ஹதீஸ்களின் பெயரால்.

1.ஸஹாபாக்களின் சிறப்புக்கள்

இன்று தமிழகத்தில் ஹதீஸ் என்ற பெயரில் நபி(ஸல்)அவர்கள் சொல்லாத பல ஹதீஸ்களை அவர்கள் சொன்னதாக மவ்லவிகளில் பலர் ஜூம்ஆ மேடைகளிலும்,பொதுக்கூட்டங்களிலும் சொல்லி இஸ்லாத்திற்குக் களங்கம் ஏற்படுத்தி வருவதைக் காண்கிறோம். இவ்வாறு தவறாக பரப்பப்பட்டுவரும் ஹதீஸ்களை(?) தக்க சான்றுகளோடு இத்தொடரில் சமுதாய மக்களுக்கு தெளிவுபடுத்துவோம், இன்ஷhஅல்லாஹ்.
நாங்கள் சொல்வது சரியில்லை எனக்காண்கின்ற ஆலிம்கள் தங்கள் வாதத்தைத் தெளிவான ஆதாரங்களோடு எழுதுவார்களானால் அதை எங்கள் பத்திரிக்கையில் வெளியிடுவோம். (ஆ-ர்)

நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்)அவர்களின் உம்மத்துகளில், ஸஹாபாக்களின் தனிச்சிறப்பை எவருமே மறக்க முடியாது. நபி(ஸல்)அவர்களோடு வாழ்ந்து அவர்களுடன் நெருங்கிப்பழகி, அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழர்களின் மதிப்பை இந்த உம்மத்தில் உந்ந இமாம்களும், அவ்லியாக்களும் அடைய முடியாது. காலமெல்லாம் இறை வழிபாட்டில் செலவு செய்தாலும் ஒரு ஸஹாபியின் அந்தஸ்த்தை எவருமே பெற முடியாது. இது ஷpயாக்களைத் தவிர இந்த உம்மத்துகள் அனைவரும் ஏகோபித்து ஒப்புக்கொண்ட பேருண்மையாகும். நபி(ஸல்)அவர்களின் ஏராளமான பொன்மொழிகள் இந்த உண்மையை நமக்கு தெளிவாக்குகின்றன.
'எனது தோழர்களை ஏசாதீர்கள்! உங்களில் எவரும் 'உஹது' மலை அளவு தங்கத்தைச் செலவு செய்தாலும், அந்த ஸஹாபாக்கள் இருகையளவு செய்த தர்மத்துக்கோ அல்லது அதைவிடவும் பாதிஅளவு செய்த தர்மத்துக்கோ ஈடாக முடியாது.' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரி(ரலி)
நூல்:புகாரி,முஸ்லிம்

நபித்தோழர்களின் தனிச்சிறப்பை எடுத்துரைக்க நபி(ஸல்)அவர்களின் சான்று ஒன்றே போதுமானது, 'எவ்வளவு முயற்சி செய்தாலும் எவரும் அவர்களின் நிலையை எட்டவே முடியாது' என்ற தகுதியைவிட வேறு எந்த தகுதி உயர்ந்ததாக இருக்க முடியும்?

அவர்களின் தூய்மையான எண்ணமும், மிகச்சிரமமான காலத்தில் நபி(ஸல்) அவர்களின் தோளோடு தோள் நின்று செய்த தியாகங்களும், 'மரணம் நிச்சயம்' என்று தெரிந்திருந்தும்-வெற்றி பெறுவோமா என்பது தெரியாத நிலையில் போர் முனைக்குச் சென்ற நெஞ்சுறுதியும்,சுட்டெரிக்கும் பாலை மணலில் பொசுக்கப்பட்டபோதும் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டபோதும், இரு கூறாக பிளக்கப்பட்டபோதும், ஈமானில் அவர்களுக்கு இருந்த பிடிப்பு-இன்று நினைத்தாலும் நம் கண்களை கலங்க வைத்து விடுகின்றது.
(ரழியல்லாஹூ அன்ஹூம் வரழூ அன்ஹூ)

