பெருநாள் வாழ்த்து கூறியவர்களே உங்களுக்கு சொர்க்கமா? நரகமா?

நீங்கள் என்ன ஊருக்கு உபதேசிகளா? உங்களைப் பற்றி கவலைப்பட மாட்டீர்களா? சொர்க்கத்தை நோக்கி இருந்த உங்கள் முகங்கள் நரகத்தை நோக்கித் திருப்பப்படுவது ஏன்? உங்களுக்கு அல்லாஹ்வின் அன்பு, அருள், உறவு வேண்டுமா வேண்டாமா? அல்லாஹ்வின் உறவு வேண்டாம் என்று நரகம் போக தயார் ஆகிக் கொண்டு இருக்கிறீர்களா? அறிந்து கொள்ள முழுமையாகப் படியுங்கள்.


பெருநாள் வாழ்த்து கூடுமா? கூடாதா? என்ற வாதங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. கூடாது என்று சில காலமும். கூடும் என்ற பல்டிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. வாதங்கள் செய்பவர்கள் செய்து கொண்டே இருங்கள். பல்டி அடிப்பவர்கள் பல்டி அடித்துக் கொண்டே இருங்கள். நாங்கள் வாழ்த்து சொல்லிக் கொண்டே இருப்போம். அதுவும் போட்டி போட்டுக் கொண்டு என்று வாழ்துக்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.


தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என வாழ்த்துக்கள் நொடிப்பொழுதில் லட்சக் கணக்கானவர்களுக்கு பறந்து கொண்டு இருக்கின்றன. யாருக்கு சொல்ல வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் சொல்லாமல், அவர்களை மட்டும் திட்டமிட்டு தவிர்த்து வாழ்த்துக்கள் ராகட் வேகத்தில் போய்க் கொண்டு இருக்கின்றன.


மார்க்கத்தில் ஈடுபாடு உடையவர்கள் ஈடுபாடு இல்லாதவர்கள் என அனைவரின் நிலையும் இதுவாகத்தான் உள்ளது. மார்க்கத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் சொர்க்கம் நரகம் பற்றி கவலைப்படுவது இல்லை. அமல்கள் இல்லாத அவர்களுக்கு அது நஷ்டம் இல்லை. அமல்கள் உள்ளவர்களுக்கு நிச்சயமாக நஷ்டமே.


ஈமான், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய கடமைகளை செய்து விட்டால் சுவர்க்கம் கிடைத்து விடும். இப்படித்தான் மார்க்கத்தில் ஈடுபாடு உடைய பெரும்பாலான மக்கள் எண்ணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

சுவர்க்கம் கிடைக்க வேண்டும் என்றால் இந்த ஐம்பெரும் கடமைகள் மட்டுமன்றி வேறு பல கடமைகளும் இருக்கின்றன. அவற்றைச் செய்யத் தவறினால். தவறியவர் யாராக இருந்தாலும் சுவர்க்கம் செல்லவே முடியாது. இதை மறந்தே அமல்கள் உள்ளவர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.


அப்படிப்பட்ட கடமையான அமல்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று இணங்கி வாழ்தல் என்ற அமல். இறையினை வணங்கி பொருளினை வழங்கி உறவினை இணங்கி வாழும் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் என்பார்கள். இப்படி கூறுபவர் எல்லாருக்கும் வாழ்த்து கூறி இருப்பார். இணங்கி வாழ வேண்டியவர்களை மட்டும் திட்டமிட்டு தவிர்த்து இருப்பார்.


இயக்கங்களிலும் ஜமாஅத்களிலும் ஈடுபாடு உடையவர். இஸ்லாத்தில் அதிக அக்கறை உள்ளவர் என்பார்கள். அப்படிப்பட்டவர்கள், நரகத்தைத் தாண்டி அக்கரைக்குச் சென்று சுவர்க்கக் கோட்டையை அடைவதில் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


பெருநாள் உரையில் பெரும்பாலான அறிஞர்கள், தலைவர்கள் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது எந்த முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல. அவ்வாறு மூன்று நாட்களுக்கு மேல் யாரேனும் வெறுத்து அந்த நிலையில் அவர் மரணமடைந்தால் நரகம் செல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) பூதாவூத்)


