சிதற வேண்டிய பிம்பம் : அப்துல் கலாம் நிச்சயம் இந்த பிம்பம் உடைப் பட வேண்டும்.


சிதற வேண்டிய பிம்பம் :
அரசு எல்லா காலத்திலும் ஒருவரை முன்னிலைப்படுத்தும், அவரை சுற்றி ஒரு பெரிய பிம்பத்தை கட்டமைக்கும். அவர் எப்படி பட்டவராக இருப்பார் என்றால், அரசிற்கு எதிராக கருத்து தெரிவிக்காதவராக, மக்களுக்கு பயன் படாத திட்டங்களை எதிர்த்து கலகம் செய்ய மறுப்பவராக இருப்பார். கலாம் அத்தகையவர். அரசு கட்டமைப்பை எந்த விமர்சனமும் இல்லாமல் ஆதரிக்க கூடியவர். அவரை மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக ஆக்குவதன் மூலம், மக்கள் அனைவரையும் அப்படி மாற்ற அரசு முயற்சி செய்கிறது என புரிந்தது.

அதாவது, யாரும் அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக எதிர் நிலை எடுக்காதீர்கள். அரசை நம்புங்கள் அது உங்களுக்கு நன்மை செய்யும். பாருங்கள் கலாமை.... அவர் போல் படித்து முன்னுக்கு வாருங்கள்... அவர் போல தேச துதி பாடுங்கள். இங்குள்ள சாதிய, மத கட்டமைப்பை பற்றி பேசாதீர்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே அரசு நமக்கு சொல்லும் சேதி.
நிச்சயம் இந்த பிம்பம் உடைப் பட வேண்டும்.
கலாமும், உமேஷ்களும்...
- மு. நியாஸ் அகமது. nomadniya@gmail.com

சூலை 27, இரவு 8.15 மணி, டெல்லி நண்பனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வருகிறது, "Kalam Passes Away" குறுஞ்செய்தியை பார்த்துவிட்டு அவனுக்கு தொடர்பு கொள்கிறேன், இணைப்பு பிஸியாக இருக்கிறது. மொபைலில் தரவிறக்கி வைக்கப்பட்டிருந்த டைம்ஸ், NDTV செயலிகள் எல்லாம், “Kalam is Hospitalized" என்ற செய்தியை மட்டும் தான் தந்தன.thequint.com என்ற தளத்தில் மட்டும், கலாம் இறந்த செய்தி பதிவேற்றப்பட்டிருந்தது.
என் முகநூல் பக்கத்தில் கலாம் இறந்த செய்தியை பகிர்கிறேன். நண்பர்களிடமிருந்து தொடர் அழைப்புகள், தவறான செய்தியை நான் பகிர்ந்துவிட்டதாகவும், உடனே அதை நீக்க வேண்டும் என்று மிரட்டல் தொனியில் இருந்த அழைப்புகள். அனைத்து முக்கிய தமிழ் செய்தி சேனல்களிலும் கலாம் குறித்த ஒரு செய்தியும் வரவில்லை. எனக்குள் ஒரு விதமான அச்சம், தவறான செய்தியை பதிவிட்டு விட்டோமோ என்ற பதற்றத்துடன் தொலைக்காட்சியில் ஒளி அலைவரிசைகளை (channel) மாற்றுகிறேன். News 7 Tamil தொலைக்காட்சியில், பனிமலர் மட்டும் கண்களில் ஒரு வித மிரட்சியுடன் செய்தியை வழங்கி கொண்டிருந்தார். (காட்சி ஊடகத்தில் கலாம் செய்தியை முதன் முதலாக தந்தது News 7 Tamil - பனிமலர்). பிறகு எனக்கு வந்த அழைப்புகளுக்கு News 7 Tamil தொலைக்காட்சியை பாருங்கள் என்று பரிந்துரைத்துவிட்டு அலுவலகத்தில் இருந்து அறைக்கு செல்கிறேன். அறையில் தொலைக்காட்சி பெட்டி கிடையாது. தொலைக்காட்சி பெட்டி வாசிப்புக்கு இடையூறாக இருக்கும் என்று வாங்கவில்லை.