இவ்வளவு சிறப்பமிக்க நிலையை எவர்தான் அடைய முடியும்? ஆனால் இன்று சிலர் ஸஹாபாக்களின் நிலையை எடுத்துச் சொல்கிறோம் என்று கூறிக்கொண்டு இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் மூலம் ஸஹாபாக்களின் சிறப்பை நிலைநாட்டத் தொடங்கியுள்ளனர். அவ்வகையில் மேடைகள்தோறும் முழங்கப்படுகின்ற ஹதீஸைப் பார்ப்போம்.

'அஸ்ஹாபீ கன்னுஜூமி பிஅய்யிஹிம் இக்ததைத்தும் இஹ்ததைத்தும்',
பொருள்: 'என் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள், அவர்களி;ல் நீங்கள் எவரைப் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள்'

இப்படி ஒரு ஹதீஸை பல மவ்லவிகள் கூறுவதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம், இந்த ஹதீஸ் ஒரு சில கிதாபுகளில் இடம் பெற்றிருந்தாலும்,இதை அறிவிப்பவர்கள் வரிசையில் பல கோளாறுகள் உள்ளன. இந்த ஹதீஸ் உணர்த்துகின்ற கருத்தும் குர்ஆன், ஹதீஸ் போதனைகளுக்கு முரண்படுகின்றது. முதலில் இதன் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள குறைபாடுகளை பார்ப்போம்.

இந்த ஹதீஸை இமாம் இப்னுஹஸ்மு(ரஹ்) அவர்கள் தமது 'அல் இஹ்காம்' என்ற நூலில் பதலு செய்துள்ளார்கள். இதைப் பதிவு செய்த அதே இமாம் அவர்கள் இந்த ஹதீஸைப்பற்றி 'இது ஏற்கத் தகாத ஹதீஸாகும்' என்று குறிப்பிடுகிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராகிய ஸலாம் இப்னு ஸூலைம் என்பவர் நிறைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவராவார். 'இந்த ஹதீஸூம் அத்தகைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களில் ஒன்றாகும்' என்றும் இமாம் இப்னுஹஸ்மு அவர்களே குறிப்பிடுகிறார்கள்.
(அல்இஹ்காம் பாகம் 6,பக்கம்:28 )

இந்த ஹதீஸை இமாம் 'இப்னு அல்தில்பர்' (ரஹ்) அவர்களும் தமது 'ஜாமிவுல் இல்மி' என்ற நூலில் பதிவு செய்துள்ளார். பதிவுசெய்துவிட்டு இதன் அடியில் இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் இடம்பெறுகின்ற 'ஹாரிஸ் இப்னு குஸைன்' என்பவர் ஹதீஸ் அறியப்படாதவர். இது ஏற்றத்தக்க ஹதீஸ் அல்ல என்றும் குறிப்பிடுகிறார்கள்.
(ஜாமிவுல்இல்மி, பாகம்:2, பக்கம்:91)

அந்த ஹதீஸை பதிவு செய்துள்ள இருபெரும் இமாம்களும் 'இது இட்டுக்கட்டப்பட்டது' என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார்கள்.இதன் பின்னரும் நபி(ஸல்) அவர்கள் பெயரால் இதை ஒவ்வொரு மேடையிலும் முழங்குகிறார்களே, அதுதான் வியப்பாக உள்ளது.

மேலும் இந்த 'ஸலாம் இப்னு ஸூலைம்' என்பவரைப்பற்றி இமாம் இப்னு ஹர்ராஷ; அவர்கள் 'இவர் பெரும் பொய்யர்' என்றும், இமாம் 'இப்னு ஹிப்பான்' அவர்கள் 'இவர் இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவர்' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் 'இந்த ஹதீஸ் ஆதாரமற்றது' என்று குறிப்பிடுகிறார்கள் என இமாம் இப்னு குதாமா தமது 'அல்முன்தகப்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
அதே கருத்தை உணர்த்தக்கூடிய வேறு வார்த்தைகளைக் கொண்ட ஹதீஸ்கள் பல உள்ளன. அவை அத்தனையும் இட்டுக்கட்டப்பட்டவையாகவே அமைந்துள்ளன. இனி கருத்துக்கள் அடிப்படையில் இந்த ஹதீஸை ஆராய்வோம்.

