மது ஒழிப்பு போராட்டம் வெற்றி பற்றி J.S ரிபாயி M. தமிமுன் அன்சாரி
மதுவைப் பற்றி இறைவனின் எச்சரிக்கை
மது மற்றும் சூதாட்டத்தைப் பற்றி உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள். அவ்விரண்டிலும் பெரும் கேடும், மனிதர்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டிலும் உள்ள பயனை விட கேடு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப் பெரியது. (திரு குர்ஆன் 2: 219)
மது அருந்துதல் அருவக்கத்தக்க செயலாகும்
நம்பிக்கை கொண்டோரே! நிச்சயமாக மது, சூதாட்டம், பலி பீடங்கள், குறி கேட்பதற்கான அம்புகள் அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.(திரு குர்ஆன் 5: 90)
நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையை வெறுப்பை ஏற்படுத்தவும் அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (திரு குர்ஆன் 5:91)
மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி صلى الله عليه وسلم அவர்களால் சபிக்கப்பட்டவராவர்
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி صلى الله عليه وسلم அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)
மேற்கூறப்பட்ட ஹதீஸ் அஹ்மத், இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம் ஆகிய கிரதங்களில் இடம்பெறும் போது “அல்லாஹ் சபிக்கிறான்” என்று வந்துள்ளது.
மது அருந்துபவன் சுவனம் புக மாட்டான்
மதுவில் மூழ்கி இருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான்” (ஹாகிம்)
“தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்”
மது அருந்துபவர்களுக்கு மறுமையில் புகட்டப்படும் பானம்
“போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு “தீனத்துல் கப்பால்” எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று” கேட்டனர். அது ‘நரகவாசிகளின் வேர்வை’ அல்லது ‘நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்’ என பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
மதுபோதையில் மரணித்தவன் சிலை வணங்கியைப் போலவனாவான்
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலை வணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அஹமத்
போதை தரும் அனைத்துமே மதுவைச் சேர்ந்ததாகும்
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்
வெவ்வேறு பெயர்களில் உள்ள மது வகைகள் பற்றிய எச்சரிக்கைகள்
‘என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்’ அறிவிப்பவர் : அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா
‘விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்’ (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
மது அருந்தியவனுக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் கொடுத்த தண்டனை
நபி صلى الله عليه وسلم அவர்களின் காலத்தில் மது அருந்தியவனைப் பார்த்து, “அவனை அடியுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது எங்களில் சிலர் செருப்பாலும், ஆடைகளினாலும் கரத்தாலும் அவனை அடித்தனர்.” (ஆதாரம் : புகாரி)
மது அருந்திய நிலையில் மரணித்தால் நரகில் நுழைவான்! அதிலிருந்து விடுபட்டு பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் மன்னிப்பான்
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)
ஆல்கஹால் பற்றிய இஸ்லாத்தின் நிலைபாடு என்ன?
போதையை உண்டுபண்ணக் கூடிய ஒன்றாகும். போதை தரும் எந்தப் பொருளையும் நாம் உண்ணக் கூடாது என்பது மார்க்கத்தின் கட்டளை.
போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் ( صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.
6124 حَدَّثَنِي إِسْحَاقُ حَدَّثَنَا النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ لَهُمَا يَسِّرَا وَلَا تُعَسِّرَا وَبَشِّرَا وَلَا تُنَفِّرَا وَتَطَاوَعَا قَالَ أَبُو مُوسَى يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ يُصْنَعُ فِيهَا شَرَابٌ مِنْ الْعَسَلِ يُقَالُ لَهُ الْبِتْعُ وَشَرَابٌ مِنْ الشَّعِيرِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ رواه البخاري
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் "அல்பித்உ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் "மிஸ்ர் என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி) நூல்: புகாரி 6124
அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: திர்மிதீ 1788 நஸயீ 5513. 3725
و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால் போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் (3995)
3728 وَفِي حَدِيثِ صَالِحٍ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ شَرَابٍ مُسْكِرٍ حَرَامٌ رواه مسلم
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள்.
முஸ்லிம் (4071)
மேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காக இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது.
கடை அடைப்பு போராட்டம் வெற்றி: போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்ய தமுமுக வலியுறுத்தல்!
