உலகில் எதற்கெல்லாம் போர்கள் நடந்துள்ளன?.
மக்காவில் முஸ்லிம்கள் துறந்து விட்டு வந்த பொருளாதாரங்கள் கணக்கில்
அடங்காதவை. அவற்றையெல்லாம் சேர்த்துக் கொண்டே மக்காவாசிகள் வியாபாரம் செய்யப்
போனார்கள். அதில் வரும் இலாபங்களைக் கொண்டே முஸ்லிம்களை எதிர்த்து போர்
செய்வதற்கும் முஸ்லிம்களை அழிப்பதற்கும் மக்காவாசிகள் தயாரானார்கள். அந்த வியாபார
கூட்டத்தைத்தான் வழிமறித்து போர் வராமல் தடுக்க, முறியடிக்க முயற்சி செய்தார்கள்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.
முறியடிப்பதற்காக செய்த முயற்சிகள் எட்டு. அந்த எட்டு முயற்சிகளும் ஒன்றுமில்லாமல்
போய் விடுகின்றன. வெற்றி தோல்வி என்று சொல்ல முடியாது. ஒன்பதாவது நிகழ்வாகத்தான்
பத்ரு களம் அமைகிறது. பத்ருப் போர் என்று சொல்லப்படும் சம்பவம் நடை பெறுகிறது.
எனவே இந்த எட்டு சம்பவங்களையும் எங்கு நடந்தது. எப்பொழுது நடந்தது? என்பதையும்
நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்தவர்கள் நினைவுக்கு கொண்டு வர வேண்டும்.
வரலாற்றை தெளிவாகத் தெரிந்தால்தான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு கொண்டு
வந்தால்தான். உண்மை நிலையை தெளிவாக உணர முடியும். இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இறைத் துாதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த 57 போர்களில் அவர்கள் கலந்து கொண்டது19. கலந்து கொள்ளாதது 38. அத்தனை
போர்களிலும் நோக்கம் என்னவாக இருந்தது. நாடு பிடிப்பதற்காக உலகத்தில்
எத்தனையோ போர்கள் நடந்து உள்ளன. நாடு பிடித்தல் என்ற நோக்கம்
இறைத் துாதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் இருந்ததா? நிச்சயமாக இல்லை.
பக்கத்து நாடு பெரிய பணக்கார நாடாக இருக்கிறது. அந்த நாட்டை சூறையாடினால் நமது நாட்டு வளத்தை பெருக்கிக் கொள்ளலாம்.
இவ்வாறு பொருளாதாரத்தை கொள்ளை அடிக்கும் நோக்குடன் உலகில் பல போர்கள்
நடந்துள்ளன. இப்படி கொள்ளை அடிக்கும் இந்த எண்ணம் அல்லாஹ்வின்
துாதரிடம்(ஸல்) இருந்ததா? நிச்சயமாக கிடையாது.
அண்டை நாட்டில் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பதற்காகவும் போர்கள் நடந்துள்ளன. எத்தனையோ நாட்டு அரசர்கள் அடுத்த நாட்டு இளவரசியை
கல்யாணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே படை நடத்தி சென்றுள்ளார்கள். போர்கள் நடத்தி உள்ளார்கள். இளவரசிகளை கடத்தி சென்ற மாமன்னர்களும்(?)
உண்டு. இளவரசிகளை கவர்ந்து சென்றவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களை மன்னாதி
மன்னர்கள்(?) என்று வரலாறு வர்ணிக்கும்.
அதனால் இரண்டு நாடுகளிலும் இங்கு லட்சம் அங்கு லட்சம் என படை வீரர்கள் மாண்ட வரலாறுகள்
உலகில் உண்டு.
குறிப்பாக வரலாறு பதிய வைக்கப்பட்ட காலத்திலேயே ஏராளமாக உள்ளன.
அதை விரிவாக எழுதினால் அது வேறு விதமான ரசனையாக போய் விடும்.
இந்த மாதிரி எண்ணமும் இங்கு இல்லை.
நல்ல ஒரு முடியாட்சி அமைக்க வெண்டும். சர்வ அதிகாரமும் பெற்ற அரசனாக, மன்னனாக, ராஜாவாக ஆக வேண்டும் என்று போர் தொடுத்த வரலாறுகளும் உலகில் உண்டு.