ஒருவன் தன் சகோதரனை ஒரு வருடம் வெறுத்தால் அவன் அவனைக் கொலை செய்தவன் போலாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூகராஷ் (ரலி)  அதபுல் முஃப்ரத்)


ஒவ்வொரு வாரமும் இருமுறை - திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் மனிதர்களின் செயல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப்படுகின்றன. அப்போது மூமினான ஒவ்வொரு அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படும். பகைத்துக் கொண்ட இருவரைத் தவிர. அவ்விருவரையும் விட்டு விடுங்கள் அல்லது அவ்விருவரின் விவகாரத்தை ஒத்திப் போடுங்கள் - அவ்விருவரும் சமாதானம் ஆகும் வரை!என வானவர்களிடம் கூறப்படும்.  (அபூஹுரைரா (ரலி). முஸ்லிம்) 

முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ள உறவைத் துண்டிப்பதினால் விளையும் தீங்குகளில் இறைவனுடைய மன்னிப்புக் கிடைக்காமல் போவது ஒன்றே போதும் என்று பேசி முடிப்பார்கள். மன்னிக்கவும் கா்ஜித்து முடிப்பாாகள்.

இப்படி முழங்கியவரின் உரையைக் கேட்டவர்களில் திருந்தியவர் ஸலாம் கூறி கை கொடுத்து சொர்க்கவாதியாக ஆகிட ஓடி வருவார். முழங்கியவரோ முகத்தை திருப்பி விடுவார். அல்லது மற்றவர்களால் திருப்பப்படுவார். தலைவர்கள் தொண்டர்களின் முகத்தை திருப்புவார்கள். தொண்டர்கள் தலைவர்களின் முகத்தை திருப்புவார்கள்.

பிள்ளைகள் பெற்றோர் முகத்தை திருப்புவார்கள். பெற்றோர் பிள்ளைகள் முகத்தை திருப்புவார்கள். மாமியார் மருமகள் விஷயத்தில் மட்டும் யாரும் திருப்ப வேண்டியது இல்லை. தானாக திரும்பும். மாமியாரைக் கண்டு மருகள் முகம் திரும்பும். மருமகளைக் கண்டு மாமியார் முகம் திரும்பும்.


எதை நோக்கி திரும்புகிறது? எதை நோக்கி திருப்பப்படுகிறது? சொர்க்கத்தை நோக்கி இருந்த உங்கள் முகங்கள் நரகத்தை நோக்கித்தானே திருப்பப்படுகிறது. நீங்கள் நரகம் போக தயார் ஆகி விட்டீர்களா? நாம் என்ன ஊருக்கு உபதேசிகளா? நம்மைப் பற்றி கவலைப்பட வேண்டாமா?

உறவைப் பேணி வாழ்பவருடன் அல்லாஹ்வும் உறவு பாராட்டுகிறான். துண்டித்து விடுகின்றவரை அல்லாஹ்வும் துண்டித்து விடுகிறான்.

அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றியது. அப்போது அல்லாஹ், ''என்ன?'' என்று கேட்டான். அதற்கு உறவு, ''உறவுகளைத் துண்டிப்பதி­ருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரி நிற்கின்றேன்'' என்று கூறியது.

''உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும் உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?'' என்று கேட்டான். அதற்கு உறவு, ''ஆம், என் இறைவா'' என்று கூறியது. அல்லாஹ், ''இது உனக்காக நடக்கும்'' என்று கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

''நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?'' என்ற (47:22) வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ர­லி), புகாரி 5987 பாடம் : 13)

'
உறவு  (ரஹிம்) என்பதுஅளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும் எனவே, இறைவன் (உறவை நோக்கி) 'உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவுபாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்' என்று கூறினான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஹுரைரா(ரலி) புகாரி 5988 பாடம் : 13)

உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். ஆகவே அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கின்றாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன் என்று (அல்லாஹ் கூறியதாக) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா (ரலி­): புகாரி 5989 பாடம் : 13)


