துபை IAC முன்னாள் செயலாளர் மேலக்காவேரி அஸ்கர் அலி மரணமும் வரலாறும்
நமது வற்புறுத்தலால் 1991ல் துபை IACயின் செயலாளர் பொறுப்பை ஏற்றவர்.
பள்ளிவாசலுக்கு இமாம் முஅத்தின் போன்றோரை வேலைக்கு அமர்த்தாமல் ஜூம்ஆ பள்ளியை நடத்திக் காட்டியவர். மேலக்காவேரி அஸ்கர் அலி.
அவர் 28-08-2020 அன்று வெள்ளி அன்று இறப்பெய்திய செய்தி அறிந்தோம். அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக ஆமீன்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/08/iac.html
நாச்சியார்கோவில் MS.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் முதலில் அஸ்கர் அலி படம் இல்லாமல் மரணச் செய்தியை மட்டும் போட்டு இருந்தார்கள்.
துபை IAC செயலாளராக இருந்த அஸ்கர் அலியா? என்று முன்னாள் IAC சகோதரர்களிடம் கேட்டோம் யாருக்குமே தெரியவில்லை.
நாச்சியார்கோவில் MS.ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கே போன் போட்டு உறுதி செய்தோம்.
மேலக்காவேரி அஸ்கர் அலி மரணத்தை ஒட்டி வந்த சில வரலாற்று நினைவுகள். மறைந்த இக்பால் மதனி அவர்களை இன்றைய தலைமுறையினர் ஜாக் மதனியாகத்தான் விளங்கி இருக்கிறார்கள்.
ஜாக்கின் முதல் எதிரியாக இருந்தவர்கள் இக்பால் மதனி அவர்களும் ஜாக்கை எதிர்ப்பதில் அவரை ஆதரித்து நின்ற I.A.C. நிர்வாகிகளும் தான். இந்த வரலாறு இன்றுள்ளவர்களுக்குத் தெரியாது.
தமிழகத்தில் JAQH துவங்கப்பட்டதும். ஐ.ஏ.ஸி. இருக்க எதுங்குங்க ஜாக் என்று எம்மிடம் வருந்தினார். அன்றைய இஸ்லாமிய எழுச்சி மையம் (I.A.C.) தலைவர் கள்ளக் குறிச்சி சுலைமான் ஹாஜியார்.
தமிழ்நாட்டில் இஸ்லாமிய எழுச்சி மையம் (I.A.C.) தலைவராக ஊட்டி M.R. கான், செயலாளராக A. அப்துல் மாஜித், பொருளாளராக P.J.தானே இருக்கிறார்கள். பிறகு எதுங்குங்க JAQH என்றார்கள்.
I.A.C. என்பது ஒரு குமர் போலவும் அந்த குமர் இருக்க அதை கரையேற்றாமல் இன்னொரு குமரான ஜாக் எதற்கு? என்பது போலவும் பேசினார்கள்.
1989ல் துபை ஐ.ஏ.ஸி. சார்பில் நாகூரில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்தார்கள். பிப்ரவரி 18,19 சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் என்று தேதியும் முடிவு செய்யப்பட்டது. பத்திரிக்கையில் வெளியிட்டு, நோட்டீஸ்கள் அச்சிட்டு வினியோகித்தும் விட்டார்கள்.
துபை ஐ.ஏ.ஸி. பொறுப்பில் உள்ள இன்ன இன்னவர் பேசுவார்கள் (மீதி ஜாக்கில் உள்ள மவுலவிகள் பேசுவார்கள்) என்ற கடிதம் ஜாக்கில் கோபத்தை ஏற்படுத்தியது.
I.A.C. இயக்க பொறுப்பாளர்கள் பேச்சை கேட்கவா மக்கள் வருகிறார்கள்? துபை ஐ.ஏ.ஸி.யினரிடம் இயக்க வெறி தலை துாக்கி நிற்கிறது என்று கூறி நாகூரில் உள்ள ஜாக்கினர் மாநாடு நடத்த ஒத்துழைக்க மறுத்து விட்டார்கள். பிறகு துபை I.A.C. சார்பிலான அந்த மாநாடு பரங்கிப்பேட்டையில் நடந்தது.
துபை I.A.C. ன் புரட்சி மின்னலிலும் அது அல் முபீனாக மாறிய பின்னரும் வந்த பீ.ஜே, கட்டுரைகள் இதன் பிறகு படிப்படியாகக் குறைந்து முழுமையாக நின்றது.
