'அல்ஜன்னத்' உங்களைத் தேடி வந்துவிட்டது.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ்தான் எனக்கூறி (அதன் மீதே) உறுதியாக நிலைத்து நிற்கிறார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து, 'நீங்கள் பயப்படாதீர்கள், கவலை கொள்ளாதீர் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜன்னத்தைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள், நாங்கள் உலக வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாய் இருந்தோம், மறுமையிலும் ஜன்னத்தில் உங்கள் உள்ளம் விரும்புவதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும் பாவங்களை மன்னித்து கிருபை செய்வோனின் விருந்தாளியாக (ஜன்னத்தில்) தங்குங்கள்!' எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன் 41:30-32)

'அல்லாஹ்தான் எங்கள் இறைவன்! அவனுக்கே அஞ்சுவோம். நபி(ஸல்) அவர்கள் படைப்பினங்களில் மிகச்சிறந்தவர்களாக எங்களுக்கு ஒரு அழகிய முன்மாதிரியாக திகழுகிறார்கள்' என்ற உறுதியை உள்ளத்தில் ஏந்தி, அதிலேயே ஊன்றி நின்று எவரெல்லாம் செயல்பட்டார்களோ அவர்கள் அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட ஜன்னத்தைக் கண்டு களிப்பேரு வகை கொள்வார்கள்.

மறை கூறும் இந்த மறுமையின் ஜன்னத்துக்கு நம்மையெல்லாம் வாரிசுகளாக வார்த்தெடுப்பதற்கெனவே இங்கு 'அல் ஜன்னத்' மலர் ஒன்று இதழ் விரிக்கிறது. 'விரைவில் எதிர் பாருங்கள்!' எனக் கடந்த காலங்களில் வாக்களிக்களிக்கப்பட்ட இந்த அல் ஜன்னத்தை இன்று நீங்கள் கண்டு மகிழ்கிறீர்கள்! இனி மாதமொருமுறை இதன் நறுமணத்தை நாமெல்லாம் நுகரவிருக்கின்றோம்.(இன்ஷா அல்லாஹ்)

இஸ்லாத்தின் இரவு கூடப் பகல் போன்று தெள்ளத் தெளிவாக நம் உள்ளம் கொள்ளுமளவுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் பகல் கூடப் பார்ப்பவர்களுக்கு இருள் போல் தெரியுமளவுக்கு இன்று பலரால் இது இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது.

இஸ்லாமியப் பத்திரிக்கை என்னும் பெயரில் பவனி வரும் பெரும்பான்மையானவை, எளிய இனிய தூய இஸ்லாத்தை இருள்பாதையிலேயே இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றன்
கலப்படமில்லாத நிலையில் இஸ்லாத்தை அதன் தூய நிலையில் துணிவுடன் எடுத்துரைத்திடும் பத்திரிக்கைகள் இன்னமும் போதிய அளவுக்கு நம்மிடம் வெளிவரவில்லை.

ஆங்காங்கே நடைபெறும் ஏகத்துவப் பிரச்சாரத்தினால், மெய்யான இஸ்லாத்தை அறிகின்ற மக்கள், கூட்டங்கூட்டமாக இதன்பால் விரைந்து வருவதைக் காண்கிறோம். இத்தகையவர்களுக்கு இருள் கலவாத வெள்ளைவெளேர் எனத் திகழும்நம் உயிரினுமினிய இஸ்லாத்தை அதன் அனைத்து பரிமாணங்களோடும் பரிமாற வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்த தீனவா தான் இந்த தேனிதழை கட்டவிழ்க்கச் செய்துள்ளது.

ஆம்! இருள் கிழித்திட வெளிக் கிளம்பிய ஒளிப்பிழம்பு இது. குர்ஆன், ஹதீஸ் என இரு இறகுகளைக் கொண்டு இந்த 'அல்ஜன்னத்' மறுமையின் ஜன்னத்தை நாடி மேலும் மேலும் பறந்தோடி வர இருக்கின்றது.

குர்ஆன், ஹதீஸ் தண்டவாளத்திலிருந்து தடம் புரளாது நெடும் பயணம் செய்யவிருக்கின்ற இந்த அல்ஜன்னத் அடம் பிடித்து தடம் புரள்பவர்களின் தடயங்களை சாட்சியங்களோடு ஆதாரங்களோடு குறுக்கு விசாரணை செய்யவும் தயங்கிடாது.

தீன் நெறிச் சகோதரர்களே!

இதோ! 'அல்ஜன்னத்' உங்களைத் தேடி வந்துவிட்டது. எங்களையறியாமல் இதில் குறை எதுவும் இடம் பெற்றிருக்கலாம். அதைத் தவறு என தவறாது சுட்டிக்காட்டுங்கள்! தக்க முறையில் அது ஏற்றுக கொள்ளப்படும்.

இங்கு உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு கிடைக்கவிருக்கிறது. புகாரி,முஸ்லிம் நீங்கலாக உள்ள ஏனைய நாற்பெரும் ஹதீஸ் நூல்களும் இங்கு ஒரே நேரத்தில் தொடர்ந்து மொழி பெயர இருக்கின்றன.

எத்தனைப் பத்திரிக்கைகளைத் தான் வாங்குவது என அலுத்துக் கொள்கிறீர்களா? அல்ஜன்னத்தையும் ஒரு முறை வாங்கிப் பாருங்கள் நீங்கள் இதன் விருந்தாளியாகவே தங்கி விடுவீர்கள். விண்ணின் ஜன்னத்திற்கு மனிதர்களைப் புடம்போட இது மண்ணில் மலர்ந்துள்ள மணம் கமழும் அல்ஜன்னத் என்பதை அறிந்து கொள்வீர்கள்!

யா அல்லாஹ்! இதைப் படைப்பவர்களும் படிப்பவர்களுமாகிய எங்கள் எண்ணம், சொல் , செயல்களையெல்லாம் உன்னுடைய தூதர் வழியில் அமைவதற்கும் உன் அருளிளேயே நாங்கள் நிலைத்து நிற்பதற்கும் அருள் புரிவாயாக! மறுமையின் ஜன்னத்தை- சொர்க்கத்தை எங்களுக்கு வழங்குவாயாக!
நன்றி; -அல் ஜன்னத் 1988 பிப்ரவரி மார்ச் நுழைவாயில்
இதனை கம்யூட்டரில் டைப் செய்து தந்த செல்வி ரஜா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.