கல்வி எங்கே இருக்கும்? தகுதியில் குறைந்தவர்களிடம் கல்வி இருக்குமா?
கல்வி எங்கே என்பது நமக்கு
தரப்பட்டுள்ள தலைப்பு. கல்வி என்பது எங்கே இருக்கும்? என்று கேட்டால் குர்ஆன் ஹதீஸ்களில் இருக்கும் என்ற ஒரே வார்த்தையில் பதில் முடிந்து விடும்.
இந்த
தலைப்பு பற்றி ஆலிம்களிடம் கேட்டால் இதற்கு தஃரிப் சொல்லுங்கள் என்பார்கள். அதாவது
கல்வி என்றால் என்ன என்று விளக்கம் சொல்லுங்கள் என்பார்கள். ஏதோ குற்றச்சாட்டு
வைக்கிறேன் என்று எண்ணாதீர்கள். கல்வி எங்கே என்ற தலைப்பில்
ரையானில் பேசப் போகிறேன் குறிப்பு தாருங்கள் என்று ஒரு ஆலீம் பெருமகனாரிடம் கேட்டேன். உடனே
அந்த ஆலிம் பெருமகனார் கேட்ட கேள்விதான் நான் முதலில் சொன்னது.
மனிதன் பெறுகிற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி. மனிதனின் சிந்தனை ஆற்றலைத் தட்டியெழுப்பும் கருவியே
கல்வி. மனிதன் மனிதனாக வாழ்வதற்காகவே கல்வி. ஏட்டில் எழுதப்பட்டதெல்லாம் கல்வி
அல்ல மாறாக கற்ற கல்வியை எப்பொழுது ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் பயன்படுத்தத்
தொடங்குகின்றானோ அப்பொழுதுதான் அது கல்வி எனும் தரத்தைப் பெறுகின்றது.
கல்வியை கற்பது அறிவை திறமையை, ஒழுக்கம் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை பெருக்கி கொள்ள உதவும். வாங்கும்
மதிப்பெண்களிலும் வைத்திருக்கும் பட்டங்களிலும் அதாவது ஸனதுகளிலும் தான் கல்வி
இருக்கிறதா? என்றால் இல்லை. ஆனால் முஸ்லிம்கள் படிக்க வேண்டும்.
இறுதித் துாதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனமே இக்ரஃ என்பதுதான். அதாவது படிப்பீராக என்பதுதான். ஆகவே முஸ்லிம்கள் படிக்க வேண்டும். கல்வி கற்க வேண்டும்.
கல்வியை பல முறைகளில் கற்று கொள்ள முடியும். கல்வி நிலையங்களிலும் அச்சடித்த
காகிதங்களிலும் மட்டும்தான் கல்வி பெறமுடியும் என்று பலர் நம்புகிறார்கள்.
சிறப்பானவர்கள் தரத்தில் உயர்ந்தவர்கள்
என்று நம்பப்படுபவர்களிடம்தான் கல்வி இருக்கும்.
குறிப்பிட்ட தோற்றம்
உடையவர்களிடம்தான் கல்வி இருக்கும்.
குறிப்பிட்ட
அமைப்பினரிடம்தான் கல்வி இருக்கும்.
எங்கள் அமைப்பினரிடம்தான் கல்வி இருக்கும்.
எங்கள் அமைப்பிலும் குறிப்பிட்ட
ஆலீமிடம்தான் கல்வி இருக்கும் என்றுதான் பெரும்பாலான இயக்கத்தவர்கள் அதில் உள்ள மக்கள்
நம்புகிறார்கள்.
இப்படிப்பட்டவர்களிடம் இல்லாத அறிவும் விபரங்களும்
தகவல்களும் தகுதியில் குறைந்தவர்களிடமும் இருக்கும் என்பதுதான் உண்மை.
எழுத்து வடிவில் ஏட்டில் உள்ளதை தியரியாக படித்துக் கொடுத்தால் அதை ஏட்டுச் சுரைக்காய்
கூட்டுக்கு உதவாது என்றுதான் சொல்வார்கள். பிராக்டிக்கலாக செயல் வடிவில் செய்து
காட்டும் செயல் முறைக் கல்வியைத்தான் சிறந்த கல்வி எளிதில் புரியும் கல்வி
என்பார்கள்.