உறவைப் பேணுவது அல்லாஹ்வுடனான உறவைப் பேணுவதற்குச் சமமாக ஆக்கப் பட்டுள்ளது. உறவைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தும் அதே சமயத்தில், இதற்கு மாறாகச் செயல் படுவோரைக் கண்டிக்கவும் செய்கிறான் அல்லாஹ் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நபி வழியில் நம் தொழுகை, நபி வழியில் நம் இரவுத் தொழுகை, நபி வழியில் நம் ஹஜ் இப்படி அனைத்து வணக்கங்களையும் நபி வழியில் நாம் செய்வதற்கு காரணமே அல்லாஹ்வின் உறவை, அன்பை, உதவியைப் பெறுவதற்காகத் தான். நாம் உறவினரின் உறவைத் துண்டித்து விட்டால் அல்லாஹ்வின் அருள் அறுந்து போய் விடுகின்றது. அவனது உதவி துண்டிக்கப்பட்டு விடுகின்றது. மேலே உள்ள ஹதீஸ்கள் இதைத்தான் கூறுகிறது. அல்லாஹ்வின் அன்பு, அருள், உறவு வேண்டுமா வேண்டாமா?

செல்வ வளத்தை ஒருவர் விரும்பினால்...?
 ரிஸ்கில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றீர்களா?

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.  (அனஸ் பின் மா­க் (ர­லி), புகாரி 2067 பாடம் : 13)

ஒருவர் தனது மனைவி மக்களைவிட வயது முதிர்ந்த பெற்றோருக்கு  அளித்த முக்கியத்துவம். அவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தபொழுது அவரது உயிரைக் காப்பாற்றி உள்ளது. அவரது ஆயுளையும் நீண்ட ஆயுளாக  ஆக்கப்ட்டு இருக்கின்றது. து சம்பந்தமாக இப்னு உமர் (ர­லி), அறிவிக்கும் ஹதீஸ் புகாரி 2215  இல் இடம் பெற்று உள்ளது.

ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் வளம் வேண்டும். வருவாயில் பரக்கத் வேண்டும். நீண்ட ஆயுள் வேண்டும். இப்படி தினம் தினம் மன்றாடிக்  கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தவமாய் தவம் இருந்து காத்துக் கிடக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தியாக ஓர் அருட்கொடையாக நபி (ஸல்) அவர்களின் இந்த வழிகாட்டுதல்கள் அமைந்திருக்கின்ற.

உறவை முறிக்கும் பாவத்திற்கான தண்டனை என்ன தெரியுமா? சொர்க்கத்தில் நுழைய முடியாது

உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜுபைர் பின் முத்இம் (ர­லி), புகாரி 5984 பாடம் : 11)

பொதுவாக முஃமின்கள் செய்யக் கூடிய அமல்களுக்குரிய பலன்களை மறுமையில் தான் அல்லாஹ் வழங்குவான். அதனால் தான் என்ன கடமையைச் செய்தாலும் வணக்கம் புரிந்தாலும் மறுமையில் கூ­லி கிடைக்கும் என்று அல்குர்ஆனும், ஹதீசும் கூறுகின்றன. இம்மையில் கூ­லி கிடைக்கும் என்று கூறுவதில்லை.

அப்படி இம்மையில் கூலி­ கிடைக்கும் என்று மார்க்கம் சொல்கின்ற ஒரு நன்மையான காரியம், அமல் உண்டு எனில் அது உறவினர்களை ஆதரிப்பதாகத் தான் இருக்க முடியும்.

உறவினர்களை ஆதரிக்கும் போது இம்மையில் ஒருவருக்கு உரிய நற்பலன் கிடைக்கும். அது போலவே மறுமையில் பாக்கியமிகு சொர்க்கம் அவருக்குக் கிடைக்கின்ற உயரிய நற்கூ­லியாக ஆகி விடுகின்றது. உறவை ஆதரிப்பது சொர்க்த்தில் கொண்டு போய் சேர்க்கும் உயரிய அமல் என்பதையும் இந்த ஹதீஸ் (புகாரி 5984) நமக்கு விளக்குகின்றது. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இதை ஈமானுடன் தொடர்பு உடைய அமலாக சொல்லிக் காட்டி உள்ளார்கள்..