அந்த மாதிரி ரசூல்(ஸல்) அவர்கள்
விரும்பினார்களா? அதுவும் கிடையாது.
இன வெறிக்காக நடந்த போர்களும் உள்ளன. இன வெறிக்காக உலகில் சிந்தப்பட்ட ரத்தம் பெருங்கடலுக்கு சமமாக இருக்கிறது.
அவ்வளவு மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். எந்த
பிரச்சனையும் கிடையாது. நியாயம் அநியாயம் என ஒன்றும் இருக்காது. வெறும் இன வெறிதான்.
இன வெறிக்காகவே கறுப்பர்களின் குழந்தைகள் ஏராளமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இன வெறிக்காக நடந்த போர் என்று இஸ்லாமிய வரலாற்றில்
ஒரு நிகழ்வு இருக்கிறதா? இன வெறிக்காக இவர் கொல்லப்பட்டார் என
ஒரு விஷயத்தை விரல் நீட்டி சொல்ல முடியுமா? ஆக இதுவும் கிடையாது.
மத வெறிக்காக நடந்த போர்களும் உண்டு. இஸ்லாம் மட்டும்தான் சிறந்த மார்க்கம் உண்மை மார்க்கம் என்பதுதான் உண்மை.
இதை நிலைநாட்ட போர் என இஸ்லாம் கூறி இருக்கிறதா?
”(இஸ்லாமாகிய) இம்மார்க்த்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை”
என்று அல்குர்ஆன் 2;256 இல் கூறி நிர்ப்பந்தம்
இல்லை என்கிறது இஸ்லாம்.
ஒருவனை எப்பொழுது நிர்ப்பந்திக்க முடியும். நம் உதவியை நாடி வரும்போது நிர்ப்பந்திக்க முடியும். நிர்க்கதியாகி நாமே அடைக்கலம் என்று வந்து விட்டவர்களை எளிதில் மடக்கி விடலாம்.
அந்த நிலையிலும் இஸ்லாம் என்ன செய்யச் சொல்கிறது பாருங்கள்.
இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளை
செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவரை அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக!
அவர்கள் நிச்சயமாக அறியாத சமுதாயமாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன்9;6) என்கிறது.
அடைக்கலம் தேடி வந்தவர்களிடம் கூட இஸ்லாத்தை ஏற்கும்படி நிர்ப்பந்திக்காமல்
அவர்களை அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் சேர்த்து விடச் சொல்கிறது இஸ்லாம். அவர்களுக்கு
அந்த நேரத்தில் என்ன உதவிகள் தேவையோ அந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று
சொல்கிறது.
அதனால் தான் இன்றும் பேரிடர் என்றால் பேருதவிகள்
செய்ய முஸ்லிம்களாகிய நாம் போட்டி போட்டுக் கொண்டு செல்கிறோம். சுனாமி வந்ததும்
கடலைக் கண்டு மக்கள் பயந்து வெருண்டு ஓடினார்கள். த.மு.மு.க.வினரோ ஜாதி மத
பேதமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட கடலை நோக்கி ஓடினார்கள். அன்றைய பிரதமர்
அசந்து போய் பாராட்டினார்.
சென்னைப் பெருமழை வெள்ளத்தில் மக்கள் வீட்டில் முடங்கிக் கிடந்தார்கள். இராணுவம்
வரவில்லை. இஸ்லாமியர்கள் வந்து விட்டார்கள். இராணுவத்தை விட மிக வேகமாக
செயல்பட்டார்கள். உண்ண உணவின்றி இருந்தவர்களுக்கு வெள்ளத்தில் நீந்தி சென்று தயாரிக்கப்பட்ட
உணவுகளைக் கொடுத்தார்கள். படகுகளைக் கொண்டு போய் மக்களை மீட்டு வந்தார்கள்.
பள்ளிவாசல்களில் தங்க அடைக்கலம் கொடுத்தார்கள். இது நாம் சொன்னவை அல்ல. உலக
மீடியாக்கள் சொன்னவை. அன்று பிரதமரின் பாராட்டு. இன்று முதல்வரின் பாராட்டு.
