இன்றுள்ள யாருக்கும் அல்லாஹ்வின் நற்சான்று உண்டா?

முஹம்மதுநபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் நற்சான்று உள்ளது. அதுபோல் இன்றுள்ள யாருக்கும் அல்லாஹ்வின் நற்சான்று உண்டா?

ஆணவத்துக்காகவும் போர்கள் நடந்துள்ளன. நியாயத்துக்காக நாலு பேரை தனியாக ஒருவன் அடித்து விட்டு வருவான். முதலில் அடித்தது நியாயத்துக்காகத்தான் இருக்கும். அவனுக்கு ஈடாக ஆள் இல்லை என்றதும். அவனை தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றதும். ஆணவம் தலைக்கு ஏறி விடும். சும்மா இருந்த பொருளை காலால் தள்ளி விட்டுப் போவான்.


உதாரணமாக ரோட்டில் திரியும் ரவுடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ரோட்டில் போய்க் கொண்டே இருப்பான் டூவீலர்களில் சாமானைக் கொண்டு வருபவரை பிடித்து நிறுத்துவான். சாமான்களை ரோட்டில் கொட்டி விட்டுப் போவான். இது ரவுடிகளிடமுள்ள ஆணவத்தின் வெளிப்பாடு.


இந்த மாதிரி ரவுடிகள். அட்ரஸ் இல்லாதவனாக இருந்து. பெரிய மனிதனாக, சமுதாயத்தில் அறியப்பட்டவனாக, பிரபலமானவனாக ஆகி விட்டால் ஆணவத்தின் வெளிக்காட்டல் எப்படி இருக்கும் தெரியுமா

அவன் விருப்பத்திற்கு அவன் வசதிக்கு, அவன் தேவைக்கு எதையாவது செய்வான். செய்யும்படிச் சொல்லுவான்,  அதை இஸ்லாம் என்பான். ஒன்றாக இருந்த அமைப்புகளை ஜமாஅத்துகளையெல்லாம் இரண்டாக ஆக்குவான். பிற அமைப்புகளை ஜமாஅத்துகளை இழிவுபடுத்துவான். இல்லாமல் ஆக்குவேன் என சவால் விடுவான். அதற்காக எல்லா முஸ்தீபுகளும் செய்வான். இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


இந்த மாதிரி குணம் உடையவர்கள். நாட்டுத் தலைவர்களாக இருந்தபோது அவர்கள் ஆணவத்தின் வெளிப்பாடு என்ன தெரியுமா? நம்மிடம்தான் பெரிய சக்தி இருக்கின்றது. எனவே நாம் நினைத்த நாடுகளையெல்லாம் குறி வைத்து தாக்க வேண்டும். நாம் நினைத்த நாடுகளை ஒன்றும் இல்லாமல் ஆக்க வேண்டும். இப்படி ஆணவத்துக்காக போர் செய்வார்கள். இப்படிப்பட்ட ஆணவமும் அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்களிடத்தில் இருந்தது இல்லை.


அவர்கள் எவ்வளவு மென்மையான பண்பு உடையவர்களாக இருந்தார்கள். பண்பு வந்து நபி இடத்தில் பணிவுதனை கேட்டுச் செல்லும் என்று புகழும்படி இருந்தார்கள். அந்த அளவுக்கு ஆணவம் இல்லாதவராக, அடக்கம் உடையவராக இருந்தார்கள். 


இதற்கு அவர்கள் பிடித்த கைதிகளிடம் நடந்து கொண்ட மென்மை சான்றாக உள்ளது. உலகம் ஆச்சரியப்படுகிறது. கைதிகளை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். கைதிகள் என்றால் அடிமைகள் என்று இருந்த காலம் அது. கேட்பார்கள் யாரும் இல்லாத காலமது. ஐ.நா. சபையெல்லாம் அப்பொழுது கிடையாது. இப்பொழுது இருந்தும் கேட்க மாட்டேன் என்கிறான் என்பது தனி விஷயம். ஆக ஆணவம் என்பது இல்லவே இல்லை.


பொறாமைக்காகவும் போர்கள் நடந்துள்ளன. “நிச்சயமாக மன்னர்கள் ஓர் ஊரில் நுழைந்தால் அதைப் பாழாக்குவார்கள். அவ்வூரில் மதிப்பு மிக்கவர்களை இழிந்தோராக ஆக்குவார்கள். இப்படித்தான் செய்வார்கள்” என்று சுலைமான் நபி(அலை) காலத்தில் இருந்த பெண் ஆட்சியாளர் (அல்குர்ஆன்27:34)  கூறி உள்ளதில் இருந்து அக்கால மன்னர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை அறியலாம்.


அண்டை நாடுகளில் எவ்வளவு செல்வந்தர்கள் உள்ளார்கள். செல்வம் பயங்கரமா இருக்கிறது. கணக்கில் இல்லாமல் இருக்கிறது. எப்படியாவது சூழ்ச்சி செய்து அவர்களது செல்வத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட வேண்டும். 

