சர்வாதிகாரமும் சர்வாதிகாரிகளும்



மார்க்கம் மிகத் தெளிவாக இருக்கின்றது. மனிதர்களின் புரிதல்களில் தான் கோளாறுகள் உள்ளன. அதனால் உண்டாகும் தவறுகள்தான் மார்க்கத்தின் பெயராலும் ஏராளமான பிரிவுகள் ஏற்பட காரணங்களாகும். கட்சிகள் பெயரால் பிரியவும் தவறான விளக்கங்களே காரணமாக ஆகின்றன. மக்களால் அறிஞர்கள் என்று நம்பப்படுபவர்கள் சொன்னால்தான் சரி என்று ஏற்றுக் கொள்ளும் மன நிலை அறிவாளிகளான(?) பெரும்பாலான மக்களிடம் உள்ளது.
ஒரு சபையில் மிகப் பெரிய அறிஞர்கள் என்று அறியப்பட்ட பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.  ஒரு விஷயத்தில் பக்கத்தில் உள்ள என்று சொல்ல வந்த பேச்சாளர் ஒருவர். வார்த்தை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அருகாமையில் உள்ள என்று சொன்னார்

அவையில் இருந்த அறிஞர்கள் என்று மக்களால் நம்பப்பட்ட அனைவரும் அதை  ரசித்தார்கள். அப்பாவியோ  (அவர் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக) அருகாமை என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டார். பளார் என்று பதில் அளித்தார் மக்களால் அறிஞர் என்று நம்பப்பட்டவர்.  அருகாமை என்றால் பக்கத்தில் என்று அர்த்தம் என்றார்.

அருகில், அருகா என்ற சொல்லே அருகில் என்றால் பக்கத்தில் என்றும். அருகா மை என்றால் துாரத்தில் என்றும் விளக்குகிறது. 

கல்லாமை, விளங்காமை, அறியாமை, புரியாமை, தெரியாமை மாதிரிதான் அருகாமை என்று முஸ்லிமான அப்பாவி சொன்னார். (அவர் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக) 

கூடி இருந்த அறிஞர்கள் குழு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அரபிக் கல்லுாரியில் படித்து பட்டம் பெற்றவர்கள், உலகக் கல்வி படித்த பட்டதாரிகள் இருக்கிறார்கள். இவ்வளவு பேருக்குத் தெரியாததா? உமக்கு தெரிந்து விட்டது என்ற வார்த்தையால் தீர்ப்பு கூறி விட்டார்கள். அறிஞர்கள் குழுவினர். இது நடந்தது 1987 ஆம் ஆண்டில்.

இந்த அறிஞர்கள் குழுவினர் தீர்ப்பளித்த சில நாட்களுக்குப் பிறகு, அன்றைய தமிழக முதல்வர் தமிழே நீ தான் என்று போற்றப்பட்ட கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

அதில் அமைச்சர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அது பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிக்கை ஒன்றில் கட்டம் கட்டி ஒரு செய்தி இருந்தது. அதன் தலைப்பு  என்ன தெரியுமா? அருகிலா? அருகாமையிலா? என்பதுதான்.

திருநெல்வேலிக்கு அருகாமையில் உள்ள கொடியன்குளம் என்று ஒரு காவல்துறை அதிகாரி பேசினார். முத்தமிழ் அறிஞரான தமிழக முதல்வர் கருணாநிதி  குறுக்கிட்டார். திருநெல்வேலிக்கு அருகிலா? அருகாமையிலா? என்று கேட்டார். சுதாரித்துக் கொண்ட காவல்துறை அதிகாரி இடத்தால் அருகில் மனத்தால் அருகாமையில் என்றார்.

பிறகு நடந்த சந்திப்பில் இந்தப் பேப்பர் செய்தியைக் காட்டிய பிறகுதான் முஸ்லிமான அப்பாவியின்  கூற்றை அறிஞர்கள் குழுவினர் ஏற்றார்கள். (அப்பாவியின் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக)  

இன்றும் டி.வி. செய்திகளிலும் பெரிய பெரிய தலைவர்கள் பேச்சுக்களிலும் அருகில் என்பதற்குப் பதிலாக தவறாக பயன்படுத்தப்படும் அருகாமை என்ற சொல் வரும்போது 1987 வாதங்கள் அப்பாவியிடம் நினைவு கூறப்படுகின்றது.

சர்வாதிகாரமும் சர்வாதிகாரிகளும் இஸ்லாமிய விரோதம் போல் அவ்வப்போதல்ல எப்போதும் சித்தரிக்கப்படுகிறது. இஸ்லாமிய வரலாற்று ஆதாரத்துடன் சர்வாதிகாரம் கொண்ட சர்வாதிகாரி  இஸ்லாம் காட்டிய வழியே என்றால் மக்கள் ஏற்றுக் கொள்வதே இல்லை. அறிஞர்கள் குழுவினரே ஏற்றுக் கொள்வதில்லை எனும்போது பொது மக்களை என்ன சொல்ல?