அடைக்கலம் தேவைப்படுவோருக்கு அடைக்கலம் அளிப்பீராக! இந்தக் கட்டளை அருள்
மறையில் 1400 ஆண்டுகளுக்கு முன் இடப்பட்ட கட்டளையாகும். அந்தக் கட்டளைதான் இன்றைய
சென்னைவாசிகளுக்கு பயன் அளித்துள்ளது. மற்றவர்களோ மழையைக் காரணம் காட்டி நடை
சாத்தினார்கள்.. பள்ளிவாசல்களின் நடைகள் முழுமையாக திறக்கப்பட்டன. ஐவேளை
தொழும்பள்ளிகள் பாதிக்கப்பட்டவர்களின்
அடைக்கலமாக ஆகியது.
(ஆக) தெளிவாக எடுத்துச் சொல்வதே துாதரின் கடமை(5;92) என்றும் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். அவர்களின் உள்ளங்களில் பதியும்படி கருத்தாழமிக்க சொல்லை கூறுங்கள்.
(4;63) என்று கூறும் அல்குர்ஆன்.
”… இஸ்லாத்தை ஏற்கிறீர்களா? என்று கேட்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர்வழி பெற்றனர். புறக்கணித்தால்
எடுத்துச் சொல்வதுதான் உங்கள் மீது கடமை” (3;20) என்றும்
கூறுகிறது. மதத்தைப் பரப்ப போர் இல்லை என்பதை விளக்கும் பல வசனங்கள் இன்னும் திருமறையில்
உள்ளன. மதத்தைப் பரப்ப போர் என கூறி இருந்தால் முகலாயர் காலத்திலேயே
இந்தியாவில் ஒரு இந்துவும் இல்லாமல் ஆகி இருப்பார்கள்.
முகலாயர் ஆட்சி காலத்திலேயே இந்தியாவில் மட்டும் அல்ல அதன் அண்டை நாடுகளிலும் இந்து
என்றோ புத்தன் என்றோ அல்லது கிறிஸ்துவர்கள் என்றோ சொல்வதற்கு ஒருத்தர் கூட இல்லாமல்
ஆக்கி இருக்க முடியும். அந்த அளவுக்கு
வலுவான முடியாட்சி முகலாயர்கள் அமைத்து இருந்தார்கள். அப்படி
எதுவும் செய்யவில்லை. என்ன செய்தார்கள்?
கோயில்கள் கட்டிக் கொள்ள நிலங்களைக் கொடுத்தார்கள். இருந்த கோயில்களை இடிக்கவில்லை. ஏன் இஸ்லாம் அப்படி கற்றுத் தந்துள்ளது.
அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்!
என்கிறது (திரு குர்ஆன் 6:108) அடுத்தவர்களுடைய உணர்வுக்கு மரியாதை கொடு. அதனை இழிவு
படுத்தாதே. மற்றவர்களை மதித்து நட. அப்பொழுதுதான்
அவர்கள் உன்னை மதிப்பார்கள்.
அவர்கள் அவ்வாறு இருப்பது அவர்கள் கொள்கை. எனவே உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு
(109:6) என்றுதான்
இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அப்படி அல்லாமல் அடுத்தவர்கள் மதிக்கும்
சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து குளிர் காயச் சொல்லவில்லை. அப்படி வழிகாட்டும் அயோக்கியனை எல்லாம் இஸ்லாம் ஷைத்தான் என அடையாளம் காட்டி
உள்ளது.
தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலை இஸ்லாத்தில் கிடையாது. நமக்கு சக்தி இருக்கிறது என்பதற்காக நாம் நாலு
பேரை அடித்து விட வேண்டும் என்ற எண்ணம் எந்த ஒரு முஸ்லிமுக்கும் இருக்கக் கூடாது.
முஸ்லிம் வேடமிட்டு முஸ்லிம்களிடம் ஊடுருவியுள்ள யூதக் கைக்
கூலிகள். இஸ்லாமிய அறிஞர்கள் என்ற போர்வையில் தப்பாக வழி காட்டி இருக்கலாம்.
அல்லாஹ்வின் துாதர் அழகிய முன் மாதிரி முஹம்மது நபி (ஸல்) அப்படி வழி காட்டவில்லை.
அப்படி ஒரு எண்ணம் நிச்சயமாக அவர்களிடம் இருக்கவில்லை.
தொடரும்
இன்ஷாஅல்லாஹ்
முஸ்லிம்கள் நடத்தியது போர்களா? போராட்டங்களா? பாகம்8.
முந்தைய தலைப்பு
Comments