சித்திக் சென்றபோது 3 பைக்கில் பின்தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது.
சென்னையில் இரவில் பைக்கில் கொண்டு செல்லப்பட்ட 18 லட்சம் ரூபாயை ஹெல்மெட்டால் தாக்கி வழிப்பறி செய்த சம்பவத்தில் ஜூஸ் வியாபாரி ஒருவர், தானாக வந்து காவல் நிலையத்தில் சிக்கியுள்ளார்.
சென்னை எம்.கே.பி.நகர், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் முகமது அபுபக்கர் சித்திக் (36). இவர், சென்னை கடற்கரைப் பகுதியில் செயல்படும் பணப் பரிமாற்ற அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். 12-ம் தேதி இரவு 17.91 லட்ச ரூபாயை பைக்கின் சீட் பகுதியில் வைத்துக் கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள முதலாளி வீட்டுக்குச் சென்றார். அப்போது மூர்தருவில் உள்ள தனியார் வங்கி அருகே சித்திக் சென்றபோது 3 பைக்கில் பின்தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது.
பின்னர் அந்தக் கும்பல் சித்திக்கை ஹெல்மெட்டால் தாக்கியது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அந்தச் சமயத்தில் பைக்கில் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அந்தக் கும்பல் பைக்கில் தப்பியது. இதையடுத்து சித்திக், வடக்குக் கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இந்தச் சமயத்தில் காவல் துறை உயரதிகாரி ஒருவருக்கு இரவு 12 மணியளவில் போன் வந்தது. அதில் பேசிய நபர், ``நான் கலெக்டர் அலுவலகம் அருகே ஜூஸ் கடை நடத்திவருகிறேன். கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றபோது தனியார் வங்கி அருகே பிளாஸ்டிக் கவர் கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று பிரித்துப்பார்த்தேன். அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அதைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறினார்.
அதைக் கேட்ட காவல்துறை அதிகாரி, உடனே வாருங்கள், நான் என்னுடைய அலுவலகத்தில்தான் இருக்கிறேன் என்று தெரிவித்தார். போனில் பேசிய நபர், பிளாஸ்டிக் கவருடன் காவல் துறை அதிகாரியைச் சந்தித்து பணத்தை ஒப்படைத்தார். அதில் 8 லட்ச ரூபாய் இருந்தது. உடனே, பணத்தை ஒப்படைத்த ஜூஸ் வியாபாரியைப் பாராட்டினார் போலீஸார் அதிகாரி. அடுத்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்த அதிகாரி, புகார் கொடுத்த சித்திக்கை உடனே காவல் நிலையத்துக்கு வரும்படி கூறினார்.
பணம் கிடைத்த தகவல் சித்திக்கிற்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் சந்தோஷமாக காவல் நிலையம் வந்தார். இதற்கிடையில் ஜூஸ் வியாபாரியின் நடவடிக்கைகளில் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. உடனே சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதன்பிறகு ஜூஸ் வியாபாரியிடம் பிளாஸ்டிக் கவரில் எவ்வளவு ரூபாய் இருந்தது என்று விசாரித்தனர். முதலில் 8 லட்சம் ரூபாய் என்று திரும்பத் திரும்ப பதிலளித்தார் ஜூஸ் வியாபாரி
இதையடுத்து தங்கள் பாணியில் போலீஸார் ஜூஸ் வியாபாரியைக் கவனித்தனர். அப்போது, மீதிப்பணம் வீட்டில் இருக்கிறது என்று வியாபாரி கூறினார். உடனே அவரின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்து 7.90 லட்ச ரூபாயைப் பறிமுதல் செய்தனர். அதன்பிறகு, `மீதிப் பணம் எங்கே?' என்று கேட்டதற்கு வழக்கறிஞர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாக ஜூஸ் வியாபாரி கூறினார். அந்த வழக்கறிஞர்களை போலீஸார் தேடிவருகின்றனர். இந்த வழிப்பறி சம்பவத்தில் ஜூஸ் வியாபாரிக்குத் தொடர்பு உள்ளதா என்பது வழக்கறிஞர்கள் டீம் சிக்கியபிறகுதான் தெரியவரும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி
Comments