முதல் தவறு

நபி(ஸல்)அவர்கள் மிகவும் இலக்கியத் தரத்துடன் பேசக்கூடியவர்கள்.அவர்களின் ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் அவர்கள் வார்த்தைகளை கையாளும் விதமும், உவமை நயமும் பண்டிதர்களையும் திகைக்கச்செய்யும் அளவுக்கு உயர்ந்த தரத்தில் அமைந்திருக்கும்.
ஆனால் இந்த ஹதீஸில் (?) காட்டப்பட்டுள்ள உவமையை நோக்கும்போது நபி(ஸல்) அவர்கள் நிச்சயம் இதைச் சொல்லி இருக்க மாட்டார்கள் என்பதை உணர முடியும்.

'எனது தோழர்கள் நட்சத்திரம் போன்றவர்கள், அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள்' இந்த வாசகத்தில் ஸஹாபாக்கள் நட்சத்திரங்களுடன் ஒப்பிடப்படுகிறார்கள் அதாவது நட்சத்திரங்களில் எதைப் பின்பற்றினாலும் சரியான திசையை அறிந்து கொள்வதுபோல், ஸஹாபாக்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழியடையலாம் என்று உவமை கூறப்பட்டுள்ளது. இந்த உவமை எந்த விதத்திலும் சரியானதன்று. ஏனெனில் நட்சத்திரங்களில் ஒரு சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள்தான் திசை காட்ட முடியும். அனைத்து நட்சத்திரங்களும் திசைகாட்டுவதில்லை. எந்த நட்சத்திரத்தைப் பார்த்தாலும் நமக்கு திசையை அறிய முடிவதில்லை.

'நட்சத்திரங்களில் எதன் மூலமாகவும் திசைகளை அறிவதுபோல் ஸஹாபாக்களில் எவரைப் பின்பற்றியும் நேர்வழி அடையலாம்'என்று கூறப்படுவதில் உவமை பொருத்தமாகப் படவில்லை.

அறிவுக்குப் பொருத்தமற்ற இதுபோன்ற உவமைகளை நபி(ஸல்) அவர்கள் ஒரு போதும் கூறமாட்டார்கள். அவர்களின் பல பொன்மொழிகளை நாம் பார்க்கும்போது இதுபோன்ற தவறான உவமைகள் காணப்படவேயில்லை. இதன் காரணமாகவும் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று உணரமுடிகிறது.

இரண்டாம் தவறு

நபித்தோழர்களில் பல்வேறு தரத்தினர் இருந்துள்ளனர். செயல்முறைகளிலும்,சிந்தனைகளிலும் அவர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு இருந்திருக்கின்றன. அவர்களின் அந்தஸ்த்தும் சமமானது அல்ல, பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அவர்களிலும் சொர்க்கத்தின் நற்செய்திப் பெற்ற பத்து நபித்தோழர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அந்தப் பத்துப் பேர்களிலும் நாற்பெரும் கலீபாக்களின் நிலை மிகவும் உயர்ந்தது. நான்கு கலீபாக்களிலும் முதலிருவரின் நிலை பன்மடங்கு மேலானது. அந்த இருவர்களிடம் கூட அபூபக்கர் (ரலி) அவர்கள் மிகமிக மேலான தகுதியை பெற்றவர்களாவார்கள். அல்லாஹ் கூறுகிறான்.

'உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் எவரும் சமமாகமாட்டார். (மக்காவின்) வெற்றிக்குப் பின் செலவு செய்து போரிட்டவர்களை விட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்': எனினும் அல்லாஹ் எல்லோருக்கும் அழகானதையே வாக்களித்திருக்கிறான். மேலும்; அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (57:10)

நபித்தோழர்களில் இவ்வளவு வேறுபாடு இருக்கும்போது, அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்று சொல்லி அனைவரையும் சமநிலையில் வைத்து நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பார்களா?

நபித்தோழர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டப்போது எந்தக் கருத்தைப் பின்பற்றினாலும் நேர்வழி பெற முடியுமா? கருத்து வேறுபாடு தோன்றும்போது குர்ஆன்,ஹதீஸ் இவ்விரண்டிலும் உரசிப் பார்க்கும்படிதானே அல்லாஹ் நமக்கு போதனை செய்கிறான், எந்தக் கருத்தை வேண்டுமானாலும் பின்பற்றி பலவழி செல்லுங்கள்! என்று அல்லாஹ் நமக்கு அனுமதிக்கவில்லையே!

'நம்பிக்கை கொண்டவர்களே!அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள் இன்னும் அல்லாஹ்வின் தூதருக்கும், உங்களின் (நேர்மையான) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் தர்க்கம் செய்து கொண்டால் நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பக்கூடியவர்களாக இருந்தால் அவ்விஷயத்தை அல்லாஹ்விடமும் அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் சிறப்பான அழகான விளக்கமாகும். (4:59)

இந்த திருக்குர்ஆன் வசனத்திற்கு மாற்றமாக யாரை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று எப்படி நபி(ஸல்) அவர்கள் சொல்லி இருக்க முடியும்?
இந்த இடத்தில் இமாம் இப்னு ஹஸ்மு அவர்கள் சில கேள்விகளை தொகுத்து இந்த ஹதீஸ் பொய்யென நிலைநாட்டுகிறார்கள். அதை அப்படியே காண்போம்.

அல்லாஹ் தன் நபியைப்பற்றி 'அந்நஜ்ம்' என்ற அத்தியாயத்தில் 'இவர்தான் மனோ இச்சைப்படி எதையும் பேசமாட்டார். இது இறைவன் மூலமாக அறிவிக்கப் படுகின்ற செய்தியைத்தவிர வேறெதுவுமில்லை'. என்று கூறுகிறான்.அதுபோல் அல்லாஹ் தன் வேதத்தைப் பற்றிக் கூறும்போது 'இது அல்லாஹ் அல்லாத மற்றவர்களிடமிருந்து வந்திருக்குமானால் இதில் அனேக முரண்பாடுகளை கண்டிருப்பார்கள். என்று (அந்நிஸா என்ற அத்தியாயத்தில் 82-வது வசனத்தில்) குறிப்பிடுகிறான். இறைவனிடமிருந்து வந்த இந்தக் குர்ஆனிலும், இறைச்செய்தியை எடுத்துச் சொன்ன நபிமொழிகளிலும் முரண்பாடுகள் இருக்காது. இருக்க முடியாது-இருக்கக்கூடாது என்று அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

எந்த ஸஹாபியையும் பின்பற்றலாமென்றால் ஒரு விஷயத்தில் சிலர் ஹலால் என்றும், வேறு சிலர் ஹராம் என்றும் கூறியிருக்கும்போது எதையும் பின்பற்றி இரண்டு பிரிவுகளாக நாம் ஆக வேண்டுமா? அவ்வாறு பிளவுபடுவதை அல்லாஹ் அனுமதிப்பானா? மாறாக அல்அன்பால் என்ற அத்தியாயத்தில் 42-வது வசனத்தில் பிளவுபடுவதை கண்டிக்கவே செய்கிறான்.

இவ்வாறு பல கருத்துக்கள் நபித்தோழர்களிடம் காணப்படும்போது, அல்லாஹ்வின் வேதத்திலும், அவனது தூதரின் பொன் மொழியிலும் உரசிப்பார்த்து எது குர்ஆன் ஹதீஸூக்குப் பொருத்தமானது என்று பார்க்கும் படித்தான் அல்லாஹ் உத்தரவிடுகிறான்.

