்தையும் இந்திய தொல்லியல் துறை சமர்ப்பிக்கவில்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு தரப்பினரின் நம்பிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது இந்திய அரசியல் சாசனத்துக்கும், குற்றவியல், நிலம் மற்றும் சொத்துரிமை சட்டங்களுக்கும் எதிரானதாகும்.
இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25-ன் படி "எவ்வித கட்டுப்பாடும் இன்றி எந்த சமயத்தையும் பின்பற்றவும் பரப்பவும் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமை உண்டு."
அரசியல் சாசன பிரிவு 26-ன் படி "எல்லா சமயத்தவருக்கும் பிரிவினருக்கும் சமயம் சம்பந்தப்பட்ட அமைப்புகளை ஏற்படுத்தி தாமே பராமரிக்கவும் சொத்துக்களை வாங்கி நிர்வகிக்கவும் அடிப்படை உரிமை உண்டு."
சர்ச்சைக்குள்ளான இடத்தில் இருந்த பாபர் மசூதி 1527-28 காலகட்டங்களில் கட்டப்பட்டு இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமாக இருந்து வந்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் 1793-இல் காரன்வாலிஸ் நிர்வாகத்தில் இந்தியாவில் நில நிரந்தர ஒப்பந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து 1882 சொத்துரிமை மாற்றுச்சட்டம் மற்றும் 1894-இல் நிலம் கையகப்படுத்துவதற்கான சட்டம் போன்ற நில சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.
இந்த சட்டங்களின் படி ஒரு குறிப்பிட்ட நிலத்தை நீண்ட காலமாக அனுபவத்தில் வைத்திருந்தாலோ, அரசுக்கு நிலவரி செலுத்தி வந்தாலோ, அந்த நிலத்தை முறைப்படி பதிவு செய்திருந்தாலோ அச்சொத்து அவருக்கே சொந்தமாகும்.
இந்த அடிப்படையில் நீண்ட காலமாக இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமாக இருந்து வந்த பாபர் மசூதி மற்றும் அந்த சர்ச்சைக்குள்ள நிலம் அவர்களுக்கே சொந்தமானதாகும்.
பிறருக்கு சொந்தமான நிலத்தில் நுழைந்து அதை சேதப்படுத்துவது கிரிமினல் குற்றமாகும்.
1949- டிசம்பர் 22 நள்ளிரவில் பாபர் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து ராமர் சிலையை உள்ளே வைத்ததும், 1992-டிசம்பர் 6-இல் அத்துமீறி உள்ளே நுழைந்து கும்பல் வன்முறை மூலம் அதை தகர்த்ததும் கீழ்க்கண்ட சட்டப்பிரிவுகளின் படி கிரிமினல் குற்றமாகும்.
1) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295- ஒரு வகுப்பினரின் மதத்தை நிந்திக்கும் உட்கருத்துடன் வழிபாட்டு தலத்தை சிதைத்தல் அல்லது தீட்டுப்படுத்துதல்.
2) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 447-பிறரது சொத்துக்க்குள் அத்துமீறி நுழைதல்.
3) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 461- பிறரது சொத்தை நேர்மையற்ற முறையில் உடைத்து திறப்பது.
4)இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436- தீ அல்லது வெடிபொருளால் பிறரது சொத்தை அழித்தல்.
5)இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 440- பிறருக்கு மரணம் அல்லது காயம் விளைவிக்க முன்னேற்பாடு செய்து பிறகு அழிம்பு செய்தல்.
6) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 386,387-உட்கருத்து கொண்டு அச்சத்தை உண்டாக்கி சொத்தை பறிக்க முயல்தல்.
7) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 321, 327, 329- சொத்தை அச்சுறுத்தி பறிப்பதற்கு காயம், கொடுங்காயம் விளைவித்தல்.
8) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302- கொலை செய்தல்.
நாட்டில் மக்களிடையே மதரீதியான பிளவை உண்டாக்கி அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரான L.K அத்வானி மற்றும் அவரைச் சார்ந்தோரால் இக்குற்றச்செயல் நடைபெற்றுள்ளது.
தற்போது இக்கட்சி மத்திய ஆட்சிப்பொறுப்பில் உள்ளது. இச்சூழ்நிலையில் சட்டவிரோதமாக பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த குற்றவாளிகளிடமே சர்ச்சைக்குரிய நிலத்தை ஒப்படைத்து அந்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் உத்தரவிட்டிருப்பது கும்பல் வன்முறைக்கு நாட்டின் சட்டம் அடிபணிந்து செல்வது போல் உள்ளது.
இது நாட்டில் மிக தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.எதிர்காலத்தி ல் யார் வேண்டுமானாலும் பிறரது சொத்தை கும்பலாக சேர்ந்து வன்முறை மூலம் அபகரிக்கலாம் என்பதற்கு தூண்டுதலாக இத்தீர்ப்பு உள்ளது.
இத்தீர்ப்பின் மூலம் மதம், சமயம் இவற்றைத் தாண்டி தனி நபரின் சட்டப்படியான உரிமைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.
மேலும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சட்டவிரோதமான வன்முறை மூலம் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதியை கட்டிக்கொள்ள உரியவர்களிடம் நிலத்தை ஒப்படைப்பதே நியாயமானதாக இருக்கும்.
1) ஆனால் சர்ச்சைக்குள்ளான இடத்தில் மீண்டும் மசூதியை கட்டுவது நாட்டில் மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று உச்சநீதிமன்றம் கருதினால் அந்த இடத்தை அரசின் பொது பயன்பாட்டுக்கு கொண்டுவருவதே சரியான தீர்வாக இருக்கும். அதை விடுத்து அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொடுக்க உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதமாகும்.
2)அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அனைத்து மக்களுக்கும் சமமான சமய உரிமை இருக்கிறது. சர்ச்சைக்குள்ளான இடத்தை ஒரு சாராரின் வழிபாட்டுத்தலமாக மாற்றுவது மற்ற தரப்பினரின் அரசியல் சாசன உரிமையை பறிப்பதாகும்.
3) அயோத்தியில் சர்ச்சைக்குள்ளான இடத்தில் இருந்த மசூதியை வேறு இடத்தில் கட்டிக்கொள்ள நிலம் வழங்க உத்தரவிட்டிருப்பதைப் போல மதரீதியான பதற்றத்தைத் தடுக்க வேறு இடத்தில் கோவில் கட்டிக்கொள்வதற்கு இடம் வழங்க உத்தரவிடுவதே சரியானதாகும்.
எனவே இப்பிரச்சனை தொடர்பாக 9.11.19 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்குமாறும் இப்பிரச்சனை தொடர்பாக மறுபரிசீலணை செய்து சட்டப்படி சரியான தீர்ப்பு வழங்குமாறும் உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஆ.நந்தினி
11.11.2019
Comments