அந்த சிறந்த கல்வியை பிராக்டிக்கலாக செயல் வடிவில்
செய்து காட்டும் கல்வியை முதன் முதலில் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். எதன் மூலம் மனிதனுக்கு
செய்து காட்டி கற்றுக் கொடுத்தான்?
இதற்கான விடை அல் மாயிதா அத்தியாயத்தில்
உள்ளது. ஆதம்(அலை) அவர்களின் இரு பிள்ளைகள்
அவர்கள் பெயர்கள் குர்ஆனில் கூறப்படவில்லை ஹாபீல் காபீல் என ஹதீஸ் நுால்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இருவரில் இரண்டாவது நபர் முதல் நபரை கொலை செய்து விட்டார்.
ஏன் கொலை செய்தார் என்ன நடந்தது என்ற விபரத்தை
குர்ஆனில் பார்த்துக் கொள்ளுங்கள். இது பற்றிய விபரம் 5ஆவது அத்தியாயம் 27ஆவது வசனம் முதல் 30ஆம் வசனம் வரை கூறப்பட்டுள்ளது.
இறந்து விட்டவரை என்ன
செய்வது என்று தெரியாமல் இருந்தார். இறந்து விட்ட மனிதனை எப்படி
அடக்குவது என்பதை பிராக்டிக்கலாக செயல் வடிவில் செய்து காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை
அனுப்பினான். இது 31 ஆவது வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
வலகத் கர்னம்னா பனீ ஆதம்.
ஆதமுடைய மக்களை கண்ணியப்படுத்தி உள்ளோம் என்று சொன்ன அல்லாஹ்.
அந்த மக்களுக்கு அன்று முதல் கியாமம் வரை பயன்படக் கூடிய ஒரு கல்வியை- செயலை செயல் வடிவில் செய்து
காட்ட ஒரு காகத்தைத்தான் அனுப்பினான்.
யாருக்குமே வழங்காத ஆட்சியை நபி சுலைமான் (அலை)
அவர்களுக்கு அல்லாஹ் வழங்கி இருந்தான். யாருக்குமே
வழங்காத ஆட்சி என்றால் பரப்பளவில் பெரியது என்று எண்ணி விடக் கூடாது.
மனிதர்களை கட்டுப்படுத்தும் ஆட்சிதான் எல்லாருக்கும் வழங்கப்பட்டது.
நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு
மனிதர்கள் மட்டுமன்றி, ஜின்கள், பறவைகள்
உட்பட அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆட்சி வழங்கப்பட்டு இருந்தது. இது பற்றி 27ஆவது அத்தியாயம் 15,16 ஆகிய வசனங்களில் காணலாம்.
ஜின்கள், மனிதர்கள்
உட்பட எல்லா படைகளும் நபி சுலைமான் (அலை) அவர்களுக்காக அணி வகுக்கப்பட்டன. அணி வகுத்து நின்றன. ஆட்சியாளர்களுக்கு முன்
படைகள் அணிவகுப்பு என்ற கல்வி இங்கு இருந்துதான் பெறப்பட்டது.
அணி வகுப்பை பார்வை இட்ட நபி சுலைமான் (அலை) அவர்கள். பறவைகளின் பக்கம் வந்தார். பறவைகளை ஆய்வு செய்த அவர், ஹுத் ஹுத் பறவையை நான் காணவில்லையே
அது ஓடி ஒளிந்து விட்டதா? அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்.
அல்லது அதை அறுத்து விடுவேன் என்றார். கொஞ்ச நேரத்தில் அந்த பறவை வந்து விட்டது
வந்ததும் அது சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?
اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَ جِئْتُكَ
அஹத்து பிமாலம் துஹித் பிஹி வஜீஃதுக 27:22 'நீங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டு வந்திருக்கிறேன்.
'தங்கள் கவனத்துக்கு வராத ஒரு செய்தியை தங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன்
என்றது. சாதாரண இயக்கத் தலைவரிடம் கூட நாம் இப்படி சொல்ல முடியுமா? முடியாது.
சர்வ வல்லமை படைத்த மிகப் பெரிய ஆட்சியாளர் இடம் மிகச் சிறிய பறவை என்ன
சொன்னது. 'உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து ஸபா எனும் ஊரிலிருந்து
உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்'' என்று கூறியது.
யாருக்குமே கொடுக்காத மிகப்பெரிய ஆட்சியைக் கொடுத்து நபி
சுலைமான் (அலை) அவர்களை கவுரவப்படுத்திய
அல்லாஹ் அவரைச் சூழ்ந்து உள்ள நாட்டில் என்ன நடக்கிறது என்ற செய்தியை பறவை மூலமே அறியச்
செய்தான். அதன் பின் அந்த பறவையிடம் கடிதத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.
பிறகு நடந்த விஷயங்களை ஆயத்துகளின் தொடர்ச்சியில் பார்க்கலாம். அது கூறியச் செய்தியில் பல தகவல்கள் உள்ளன. என்ன என்ன தகவல்கள் என்பதை 23 ஆவது வசனம் முதல் 26 ஆவது வசனங்கள் வரை பாருங்கள்.
நமது இந்த உரையில் நாம் தெரிவிக்க உள்ள கருத்து என்ன எனில். சிறப்பானவர்களாக தரத்தில் உயர்ந்தவர்களாக இருந்தாலும் அப்படிப்பட்டவர்களுக்கு விபரங்களும்
தகவல்களும் தகுதியில் குறைந்தவர்களிடம் இருந்தும் கிடைக்கும் என்பதுதான். நாம் ஆலிம்களை விமர்சிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
நபி மூஸா(அலை)
அவர்கள் இஸ்ரவேலர்களின் பிரமுகர்கள் நிறைந்த ஒரு சபையில் இருந்தார். நமக்கு
புரியும்படி சொல்வதாக இருந்தால் வி.ஐ.பி.க்களுக்கு மத்தியில் இருந்தார்.
அப்பொழுது ஒருவர் 'மூஸா அவர்களைப் பார்த்து உங்களைவிட அதிகமாக அறிந்தவர் எவரையாவது
உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்.
அதற்கு மூஸா(அலை) அவர்கள் அப்படி எவரும் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை என்றார்கள். நாம்தானே நபியாக இருக்கிறோம். வஹி தொடர்பு உடைய நம்மைவிட
அறிந்தவர் யார் இருக்க முடியும் என்று அவர்கள் எண்ணி இருப்பார்கள். அதனால் அப்படி
கூறி இருக்கலாம். ஏன் இந்த விளக்கம் என்றால் நாம் மூஸா(அலை) அவர்களை விமர்சித்ததாக விளங்கி விடக் கூடாது. அதற்குத்தான் இந்த விளக்கம்.
அப்போது அல்லாஹ் என்ன சொன்னான்? நம் அடியார் ஹிழ்ர் உங்களைவிட அறிந்தவராக இருக்கிறார் என்று கூறினான். உடனே மூஸா (அலை) அவர்கள் அவரைச்
சந்திக்கும் வழி என்ன என்று அல்லாஹ்விடம் கேட்டார்கள். அப்போது ஹிழ்ர் அவர்களைச்
சந்திக்கும் இடம் எது என்பதை மூஸா (அலை)
அவர்கள் அறிவதற்கு என்ன செய்தான்? எதை வழி காட்டியாக ஆக்கினான்? மீனை வழி காட்டியாக
ஆக்கினான். ஹிழ்ர் அவர்களைச் சந்திக்கும் இடத்தை அறியும் அறிவு மீனுக்கு இருந்தது.
முதலில் பிராக்டிக்கல் கல்வியை காகத்தின் மூலம் கற்றுக் கொடுத்ததைப் பார்த்தோம்.
யாருக்குமே கொடுக்காத மிகப்பெரிய
ஆட்சியைக் கொடுத்திருந்த நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு பக்கத்து நாட்டில் என்ன நடக்கிறது என்ற
செய்தியை பறவை மூலமே அறியச் செய்தான்.
இங்கே மூஸா(அலை) அவர்களுக்கு மீன் மூலம் அவர் போக வேண்டிய இடத்துக்கு வழி காட்டி உள்ளான்.