ஒரு மீலாது விழா நிகழ்ச்சியில் கோமதி நாயகம் என்ற தமிழாசிரியர் நபிகள் நாயகம் மாதிரி ஒரு சர்வாதிகாரி ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்று அவரது பேச்சின் ஒரு பகுதியில் குறிப்பிட்டார். அவர் அமர்ந்ததும் அன்று பெரிய மவுலவி என்று அறியப்பட்ட ஒருவர் எழுந்தார்.  

கோமதி நாயகம் நபிகள் நாயகம் மாதிரி சர்வாதிகாரி வர வேண்டும் என்று பேசினார். நபிகள் நாயகம் சர்வாதிகாரியாக இருக்கவில்லை. ஜனநாயகவாதியாக இருந்தார். அல்லாஹ்வும் நபியின் தோழர்களிடம் கலந்து ஆலோசித்தே ஜனநாயக அடிப்படையில் செயல்படும்படி கட்டளையிட்டுள்ளான். ஆகவே நபிகள் நாயகம் ஜனநாயகப்படியே செயல்பட்டார்கள். நபிகள் நாயகம் ஒரு காலத்திலும் சர்வாதிகாரியாக இருக்கவில்லை என்று ஒரு அரை மணி நேரம் அவரது மாவை அரைத்தார்.

மீண்டும் மைக் முன் வந்த கோமதி நாயகம், மன்னிக்க வேண்டுகிறேன். நீங்கள் விளங்கி உள்ள மாதிரி சர்வாதிகாரி என நான் கூறவில்லை. இஸ்லாம் கூறி உள்ள சர்வ அதிகாரமும் உடைய சர்வாதிகாரியாக இருந்தார் என்றே கூறி உள்ளேன். இஸ்லாம் கூறும் சர்வாதிகாரம்  நியாயமானது நியாயமானது அல்ல.  சர்வாதிகாரி, சர்வாதிகாரம் என்பதை சேர்த்து சொல்லியே பழக்கப்பட்டு விட்டதால் அதன் மெய்ப் பொருள் உண்மையான அர்த்தம் அனர்த்தனம் ஆகி விட்டது. 

சர்வ அதிகாரம், சர்வ அதிகாரி என்று பிரித்துப் பார்த்தால் மெய்ப் பொருள் காண்பீர்கள்.

லட்சத்தி இருபத்தி நாலாயிரம் (இது ஆதாரப்பூர்வமானதா என்பது தனி விஷயம்) தோழர்களிடமும் கலந்து ஆலோசித்தே நபிகள் நாயகம் செயல்பட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எல்லா தோழர்களும் ஒரே கருத்தையா சொன்னார்கள்? ஆயிரம் கருத்துக்கள் சொன்னாலும் முடிவு எடுக்கும் சர்வ அதிகாரமும் நபிகள் அவர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டிருந்தது. 

முடிவு எடுத்து விட்டால் அதில் உறுதியாக நில்லுங்கள் என்றும் அதே குர்ஆன்தான் கட்டளை இட்டுள்ளது. அதில் இறுதி முடிவு எடுக்கும்  சர்வ அதிகாரத்தை நபிகள் நாயகத்திற்கே கொடுத்துள்ளது.

நாயகமே முடிவு எடுத்து கட்டளை இடுகிறீர்களா? ஆலோசனை கேட்கிறீர்களா? என்று கேட்டு ஆலோசனை கேட்டால் மாற்றுக் கருத்தும். கட்டளை என்றால் கட்டுப்பட்டும் செயல்பட்டார்கள் நபித் தோழர்கள். முடிவு எடுக்கும்  சர்வாதிகாரமும் (சர்வ அதிகாரமும்) உடைய சர்வ அதிகாரியாக (சர்வாதிகாரியாக) நபிகள் நாயகம் இருந்தார்கள்.

கொடுங்கோன்மைக்கும் அதாவது நீதி தவறிய அநியாய ஆட்சி தலைமைக்கும்  சர்வாதிகாரத்திற்கும் வித்தியாசம் பெரும்பாலானவர்களுக்கு தெரியவதில்லை. அதனால் சர்வாதிகாரி என்றால்  கொடுங்கோலன் என்று விளங்கி உள்ளார்கள். 

என்னதான் ஜனநாயம் என்றாலும் இறுதி முடிவு எடுக்கும் சர்வ அதிகாரமும் கடைசியில் ஒருவரிடம் போய் தான் முடியும். அவருக்கு பிரதமர், ஜனாதிபதி, மன்னன், சக்கரவர்த்தி என என்ன பெயரிட்டு அழைத்தாலும். அவர் தான் சர்வ அதிகாரமும் உடைய சர்வ அதிகாரி. அதாவது சர்வ அதிகாரம் உடையவர் என்று விளக்கி முடித்தார் கோமதி நாயகம். இது 1983ல் நடந்தது. 


ஆகவே சர்வாதிகாரம் சர்வாதிகாரி என கூப்பாடு போடுவதை விட்டு விட்டு, இஸ்லாம் கூறும் நீதியை நியாயத்தை நிலை நாட்டுபவர்களாக  நபிகள் நாயகத்தை மட்டுமே முழுமையாகப் பின் பற்றக் கூடியவர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக ஆமீன். 


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.