கோலா? கம்பா? தடியா? கைத்தடியா? எதால் அடித்தார்?
தண்ணீர் வேண்டி இரந்து நின்றார் என்பது சரியா?
கூறினோம் என்றால் போதாதா? நாம் கூறினோம் என்று தான் மொழி பெயர்க்க வேண்டுமா?
ஹஜர் - என்பதற்கு ஒரு சாரார் கல் என்றும் இன்னொரு சாரார் பாறை என்றும் மொழி பெயர்த்து உள்ளார்களே எப்படி? ஹஜர் - என்பதற்கு நேரடி பொருள் கல் தானே?
இவை முந்தைய 2:60 பதிவை ஒட்டிய கேள்விகள்
--------------------
வஇதிஸ்தஸ்ஃகா என்பதற்கு ஒரு மொழி பெயர்ப்பில் “தண்ணீர் வேண்டி இரந்து நின்றதையும்”
மன்றாடி கேட்டல் · தயவுடன் கேட்டல். கெஞ்சிப் பெறுதல் தயவுடன் வேண்டுதல் ஆகிய பொருள்களும் அதற்கு உண்டு.
பிச்சை எடுத்தல் என்ற பொருள் மட்டுமே இருந்தாலும். அல்லாஹ்விடம் அவனது அடிமை பிச்சை வேண்டி நின்றல் என்பது கவுரவக் குறைவானது அல்ல.
-------------------------
ஃகுல்னா - என்பதற்கு கூறினோம் என்று மொழி பெயர்த்தால் போதாதா? நாம் கூறினோம் என்று தான் மொழி பெயர்க்க வேண்டுமா?
கூறினோம் என்று சொன்னாலே அதனுள் நாம் என்பதும் அடங்கி இருக்கிறது. கூறினோம் என்பது சுருக்கம். கூடுதல் விளக்கம் கருதி நாம் கூறினோம் என்று மொழி பெயர்த்துள்ளதை தப்பு என்றும் சொல்ல முடியாது.
இதே வசனத்தில் உள்ள இஸ்திஸ்ஃகா என்பதற்கு தண்ணீர் புகட்ட தேடுதல் என்பதே நேரடி பொருள். இந்த நேரடி பொருளில் மொழி பெயர்த்தவர்கள் தண்ணீர் புகட்டத் தேடியபோது என்று நேரடியாக மொழி பெயர்த்து இருப்பார்கள். மற்றவர்கள், தண்ணீர் வேண்டியபோது என்று சுருக்கமாக மொழி பெயர்த்து இருக்கிறார்கள்.
அதுபோல் தான் கூறினோம் என்பது. கண்டிப்பாக நாம் போட்டுத்தான் ஆக வேண்டும் என்றும் சொல்ல முடியாது. சுருக்கம் கருதி நாம் என்பதை விட்டால் குறை சொல்லவும் முடியாது. நாம் கூறினோம் என்பது கூடுதல் விளக்கம் உள்ள உயர் தர அலங்காரச் சொல்லாகும்.
------------------------
லிஃகவ்மிஹி என்பதற்கு பெரும்பாலானவர்கள் தமது சமுதாயத்திற்காக என்று மொழி பெயர்த்து இருக்க, தன் இனத்தவர், தம் கூட்டத்தினருக்காக என்று மொழி பெயர்த்துள்ளது பற்றி கேள்வி உள்ளது.
லிஃகவ்மிஹி என்பதற்கு தன் இனத்தவர், தம் கூட்டத்தினருக்காக என்றுள்ளவைகளும் சரியானதே. அவை பழைய தமிழ். தமது சமுதாயத்திற்காக என்பது நடைமுறையில் உள்ள நாகரீகத் தமிழ்,
-------------------------
ஃஅஸா என்பதற்கு தடி - கோல் - கம்பு என்பதுதானே நேரடி பொருள்? அப்படித்தானே அப்துல் ஹமீது பாகவி, அப்துர்றஹ்மான் நுாரி போன்றவர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள். அப்படி இருக்க பெரும்பாலானவர்கள் கைத்தடி என்று மொழி பெயர்த்தது ஏன்?
இந்தக் கேள்விக்கு குர்ஆனிலேயே பதில் உள்ளது.
வமா தில்க பியமீனிக யா மூஸா?
وَمَا تِلْكَ بِيَمِيْنِكَ يٰمُوْسٰى
மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?'' என்று (இறைவன்) கேட்டான். 20:17
ஹிய ஃஅஸாய
هِىَ عَصَاىَ
இது தடி (20:18) என்று சொன்ன மூஸா அதோடு நிற்கவில்லை. “இதன் மீது ஊன்றிக் கொள்வேன்” என்றும் விளக்கம் கூறுகிறார். ஆகவே அது (ஊன்று + கோல் + ஊன்றுகோல் - நடைக்குச்சி) கைத்தடிதான்.
இன்றும் அரபிகளிடம் கைத்தடிக்கு ஃஅஸா என்று மட்டும் சொல்லும் வழக்கம் உள்ளது.
கேட் (GATE) வாசல் என்பது போல தமிழ் முஸ்லிம்களிடம் ஃஅஸாக்கம்பு என்று சொல்லும் வழக்கு உள்ளது.
2:60 ல் தடி - கோல் - கம்பு என்று மொழி பெயர்த்தவர்களே 7:107. 7:117. 7:160. 20:18 20:66. 26:32. 26:44. 26:45. 26:63. 27:10 28:31. ஆகிய வசனங்களில் இடம் பெற்றுள்ள ஃஅஸா என்பதற்கு (கைத்)தடி என்று மொழி பெயர்த்துள்ளதைக் காணலாம்.
------------------------------
ஹஜர் - என்பதற்கு ஒரு சாரார் பாறை என்றும் இன்னொரு சாரார் கல் என்றும் மொழி பெயர்த்து உள்ளார்களே எப்படி? ஹஜர் - என்பதற்கு நேரடி பொருள் கல் என்பது தானே?
ஹஜருல் அஸ்வத் மூலம் ஹஜர் - என்பதற்கு நேரடி பொருள் கல் என எல்லாரும் விளங்கி வைத்திருக்கிறார்கள் அதனால் இந்தக் கேள்வி உள்ளது.
ஹஜர் என்பதில் இருந்து வந்துள்ளதுதான் ஹிஜாரதி என்பது. இது 2:74 ல் இரண்டு இடங்களில் உள்ளது. 2:60ல் கல் என்று மொழி பெயர்த்தவர்களே 2:74 ல் கற்பாறை என்று மொழி பெயர்த்து உள்ளார்கள்.
ஆறுகளில் நீர் சூழ இருக்கும் கற்களைக் காட்டி அந்தக் கல், இந்தக் கல் என்பார்கள். கடலில் உள்ள கல் மீது கப்பல் மோதியது. ரயில் போக முடியாதவாறு தண்டவாளத்தில் கல் வைத்து இருந்தார்கள். இது போன்றவற்றுக்கு கைக்குள் அடங்கும் கல் என்று விளங்க மாட்டோம். இடத்துக்கு தக்கவாறு பாறை - பாறாங்கல் என்றே புரிவோம். அது போல்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
-----------------
Comments