அவர்களது இயற்கை வளங்களை அழித்து விட வேண்டும். நம்ம நாடுதான் உலகில் வளமான நாடாக, செல்வம் உள்ள நாடாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பொறாமை  ராஜ்ஜியம் இன்றும் உலகில் கொடி கட்டிப் பறக்கிறது.  இந்தப் பொறாமையும் இறைவனின் துாதரிடமும்(ஸல்) இருந்ததில்லை. அவர்களது தோழர்களிடமும் இருந்ததில்லை.


அரசியலுக்காகவும் போர்கள் நடந்துள்ன. அரசியலுக்காக என்னவெல்லாமோ என்றும் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக அரசியல் கூடும், கூடாது என்ற கூத்துக்கள். அரசியலுக்கு நாங்கள் வர மாட்டோம். இப்படி சொல்லியும் அரசியல் செய்வார்கள். ஆதாயம் தேடுவார்கள். அரசியல் ஆதாய எண்ணம் இல்லை என்று சொல்பவர்களின் உள்ளத்தில் அந்த எண்ணம் இல்லையென சொல்ல முடியாது. அல்லாஹ்வின் துாதரிடம்(ஸல்) அரசியல் ஆதாய எண்ணம் இருக்கவில்லை. இதை நம் எல்லோராலும் சத்தியமிட்டு சொல்ல முடியும்.


ஆக எதற்காக எட்டு வருஷங்களில் இத்தனை சம்பவங்கள். சிந்தித்துப் பார்த்தால் அநியாயம் நடக்கக் கூடாது. நாம் உயிருடனிருக்க வேண்டும் என்பதுதான். நாம் உயிருடனிருக்க வேண்டும் என்பது முதல் விஷயம். அநியாயம் நடக்கக் கூடாது என்பது இரண்டாவது விஷயம். இந்தக் காரணங்களை களையாவிட்டால். நாம் கொல்லப்பட்டு விடுவோம் என்ற நிலை இருந்தது. நம்முடைய மனைவி மக்கள் அழிக்கப்பட்டு விடுவார்கள். இந்த நிலைதான் இருந்தது.


எட்டு வருஷ காலங்களில் நடந்த 58 போர்களும் தற்காப்பு, அநியாயத்தை எதிர்த்தல். ஆக இந்த இரண்டைத் தவிர வேறு எந்த நோக்கமும் அந்த போர்களில் இருக்கவில்லை. அதனால்தான் அந்த போர்களில் அவசியம் இல்லாதவர்கள் கொல்லப்படவில்லை. அப்பாவிகள் கொல்லப்படவில்லை


பெண்கள் கொல்லப்படவில்லை. மார்க்க அறிஞர்கள் கொல்லப்படவில்லை. குழந்தைகள் கொல்லப்படவில்லை. நம்மை தாக்க வந்தவர்களை மட்டுமே எதிர் கொள்வோம் என்ற மிக உயர்ந்த கொள்கைக்காக முஸ்லிம்கள் போராடி  இருக்கிறார்கள். அப்படியானால் அதை போர் என்று சொல்லலாமா, அதை போர் என்று சொல்ல நம் நாவு கூச வேண்டாமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


இன்னும் விரிவாக விளக்கப்பட வேண்டிய விஷயம். எவ்வளவு காலம்தான் மக்கா வாழ்க்கை? மதீனா வாழ்க்கை இல்லையா? என்ற கோணத்தில் வேறு விளங்கி வைத்து இருக்கிறார்கள். அவர்கள் விளங்கியபடி பரப்பியும் இருக்கிறார்கள். அப்படி பரப்பியவர்களே பிறகு மாறி இருக்கிறார்கள். விளங்கி மாறி இருக்கிறார்களா? காலமும் சூழ்நிலைகளும் கொடுத்த நெருக்கடியால் மாறி இருக்கிறார்களா?  வட்டம் சுருங்கி விட்டது. கழுத்தை நெரித்து விட்டது என்பதால் மாறியதாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்களா? அல்லாஹ் அறிவான்.


பத்ரு மாதிரியான போர்கள் இன்றும் செய்ய வேண்டும். இப்படி எண்ணக் கூடியவர்களுக்கும் சொல்லக் கூடியவர்களுக்கும் அல்லாஹ் அழகான படிப்பினையை சொல்லிக் காட்டி இருக்கிறான். அல்லாஹ் உடைய துாதர்(ஸல்) எந்த ஒரு செயல் செய்தாலும் அது நம் புறத்திலிருந்து உள்ள அனுமதியைக் கொண்டுதான் செய்கிறார். அவர் மனோ இச்சைப்படி எதுவும் சொல்வதில்லை செய்வதில்லை. அவர் பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை என்று (அல்குர்ஆன்53:2-4) அல்லாஹ் நற்சான்று அளித்துள்ளான்.


