காக்கி மரங்களே கூறும் காக்கி மரங்களின் கதைகள்.பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையா?

மார்கழி பனி எங்களை
மார்போடு அணைத்தாலும்...!
சித்திரை வெயி்ல் எங்களை
கண்டு சிரித்தாலும்...!
பணியில் நிற்போம் காலூன்றி
தார்சாலை ஓரம்
மரம் போல் வேரூன்றி...!
உணர்வுகளையெல்லாம் உடைக்குள் மறைத்து
ஆசைகளையெல்லாம்
அளவோடு குறைத்து
பணியில் நின்ற நாட்கள் தாராளம்...!
பசியில் தவித்த நாட்கள் ஏராளம்...!
பகலிரவு
பாகுபாடு கிடையாது
மனவேதனைக்கு
குறைபாடு கிடையாது..!
காத்து நிற்போம் தெருவோடு
நாங்கள் காக்கிச்சட்டை கருவாடு...!
நீங்கள் பசுக்கு உணவளித்து புண்ணியம் தேடும் வேளை
நாங்கள் கொசுக்கு உணவளித்து மருந்தகம் நாடுவோம்...!
இருக்கும் வரை எங்கள் உயிர் துச்சமாகும்...!
இறந்த பிறகு வெறும் மூன்று லட்சமாகும்...!
வீட்டுக்கு அனுப்ப சம்பளம் வரும்
வீட்டுக்கு செல்ல சமயம் வருவதில்லை...!
தொப்புள்கொடி உறவானாலும் சிரித்து பேசி மகிழ கைபேசி கைகொடுக்கும்...!
பார்த்து வர
நினைத்தால் பணி வந்து குறுக்கே தடுக்கும்..!
பள்ளிக்கு செல்லும் பிள்ளையை அழைத்து வர தந்தை இங்கு இல்லை...!
பால்சுரக்கும் நேரத்தில் பிள்ளைக்கு பசியாற்ற இயலாத தாய்கள் இங்கே உண்டு...!
கல்பறக்கும் கலவரமோ?
குருதி தெறிக்கும் நிலவரமோ?
சட்டத்திற்கு உண்டு பாதுகாப்பு
காக்கிக்கு உண்டு பாதிப்பு..!
காக்கிச்சட்டை அணிந்து பார்...!
வெப்பம் உன்னை விரும்பும்...
தூசு உன்னுடன் துணை நிற்கும்...
பட்டினி உன்மேல் பாசம் காட்டும்...
நேரமின்மை உன்னிடம் நேசம் காட்டும்...
சித்திரை வெயிலில் சிலையாவாய்....
செங்குறுதியெல்லாம் ஆவியாகும்...
சாலையோர மரங்களெல்லாம்
சாமியாகும்...
தூக்கத்தில் வராது கனவு
தூக்கமே உனக்கு கனவாகும்...
சிறுநீர் வந்தால் சில மணி நேரம்...
பசி வந்தால் பல மணி நேரம்
அடக்கிப்பார்...
பனையளவு துயரம்....
திணையளவாவது புரியும்...
ஏ சமுதாயமே....!
காக்கிமரங்கள் நாங்கள்
கிளைகளை வெட்டிவிட்டு நிழல் தேடுவது நியாயமாகுமோ?
போற்றுவார் கண்டு ஆணவம் கொண்டதில்லை...
தூற்றுவோர் கண்டு வெறுப்பை உமிழ்ந்ததில்லை...
நன்மையும் தீமையும்
உன்னிடமும் உண்டு...
உன்னில் இருந்து வந்த எங்களிடமும் உண்டு...
போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
என் கடமை பணி செய்து கிடப்பதாகும்...
எனது கிளைகளை வெட்டினாலும் வேர்கள் மிச்சமுள்ளது தளிர்த்துக்கொண்டே இருப்பேன்...
என்றாவது ஒருநாள் தளிர்க்காமல் போயிருப்பேன் அன்று என் வேர்களும் வெட்டப்பட்டு இருக்கும்...
              >>>காக்கிமரங்கள்<<<

திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருச்செங்கோடு பகுதி டி.எஸ்.பியாக பதவி வகித்த விஷ்ணுபிரியா இன்று தனது குவார்ட்டஸ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடலூரைச் சேர்ந்த இவருக்கு வயது 27. இவர் 2010-2011 பேஜ் குரூப் 1 தேர்வில் தேர்ச்சியானவர். மிக நேர்மையான அதிகாரி.
பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பவர் விஷ்ணுபிரியா. இன்று காலையில், பெண் காவலர் ஒருவர், ஆசிரியை ஒருவரை அடித்துவிட ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கினர். உடனடியாக அங்கு சென்று, காவலர் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி, ஆசிரியர்களை சமாதானப்படுத்தி அனுப்பினார் விஷ்ணுபிரியா. அந்த அளவுக்கு இன்று காலையில் கூட பணியில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்ட இவர், திடுமென தனது குவார்ட்டர்ஸ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தலித் இளைஞர் கோகுல்ராஜ் வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து தனிப்படைகளில் ஒன்று விஷ்ணு பிரியா தலைமையில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்குக் காரணம் தெரியவில்லை.


பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலைக்கு உயரதிகாரிகளே காரணம் என்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பெண் டி.எஸ்.பி. மகேஸ்வரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஏற்பட்ட நெருக்கடியே விஷ்ணு பிரியவின் தற்கொலைக்குக் காரணம் என்று டி.எஸ்.பி மகேஸ்வரி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா, 27 தனது குடியிருப்பில் திடீரென நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூரை சேர்ந்த திருமணமாகாத நேர்மையான அதிகாரியான விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்புக்குள்ளாக்கி உள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜின் உறவினர், அல்லது வழக்கறிஞர் என நம்பப்படும் கோமதி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணை பற்றிய போலீசாரின் வெளியிட முடியாத ஆவணங்களை நாமக்கல் ஏ.டி.எஸ்.பி.யிடம் கேட்கிறார். ஏ.டி.எஸ்.பி யோ, கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை பற்றி கோமதி கேட்கும் தகவல்களை உடனடியாக கொடுக்குமாறு திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணு பிரியாவிற்கு உத்தரவிடிருக்கிறார். இந்நிலையில் கோகுல்ராஜ் வழக்கில் உயர் அதிகாரிகளின் தொல்லை தாங்க முடியாமல் பெண் டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா நேற்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
அதேநேரத்தில் விஷ்ணு பிரியாவின் தற்கொலைக்கும் கோகுல்ராஜ் கொலைக்கும் தொடர்பில்லை என்று உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு விஷ்ணு பிரியாவின் தோழியும், கீழக்கரை டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய மகேஸ்வரி, ''விஷ்ணு பிரியா காவல்துறையை மிகவும் நேசித்தார். அவர் பணம் எதுவும் வாங்காமல் செயல்பட்ட நேர்மையான அதிகாரி. மிகவும் திறமையான அதிகாரியும் ஆவார். தனிப்பட்ட முறையில் எனக்கு வரை கடந்த 6 ஆண்டுகளாக தெரியும். நானும் அவரும் மிகவும் நெருங்கிய தோழிகள்..
தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எல்லாம் விஷ்ணு பிரியா ஒரு கோழை கிடையாது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் என்னிடம் தான் கடைசியாக பேசினார். அவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு சென்றுவிட்டு வந்து என்னிடம் சுமார் மதியம் 2.48 மணியளவில் பேசினார். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென எஸ்.பி. லைனில் வருவதாக கூறிவிட்டு லைனை விஷ்ணு பிரியா துண்டித்துவிட்டார். அதன்பின் அவரது தொலைபேசி சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அவருக்கு வாழ்க்கையில் எந்தவித பிரச்னையும் இல்லை. போலீஸ் சொல்வதெல்லாம் சுத்த பொய். இதை சொல்வதால் என் வேலைகூட போகலாம். அதனால் எனக்கு பிரச்னை ஏதும் இல்லை. கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவருக்கு எல்லா மட்டத்தில் இருந்தும் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். அவருடைய தற்கொலைக்கு எஸ்.பி., டி.ஐ.ஜி. போன்ற உயரதிகாரிகள் தான் முழுக்க முழுக்க காரணம்.
காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், கோகுல்ராஜ் வழக்கில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜ் தரப்பில் இருந்தும் அவருக்கு அச்சுறுத்தல் இருந்துள்ளது. குறிப்பாக காவல்துறையினர், குற்றவாளிகள் அல்லாத 3 பேர் மீது குண்டாஸ் போட சொல்லி விஷ்ணு பிரியாவை வற்புறுத்தி உள்ளனர். இப்படி செய்ய எனக்கு உடன்பாடு இல்லை என்று அவர் என்னிடமே பலமுறை சொல்லி இருக்கிறார்.
நானும் ஒரு டி.எஸ்.பி. என்கிற முறையில் இதுபோன்ற அச்சுறுத்தல்களை தினமும்  எனது  மேல் அதிகாரி மூலம் சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன். குறிப்பாக, காவல்துறையில் பெண்களுக்கு இதுமாதிரியான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருகிறது.
இது தொடர்பாக முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் என்னைப்போன்ற பெண் காவலர்கள் பயமில்லாமல் பணியாற்ற முடியும். மேலும் இதுபோன்ற உயிரிழப்புக்களை தடுக்கவும் முடியும்" என்றார் ஆவேசமாக...

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.