TUESDAY, 04 AUGUST 2015 14:38

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
மதுவிலக்கை கொண்டுவரவும், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் தமிழகம் முழுவதும் இன்று மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த கடை அடைப்பு போராட்டத்திற்கு தமுமுக தனது முழு ஆதரவை அளித்திருந்தது.
இந்நிலையில் இன்று ஒருசில நகரங்களைத் தவிர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடை அடைப்பு முழு வெற்றி பெற்றிருக்கிறது. பல இடங்களில் மறியலும், டாஸ்மாக் கடை முற்றுகையும் நடந்திருக்கிறது.
தமிழகத்தையே சீரழித்துக் கொண்டிருக்கும் மதுவை விலக்கக் கோரிய இந்தப் போராட்டத்தை வெற்றியடையச் செய்த கட்சித் தொண்டர்களுக்கும், சமூக அக்கறைக் கொண்ட நல்லுள்ளங்களுக்கும், வணிகர்களுக்கும், பத்திரிக்கை யாளர்களுக்கும் தமுமுக தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
அதேசமயம் இந்தப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காக தமுமுக நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகளைக் கைது செய்து தனது வன்முறையை அரசு காட்டியிருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். ஜனநாயக வழியில் போராடிய அந்த மக்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்துகிறோம்.
இந்தப் போராட்டத்திற்குப் பிறகாவது மதுக் கடைகளை அகற்றுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் இந்த அரசை அகற்றுவதற்கு தமிழக மக்கள் தயங்க மாட்டார்கள் என்று எச்சரிக்கிறோம்.
இவண்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர், தமுமுக
மக்கள் ஆதரவு பெற்ற மது எதிர்ப்பு போர்க்களம்..!
(மமக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களின் சிறப்பு கட்டுரை )
ஆகஸ்ட் 4 , 2015 அன்று மதிமுக , மமக , விடுதலை சிறுத்தைகள் , சி . பி . எம் , மற்றும் சி .பி .ஐ கட்சிகள் இணைந்து நடத்திய முழு அடைப்பு போராட்டம் ஆனது கடையடைப்பு , மதுக்கடை மறியல், மதுக்கடை முற்றுகை என மிகுந்த எழுச்சியோடு நடைபெற்று ,மது எதிர்ப்பு போராட்டக் களத்தை மக்கள் போராட்டமாக முன்னெடுத்திருக்கிறது .
இதற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும் ஒரு காரணமாகும் . மறுபுறம் காவல்துறைக்கும் நன்றி சொல்ல வேண்டும் .நீண்ட நாட்களுக்கு பிறகு மமகவினர் அவர்களால் உற்சாகம் பெற்றிருக்கின்றனர் .
முதல் நாள் இரவு முதல் அவர்கள் நடத்திய முன் எச்சரிக்கை கைதுகள் ,போரட்ட களத்தை வீரியம் கொள்ள வழி வகுத்தது .
முதல் கைது மமகவின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் அமீர் என எனக்கு தகவல் கிடைத்தது . அடுத்து மமகவின் மாநில அமைப்புச் செயலாளர் செய்யது முகம்மது பாருக் அவர்களின் இல்லத்திற்கு காவல்துறை சென்றிருக்கிறது .
அடுத்தடுத்து தர்மபுரி , நாமக்கல் , கிருஷ்ணகிரி , விழுப்புரம் , நெல்லை , தூத்துக்குடி ,என பல மாவட்டங்களில் மமகவினர் கைது செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததும் , நான் மற்ற மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு எல்லோரும் ’உஷாராக’ இருங்கள் என தகவல் கொடுத்தேன் .
விடியற்காலையிலேயே பலர் கைது செய்யப்பட்டனர் . துண்டு பிரசுரங்களை கொடுத்தவர்கள் , போராட்டக் களத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தவர்கள் என பலர் காலை 9 மணிக்கு முன்பாகவே கைது செய்யப்பட்டனர் .
மமகவினர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி பரவத் தொடங்கியதுமே , களம் வீரியமடைந்தது . மக்களை திரட்ட முடியாவிட்டாலும் , போராட்டத்தை எப்படியாவது வெற்றிப் பெற வைத்துவிட வெண்டும் என்ற ஆவேசம் பற்றியது .