கட்டுரை ஒப்புவித்தல் போட்டியும் கதாநாயகனும்:
அறையில் கலாம் குறித்த நினைவுகளில் மூழ்குகிறேன். பள்ளி காலத்தில் நாடகங்கள், பாரதி கவிதைகள் ஒப்புவித்தல் போட்டி என நானும் நண்பன் சுதர்சனும் இருக்க, பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்கும் சுகன்யா, பிரசன்னா, அலெக்ஸ் இவர்கள் ஆங்கில கட்டுரை போட்டிகளில் முதல் பரிசை வெல்வார்கள். பெரும்பாலும், அவர்கள் கட்டுரை, பேச்சு பொருளாக கலாம் இருப்பார். கலாம் குறித்து முன்பே படித்து இருந்தாலும், இவர்கள் கலாம் குறித்து ஆங்கிலத்தில் பேசி பரிசை வெல்வது, கலாம் மீது ஒரு ஈர்ப்பை உண்டாக்கியது. பின்பு, 2004 ஏப்ரல் மாதம், கலாமிடமிருந்து என் தந்தைக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. தந்தை அனுப்பிய மனவாசனை கவிதை தொகுதியை படித்ததாகவும், அதில் “பள்ளி வாசலில் பைப்பிள் நடத்த, கோயில் குருக்கள் குரான் ஓத, பாதிரி மார்கள் கீதை சொல்லும் பக்குவம் வருவதே மிகவும் பிடிக்கும்’ என்ற வரிகள் நன்றாக இருந்தது என்று குறிப்பிட்டு இருந்தார்.
அப்போது கலாம் அதிபராக இருந்தாலும், கடிதத்திற்கு அஞ்சல் தலை ஒட்டி அனுப்பி இருந்தார். அதை அவர் மீது ஒரு பெரும் மதிப்பையே ஏற்படுத்தியது. அவர் எனக்கு கதாநாயகன் ஆனார். அவரை தேடி தேடி வாசிக்க ஆரம்பித்தேன்.
கதாநாயகன் மீதான சந்தேகங்கள்:
கல்லூரி காலத்தில் தீவிர இடதுசாரி எழுத்துகள் மீது கவனம் சென்றது. அப்போது படித்த பலரது கட்டுரைகள் கலாம் அதிபராக பொறுபேற்றதை விமர்சனம் செய்வதாக இருந்தது. குஜராத் கலவரம் மீதும், அதை செயல்படுத்தியவர்கள் மீதும் ஏன் கலாம் ஒரு விமர்சனமும் வைக்கவில்லை என விமர்சிப்பதாக இருந்தது. தார்மீகமாக இடதுசாரிகள் நிறுத்திய அதிபர் வேட்பாளாரான சுதந்திர போராட்ட வீரர் லக்ஷ்மி சேகலை, கலாம் ஆதரித்து போட்டியிலிந்து விலகி இருக்க வேண்டும் என அப்போது படித்த பல இடதுசாரி பத்திரிக்கைகள் வாதம் செய்தன. கதாநாயகனை கிண்டல் செய்யும் பத்திரிக்கைகள் மீது ஒரு வெறுப்பு படர்ந்தாலும், அதில் எழுப்பபட்டிருந்த பல கேள்விகள் நியாயமாக பட்டது.
அப்போது நான் வாதம் செய்யும் சில உள்ளூர் இடதுசாரி தலைவர்கள் எல்லாம் - கலாம் நல்லவர் தான். அப்பழுக்கற்றவர் தான். பெரும் விஞ்ஞானி தான். ஆனால் முதலாளித்துவ அரசு அதற்காக அவரை முன்னிலைபடுத்தவில்லை. அவர் முதலாளிகளின் செல்லப் பிள்ளை. முதலாளித்துவத்தை மனதார ஏற்றுக்கொண்டவர், அதன் பிரதிநிதியாக செயல்பட்டவர். அவர்களிடம் எந்த கட்டத்திலும் முரண்படாதவர். ஆயுதங்கள் மீது நம்பிக்கை கொண்டவர். அவர் நியாயமானவர் என்பதற்காக அவரை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை. அவரை ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரிப்போம் - விமர்சிக்க, எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்ப்போம் - என்பதாக அந்த உரையாடல்கள் இருந்தன.