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப் படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்த பந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும், அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), புகாரி 6138


பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணியவர் அல்ல. மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­லி), புகாரி 5991 பாடம் : 15

ஒருவருக்கு சுவனத்தையும் நரகத்தையும் தீர்மானிக்கக் கூடியதாக இந்த உறவு இருக்கின்றது. ஆகவே நமது உறவினரில் யாரேனும் நம்மைப் பகைத்துக் கொண்டால் அவர்களிடம் வ­லியச் சென்று உறவைத் தொடர வேண்டும். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழி காட்டல். அவன் நம்மிடம் வந்து உறவு கொள்ளட்டும். நாம் அவனிடம் உறவு கொள்ளுவோம். இந்த வியாபார முறையைக் கைவிடச் சொல்கின்றார்கள். அப்படிச் செய்வது உறவை ஆதரித்ததாக ஆகாது என்றும் கூறுகின்றார்கள்.

''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்களிடம் நான் உறவு பாராட்டுகின்றேன். அவர்களோ என்னிடம் பகைமை பாராட்டுகின்றனர். நான் உதவி செய்கின்றேன். அவர்கள் எனக்கு ஊறு விளைவிக்கின்றார்கள். அவர்களிடம் நான் பொறுமையை மேற்கொள்கின்றேன். அவர்கள் என்னிடம் அறிவீனத்தையே கடைப்பிடிக்கின்றார்கள்'' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீ சொல்வது போன்ற நிலையில் இருந்தால் நீ அவர்களை சூடான சாம்பலைத் திண்ணச் செய்தவன் போலாவாய். (அதாவது அவர்கள் தங்கள் மீது மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கின்றனர்) இதே நிலையை நீ தொடர்கின்ற வரை அவர்களின் தீமையை விட்டு காப்பதற்காக ஓர் உதவியாளர் (வானவர்) உன்னுடன் இருந்து கொண்டே இருப்பார்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி),  முஸ்­லிம் 4640, அஹ்மத் 7651

எனவே, முடிந்தவரை அல்ல கடைசி வரை அனைவரையும் அணுசரித்தும், விட்டுக் கொடுத்தும் இணங்கியும் செல்ல வேண்டும். இதுவே, உண்மையான உறவாகும். இதுதான் நம்மை நரகத்திலிருந்து காப்பாற்றும். சொர்க்கத்தைப் பெற்றுத் தரும். 
உறவை ஆதரிக்கச் செல்கையில் உறவினர் மிஞ்சினாலும் நாம் கெஞ்ச வேண்டும். அவர்கள் துரோகமிழைத்திருந்தாலும் நமது உறவைத் தொடர வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இப்போது கண்ட இந்த ஹதீஸ்களெல்லாம் உறவினர்களை ஆதரிப்பதில், அவர்கள் மிஞ்சினாலும் நாம் கர்வம் காட்டக் கூடாது. நாம் கொஞ்சம் அல்ல, மிக அதிகமாகவே கீழிறங்கித் தான் போக வேண்டும் என்று வ­லியுறுத்துகின்றன.

பெரும்பாலான முஸ்லிம்களிடம் உறவை ஆதரிக்கும் பண்பு இன்னும் ஏற்படவில்லை. அதிலும் குறிப்பாக நாங்கள் சமுதாய மறுமலர்ச்சிக்குப் பாடுபடுகின்றவர்கள். கொள்கைப் புலிகள்.  ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் இந்தப் பண்பு அறவே இல்லை.  வரவே இல்லை. வரவே வராது என்று சொல்லும் அளவுக்கு இந்தச் சீர்திருத்தவாதிகளின் செயல்பாடுகள் உள்ளன. 

உனக்குத் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுவதும் தான் இஸ்லாத்தில் மிகச் சிறந்த நல்லறம். இஸ்லாமியப் பண்புகளில் மிகவும் சிறந்தது  என்று அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள்  வழி காட்டி உள்ளார்கள்.  புகாரி 12, 28, 6236

அல்லாஹ்வுடைய துாதர் முஹம்மது (ஸல்) அவர்களின் எதிரியான அபுஜஹ்லின் வாரிசுகள். அபுஜஹ்லைவிட மோசமானவனின் கட்டளையை ஏற்று  ஸலாம் சொல்வது இல்லை. ஸலாம் சொன்னால் பதில் சொல்வதும் இல்லை

 நபி வழி நடந்தால் நரகமில்லை. அதை நாடாத பேர்களுக்கு சொர்க்கமில்லை,  சொர்க்கமில்லை. இதுதான் இது வரை கண்ட ஹதீஸ்கள் தரும்  பாடம். பெருநாள் வாழ்த்து கூறியவர்களே உங்களுக்கு  சொர்க்கமா? நரகமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.