மிகுந்த எழுச்சியோடு தொண்டர்கள் களத்தில் கூடினர் . தஞ்சாவூர் போராட்ட களத்தில் இருந்த நான் , ஒவ்வொரு மாவட்டத்தையும் தொடர்புக் கொண்டு , கள நிலவரத்தைக் கேட்டப்படியே இருந்தேன் . போராட்டக் குழுவைச் சேர்ந்த கட்சிகளின் ஒத்துழைப்பு குறித்தும் கேட்டறிந்தேன் .
50 பேர் தொடங்கி 500 பேர் வரை கிராமம் , பேரூர் , நகரம் , மாநகரம் எங்கும் போராட்டக் களம் திட்டமிட்டவாறு நடந்ததை அறிந்தப் போது உற்சாகம் அடைந்தோம்.
பெண்களும் , கல்லூரி மாணவர்களும் நேற்று போராட்டத்தில் குதித்தது பெரும் எழுச்சியை கூட்டியது .மதுக்கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த தகவல்களும் , அன்று மதுக்கடைகள் 90 சதவீத விற்பனையின்றி வெறிச்சோடி கிடந்த தகவல்களும் பெரும் மகிழ்ச்சியை தந்தது .
பரவலாக கடைகள் மூடப்பட்டிருந்ததையும் , பல இடங்களில் காலை 11 மணி வரை கடைகள் மூடப்பட்டிருந்ததையும் தொலைக்காட்சிகள் காட்டின .
இதை தஞ்சாவூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் கூறினேன் . அப்துல் கலாம் அவர்களுக்காக கடந்த ஜூலை 28 , 30 ஆகிய தினங்களில் கடையடைப்பு நடந்துள்ள நிலையில் , நமது கோரிக்கையை ஏற்று 50 சதவீத கடைகள் ஒரே வாரத்தில் மீண்டும் அடைக்கப்பட்டது எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி என்றேன் .
தமிழகம் முழுக்க போராட்டம் எழுச்சியாக நடைபெற்றது குறித்து குணங்குடி ஹனிபா அத்தா அவர்கள் என்னிடம் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் . அதே போன்று மல்லை . சத்யாவும் பேசினார் .
அண்ணன் J.S ரிபாயி அவர்களும் , அண்ணன் ஹைதர் அலி அவர்களும் இப்போராட்டக் களம் மூலம் மமகவின் மது எதிர்ப்பு கொள்கை அடுத்தக் கட்டத்திற்கு எழுச்சியோடு நகர்ந்திருப்பதாக என்னிடம் மகிழ்ச்சியோடு கூறினார்கள் .
சென்னையில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் . ஜவாஹிருல்லாஹ் அவர்கள், தமிழகம் முழுக்க கள நிலவரம் எப்படி இருக்கிறது ? என்றார் . விபரங்களை சொன்னதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் , முன் எச்சரிக்கையாக கைதானவர்களை சட்டரீதியாக விடுவிக்கக் முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் கூறினார் .
மாலை அண்ணன் வைகோ அவர்களிடம் தொடர்புக் கொண்டு , நமது 5 கட்சிகளின் கூட்டுப் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது என்றேன் .
அவர் , ஆளுங்கட்சியின் எதிர்ப்பை மீறி , பெரிய கட்சிகளின் ஆதரவின்றி இந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது என்றார் .மமகவின் பங்களிப்பை சிலாகித்து பேசினார் .
மாலை 6 மணிக்கு தமிழகம் முழுக்க அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் . 4நாளில் அறிவிக்கப்பட்ட இப்போராட்டம் பெரும் எழுச்சியோடு நடத்தப்பட்ட மகிழ்ச்சியில் மமகவினர் சமூக இணைய தளங்களில் படங்களை வெளியிட்டு அதிர வைத்தனர் .
மமகவின் தலைமை நிர்வாகிகள் கள நிலவர தொகுப்பை அன்று மாலை துல்லியமாக தந்தபோது ஒரு பெரும் மன நிறைவு ஏற்பட்டது .
தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி மமக என மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது .
“ நாங்கள் கடலில் மிதக்கும்
கட்டு மரங்கள் அல்ல …
அலை கடலை கிழித்துச் செல்லும்
போர் கப்பல்கள் ”
Comments