இன்று ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முஸ்லிம்களும் அந்தந்த நாட்டு அரசுக்கு எதிராக போர் செய்ய வேண்டும். போர் செய்யுங்கள் என்று அல்லாஹ்விடமிருந்து வஹி வந்து கொண்டிருக்கவில்லை. மனோ இச்சைப்படி எதுவும் சொல்வதில்லை செய்வதில்லை. பாதை மாறவுமில்லை. வழி கெடவுமில்லை என்று முஹம்மதுநபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் நற்சான்று உள்ளது. அதுபோல் அல்லாஹ்வின் நற்சான்று இன்றுள்ள யாருக்கும் கிடையாது.


அல்லாஹ்வின் துாதர் முஹம்மதுநபி(ஸல்) அவர்கள்தான் வஹி தொடர்புடன் இருந்தார்கள்மேலும் லா யுகல்லிபுல்லாஹ நப்ஸன் இல்லா உஸ்ஹஹா”  எந்த ஒரு ஆத்மாவுக்கும் அவரது சக்திக்கு மீறிய சிரமத்தை அல்லாஹ் தர மாட்டான்(2:286) என்று திருமறையில் கூறி உள்ளான். எனவே எந்த நாட்டிலுமுள்ள முஸ்லிம் கூட்டத்துக்கும் போர் செய்யும்படி கட்டளை கிடையாது. போர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் கிடையாது.


நாம் ஒரு நாட்டுக்கே சொந்தக்காரராக அதிகாரம் உடைய ஆட்சியாளராக இருந்தாலும் வேறு மதத்தினரை மதித்து நடக்க வேண்டும். இதற்கு யூதர்களுடன் இறைத்துாதர்(ஸல்) செய்த ஒப்பந்தத்தில் படிப்பினை இருக்கிறது. முன் மாதிரி இருக்கிறது. அதில் உள்ள படிப்பினைகளை முன் மாதிரிகளை பின்னர் பார்ப்போம்.


ஒரு நாட்டுக்கே சொந்தக்காரராக அதிகாரம் உடைய ஆட்சியாளராக இருந்த இறைத் துாதர்(ஸல்) யூதர்களோடு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துகிறார்கள். அந்த நேரத்தில் இறைத் துாதர்(ஸல்)  நினைத்து இருந்தால் யூதர்களை மதீனாவை விட்டே விரட்டி இருக்கலாம். விரட்டி இருக்க முடியும். அல்லது கட்டாயப்படுத்தி முஸ்லிம்களாக மதம் மாற்றி இருக்கலாம். சக்தி இருந்தது. ஆட்சியும் அதிகாரமும் இருந்தது.


ஆட்சி அதிகாரம் என ஏன் சேர்த்து குறிப்பிடுகிறோம் என்றால் சிலரிடம் ஆட்சி இருக்கும் அதிகாரம் இருக்காது. அதிகாரம் இருக்கும் ஆட்சி இருக்காதுஅமைப்புகளின் தலைவர்களாக இருப்பார்கள். அவர்கள் டம்மிகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பின்னால் ஒருவன் இருந்து இயக்கிக் கொண்டிருப்பான். மன்னிக்கவும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பான். அவர்தான் மம்மி. மற்றவர்கள் டம்மி.


பெயரளில் பெண் கவுன்சிலர்கள் இருப்பார்கள்ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி என தலைவர்களாக பெண்கள் இருப்பார்கள்இருந்தாலும் அதிகாரம் முழுவதும் ஆண்களிடமே இருக்கும். அவர்களது கணவர்களிடமே இருக்கும். ஆண்களே முதல்வர்களாக பிரதமர்களாக இருந்தாலும் ஆட்சி அவர்களிடம் இருக்கும் அதிகாரம் பெண்களிடம் இருக்கும். நமக்கு உதாரணங்கள் கூறி விளக்க வேண்டிய விஷயங்கள் அல்ல இவை.


சர்வ அதிகாரமும் உடைய சக்திமிக்க ஆட்சியாளராக  இருந்தபோதுதான் இறைத் துாதர்(ஸல்) அவர்கள் யூதர்களுடன் ஒப்பந்தத்தை போடுகிறார்கள். ஒரு நாட்டுக்குள் வாழ வேண்டியவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு அல்லாஹ் உடைய துாதரிடம் அழகான ஒரு படிப்பினை முன் மாதிரி இருக்கிறது. அதை மதீனாவில் யூதர்களுடன் போட்ட ஒப்பந்தத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.         


தொடரும் இன்ஷாஅல்லாஹ்

 அடுத்த தலைப்பு 
காந்திஜியை ஏன் போட்டுத் தள்ளினார்கள்


முந்தைய தலைப்பு

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.