தகுதியில் உயர்ந்தவர்களிடம் இல்லாத அறிவும் விபரங்களும்
தகவல்களும் தகுதியில் குறைந்தவர்களிடமும் இருக்கும் என்பதற்கு இவைகள் எல்லாம் ஆதாரங்களாகும்.
பஹ்ரைன் வரை அதாவது இரண்டு கடல்கள் சந்திக்கும்
இடம் வரை சென்று கொண்டே இருப்பேன் என்று சொன்ன மூஸா (அலை) பயணம் பற்றியும். அந்த மீன் தனது பாதையை கடலில் ஆச்சரியமாக
அமைத்துக் கொண்டது பற்றியும் 18ஆவது அத்தியாயம் 60ஆவது வசனத்தில் இருந்து சொல்லிக் காட்டி உள்ளான்.
அந்த மீன் தனது பாதையை கடலில் ஆச்சரியமாக
அமைத்துக் கொண்ட இடத்தில் அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு
நம் அருளை வழங்கினோம். நாமே கல்வியை கற்றுக் கொடுத்தோம்
என்கிறான் அல்லாஹ்.
உமக்கு கற்றுத் தரப்பட்டவற்றில் நல்லதை நீர்
எனக்கு கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின் தொடரலாமா? என்று
மூஸா(அலை) கேட்டார்.
அதற்கு அந்த அடியார் சொன்ன பதில் என்ன. அதற்கு மூஸா(அலை) அளித்த வாக்குறுதி என்ன? இருவரும் செய்து கொண்ட
ஒப்பந்தம் என்ன? இவை பற்றி அடுத்தடுத்த
வசனங்களில் காணலாம். நீங்கள் குர்ஆனில் போய் காண வேண்டும். வாட்ஸப்களில் ஒரு லிங்கை கொடுத்து விட்டால்
அதில் போய் பார்க்காமல் யாரும் இருப்பது இல்லை. குர்ஆனில் உள்ளது பற்றிய லிங்கை
கொடுத்து விட்டேன். அதில் போய் பார்க்க வேண்டியது உங்கள் கடமை.
தலைப்பு கல்வி எங்கே? அறிவும் விபரங்களும் தகவல்களும்
தகுதியில் குறைந்தவர்களிடமும் இருக்கும் என்பதைத்தான் இங்கு நாம் நினைவூட்டி
வருகிறோம்.
மூஸா(அலை) அவர்களும் அந்த அடியாரும் ஒரு கப்பலில் ஏறினார்கள். அந்த
அடியார் கப்பலில் ஓட்டை போட்டார். பிறகு ஒரு இளைஞரைக் கொலை செய்தார். உமக்கு கற்றுத்
தரப்பட்டவற்றில் நல்லதை நீர் எனக்கு கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின் தொடரலாமா? என்றுதான்
மூஸா(அலை) கேட்டார்கள். நல்ல கப்பலை ஓட்டை போடுவது. பார்த்த இடத்தில் இளைஞரை
வெட்டுவது இதுவெல்லாம் எப்படி நல்ல கல்வியாகும். இந்த மாதிரி
கேள்விகள் வரும்.
கல்வியில் பல வகைக் கல்வி உள்ளது. பயனற்ற கல்வி. பயனுள்ள கல்வி. பயனுள்ள கல்வியிலும் பின்பற்றத் தக்க கல்வி.
படிப்பினைக் கல்வி என்று உள்ளது.
காகம் தோண்டியது பின்பற்றத் தக்க கல்வி. மூஸா(அலை) அவர்கள் தன்னைவிட அதிகமாக அறிந்தவர் எவரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று கூறியதால்
அவருக்கும் நமக்கும் படிப்பினையாகத்தான் இந்த நிகழ்வை அல்லாஹ் அமைத்துள்ளான். ஆகவே இது படிப்பினைக் கல்வியாகும்.
முடிவில் மூஸாவும் அவரும் ஒரு கிராமத்துக்குச் சென்றார்கள். கிராமத்தாரிடம் உணவு
கேட்டனர். அவர்கள் விருந்தளிக்க மறுத்து விட்டனர்.