அதுவே சரியெனப்பட்டது. ஏசுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் மீது எனக்கு சில விமர்சனங்கள் உண்டு. அரசு, monarchy இதற்கெல்லாம் எதிராக கிளர்ந்து எழுந்து, அரசை எந்த பயமும் இல்லாமல் கேள்வி கேட்டவர் ஏசு. 'இது தேவன் வாழும் ஆலயம், விற்பனை கூடமல்ல..' என்று இறை வணிகர்களை சாட்டையால் அடித்தவர். ஆனால் அவர் இதையெல்லாம் தாண்டி அவருக்கு இருந்த ஆதரவை வைத்து அரசை கைப்பற்றி இருக்க வேண்டும் என்று நண்பர்களிடம் நான் விவாதிப்பது உண்டு.
கலாமை விமர்சனத்துடன் ஏற்றுக்கொள்ள பழகி இருந்தாலும் அவர் மீதான பிரமிப்பு அப்படியே இருந்தது.
கலாமால் வாழ்விழந்தவர்கள்:
கலாமால் வாழ்விழந்தவர்களை உங்களுக்கு தெரியுமா ...?
பசுமை விகடன் அஸைன்மெண்ட்டுக்காக முசிறி பக்கம் ஊர்களுக்கு சென்றிருந்தேன். அப்போது தான் கலாமால் வாழ்விழந்தவர்களை சந்தித்தேன். ஆம் கலாம் பேச்சைக் கேட்டு Jatropha - காட்டாமணக்கு பயிரிட்ட விவசாயிகள். எரிப்பொருளாக மிக பெரிய சந்தையை jatropha கைப்பற்றும் என்று கலாம் சொன்னதை நம்பி ஆயிரகணக்கான ஏக்கரில் பயிரிட்டு வாழ்விழந்தவர்கள்.

கலாம் குடியரசு தலைவராக இருந்த போது அவரை சந்திக்க வரும் விவசாயிகளிடம் Jatropaha பயிரிட அவர் உறுதி மொழி பெற்றதை அறிந்து அதிர்ந்தேன் . ஆனால் அவரிடம் எந்தவொரு தவறான உள்நோக்கமும் இருக்காது என்பதை அறிந்து என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்.
காலங்கள் ஓடியது...
2011 ஆம் ஆண்டு கூடங்குளத்திற்கு எதிராக தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்ற காலம். மீனவர்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் அணுமின் நிலையத்திற்கு எதிராகவும், அணு ஆற்றலுக்கு எதிராகவும் தீவிரமாக போராடி கொண்டிருந்தார்கள். உலக ஊடகங்களில் தலைப்பு செய்தியாக கூடங்குளம் இருந்தது.
அதே ஆண்டு நவம்பர் மாதம் என நினைக்கிறேன், கலாம் கூடங்குளத்தை பார்வையிட்டு அது பாதுகாப்பாக இருக்கிறது என பேட்டி கொடுத்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் அவரது பார்வையில் பாதுகாப்பானதாக இருக்கலாம், அவர் நம்பும் அறிவியல், படித்த படிப்பு அவருக்கு அதையே கற்று தந்து இருக்கலாம். ஆனால், அதை அவர் போராடிய குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்தி இருக்க வேண்டும். எங்கு சென்றாலும் குழந்தைகளை சந்திக்கும் மீனவ பின்புலத்தில் வந்த கலாம், எளிய மீனவ குழந்தைகளை சந்திக்க மறுத்தார்.
அவர் யாருக்கு வேலை செய்கிறார்... ? அவருடன் முரண்பட தொடங்கினேன்...
பின்பு, 2012 டிசம்பர் என நினைக்கிறேன், கோவையில் ஒரு பல்கலைகழகம் ஏற்பாடு செய்திருந்த - Sustainanle Development and Governance - என்ற கருத்தரங்கிற்கு வந்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்ததே எனக்கு முரணாகப்பட்டது - வளம் குன்றா வள்ர்ச்சி குறித்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் ஒருவர், எப்படி அணு ஆற்றலை ஆதரிக்க முடியும்... அங்கு அவருடன் நேரடியாக விவாதிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது FDI (Foreign Direct Investment)க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். பகீரென்று இருந்தது. அணு ஆற்றலுக்கு அவர் ஆதரவு தெரிவிக்கிறார் என்றால் அது அவர் கற்ற கல்வி, ஆனால் நேரடி அந்நிய முதலீடுக்கு ஆதரவு தெரிவிக்க என்ன காரணம்...? அவர் எப்போதும் அரசுடன் முரண்படமாட்டார் என புரிந்தது.
