இஸ்லாத்தில் அரசியல் -1

தேர்தல் நேரம் வந்து விட்டால் அரசியல் பேசக் கூடாது என்ற போர்டுகள் டீக் கடைகளையும் ஹோட்டல்களையும் ஆக்கிரமித்திருக்கும். இவை வியாபார ரீதியான தனியார் நிறுவனங்கள். அவர்களை குறை சொல்ல முடியாது. ஆனால் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களிலும் அரசியல் பேசக் கூடாது என்ற போர்டுகள் வைக்கிறார்கள்.

இஸ்லாத்தில் அரசியல் ஹராம் என்பது போல குத்பா பிரசங்கங்களில் அரசியல் பேசக் கூடாது என்று கதீப்களுக்கும் பள்ளி நிர்வாகிகள் தடை விதித்து விடுகிறார்கள். இஸ்லாம் வேறு அரசியல் வேறு இஸ்லாத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்ற தவறான கருத்துக்களே இதற்கு காரணம்.

திருமறை குர்ஆனில் உள்ள 6666 ஆயத்துக்களில் சுமார் 422 வசனங்கள் அரசியல் ஆட்சி அதிகாரம் சட்டங்கள் பற்றி கூறுகிறது.

குத்பா பிரசங்கங்களில் அரசியல் பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்ட பள்ளி கதீப்கள் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்லி கைகளை கட்டி -நடைமுறை பாiஷயில் சொல்வதென்றால் தக்பீர் கட்டிக் கொண்டு அல்குர்ஆனின் 2:247ஆவது வசனத்தை தொழுகையில் படித்துக் காட்டுகிறார். நடைமுறை பாiஷயில் சொல்வதென்றால் ஓதுகிறார். அந்த வசனம் என்ன கூறுகிறது.

தாலூத் என்பரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான் என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். (அதற்கு) அவர்கள், ''எங்கள் மீது அவர் எப்படி ஆட்சி அதிகாரம் செலுத்த முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்.

என்கிறது அந்த வசனம். இது அரசியலா இல்லையா? தாலூத் ஆட்சியாளராக நியமிக்கப்படுகிறார். மக்கள் அவர் எப்படி ஆட்சி அதிகாரம் செலுத்த முடியும்? ஆட்சியாளராக ஆட்சிக்கு நாங்கள் தாம் தகுதியுடையவர்கள் என்கிறார்கள். இது தெளிவான அரசியலா இல்லையா?

இஸ்லாத்தில் அரசியல் ஹராம் என்றால் தொழுகையில் இதை ஓத முடியுமா? தொழுகையில் அரசியல் வசனங்களை படிக்கலாம். மிம்பரில் நின்று மட்டும் பேசக் கூடாதா? 2:247ஆவது வசனத்தில் மேலும் என்ன கூறப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு பொருள் வசதியும் வழங்கப்படவில்லை என்று கூறினார்கள் அதற்கவர், ''நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட அவரையே தேர்ந்தெடுத்து விட்டான் இன்னும், அறிவாற்றலையும் உடல் வலிமையையும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குகிறான். 2:247

ஆட்சியாளருக்கு பொருள் வசதி தேவை என அன்றைய மக்கள் எண்ணியுள்ளதை அறிகிறோம். இன்றைய மக்களும் ஆட்சியாளருக்கு பொருள் வசதி தேவை என்றே விளங்கி வைத்துள்ளார்கள்.

கவுள்சிலர் தேர்தலில் நிற்பவன் லட்சாதிபதியாக இருக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கு நிற்பதாக இருந்தால் கோடீஸ்வரனாக இருக்க வேண்டும். எம்.பிக்கு நிற்பதாக இருந்தால் கோட்டீஸ்வரனாக மட்டுமல்ல கோடான கோடிக்கு சொந்தக்காரனாக இருக்க வேண்டும் என்ற மன நிலையில் உள்ளார்கள். அல்லாஹ் இதை மறுக்கிறான்.

ஆட்சியாளனாக ஆக பொருள் வசதி தேவை இல்லை. ஆட்சியாளனாக ஆக அறிவாற்றலும் உடல் வலிமையும்தான் தேவை என்பதை இந்த வசனத்தின் அல்லாஹ் அரசியல் பாடம் சொல்லித் தருகிறான்.

அல்லாஹ் தான் நாடியோருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குகிறான் என்பதன் மூலம் ஆட்சியை வழங்குவது இறைவனின் அதிகாரம். என்பதையும் அவர்கள் நபி மூலம் சொல்லிக் காட்டி புரிய வைத்துள்ளான்

அல்குர்ஆன் 3:26ஆவது வசனத்தில் இதே கருத்தை நமது நபி மூலம் சொல்லிக் காட்டி நம்மை புரிய வைக்கிறான் பாருங்கள்.

.(நபியே!) நீர் கூறுவீராக: ''அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குகின்றாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை பறித்து விடுகிறாய். நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய். நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய். 3:26 (7:128)

தேர்தல் நேரத்தில் இந்த வசனத்தை படித்தால் ''அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ நாடினால் சோனியாவுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவாய். நீ நாடினால் மன்மோகிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை பறித்து விடுவாய். என்ற கருத்து வருகிறது அல்லவா. இது அரசியலா இல்லையா? இஸ்லாத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. முஸ்லிம்கள் அரசியலில்ஈடுபடக் கூடாது என்போர் சிந்திக்க வேண்டும்.

தொடரும் இன்ஷhஅல்லாஹ்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு