ஆடை அலங்காரம்.
ஆண்களின் ஆடைகள்,கமீஸ் (சட்டை&ஜூப்பா), ஆடையில் பெருமை,'ஜூப்பா',கைலிகள், வேஷ;டிகள்,ஸிர்வால் (கால்சட்டைகள்),தரித்திரக்கோலம்

'ஆடையில்லா மனிதன் அரை மனிதன்' என்பது பழமொழி.மனிதனின் அந்தஸ்த்தை ஆடையை வைத்தே உலகம் மதிப்பிடுகிறது. ஒருவனிடம் கல்வியும், செல்வமும் ஏராளமாக இருந்தாலும், அவனது ஆடை தரம் குறைந்ததாக இருந்தால் உலக மக்களால் சாதாரணமாகவே கருதப்படுகிறான். ஆடையைப் பொறுத்து இஸ்லாம் என்ன கூறுகிறது? என்பதை இந்தக் கட்டுரையில் நாம் காணலாம்.

இஸ்லாம் ஆடை விஷயத்தில் ஆண்களுக்குச் சில கட்டுப்பாடுகளையும், பெண்களுக்கு வேறு சில கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்துகின்றது. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு எப்படி வேண்டுமானாலும் ஆடை அணிவதை இஸ்லாம் அனுமதிக்கின்றது. முதலில் ஆண்களுக்கான ஆடையை நாம் பார்ப்போம்.

ஆண்களின் ஆடைகள்.

ஆடையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சில விதிகளை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களின் ஆடைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விரிவாக நாம் முதலில் ஆராய்வோம்.

அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகள்.

ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை அவசியம் மறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தொடைப்பகுதியை மிக அவசியம் மறைத்தாக வேண்டும். இவற்றைத் தவிர ஆண்கள் மற்றப் பகுதிகளை கட்டாயம் மறைக்க வேண்டுமென்பதில்லை: அதற்கான சான்றுகளை நபிவழியில் காண்போம்.

'உங்களில் எவரேனும் தன்னுடைய வேலைக்காரனுக்கோ, அடிமைக்கோ மணமுடிக்கும் காலம் வரும்போது தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியையும், முழங்காலுக்கு மேலே உள்ள பகுதியையும் பார்க்கக் கூடாது' என்பது நபிமொழி அறிவிப்பவர்:அம்ரு இப்னு ஷ_ஐபு(ரலி) நூல்: அபூதாவூத்

'மஃமர்' என்ற நபித்தோழரின் இரண்டு தொடைகளும் வெளியே தெரிவதை கண்ட நபி(ஸல்) அவர்கள் 'மஃமரே! உன் இரு தொடைகளையும் மூடி மறைத்துக்கொள்: ஏனெனில் இரு தொடைகளும் மறைக்கப்பட வேண்டிய பகுதிகளார்ம்' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்-முஹம்மது இப்னு ஜஹ்ஷ;ரலி) நூல்- அஹ்மத்

இந்தக் கருத்தில் இன்னும் பல நபிமொழிகள் உள்ளன.ஆண்கள் தொப்புள் முதல் முழங்கால் வரை மறைத்தாக வேண்டும். அதிலும் குறிப்பாக முழங்காலை மறைக்க வேண்டும் என்பதற்கு சான்றாக இந்த நபிமொழிகள் உள்ளன.

தொழுகையின்போது

பொதுவாக ஆண்கள் தொப்புள் முதல் முழங்கால் வரை மறைத்துக் கொள்வதே போதுமென்றாலும் தொழுகையின் போது மட்டும் இன்னும் சிறிது அதிகமாக மேனியை மறைக்க வேண்டும். இதற்குரிய ஆதாரங்களை கீழே தருகிறோம்.

'தன்னுடைய தோள் புஜத்தின் மீது எந்த ஆடையும் இல்லாத வகையில் ஒரு ஆடையில் தொழக்கூடாது. (நபிமொழி) அறிவிப்பவர்-அபூஹூரைரா(ரலி) நூல்-புகாரி,முஸ்லிம்,அஹ்மத்

போர்வையின் வலதுகை பகுதியை வலதுகையின் கீழ்ப்புறத்திலிருந்து எடுத்து இடது தோளிலும், இடதுகைப்பகுதியை வலது தோளிலும் போட்டுக்கொண்டு நபி(ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள்.
அறிவிப்பவர்-ஜாபிர்(ரலி) நூல்-புகாரி,முஸ்லிம்,அஹ்மத்

தொழுகையின்போது தோள் புஜம் வரை மறைக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன. தொப்புள் முதல் முழங்கால் வரை மறைத்தால் போதுமானது என்ற நிலை தொழுகைக்கு இல்லை. மாறாக தோள்புஜம் வரை மறைக்க வேண்டும் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

அரைக்கை சட்டை அணிந்து தொழலாமா?

நம் தமிழகத்து மவ்லவிமார்களில் பலரும் அரைக்கைச் சட்டை அணியக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் பொதுவாக அரைக்கைச் சட்டை அணியலாம் என்றாலும்,தொழுகையின்போது முழங்கை வரை மறைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த இரு கூற்றுகளுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. முழங்கை வரை மறைக்க வேண்டியதுமில்லை.

மேலே நாம் எழுதியுள்ள இரண்டு ஹதீஸ்களும் இந்த உண்மையை நமக்கு உணர்த்துகின்றன. முதல் ஹதீஸிலிருந்து தோள்புஜத்தின் மீது ஆடையின் ஒரு பகுதி இருக்கும்படி அணியவேண்டும் என்பது தெளிவாகின்றது. இரண்டாம் ஹதீஸில் இதற்கு விளக்கமும் கிடைக்கின்றது.

அதாவது 'மேல்துண்டை' வலதுபாகத்தை இடதுபுறமும், இடது பாகத்தை வலதுபுறமும் நபி(ஸல்) அவர்கள் போட்டுத் தொழுதுள்ளார்கள். இவ்வாறு செய்யும்போது கைகளை அந்த ஆடை மறைக்க முடியாது. மாறாக கைகள் முழுமையாக வெளியிலேயே தென்பட்டுக் கொண்டிருக்கும். கைகள் முழுமையாக வெளியே தெரியுமாறு நபி(ஸல்) அவர்கள் தொழுதிருக்கும்போது, அரைக்கைச்சட்டை அணியக்கூடாது என்று எப்படிக் கூற முடியும்?

நபி(ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஸஜ்தா செய்யும்போது அக்குளின் வெண்மைப்பகுதி தெரியுமளவுக்கு தங்கள் கைகளை விரிப்பார்கள். அறிவிப்பவர்-அப்துல்லாஹ்(ரலி) நூல்-புகாரி,முஸ்லிம்,அஹ்மத்

இந்த ஹதீஸூம், இதற்கு முன்னருள்ள இரு ஹதீஸ்களும், ஆண்கள், தொழுகையின்போது கைகளை மறைக்க வேண்டும் என்பதில்லை என்பதற்கு மறுக்க முடியாத சான்றகளாக உள்ளன.

வசதியற்ற நிலையில்

'தொழுகையின்போது தோள் புஜத்தை மறைக்க வேண்டும்'என்ற விதியில் வசதியற்றவர்கள் விலக்குப் பெறுகிறார்கள்அதற்கான சான்றுகள் வருமாறு,
ஆடை (நீண்டு) விசாலமானதாக இருந்தால் உன் தோள்புஜத்திலிலிருந்து அணிந்து கொள்! ஆதன்பின் தொழு! (தோள் புஜத்திலிருந்து மறைத்தால், கீழே மறைக்கவேண்டிய பகுதி வெளியில் தெரியுமளவுக்கு) உன் ஆடை சுருக்கமாக இருந்தால் உன் இடுப்பில் அந்த ஆடையைக் கட்டிக்கொண்டு, மேலாடை ஏதுமின்றி தொழு! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்-ஜாபிர்(ரலி) நூல்-அஹ்மத்

'நீ ஒரு ஆடையை அணிந்து தொழும்போது அது விசாலமாக இருந்தால் (அதை தோள் புஜத்திலிருந்து) சுற்றிக்கொள்! அது சிறிதாக இருந்தால் அதைக் கைலியாக கட்டிக்கொள்! என்பதும் நபிமொழி அறிவிப்பவர்-ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) நூல்-புகரி,முஸ்லிம்,அஹ்மத்

நபி(ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் முழுமையாக தங்கள் மேனியை மறைக்கும் அளவுக்கு வசதிபெற்றிருக்கவில்லை. அதுபோன்ற நேரங்களில் கீழ்ப்பகுதியை மட்டும் மறைத்துள்ளார்கள். என்பதற்கு இவை ஆதாரங்களாகும்.

கமீஸ் (சட்டை&ஜூப்பா)

நபி(ஸல்) அவர்கள் 'கமீஸ் என்னும் ஆடை அணிந்ததற்கும் ஹதீஸ்களில் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. மேலுடம்பில் அணிகின்ற ஆடை 'கமீஸ் எனப்படும்.அதாவது ஜூப்பா என்னும் சட்டை என்றும் சொல்லப்படுவது கமீஸில் அடங்கும். இன்று வழக்கத்தில் ஜூப்பா என்று கூறப்படுபவை அரபு மொழியில் குறிப்பிடப்படும் ஜூப்பா அல்ல. நாம் ஜூப்பா என்று சொல்கின்ற ஆடை 'கமீஸ்' என்ற வகையிலேயே அடங்கும்: இரண்டிரும் ஒன்றைவிட மற்றொன்று தாழ்ந்தது என்றில்லை.

'நபி(ஸல்) அவர்களுக்கு கமீஸ் ஆடை மிகவும் விருப்பமானதாகவே இருந்தது.' சொல்பவர்-அன்னை உம்மு ஸல்மா(ரலி) நூல்-அஹ்மத்,அபூதாவூத்,திர்மிதீ

நபி(ஸல்) அவர்களின் கமீஸூடைய கை மணிக்கட்டு வரை இருந்தது.
சொல்பவர்-அஸ்மா பின்த் யஸீத்(ரலி) ல்-அபூதாவூத்,திர்மிதீ

முதல் ஹதீஸ் 'கமீஸ்' நபி(ஸல்) அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது என்பதையும், இரண்டாம் ஹதீஸ் கமீஸின் அளவையும் குறிப்பிடுகின்றது.


ஆடையில் பெருமை

ஒரு குறிப்பிட்ட ஆடையை குறிப்பிட்ட விதமாக அணிந்து கொள்வது ஒரு மனிதனின் சிறப்புக்குக் காரணமாக ஆக முடியாது. 'நல்லவர்கள்' என்று கருதப்படுவதற்கு என 'டிரேட் மார்க்' ஆடையை நம்மவர்கள் உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் தாங்கள் தனித்தன்மை அடைந்துவிட்டதாக கருதுகின்றனர். 'பணிவான ஆடை' என்று அதற்கு பெயர் சூட்டினாலும், 'பணிவான ஆசாமி' என்று கருதப்படவேண்டும் என்பதற்காகவே இதை அணிகின்றனர். இதுவும் ஒரு வகையில் பெருமையடிப்பதேயாகும்.

நபி(ஸல்)அவர்களின் சட்டைக்கை, மணிக்கட்டைத் தாண்டியதாக இருந்ததே இல்லை. நபித்தோழர்களில் எவரது சட்டையும் அவ்வாறு அமைந்திருக்கவில்லை. ஆனால் இன்று 'நல்லோரின் ஆடை' என்ற பெயரால் ஜூப்பா படும்பாடு சொல்லி முடியாது.

ஒரு குழந்தைக்கு சட்டை தைக்கும் அளவுக்கு அகலமாகவும், கைகளை மறைக்கும் அளவுக்கு நீளமாகவும், அணிவதே 'சுன்னத்' என்ற மாயையை சிலர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் கைலி அணிந்திருந்தும், கரண்டைக்கால் வரை ஜூப்பாவை நீட்டிக்கொண்டே போகிறார்கள். ஜூப்பாவின் நீளமும் அகலமும் எவ்வளவு அதிகமாக உள்ளதோ,அவ்வளவுக்கு ஒருவன் நல்லவனாக கருதப்படுவதையும் காணமுடிகிறது. இவைகளெல்லாம் தவிர்க்கப்படவேண்டிய மாயையாகும்.

'கைலிகள், கமீஸ்கள், தலைப்பாகைகள் இவற்றில் (நீளமாக) தொங்கவிடுதல் ஏற்படுகின்றது. யார் இவற்றில் பெருமையை நாடி தொங்கவிடுகிறார்களோ அவர்களை அல்லாஹ் பார்க்கமாட்டான்' என்பது நபிமொழி. அறிவிப்பவர்-இப்னு உமர்(ரலி) நூல்-அபூதாவூத்,திர்மிதீ,நஸயீ,இப்னுமாஜா

எந்தவிதப்பயனுமின்றி, நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரியும் இன்றி தேவையில்லாமல் ஆடையை தொங்கவிட்டுக் கொள்வது தவிர்க்கப்படவேண்டியது என்பதை இந்த ஹதீஸ் நமக்கு தெளிவாக்குகின்றது. கைலியை 'கரண்டைக்கீழ்' தொங்கவிடுவது எவ்வாறு தவிர்க்கப்படவேண்டுமோ, சட்டைக்கைகளை மணிக்கட்டை விடவும் அதிகமாக தொங்கவிடுவதும் தவிர்க்கப்பட வேண்டியதாகும் என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.

'நபி(ஸல்) அவர்கள் கைலியை தொங்கவிடக்கூடாது என்று கூறியது, கமீஸூக்கும் பொருந்தும்' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறியது கவனிக்கத்தக்கதாகும்.

'(தனித்தன்மையைக் காட்டும்விதமான) 'புகழ்' ஆடையை எவன் அணிகிறானோ, அவனுக்கு அல்லாஹ் இழிவு ஆடையை மறுமையில் அணிவிப்பான்'. என்பது நபிமொழி அறிவிப்பவர்-இப்னு உமர்(ரலி) நூல்-அபூதாவூத்,திர்மிதீ,நஸயீ,இப்னுமாஜா,அஹ்மத்

தன்னை உயர்ந்தவனாக காட்டிக்கொள்ள என்றே உருவாக்கப்பட்ட ஆடைகள் தவிர்க்கப்படவேண்டும் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?மக்களும் ஆடைகளை வைத்து ஏமாந்துப்போவதை தவிர்க்கவேண்டும். 'ஜூப்பா' அணிவதே பெரிய தகுதி என்ற நிலை மாற வேண்டும்.ஒழுக்கம், நேர்மை, நாணயம் இவற்றை ஜூப்பாவைக் கொண்டு அளவிட முடியாது என்பதையும் நாம் உணரவேண்டும்.
'ஜூப்பா'
நபி(ஸல்) அவர்கள் 'ஜூப்பா' அணிந்திருக்கிறார்கள் என்று வருகின்ற ஹதீஸ்களில் பயன்படுத்தப்படும் ஜூப்பாவுக்கும், இன்றைக்கு 'ஜூப்பா' என்று கூறப்படுவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.அரபு மொழியில் 'ஜூப்பா' என்பதற்பு இப்போதைய ஜீப்பா பொருளல்ல.

சாதாரணமாக அணியும் ஆடைகளுக்கு மேல் குளிர் தாக்காதிருக்க அணியும் இறுக்கமான ஆடைணை அரபியில் 'ஜூப்பா' எனப்படும்.

நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை ஜூப்பா(அதாவது அரபி ஜூப்பா) அணிந்திருந்தனர். இதை அணிந்துகொண்டு உளுச்செய்ய துவங்கினார்கள. கையை கழுவும்போது ஜூப்பாவின் கையிலிருந்து தன் கையை வெளியே கொண்டுவர முயற்சித்தார்கள். இயலவில்லை. ஏனெனில் அந்த ஜூப்பாவின் இருகைகளும் மிகவும் இறுக்கமாக இருந்தன. இறுதியில் கீழ்ப்புறமாக கையை வெளியே கொண்டுவந்து கையை கழுவினார்கள். (ஹதீஸ் சுருக்கம்)
அறிவிப்பவர்-முகீரா இப்னு ஷ_ஃபா(ரலி) நூல்- புகாரி

இந்த ஹதீஸ் ஜூப்பாவின் பொருளை நமக்கு நன்றாக உணர்த்துகின்றது. இன்றைக்கு ஜூப்பா என்று கூறப்படுவதற்கு அரபுமொழியில் 'ஜூப்பா' என்று சொல்லப்படுவதில்லை. 'ஸ்வெட்டர்' போன்ற இறுக்கமான குளிர் தடுக்கும் ஆடைகளே 'ஜூப்பா' எனப்படும்.

கடுமையான குளிர் அடிக்கும்போது, (குளிர் ஆடை அணிந்த பின்பும் குளிர் தாங்க முடியாது) 'ஜூப்பா' அணிந்தும் குளிர்கிறதே (ஜாஅல்பர்து வல்ஜூப்பாகி) என்று அரபியர் குறிப்பிடுவார்கள். இதுவும் ஜூப்பாவின் பொருளை நமக்கு உணர்த்துகின்றது. மேலும் இறுக்கமான ஆடைகள் அணியலாம் என்பதற்கும் இந்த ஹதீஸில் ஆதாரம் உண்டு.

ஜூப்பாவைத் தவறாகப் புரிந்துக்கொண்டு நம்நாட்டு ஜூப்பாவை 'சுன்னத்' என்று சொல்லுமளவுக்கு சிலர் இருக்கிறார்கள். மற்றவர்களையும் வற்புறுத்துகிறார்கள். 'நீங்கள் மவ்லவியாக இருந்துகொண்டு சுன்னத்தான ஜூப்பா அணியாமல் இருக்கிறீர்களே!' என்று என்னிடம் மவ்லவிகளில் சிலர் கேட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு ஜூப்பாவுக்கும் அர்த்தம் தெரியவில்லை: ஸூன்னத்துக்கும் பொருள் புரியவில்லை.

கைலிகள், வேஷ;டிகள்

இன்றைய தமிழக மவ்லவிமார்கள் பலர் கைலி அணியலாம்: வேஷ;டி அணியக்கூடாது என்று தீர்ப்பு வழங்குவதை-பிரச்சாரம் செய்வதை-நாம் கேள்விப்படுகிறோம். இதற்கும் எந்த ஆதாரமுமில்லை. தைக்கப்பட்டோ, தைக்கப்படாமலோ இடுப்புக்குக் கீழே அணியும் 'துண்டு' அரபியில் இஸார் எனப்படும். அதை நபி(ஸல்) அவர்கள் அணிந்திருக்கிறார்கள்.

அன்னை ஆயிஷh(ரலி) எமன் நாட்டில் நெய்யப்பட்ட முரட்டு இஸாரையும், ஒட்டுப்போட்ட ஒரு ஆடையையும் எடுத்துக்காட்டி 'இவ்விரண்டையும் அணிந்திருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்'. என்று தெரிவித்தனர். அறிவிப்பவர்-அபுத்தர்தா(ரலி) நூல்-முஸ்லிம்

ஒரு பெண்மணி செவ்வகமான ஒரு துணியை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து 'இதை நீங்கள் அணிய வேண்டும் என்பதற்காக நான் என் கையால் நெய்து வந்திருக்கிறேன் என்று கூறி அதை நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்தார்' அதை நபி(ஸல்) அவர்கள் அன்புடன் பெற்றுக்கொண்டு, எங்களை நோக்கி அதை கீழாடையாக அணிந்து கொண்டு வந்தனர்.(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி) அறிவிப்பவர்-ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) நூல்-புகாரி

ஒரு பெண்மணி கொடுத்த செவ்வகமான ஆடையை உடனே அணிந்துக் கொண்டு வந்தார்கள் என்றால் நிச்சயம் அது மூட்டப்பட்டிருக்கமுடியாது என்பது தெளிவு. இதன் மூலம் மூட்டப்படாத கைலியையும் அணியலாம் என்பதை தெளிவாக அறிகிறோம்

ஸிர்வால் (கால்சட்டைகள்)

இந்திய மவ்லவிகள் பலர் கால்சட்டை அணிவது ஹராம் என்று மார்க்கத்தீர்ப்பு (?) கடந்த காலங்களில் வழங்கி தங்களின் தேசப்பற்றை (?) பறை சாற்றியதுண்டு. ஆனால் மார்க்கத்தில் கால்சட்டைகள் அணிவதற்கு எந்த தடையும் வரவில்லை. மாறாக அனுமதி இருப்பதையே நாம் காணமுடிகின்றது.

(ஹஜ், உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடைகளை அணியலாம்? என்று நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வினவினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'கமீஸ், ஸிர்வால் இவ்விரண்டையும் அணியக்கூடாது' என்றனர்.
அறிவிப்பவர்-இப்னு உமர்(ரலி) நூல்-புகாரி

இஹ்ராமுடைய காலத்தில் தைக்கப்படடுள்ள ஆடையை அணியலாகாது. கமீஸூம், ஸிர்வாலும் தைக்கப்படுவதால் அவற்றை இஹ்ராமுடைய காலத்தில் அணியக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் இஹ்ராம் இல்லாத மற்ற நேரங்களில் கமீஸையும், ஸிர்வாலையும் அணியலாம் என்பது நன்கு புலனாகின்றது!

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இஸார் என்னும் கைலிகள் தைக்கப்படாமலே அணியப்பட்டுள்ளன. தைக்கப்பட்டிருந்தால் அதையும் இஹ்ராமுடைய நேரத்தில் அணியக்கூடாது என்று தடுத்திருப்பார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது.

'யூத,கிறித்தவர்கள் கால்சட்டை மட்டும் அணிகின்றனர். அவர்கள் 'இஸார்' அணிவதில்லையே' என்று நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீங்கள் கால்சட்டையும் அணியுங்கள்! கைலியும் அணியுங்கள்!என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்-அபூஉமாமா(ரலி) நூல்-அஹ்மத்

இவையெல்லாம் கால்சட்டை அணியலாம் என்பதற்கு மறுக்கமுடியாத ஆதாரங்களாக உள்ளன.

தரித்திரக்கோலம்

'ஏழ்மைக்கோலத்தில் கோலத்தில் இருப்பதையே அல்லாஹ் விரும்புகிறான்' என்ற எண்ணத்தில் பலர் முஸாபர் கோலத்தில் காட்சி அளிப்பதை நாம் காண்கிறோம். நபி(ஸல்) அவர்கள் வசதியின்மையின் காரணமாக ஏழ்மை ஆடை அணிந்ததை ஆதாரமாக காட்டுகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.
மாலிக் என்பவர் மட்டமான ஆடை அணிந்திருபப்தை நபி(ஸல்) அவர்கள் கண்டபோது அல்லாஹ் உனக்கு வசதியை தந்தால், அவனது அருட்கொடை உன் மீது காணவேண்டும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்-அவ்பு இப்னு மாலிக்(ரலி) நூல்-நஸயீ,அபூதாவூத்,இப்னுஹிப்பான்,ஹாகிம்

நான் மட்டமான ஆடை அணிந்து நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன்: அப்போது அவர்கள் 'உன்னிடம் செல்வம் உண்டா?' என்று கேட்டார்கள்.நான் 'ஆம்' என்றேன். 'என்எனன்ன செல்வம் உள்ளது?' என்று அவர்கள் கேட்டார்கள். 'ஒட்டகம், ஆடு, குதிரை, அடிமை இவைகளெல்லாமுண்டு'என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ் உனக்கு வசதியைத்தரும் போது' உனக்கு அவன் அளித்துள்ள அருட்கொடையும், மதிப்பும் உன்மீது எதன்பட வேண்டும்' எனக்கூறினார்கள். அறிவிப்பவர்-அபுல் அஹ்வஸ்(ரலி) நூல்- அபூதாவூது

வசதியுடையவர்கள்,அதற்கேற்றவாறு உயர்ந்த ஆடைகள் (மார்க்கம் அனுமதித்த விதத்தில்) அணிய வேண்டும். பஞ்சைக் கோலத்தில் இருக்கக்கூடாது என்பதை இதன் மூலம் அறிகிறோம்.

இதெல்லாம் பெருமையாகிவிடுமோ என்றெல்லாம் நாம் எண்ணலாகாது, ஏனெனில் பெருமை எது என அல்லாஹ்வின் தூதர் அழகாக விளக்கியுள்ளார். அதைக் கீழே காண்போம்.

'கடுகளவு பெருமை உள்ளவனும் சுவர்க்கத்தில் நுழைய முடியாது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ஒரு மனிதர் தன் ஆடை, தன் செருப்பு அழகாக இருக்கவேண்டுமென விரும்புகிறானே! (இதுவும் பெருமையா?) என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ் அழகை விரும்புகிறான்:பெருமை என்பது என்னவெனில் சத்தியத்தை (ஏற்க) மறுப்பதும், மக்களை இழிவாக எண்ணுவதும்தான்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்-இப்னு மஸ்வூது(ரலி) நூல்- முஸ்லிம்,அஹ்மத்

ஏழைகளின் ஆடைகளை இழிவாக கருதுவதும், அவர்களை அலட்சியப்படுத்துவதும்தான் பெருமை. அவ்வாறு கருதாமல் அழகான ஆடைகள் அணிவதில் தடையில்லை. அணிய வேண்டும்.
அளவான ஜூப்பாவும், கமீஸூம்அணிபவர்கள் அவ்வாறு அணியாதவர்களை, அற்பர்களாகக் கருதும்போது அது பெருமையில் உட்படுகிறது. கைலி அணிபவர்கள் கால்சட்டை அணிபவர்களை இழிவாகக் கருதும்போது அதுவும் பெருமையில் சேர்கின்றது.

இந்த இழிவுபடுத்தும் எண்ணமில்லாமல் அழகான, உயர்ந்த ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடுக்கவில்லை.

உயர்ந்த ஆடையில் தானிருப்பதால், மற்றவர்களை விட தனக்கு அதிக மதிப்பு தரப்படவேண்டும்: தனியாகக் கவனிக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணும்போது, மற்றவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இது போன்ற மனப்பான்மையும் பெருமையின்பாற்பட்டதேயாகும்.

சதாரண ஆடை அணிந்தவன் வாயிலிருந்து வரும் உண்மையை ஏற்க மறுப்பதும் பெருமை ஆகும். அந்த ஹதீஸை ஆராய்வோர்க்கு இந்த உண்மை விளங்கும்.

இத்தகையவர்களை நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றனர். 'எவன் இவ்வுலகில் பெருமையான ஆடையை அணிகிறானோ, அவனுக்கு அல்லாஹ் 'சிறுமை' ஆடையை அணிவிப்பான்' என்பது நபிமொழி. அறிவிப்பவர்-இப்னு உமர்(ரலி) நூல்-அஹ்மத்,அபூதாவூத்,இப்னுமாஜா

(இது ஆண்களின் ஆடை சம்பந்தப்பட்ட கட்டுரை எனினும் பெருமைக்காக ஆடை அணியக்கூடாது என்பது பெண்களுக்கும் பொதுவானதே! என்பதைப் பெண்கள் கவனத்தில் கொள்க!)
சட்டைப் பித்தான்களை திறந்து விடலாமா?

சட்டை அணிந்திருப்பவர்கள், சட்டையின் பித்தான்களை (பட்டன்கரள) திறந்துவிடுவதை பெரும் தவறாக நம்மவர்கள் கருதுகின்றனர். அப்படி இருப்பவனை ஒழுக்கக் குறைவானவன் என்றும் எண்ணுகின்றனர். இதுவும் தவறான எண்ணமேயாகும்.

இஸ்லாத்தைத் தழுவும் உறுதிமொழி எடுப்பதற்காக நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தன் கமீஸின் முன் பகுதியை திறந்து விட்டிருந்தார்கள். அறிவிப்பவர்-முஆவியா(ரலி) நூல்- இப்னுமாஜா

ஒரு ஆண் மேலாடையின்றி இருப்பதையே இஸ்லாம் அனுமதிக்கின்றபோது, சட்டையை திறந்துவிடுவதைத் தடுக்காது என்று இங்கே கருத்தில் கொள்ளவேண்டும்.

சுத்தம் சுகம் தரும்

அழுக்கடைந்த ஆடைகளை அணிவதைக்கூட சூபியாக்களின் அடையாளங்களாக இன்றைய சமுதாயம் ஆகிவிட்டது. இதுவும் தவறான எண்ணமாகும்.

தூய்மையையும், சுத்தத்தையும் வலியுறுத்துகின்ற ஏராளமான நபிமொழிகள் உள்ளன. மாதிரிக்கு ஒன்றைக் காண்போம்.

ஒரு மனிதர் அழுக்கடைந்த ஆடை அணிந்திருப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டபோது, 'இவர் தனது ஆடையைத் துவைப்பதற்கு தண்ணீரைப் பெற்றுக்கொள்ளவில்லையா?' என்று கண்டித்தனர். அறிவிப்பவர்-ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) நூல்- அபூதாவூத்


முடிவுரை

காவி நிறம் தவிர மற்ற எல்லா நிறங்களிலும் ஆடை அணியலாம். பட்டாடைத் தவிர மற்ற ஆடைகளை ஆண்கள் அணியலாம் என்பன போன்ற விளக்கங்களை முன்பே ஒரு இதழில் நான் எழுதி இருக்கிறேன். ஆடைபற்றி தவறான கருத்து நிலவுவதால் அவற்றை மட்டும் தெளிவுபடுத்திட இந்த கட்டுரை எழுதியுள்ளேன்.

இனி பெண்களின் ஆடைகள் எப்படி அமைய வேண்டும் என்று காண்போம். (இன்ஷh அல்லாஹ்)
நன்றி: அல்ஜன்னத் 1988 ஜன,பிப்
இதனை கம்யூட்டரில் டைப் செய்து தந்த செல்வி ரஜா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.