சமீபத்தில், நியூட்ரீனோ பற்றி அவரது கட்டுரை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதில் அவர் குறிப்பிட்டிருந்த பல தகவல்கள் முரண்பாடானது. அதில் அவர் நியூட்ரீனோ திட்டத்திற்கு ஒரு நாளுக்கு 350 குடும்பங்கள் பயன்படுத்த கூடிய நீர் தான் தேவை என குறிப்பிட்டு இருந்தார். ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலில் ஒரு நாளுக்கு 3.5 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை என கூறப்பட்டுள்ளது. (அவர் 350 அம்பானி குடும்பங்களை குறிப்பிட்டு இருப்பார் போல்...!)
இதற்கு மேல் இவரை நம்புவது பயன் அற்றது என எண்ண தொடங்கினேன்.
மரத்தை காக்க துணிவிருந்தால் மட்டும் மரம் நடுங்கள்:
உங்களுக்கு மரத்தை காக்க துணிவிருக்கிறதா... அப்படியானால் மரம் நடுங்கள்... என்ற பழங்குடி சொல்லாடலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன் நான். அனைவரும் மரம் நடுங்கள் என்றீர்கள்... ஆனால், ஐயா நீங்கள்... வளர்ச்சி என்ற பெயரில் அரசின் காட்டழிப்பிற்கு, பசுமை வேட்டை என்ற பெயரில் அரசு முன்னின்று செயல்படுத்திய பழங்குடி அழிப்பிற்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனியாக இருந்தீர்கள்.
புதிய மரங்கள் நடுவதை விட, இருக்கும் மரங்களையும் காடுகளையும் காப்பது மிக முக்கியம் என்பது உங்களுக்கு எப்படி புரியாமல் போனது.
ராமேஸ்வரம் நோக்கி பயணம்:
விவரம் தெரிந்த நாள் முதல் நான் ராமேஸ்வர தீவிற்கு சென்றதில்லை. செல்ல பல திட்டங்கள் போட்டு இருக்கிறேன் ஆனால் எதுவும் வெற்றியில் முடிந்ததில்லை. உங்களுக்கு அஞ்சலி செலுத்த ராமேஸ்வரம் நோக்கி வந்தேன். உங்களுடன் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும், மரண தண்டனைக்கு எதிரான உங்கள் நிலைப்பாடே உங்களுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த போதுமானதாக எனக்கு இருந்தது. தருமபுரியிலிந்து புறப்பட்டு திருச்சி வழியாக ராமேஸ்வரம் செல்ல திட்டம். சுற்று பாதையாக இருந்தாலும் இதை தேர்ந்தெடுக்க காரணம், காஞ்சிபுரத்தில் இருந்து புறப்படும் நண்பன் சசியை திருச்சியில் சந்தித்து அவருடன் ராமேஸ்வரம் செல்ல திட்டம்.
இரவு 1 மணிக்கு இருவரும் திருச்சியில் சந்தித்து, ராமேஸ்வரம் பேருந்தில் ஏறுகிறோம். எப்போதும் பேருந்தில் ஏறி பத்து நிமிடங்களில் தூங்கும் எனக்கு அன்று தூக்கம் வரவில்லை. கைப்பேசியில் யாக்கூப் மேமன் குறித்த செய்திகளை NDTV அப்டேட்டில் பார்த்து கொண்டிருக்கிறேன். மரண தண்டனையை ரத்து செய்வதே கலாமுக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும். அரசு உண்மையான அஞ்சலி செலுத்துமா என்ற ஐயம்... இரவு 2.30 மணிக்கு உச்சநீதிமன்றம் விசாரிப்பதாக செய்தி வந்தது. 3 வரை முழித்து இருக்கிறேன். பின்பு எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. ராமேஸ்வரத்தில் நண்பரின் வீட்டை அடைந்த போது ‘யாக்கூப் மேமன்’ தூக்கில் இடப்பட்டார் என்ற செய்தி ஓடி கொண்டிருந்தது.
