தொழுகையின் வழிகாட்டி

ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின், அவன் செய்ய வேண்டிய கடமைகளில் தொழுகை முதலிடம் பெறுகின்றது. அல்லாஹ், தன் திருமறையில் மிக அதிகமான இடங்களில் தொழுகை பற்றியே வலியுறுத்துகிறான்.

தொழுகையை கடைபிடிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் தொழுகையை விடுவதால் ஏற்படும் அவலங்களையும் நபி(ஸல்) அவர்கள் மிக அதிக அளவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். 'வேண்டுமென்றே தொழுகையை விட்டவன் காபிராகி விட்டான்' (அஹ்மது, திர்மிதி) என்ற அளவுக்கு நபி(ஸல்) அவர்கள் கடும் எச்சரிக்கை செய்துள்ளனர்.

அல்லாஹ்வின் கிருபையால், தொழுகையை அடியோடு புறக்கணித்தவர்கள், இன்று தொழுகையை கடைபிடிக்கக்கூடிய நல்ல நிலை தோன்றி இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

தொழுகையை சிரத்தையுடன் நிறைவேற்றி வரும் நல்லவர்கள் தொழுகின்ற சரியான முறையை அறிந்தவர்களாக இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தொழுகையை நிறைவேற்றுவதைய நாம் காண முடிகின்றது.

அல்லாஹ்வுக்காக-அவனது திருப்தியை பெறுவதற்காகத்தான் நாம் தொழுகிறோம், நமது தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அந்தத் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி அமைய வேண்டும். நாமாக, நமது இஷ்டத்திற்கு விதம்விதமாக தொழக்கூடாது.

என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! (புகாரி,அஹ்மத்) என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கேற்ப, நமது தொழுகையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள்? தொழச்சொன்னார்கள்? என்ற விபரங்களையும், நபி(ஸல்) அவர்கள் பெயரால் சொல்லப்படும் ஆதாரமற்றவைகளையும், அதற்கான காரணங்களுடம் இந்த தொடரில் விளக்குவோம்.
எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்வதற்காக கேள்வி,பதில் அமைப்பில் இந்த பகுதியை நாம் அமைத்திருக்கிறோம்.

நிய்யத்

ஐயம்: தொழுகைக்கு நிய்யத் அவசியமா?

தெளிவு: ஆம்! தொழுகை மற்றும் எல்லா வணக்க வழிபாடுகளுக்கும் நிய்யத்
அவசியமாகும்.

'செயல்கள் அனைத்தும் (ஏற்றுக்கொள்ளப்படவும் நன்மை பெறப்படவும்) எண்ணங்களைக் கொண்டே அமைகின்றன. என நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள். அறிவிப்பவர்:உமர்(ரலி) நூல்கள்: புகாரி,முஸ்லிம்

'நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடல்களையோ,உடைகளையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களைத்தான் பார்க்கிறான். என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா நூல்: முஸ்லிம்

ஐயம்: தொழுகைக்காக எவ்வாறு நிய்யத் வைக்க வேண்டும்?

தெளிவு: எந்த நேரத் தொழுகையை எத்தனை ரக்அக்அத்கள் தொழ நாடுகிறோமோ இவற்றை மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும்.

ஐயம்: நிய்யத்தை வாயால் மொழிய வேண்டுமா?

தெளிவு: நிய்யத் என்ற அரபிமொழி பதம் நாடுதல், எண்ணுதல் என பொருள்படும். எண்ணம் உள்ளத்தின்பாற்பட்டதாகும். எனவே நிய்யத்திற்கும் நாவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நபி(ஸல்) அவர்களோ உத்தம சஹாபாக்களோ நிய்யத்தை வாயால் மொழிந்ததாக எவ்வித ஆதாரமும் இல்லை.

ஐயம்: சிலர் நிய்யத்தை (நவைத்து அன் உஸல்லி...) என்று நாவால் கூறவேண்டுமென கூறுகின்றனரே?

தெளிவு:நிய்யத்தை இப்படி வாயால் கூறுவதற்கு குர்ஆனிலோ,ஹதீஸிலோ உத்தம சஹாபாக்களின் வாழ்க்கையிலோ எவ்வித ஆதாரமும் கிடையாது. மாறாக இவ்வாறு நாவால் கூறவேண்டுமென சொல்பவர்கள் இது (பித்அத்) நூதனமான செயல்தான் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நபி(ஸல்) அவர்கள் வணக்க வழிபாடுகளில் காட்டித்தராத ஒரு செயலை நாமாகவே நன்மை எனக் கருதி செயல்படுவது பித்அத் ஆகும். நபி(ஸல்) அவர்களின் 'அனைத்து பித்அத்களும் வழிகேடுதான். அனைத்து வழிகேடுகளின் விளைவு நரகம்தான்'.(முஸ்லிம்) என்ற பொதுவான எச்சரிக்கைக்கு ஏற்ப பித்அத்களில் நல்லவை தீயவை என பிரிக்காமல் பித்அத் என சொல்லப் படக்கூடிய அனைத்து விஷயங்களிலிருந்தும் தவிர்ந்திருப்பது அவசியம்.