இக்பால் மதனி தலைமையில் ஆத்துார் அப்துஸ்ஸமது மதனி போன்றவர்கள் ஆசிரியர் குழுவாக ஆனார்கள்.
எஜமான விசுவாசம், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு வழி சொல்கிறார் இப்படி ஜாக் ஆதரவு அல் ஜன்னத்துக்கும் துபை I.A.C. சார்பிலான அல் முபீனுக்கும் எழுத்துப் போர்கள் கடுமையாக நடந்தன.
புஷ்ஷா? சதாமா? என்ற அன்றைய வளைகுடாப் போரை விஞ்சி நின்றன. கமாலுத்தீன் மதனியா? இக்பால் மதனியா? என்று.
நாம் இரண்டுக்கும் உறவுப் பாலமாக செயல்பட்டோம். மேலப்பாளையம் நிகழ்ச்சிகளை I.A.C. & JAQH என்று இரு பெயர்களிலுமாக நடத்தினோம். இணைப்பில் உள்ள நோட்டீஸ் மாதிரி.
மேலப்பாளையம் ஜாக் அமீர் காலித் ஸாஹிப் வியாபாரம் செய்த துணிப் பைகளில் I.A.C. என்று பெரிய எழுத்தில் போட்டு மத்தியில் JAQH என்று போட வைத்தோம். பழுலுல் இலாஹி I.A.C. வயிற்றைக் கிழித்து அதனுள் JAQH கை திணிக்கிறார் என்றார் இக்பால் மதனி.
JAQH என்று பெரிய எழுத்தில் போட்டு மத்தியில் I.A.C. என்றும் போட வைத்தோம் என்று மையம் நிர்வாக கூட்டத்தில் விளக்கம் கூறினோம்.
இறந்தார் என்று சொல்லக் கூடாது இறப்பெய்தினார் என்றுதான் சொல்ல வேண்டும்,
கஃபாவில் வலம் வருதல் என்று சொல்லக் கூடாது இடம் வருதல் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் இடது பக்கமாகத்தானே சுற்றுகிறோம். மற்றும் மையம் போன்ற தமிழ் இக்பால் மதனி அவர்கள் உடைய தமிழ். இந்த தமிழ் நடையால் I.A.C.ன் அல் முபீன் மாத இதழின் விற்பனை வீழ்ச்சி அடைந்தது.
(I.A.C.) மையத் தலைவராக இருந்த கள்ளக் குறிச்சி சுலைமான் ஹாஜியார், செயலாளராக இருந்த மறைந்த ஜுமேரா அப்துல் ஹமீது போன்றவர்களுக்கு புரிய வைத்து இக்பால் மதனி தலைமையிலான ஆசிரியர் குழுவை மாற்ற வேண்டும் என்றோம்.
துபை I.A.C. நிர்வாகக் கூட்டங்களில் என்னைத் தவிர யாருமே இக்பால் மதனி கருத்துக்கு மாற்று கருத்துக் கூறி பழக்கப்பட்டவர்கள் கிடையாது. ஆகவே பொறுப்புகளை ராஜினாமா செய்தார்கள். அதற்கான காலச் சூழலும் ஏற்பட்டு ஒத்துழைத்தது.
மேல்பட்டாம்பாக்கம் ஜலால் பாய் I.A.C. தலைவராக ஆனார்கள். நமது வேண்டுகோளை ஏற்று மேலக்காவேரி அஸ்கர் அலி அவர்கள் செயலாளராக ஆனார்.
அல் முபீன் பத்திரிக்கைக் குழு என்று அமைத்து அதன் தலைவராக நான் ஆனேன். கண்ணியமான முறையில் இக்பால் மதனி தலைமையிலான ஆசிரியர் குழுவை மாற்றும் பணிகளை செய்தோம்.
ஏகத்துவ எதிரிகள் இக்பால் மதனிக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்து அவரது சவூதி வேலைக்கு பங்கம் ஏற்படுத்தி துபை உளவுத்துறை விசாரணைக்கும் உள்ளாக்கினார்கள்.
அப்பொழுது சவூதி தஃவா சென்டர் முதீரை சந்தித்து இக்பால் மதனிக்கு ஆதரவாக சாட்சி சொன்னோம் என்பதையும் இது போன்ற விஷயங்களில் இக்பால் மதனிக்கு உதவுவதில் உறுதியாக நின்றோம் என்பதையும் நினைவூட்டிக் கொள்கிறோம்.