இந்த ஹதீஸ் சரியானது என்று வைத்துக் கொண்டால், மது பானங்களை விற்பனை செய்யலாம் என்று 'சமுரத் இப்னு ஜூன்துப்' என்ற நபித்தோழர் கூறியுள்ளார்களே! அதைப் பின்பற்றினாலும் நேர்வழி அடைய முடியுமா? இந்த கருத்தை குர்ஆன் ஹதீஸில் உரசிப்பார்க்கக்கூடாதா?

நோன்பு வைத்துக் கொண்டு பனிக்கட்டிகளை சாப்பிடலாம், ஏனெனில் அது உணவுமல்ல, பானமுமல்ல என்று 'அபூதல்ஹா' என்ற நபித்தோழர் கருத்துத் தெரிவித்துள்ளார்களே!அதைப் பின்பற்றி நாம் அவ்வாறு செய்தால் நேர்வழி அடைய முடியுமா? நமது நோன்பு முறியாமலிருக்குமா?அப்படி யாராவது பத்வா கொடுத்தால் நாம் ஒப்புக்கொள்ள முடியுமா?

இப்படி ஒரு நிலைமையை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரிப்பார்களா? என்று இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறிவிட்டு, இன்னும் ஏராளமான மஸ்அலாக்களில் ஸஹாபாக்களின் வேறுபட்ட பல முடிவுகளைவரிசைப்படுத்துகிறார்கள்.
(அல் இஹ்காம் பாகம்:2, பக்கம்:83)

கருத்து வேறுபாடு தோன்றும்போது எவரை வேண்டுமானாலும் பின்பற்றும் நிலையில் நபி(ஸல்) அவர்கள் நம்மை விட்டுச் செல்லவில்லை. மாறாக 'இரண்டை விட்டுச் செல்கிறேன்' என்றுதான் கூறினார்கள்.அவ்விரண்டையும் பின்பற்றும்வரை தான் வழிதவறவே மாட்டீர்கள் என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் சரியற்றது என்று நன்றாக தெரிந்த பின்னரும் 'இது, ஹதீஸ் கலைவல்லுனரிடத்தில் சரியற்றதுதான், ஆனால் கஷ;பு என்னும் வெளிப்பாடு உடையவர்களிடத்தில் அது சரியானதுதான்' என்று கூறி ஷஃரானி போன்றவர்கள் சரிகாண முயல்வது நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் தங்கள் சுய கருத்துக்களை இடம் பெறச் செய்வதாகும் இது மக்களை திசை திருப்பும் செயலுமாகும்.

ஆக இந்த ஹதீஸ் திட்டமிட்டு இட்டுக்கட்டப்பட்டது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது. ஸஹாபாக்களின் மதிப்பு, அவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் அந்தஸ்து என்பது வேறு. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக் கூறுவோருக்கு நபி(ஸல்) அவர்களின் வன்மையான எச்சரிக்கையை நினைவு படுத்துகிறோம்.
'எவன் என் மீது இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்'
ஆதாரம்:புகாரி

இது சரியற்ற ஹதீஸ் என்று தெளிவாக விளக்கப்பட்ட பின்னரும் இந்த ஹதீஸ் மேடைகளில் சொல்லப்படுமானால் அதை சொல்லுகின்றவர்களை அணுகி தக்க ஆதாரங்களைக் கேட்பது பொதுமக்கள் கடமையாகும்.
நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை மதித்து பொய்களை களைந்து, நரகத்திற்குச் செல்வதிலிருந்து மீட்சிப்பெற்று ஜன்னத்திற்குச் செல்வோமாக! ஆமீன்.
நன்றி: அல்ஜன்னத் 1988 ஜன,பிப்
இதனை கம்யூட்டரில் டைப் செய்து தந்த செல்வி ரஜா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.