இதுவரை எத்தனை விதமான குர்ஆன் தர்ஜுமாக்கள் தமிழிலில் வந்துள்ளது? அவற்றில் சிறப்பானது எது?
இது நமக்கு வந்துள்ள கேள்வியாகும். தொழுகைக்குப் பின்னால் ஒரு சாரார் மனிதர்களால் எழுதப்பட்ட
நுால்களை படிப்பதை வழக்கமாக ஆக்கி விட்டார்கள். மனிதர்களால் எழுதப்பட்ட மற்ற
நுால்களைப் படிப்பதைவிட அல்லாஹ்வின் வேதத்தைப் படிப்போம். அதுவே சிறந்தது. இந்த அடிப்படையில் உருவானதுதான் திருமறைக்
குர்ஆனின் மொழி பெயர்ப்புகளை படிப்பது என்ற வழக்கம். அதுவும் விளக்கம் இல்லாமல்
அப்படியே படிப்பது என்பது நடைமுறையில் உள்ளதாக ஆகி விட்டது.
நடைமுறையில் உள்ளதை கண் மூடித்தனமாகப் பின் பற்றுவதையே
தக்லீத் என்கிறோம். எனவே நாமும் தக்லீத் செய்து விளக்கம் இல்லாமல் குர்ஆனை
படித்துக் காட்டுவது என்ற நிலையில் இருந்து மாறி இருக்கிறோம். விளக்கங்களையும் விபரங்களையும் பார்த்து வருகிறோம்.
மேலும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திட்டமும்
வைத்திருக்கிறோம் அதில் முதலாவதாக வந்துள்ளது இந்தக் கேள்வி. ஒன்பது விதமான
தர்ஜுமாக்களும் 4 விதமான
தப்ஸீர்களும் தமிழிலில் வந்துள்ளது. குர்ஆன் தர்ஜுமாக்கள்
என்றாலே சிறப்பானதுதான் அதிலும் சிறப்பானது எது என்பதுதான் கேள்வியாக உள்ளது.
திரு மறைக் குர்ஆன் வசனங்களை
தமிழில் மொழி பெயா்த்த ஒவ்வொரு
அறிஞா்களும் ஒவ்வொரு வித வார்த்தைகளால் மொழி பெயா்த்து உள்ளார்கள்.
அவற்றை விபரமாக காண கடமைப்பட்டிருக்கிறோம். அத்துடன் திருமறை தமிழாக்கப் பணிகளில் உள்ள வரலாற்றையும் தேவைக்கு
ஏற்ப அவ்வப்போது காண்போம்.
மக்காவில் உள்ள ‘ராபித்தத்துல்
ஆலமில் இஸ்லாமீ’
எனும் உலக
முஸ்லிம் லீக்கின்
அங்கீகாரம் பெற்று, சஊதி அரசின்
நிதி உதவியுடன் வெளியிடப்பட்ட
முதல் தமிழ் தர்ஜுமா என்ற சிறப்பு ஒரு மொழி பெயர்ப்புக்கு உண்டு
என்றால் அது ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி
அவா்கள் மொழி பெயா்த்த
தர்ஜுமாவுக்குத்தான் உண்டு.
அதை கொச்சைப்படுத்தும் நோக்குடன் ”இது வெளியாவதற்காக மறைந்த
ஆ.கா.அ. அப்துஸ்ஸமது ஸாஹிப் அவா்கள் சவூதியிலிருந்து நிதி உதவி பெற்றார்கள்” சவூதியிலிருந்து பெற்ற நிதிக்காக கொஞ்சம் குா்ஆனை மட்டும் இலவசமாக
கொடுத்தார். இப்படி
குற்றச்சாட்டுக்களை எழுதிக் கொண்டிருப்பவா்களும் பரப்பிக் கொண்டு இருப்பவர்களும்
இருக்கிறார்கள்.
சவூதி அரசு சார்பில் இலவசமாக கொடுப்பதற்காக ஆ.கா.அப்துல்
ஹமீது பாகவி அவா்களின் மொழி பெயா்ப்பு பல லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டு தயாராக
இருந்தது. அந்த நிலையில்தான் சவூதி அரசிடம் பணியாற்றிய தமிழகத்தைச் சார்ந்த ஒரு
மவுலவி அதில் தவறுகள் இருக்கிறது என்று புகார் எழுதி கொடுத்து விட்டார். அதனால் ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவா்களின் மொழி பெயா்ப்பு
பிரதிகள் அனைத்தையும் கப்பலில் கொண்டு போய் நடுக்கடலில்
இறக்கியது சவூதி அரசு. நீண்ட வரலாற்றின் சுருக்கம் இது.
இப்பொழுதும் ஆ.கா.அப்துல்
ஹமீது பாகவி அவா்களின் மொழி பெயா்ப்பையும் பாருங்கள். மற்றவா்களின் மொழி
பெயா்ப்பையும் பாருங்கள். அதன்
அருமை புரியும். ஒரு நுாற்றாண்டுக்கு
முந்தைய பழைய தமிழ் என்றாலும் இன்றைய தமிழுக்கு ஈடு கொடுத்து நிற்கின்றது. அடைப்புக் குறிக்குள் உள்ளதை சேர்த்துப் படித்தாலும் விட்டு
விட்டு படித்தாலும் அதன் பொருள் மாறக் கூடாது. பிசுறு தட்டக் கூடாது என்பதற்கு வழி காட்டி அந்த மொழி பெயர்ப்புதான்.
திருமறைக் குர் ஆன் அருளப்பட்டு 13 நூற்றாண்டுகளாக தமிழ் பேசும்
முஸ்லிம்களுக்கு குர்ஆனின் தமிழாக்கம் கிடைக்கப் பெறவில்லை. அன்றைய கால
கட்டத்தில் திரு குர்ஆனை மற்ற மொழிக்கு மொழியாக்கம் செய்வதே பாவம்
எனும் கொள்கையில் தமிழக உலமாக்கள் இருந்தார்கள். அந்த அறியாமையை உடைத்து
அல்லாஹ்வின் வேதத்தை தமிழ் பேசும் பொதுமக்களிடம் தூய தமிழில் கொண்டு வந்தவர் தான் ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்கள்.
19-02-1929 பகரா அத்தியாத்திற்கு மட்டும் தப்ஸீர்
வெளியிட்டார். 1943ஆம் ஆண்டு முழு குர்ஆனுக்கும் தர்ஜுமா வெளியிட்டார். அதன் பிறகு
1983 வரை யாருமே தர்ஜுமா வெளியிடவில்லை. 40 ஆண்டுகளாக தமிழ்
கூறும் உலகில் அவரது மொழி பெயர்ப்பு மட்டுமே உலவி வந்தது.
எல்லாப் புகழும் என்று ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவா்கள் மொழி பெயா்த்ததை
அனைத்துப் புகழும் என்று மற்றவர்கள் மொழி பெயர்த்து உள்ளார்கள். நிகரற்ற அன்புடையவன் என்று ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவா்கள் மொழி
பெயா்த்ததை நிகரற்ற அன்புடையோன் என்று
மற்றவர்கள் மொழி பெயா்த்துள்ளார்கள். சிறு சிறு வார்த்தை, ஓரிரு எழுத்து வித்தியாசத்துடன்தான் மற்றவா்கள் மொழி
பெயா்த்துள்ளார்கள் என்பதை ஒப்பிட்டு பார்க்கும்போது அறியலாம்.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றும் இருக்கின்றது. அதாவது
இன்று பிஸ்மில்லாஹிர்_ரஹ்மானிர்_ரஹீம் எனும் வார்த்தைக்கு
"அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்
ஆரம்பிக்கிறேன்" என அதிகமானோர் அர்த்தம் செய்து வருவதை காண்கின்றோம்.
உலமாக்கள் உட்பட யாரும் இதில் விதி விலக்கு இல்லை. ஆனால் இந்த அழகிய
மொழி பெயர்ப்பை முதன் முதலில் செய்தவர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி அவர்கள் தான்.
அவருக்கு அன்றைய ஆலிம்கள் "வஹ்ஹாபி" எனும்
பட்டப் பெயரைச் சூட்டி அவர்களைத் தூற்றினார்கள். தனது மொழி பெயர்ப்புப் பணிக்கு பணம்
தேவைப்பட்ட பொழுது அப்துல் ஹமீது அவர்கள் இலங்கைக்கு சென்றார்கள் தன்னந்தனியாக வசூல் செய்தார்கள். அல்லாஹ்வின் வேதம்
தமிழில் வர வேண்டும் என்பதற்காக அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டார். அவரே மொழி பெயர்த்த தர்ஜமாவுக்கு அவரே வசூல்
செய்தார். அவரே பிரிண்ட் பண்ணி அவரே விற்றார்.
எந்த இயக்கங்களும் அவர் பின்னால் நிற்கவில்லை. எந்த இயக்கத்தையும் நாடவில்லை.
தர்ஜுமாவை அவர் வியாபாரமாக ஆக்கவில்லை. அவரது முயற்சிகள் புரட்சிகரமானது. இது மொழியாக்கத் துறையில்
ஒரு சாதனையாகவே பார்க்கப்பட வேண்டியதாகும். இந்த சிறப்புக்கள் இந்த தர்ஜுமாவுக்கே உண்டு.
ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவா்களுக்கு தமிழ் முஸ்லிம் உலகம்
என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது மற்றவற்றை அடுத்தடுத்த நாட்களில் பார்ப்போம்.
இன்ஷாஅல்லாஹ்
நன்றி ; மேலப்பாளையம்
மஸ்ஜிதுர் ரய்யான் கேள்வி பதில் நிகழ்ச்சி
http://mdfazlulilahi.blogspot.ae/2017/07/blog-post_27.html
http://mdfazlulilahi.blogspot.ae/2017/07/blog-post_27.html
Comments