காலம் முழுவதும் அரசு கட்டமைப்பை நம்பி, அதற்கு சேவை செய்வதே தன் பாக்கியமாக கருதிய கலாமின் விருப்பம் காற்றில் கரைந்தது.
கலாமும், உமேஷ்களும்:
கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு தனுஷ்கோடி அருகே உள்ள சத்திரம் கடற்கரைக்கு நானும் சசியும் செல்கிறோம். அங்கு உமேஷ் என்னும் மீனவ சிறுவன் நண்பனாகிறான். “ஸ்கூல் போகலையாடா...?” என்கிறோம்... “இன்னைக்கு... ஸ்கூல் லீவு... எங்க தாத்தா செத்துடாரு...” யாருடா உங்க தாத்தா...? “கலாம் தாத்தா தான்...” என்று கூறிவிட்டு டையரை உருட்டிக்கொண்டு ஓடுகிறான்.
ஆம். கலாம் தாத்தா... நீங்கள் இங்கு பலருக்கு உத்வேகம் அளிப்பவராக இருந்தீர்கள்... உங்களை குழந்தைகள் உலகம் கொண்டாடியது. ஆதர்ஷ புருஷனாக ஏற்றுக்கொண்டது. நீங்கள் உங்களுக்கு இருந்த வாய்பப்பைக் கொண்டு மிக பெரிய சமூக மாற்றத்தை உண்டாக்கி இருக்கலாம். ஆனால் நீங்கள் குழந்தைகளை அரசின் அடிவருடிகளாக மாற்றுவதிலேயே குறிப்பாக இருந்தீர்கள்.
சிதற வேண்டிய பிம்பம்: 
அரசு எல்லா காலத்திலும் ஒருவரை முன்னிலைப்படுத்தும், அவரை சுற்றி ஒரு பெரிய பிம்பத்தை கட்டமைக்கும். அவர் எப்படி பட்டவராக இருப்பார் என்றால், அரசிற்கு எதிராக கருத்து தெரிவிக்காதவராக, மக்களுக்கு பயன் படாத திட்டங்களை எதிர்த்து கலகம் செய்ய மறுப்பவராக இருப்பார். கலாம் அத்தகையவர். அரசு கட்டமைப்பை எந்த விமர்சனமும் இல்லாமல் ஆதரிக்க கூடியவர். அவரை மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக ஆக்குவதன் மூலம், மக்கள் அனைவரையும் அப்படி மாற்ற அரசு முயற்சி செய்கிறது என புரிந்தது. அதாவது, யாரும் அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக எதிர் நிலை எடுக்காதீர்கள். அரசை நம்புங்கள் அது உங்களுக்கு நன்மை செய்யும். பாருங்கள் கலாமை.... அவர் போல் படித்து முன்னுக்கு வாருங்கள்... அவர் போல தேச துதி பாடுங்கள். இங்குள்ள சாதிய, மத கட்டமைப்பை பற்றி பேசாதீர்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே அரசு நமக்கு சொல்லும் சேதி.

நிச்சயம் இந்த பிம்பம் உடைப் பட வேண்டும்.
கலாமிடம் கற்க ஆயிரம் நற்பண்புகள் உண்டு. அவரிடம் நாம் கற்க ஆயிரம் விஷயங்கள் உண்டு. சமநிலை தவறாமை, ஒழுக்கம், நேர்மை, எளிமை என, என் குழந்தைக்கு ஆயிரம் விஷயங்களுக்கு அவரை முன்னுதாரணம் சொல்ல முடியும்.
ஆனால் ‘நாயக வழிப்பாடாக’ இல்லாமல் அவரை நான் விமர்சனுத்துடன் தான் ஏற்று கொள்ள சொல்வேன்.
பின் குறிப்பு:
இறந்த மனிதரை இவ்வாறாக விமர்சனம் செய்ய கூடாது என சொல்லும் அன்பு நண்பர்களுக்கு.வரலாற்று தொடர்ச்சியில் நேற்றை விமர்சனம் செய்யாமல் நல்ல நாளை பிறக்காது.

புகைப்படம் :
1. அப்துல் கலாம் | 2. உமேஷ் | 3. தந்தைக்கு கலாம் அனுப்பிய கடிதம் | 4. இறுதி சடங்கில் | 5. ராமேஸ்வரத்தில் இறுதி சடங்கில் எடுத்தப்படம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு