பிற கட்சிகளோடு கூட்டணி சேர மார்க்கத்தில் அணுமதி இருக்கிறதா?

எந்த ஜாதியாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும். ஒரு நாட்டு எல்லைக்குள் வாழ்ந்தால். நபி(ஸல்) அவர்கள் யூதர்களோடு செய்த ஒப்பந்தத்தைப் போல் அவர்களுக்கு மத்தியிலே ஒரு ஒப்பந்தத்தை வைத்துக் கொள்ள வேண்டும்அப்படி வைத்துக் கொண்டால் அங்கு ஜாதி, மத வெறி வராது. ரத்த ஆறுகள் ஓடாது. உடுமலை காதல் சாதல்கள் நடக்காது. போட்டி பொறாமை என்பது இருக்காது.


ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வார்கள். ஒருவருக்கு ஒருவர் நலம் நாடுவார்கள். நல்ல நண்பர்களாக பழகுவார்கள். பல சாரார் ஒன்றாக பழகுவதற்கு இது காரணமாக அமைகிறது. இதை இந்த ஒப்பந்தத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம். யூதர்களிலே அவ்ஸ் கிளையைச் சார்ந்தவர்கள் தலைவர் போன்ற அந்தஸ்த்துக்கு உரியவர்களாக இருந்தார்கள். 

மனிதருள் மாணிக்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஒரு சமுதாயம் அல்லது ஒரு கூட்டம் மதிக்கக் கூடியவராக ஒருவர் இருந்தால். அவரை இகழ்ந்து பேசாதீர்கள் என்று.


நான்கு பேர் ஒருவரை மதித்தால் அவரை நாம் இகழ்ந்து பேசக் கூடாது. பேசினால் நாம்  சொல்லும் உண்மை அவர்களிடம் எடுபடாது. அவர்கள் மதிப்பவரை இகழ்ந்து விட்டு அவர்களிடம் உண்மையைச் சொல்வது என்பது பயனற்றது. எடுத்துரைப்பது உண்மையைத்தான் என்றாலும் அது எடுபடாது. அவர்கள் மதிப்பவரிடம் தவறுகள் இருந்தால். அந்த தவறுகளை அந்த மக்கள் விளங்கக் கூடிய வகையில்தான் நமது எடுத்துரைத்தல், விளங்க வைத்தல் இருக்க வேண்டும். தவிரவும் அவரை குறை கூறுகின்ற மாதிரி நமது பேச்சுக்கள் எழுத்துக்கள் இருந்தால் அதை காதில் ஏந்தவே மாட்டார்கள். நமது சொல்லை புறக்கணித்துப் போவார்கள். நமது முயற்சி பலன் அளிக்காது.


ஆகவேதான்  கண்ணியத்திற்குரிய நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஒரு கூட்டம் மதிக்கக் கூடிய ஒருவரை நீங்கள் இகழாதீர்கள் என்று. இகழ்வதற்கு அவன் தகுதியானவன்தான். ஆனாலும் இகழாதீர்கள். அதற்குரிய காலம் வரும்பொழுது அந்த மக்கள் விளங்கிக் கொள்வார்கள். அல்லாஹ் நாடினால் விளங்கக் கூடிய சூழல்களை ஏற்படுத்துவான். கல், மண், சிலை, புத்து, மரம், பாம்பு, பல்லி, எலி, புலி, மாடு என்று கண்ணுக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் இவற்றை வணங்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அவற்றை திட்டாதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (திரு குர்ஆன் 6:108)


இப்படி ஏன் சொல்கிறான். அவை ஆற்றல் உடையவவை என்பதாலா? இல்லை. கல்தான், மண்தான், சிலைதான், புற்றுதான், மரம் மற்றும் மிருகங்கள்தான் என்று எல்லார் கண்ணுக்கும் நன்றாகத் தெரிகிறது. எல்லார் கண்ணுக்கும் தெரிந்தது அதை வணங்குபவர்களின் அறிவுக்கு தெரியவில்லை. அவர்களது நம்பிக்கை அவர்களது அறிவுக் கண்ணை மறைத்து விட்டது. அவற்றை கடவுளாக கருதச் செய்து விட்டது.


அல்லாஹ் அல்லாதவை அனைத்தும் கற்பனைதான். ஆனாலும் ஏசக் கூடாது. மண்ணை வணங்கிகளே! கற்சிலை முட்டிகளே என்று கிண்டல் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் விளைவு என்ன? அதனை வணங்கக் கூடியவர்கள் அறியாமையின் காரணமாக அல்லாஹ்வை திட்டுவார்கள். (திரு குர்ஆன் 6:108) அந்தப் பாவம் யாரைப் போய்ச் சேரும்? திட்ட காரணமானவர்களைத்தான் போய்ச் சேரும்.


அது மாதிரி ஒரு கூட்டம் மதிக்கக் கூடியவர்களிடம் ஒரு குறை இருந்தாலும் அதை கிண்டல் செய்து நாம் பேசக் கூடாது. பேசினால் சிந்திக்க மாட்டான். அவனது அறியாமையால் அவன் பதிலுக்கு நம்மை பேசுவான். அதனால் அந்தந்த கூட்டத்தில் உள்ள தலைவர்களுக்கு அவரவர்களுக்குரிய சங்கையை கண்ணியத்தை கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் கொடுத்து வந்தார்கள். அப்படிப்பட்ட நபி (ஸல்) யூதர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அம்சங்களை இப்போது  பார்ப்போம்.


1) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள் முஃமின்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராக கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரை சாராத மற்ற யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு.


முதல் உடன்படிக்கையின் முதல் வாசகத்திலேயே அவ்ஸ் கிளையைச் சார்ந்தகளை கண்ணியப்படுத்தியுள்ளார்கள் நபி(ஸல்) அவர்கள். எப்படி கண்ணியப்படுத்தி உள்ளார்கள்? யூதர்களும் முஃமின்களும் ஒரே சமுதாயம் என்று எழுதி கண்ணியப்படுத்தி உள்ளார்கள். யூதர்களாகவே உள்ள அவ்ஸ் கிளையைச் சார்ந்தவர்களைப் பார்த்து என்ன சொல்கிறார்கள். நீங்களும் நாங்களும் சகோதரர்கள் மாதிரி என்று. இதை மேலோட்டமாகப் பார்த்தால் குர்ஆனில் உள்ள அதிகமான வசனங்களுக்கு முரண்படுகிற மாதிரி தெரியும். எனவே மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ் என தள்ளுபடி செய்து விடுவார்கள். அறிவுள்ளவர்கள் இந்த இடத்தில் இரண்டையும் இணைத்துப் பார்ப்பார்கள்.


இணைத்துப் பார்க்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர்களே பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம் அவர்களுக்கு என்ன நிர்ப்பந்தமோ. கொடுத்தவர்களில் யார் கொடுத்த நிர்ப்பந்தமோ? அதனால் ஏற்பட்டுள்ள விபரீத விளைவுகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த இடத்தில்தான் நமது அறிவுக் கண் மயங்கி விடக் கூடாது. அறிவுக் கண் மயங்கி விட்டால் கடவுள் கல்லாகி விடுவான். கல் கடவுளாகி விடும். எனவே குர்ஆனையும் ஹதீஸையும் இணைத்துப் பார்த்து விளங்க வேண்டும்.


முஸ்லிம் அல்லாதவர்களை பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் சொல்கிறான் (திரு குர்ஆன் 3;28) என்று நின்று விடக் கூடாது


தொடர்ந்து என்ன சொல்கிறான் என்று பார்க்க வேண்டும். தொடர்ந்து அந்த ஆயத்தையும் மற்றுமுள்ள ஆயத்துக்களையும் பார்க்க வேண்டும். பார்த்தால் என்ன விளக்கம் கிடைக்கிறது? அவர்கள் மூலம் முஸ்லிம்களுக்கு ஒரு சில நன்மைகள் கிடைக்குமானால். பலன்கள் இருக்குமேயானால் அவர்களோடு கூட்டு சேர்வதற்கு தடை இருக்கிறதா? என்றால். எந்த தடையும் இஸ்லாத்தில் இல்லை.


மார்க்கத்தில் இல்லாத தடையை மனிதன் போட்டால் அவன் ஷய்த்தான். இதை நன்கு விளங்க வேண்டும். விளங்கிய உடன் அந்த ஷய்த்தானை விட்டும் விலகி விட வேண்டும். நமது சமுதாயத்திற்கு நாம் நன்மை செய்வதற்காக, கால சூழலுக்கு ஏற்ப பிற கட்சிகளோடு கூட்டணி சேர மார்க்கத்தில் அணுமதி இருக்கிறதா? என்றுதான் பார்க்க வேண்டும்

நேற்று ஒரு விதமாகவும் இன்று ஒரு விதமாகவும் பேசும் ஷய்த்தானின் பின்னால் போகக் கூடாது. சமுதாய நலன் கருதி நாம் எந்தக் கட்சியோடு கூட்டணி அமைத்தாலும் மார்க்கத்தில் தடை இல்லை. இதை இந்த நேரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நபி(ஸல்) அவர்களின் அந்த ஒப்பந்தத்தை அறிவுடன் அறிவதன் மூலம் புரிந்து கொள்ளலாம். அறிவது என்பது வேறு அறிவுடன் அறிவது என்பது வேறு. அதனால்தான் அறிவுடன் அறிவதன் மூலம் இதை புரிந்து கொள்ளலாம் என்கிறோம்.


நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அந்த ஒப்பந்தத்திலே சொல்கிறார்கள். அவ்ஸ் கிளையைச் சார்ந்த யூதர்களும் முஃமின்களும் ஒரே சமுதாயம். பரஸ்பரம் உரிமை. நட்பு, சுதந்திரம், நல்லுறவு, தொடர்பு நீடிக்கும். அதாவது ஒப்பந்தம் எப்பொழுது வரை நீடிக்கிறதோ அதுவரை இதுவெல்லாம் நீடிக்கும். ஒருவர் இஸ்லாத்திற்கு வந்து விட்டால் தாய் தந்தை உடனான உறவு முறை இருக்கத்தான் செய்யும். ஆனாலும் சகோதர வாஞ்சையுடன் இந்த உறவு நீடிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அல்லாஹ்வுடைய துாதர் ஒப்பந்தத்தின் முதலில் எழுதியுள்ளார்கள். இரண்டாவது ஒப்பந்தம் என்ன? அதில் இன்றைய  அரசியல்வாதிகளுக்கு உள்ள வழிகாட்டுதல்கள் என்ன?
நன்றி; மக்கள் உரிமை

ஏப்1-7, 2016
இன்ஷாஅல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

அடுத்த தலைப்பு 

                                  முந்தைய தலைப்புகள்



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.