நபி(ஸல்) அவர்கள் தொழுத முறையை ஹதீஸ் வல்லுனர்கள் தம் பல்வேறு ஹதீஸ் தொகுப்புகளில் தெளிவுபடுத்தி உள்ளனர். அவையனைத்திலும் நிய்யத்தை வாயால் மொழிந்ததாக அறிவிக்கப்படவில்லை.

'என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்' (புகாரி) என்ற நபிமொழிப்படி ஒவ்வொரு முஸ்லிமும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைப்படி தொழுவது கடமையாகும்.
தக்பீர் தஹ்ரீமா

ஐயம்: தொழுகையை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும்?
தெளிவு: கிப்லாவை முன்னோக்கி நின்று 'அல்லாஹூ அக்பர்'என தக்பீர் தஹ்ரீமா (தொழுகையை துவங்குவதற்கு முதன் முதலாக கூறப்படும் தக்பீர்) கூறி தொழுகையை ஆரம்பிக்க வேண்டும்.

'நபி (ஸல்) அவர்கள் தங்களது தொழுகையை அல்லாஹூ அக்பர் எனக்கூறி ஆரம்பிப்பவர்களாக இருந்தார்கள்.' அறிவிப்பவா:அபுஹூரைரா நூல்: முஸ்லிம், இப்னுமாஜா

'தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும்'அதன் தஹ்ரீமா தக்பீர் (அல்லாஹூ அக்பர்)ஆகும். அதன் தஹ்லீல் தஸ்லீம் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்) எனக் கூறுவது) ஆகும் என நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள். அறிவிப்பவர்: அலி(ரலி) நூல்: அபுதாவுத்,திர்மிதீ

குறிப்பு:
தஹ்ரீமா: தொழுகைக்கு வெளியில் உண்ணுதல் உரையாடுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட செயல்கள் அனைத்தும் தொழும் நிலையில் செய்வது விலக்காகிவிடுகிறது என்பதை சுட்டிக்காட்டப்படுவதே 'தஹ்ரீமாவாகும்' அதாவது தொழும்போது தொழுகையின் செயல்கள் அல்லாத மற்ற செயல்களை செய்வது விலக்கப்பட்டுள்ளது என்பதே இதன் பொருள் இதை முன்னிட்டுத் தான் தொழுகையின் முதல் தக்பீர் 'தஹ்ரீமா' எனக் கூறப்படுகிறது.

தஹ்லீல்: தஸ்லீம் (அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கூறுவதன்) மூலம் தொழும் நிலையில் விலக்கப்பட்ட செயல்கள் ஆகுமாகிவிடுகிறது என்பதை சுட்டிக்காட்டவே (தொழுகையின், தஹ்லீல் தஸ்லீம் ஆகும் எனக் கூறப்படடுள்ளது)

'....நீ தொழுகைக்காக தயாராகி விட்டால் நிறைவாக உளு செய்து கிப்லாவை முன்னோக்கி 'அல்லாஹூ அக்பர் எனக்கூறு'- நபிமொழி அறிவிப்பவர்-அபுஹீரைரா (ரலி) நூல்-முஸ்லிம்

ஐயம்: 'அல்லாஹூஅக்பர்' எனக் கூறுவதற்கு பதிலாக 'அல்லாஹூ கபீர்' 'அல்லாஹூஅஹீம்' 'அல்லாஹூஅஸல்' எனக் கூறி தொழுகையை ஆரம்பிக்கலாம் என சிலர் கூறுகின்றனரே?

தெளிவு: இவர்களின் இக்கூற்றுக்கு எவ்வித ஆதாரமும் குர்ஆனிலோ ஹதீஸிலோ,சஹாபாக்களின் வரலாற்றிலோ கிடையாது.

'நீங்கள் தொழுகைக்காக நின்றால் உங்கள் வரிசையை நேராக்கிக் கொள்ளுங்கள்! இடைவெளியே பூர்த்தி செய்யுங்கன்! உங்கள் இமாம் அல்லாஹூஅக்பர் எனக்கூறினால் நீங்களும் அல்லாஹுஅக்பர் எனக்கூறங்கள்.-நபிமொழி அறிவிப்பவர்:அபூசயீத்(ரலி) நூல்: அஹ்மது.

'உளுவை முறையாக செய்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹூஅக்பர் எனக் கூறாதவரை எவருடைய தொழுகையையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்ரிபாஆ(ரலி) நூல்:அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போது அல்லாஹூஅக்பர் என்ற வார்த்தையை தவிர வேறு எந்த வார்த்தையை கூறியதாகவோ கூறச் சொன்னதாகவோ காணமுடியவில்லை.

(வளரும்)

நன்றி:அல் ஜன்னத் 1988 பிப்ரவரி மார்ச்
இதனை கம்யூட்டரில் டைப் செய்து தந்த செல்வி ரஜா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.