கருத்து வேறுபாடுகள் என்பது வேறு. ஏகத்துவ எதிரிகளால் கொள்கைச் சகோதரருக்கு ஒன்று என்றால் அந்த தவ்ஹீது எதிரிகளுடன் கள்ளக் கூட்டு வைக்க மாட்டோம். தவ்ஹீது சகோதருக்கு ஆதரவாக களத்தில் நிற்போம். அந்த அடிப்படையில் இக்பால் மதனிக்கு ஆதரவாக நின்றோம். எல்லா விசாரணைக்கும் சென்றோம்.
ஈராக் குவைத்தை கைப்பற்றியதை ஒட்டி வளைகுடாப் போர் நடந்த நேரம். அப்பொழுது அல் முபீனில் வளைகுடாப் போர் பற்றி உலக தலைவர்கள் கருத்துக்கள் இடம் பெற்று இருந்தன. அதில் சத்தாம் உசேனின் கருத்தும் இடம் பெற்று இருந்தது.
சவூதி தஃவா சென்டரில் பணி புரிபவர் மணப்பாறை இக்பால் மதனி. அவரை ஆசிரியராகக் கொண்ட அல் முபீனில் சவூதி அணி எதிரி சத்தாம் உசேனின் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இப்படியான ஆதாரங்கள் தஃவா சென்டர் முதீருக்கு போய் இருக்கிறது.
ஆகவே சவூதி தஃவா சென்டரும் உடனடியாக இக்பால் மதனியை அல் முபீனில் இருந்து விலகச் சொன்னது.
இதன் பிறகு மதுரை மைதீன் உலவியை ஆசிரியராகக் கொண்டு அல் முபீன் வந்தது.
காலச் சக்கரம் சுழன்றது. ஜாக்கை ஆரம்பத்தில் எதிர்த்த இக்பால் மதனி அவர்கள் JAQH தாஇயாகவே ஆகி விட்டார்.
I.A.C. தான் நமக்கு என்று அடித்துப் பேசிய கள்ளக் குறிச்சி சுலைமான் ஹாஜியார் அவர்கள் அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பிலும் வலம் வந்தார்.
காலத்தை மக்களிடையே நாம் சுழல விடுகிறோம்.
காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம். 3:140.
குர்ஆன் வசனம் பொய்க்குமா?
----------------------
துபை IAC செயலாளராக இருந்த மேலக்காவேரி அஸ்கர் அலி பின்னாளில் இயக்கம் சாராதவராக ஆனார்.
மேலக்காவேரி பைபாஸ் சாலை அருகில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தானும் தனது சகோதரரும் மர்கஸ்
தவ்ஹீதுல்லாஹ் என்ற ஜும்ஆ பள்ளிவாசலை நிறுவி அப்பகுதியில் நல்ல முறையில் தஃவா
செய்துவந்துள்ளார்.
மக்கள் அந்த பள்ளிவாசலை அஸ்கர்பள்ளி என்று அழைப்பதையே வழமையாக்கிக் கொண்டனர்.
இயக்கம் சாராமல் தனிமனிதராக இருந்துகொண்டு பள்ளிவாசலுக்கு இமாம் முஅத்தின் போன்றோரை வேலைக்கு அமர்த்தாமல் தனது அன்பு மகனின் ஒத்துழைப்புடன் ஐந்து நேரத் தொழுகையும் ஜூம்ஆ தொழுகையும் பெருநாள் தொழுகையும் தொடர்ச்சியாக நடத்திவந்த சிறப்புக்குறியவர்.
கோடைக்காலங்களில் மாணவ மாணவிகளுக்கு இஸ்லாமிய பயிற்சி வகுப்புகள் வருடந்தோறும் நடத்திவந்தார், மேலும் தஞ்சைமாவட்ட அளவில் இயங்கிவரும் தொலைக்காட்சியில் வாராந்திர மார்க்க சொற்பொழிவுகள் நடத்தி தன்னால் இயன்ற மார்க்கப்பணிகளை அடக்கத்துடன் செய்துவந்தவர்.
குடந்தை மேலக்காவேரி பகுதி மக்கள் அனைவரிடமும் நற்பெயர் பெற்ற நல்லவர். போன்ற செய்திகளை நாச்சியார்கோவில் MS.ரஹ்மத்துல்லாஹ் பதிவுகள் மூலம் அறிந்தோம்.
அல்லாஹ் துபை IAC முன்னாள் செயலாளர் மேலக்காவேரி அஸ்கர் அலி அவர்களை மன்னித்து மறுமையில் உயர்ந்த இடத்தில் வைப்பானாக ஆமீன்.
Comments