அறிமுகம் இல்லாதவர்கள் வந்து உணவு
கேட்டால் அவர்களை என்ன சொல்வோம். விருந்தாளி என்றா சொல்வோம்? பிச்சைக்காரர்கள்
என்று கொச்சைப்படுத்துவோம்.
அல்லாஹ் எப்படி சொல்லிக் காட்டி உள்ளான் பாருங்கள்.
தஆம் என்றால் உணவு. ழியூப் என்றால் விருந்து. அரபு நாடுகள் சென்று வந்தவர்களில்
சிலருக்கு இது புரியும்.
قَرْيَةِ ۨاسْتَطْعَمَاۤ
கர்யனிஸ் தத்அமா என்றால் கிராமத்தாரிடம் உணவு கேட்டனர்.
அவர்கள் உணவு கொடுக்க மறுத்து விட்டார்கள். அதை அல்லாஹ் எப்படி சொல்லிக்
காட்டுகிறான் பாருங்கள்.
فَاَبَوْا اَنْ يُّضَيِّفُوْهُمَا
பஅபவ் அய்யுழையிபுஹுமா என்கிறான் அந்த இருவருக்கும் விருந்தளிக்க
மறுத்து விட்டனர் என்று சொல்லிக் காட்டி உள்ளான். நாம் அழைத்து வந்தால்தான்
விருந்தாளி என்று விளங்கி வைத்திருக்கிறோம். தமிழில் அழையா விருந்தாளி என்று ஒரு
சொல் உண்டு.
அழைக்காமல் வந்தாலும் அவர்கள் விருந்தாளிதான் என்பதை சூரத்துல் கஹ்புடைய
77 ஆவது வசனம்
நமக்கு கற்றுத் தருகிறது. இன்று காலையில் கூட நான் அழையா விருந்தாளியாகச்
சென்றேன். புதிய வீடு திறப்பு நிகழ்ச்சி என்னுடன் ரையான் தலைவரும் வந்தார்.
இந்த வசனத்தை ஒட்டி ஒரு கதையும் உண்டு. இந்த வசனம்
அருளப்பட்ட பிறகு அந்தாக்கியா நகரத்து மக்கள் நபி(ஸல்)
அவர்களிடம் வந்தார்கள். இந்த வசனம் எங்களை இழிவுபடுத்துகிறது.
ஆகவே பஅபவ் என்ற பே யின் கீழே உள்ள ஒரு புள்ளியை எடுத்து மேலே வையுங்கள்.
கூடுதலாக ஒரு புள்ளி வைத்து விடுங்கள். பஅபவ் அவர்கள் மறுத்தார்கள்
என்பது மாறி பஅதவ் அவர்கள் கொடுத்தார்கள் என்று ஆகிவிடும்.
இப்படிச்
செய்தால் நாங்களெல்லாம் முஸ்லிம்களாகி ஆகி விடுவோம் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் ஏற்கவில்லை இப்படி
கதை போகிறது. ஸபர் ஸேர் நுக்தா என்பதெல்லாம் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மட்டும் அல்ல 4 கலீபாக்கள் காலத்திலும் வரவில்லை. இவை ஹஜ்ஜாஜ் காலத்தில்
வந்தது. இதை அறியாமல் இந்த புருடாவை கஸீததுல் புர்தாவின் தமிழ்
விரிவுரையான புரவலர் போர்த்திய பொன்னாடை என்ற தலையணை நுாலில் எழுதி உள்ளார்கள்.
இதை பலர் கர்ஜனையுடன் சொல்லி வருகிறார்கள்.
ஹிழ்று ஏன் கப்பலில் ஓட்டை போட்டார்,
இளைஞரை கொன்றது ஏன்? விருந்தளிக்க மறுத்த ஊரில் விழுவதற்கு தயாரான நிலையில் இருந்த
சுவரை ஏன் கட்டிக் கொடுத்தார் என்பது பற்றிய விளக்கங்கள் 79 ஆவது வசனம் முதல் 82
ஆம் வசனம் வரை திரு குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. பார்த்துக் கொள்ளுங்கள்.
சுலைமான்(அலை)
எறும்புப் புற்றின் அருகில் வந்தார். அப்போது எறும்புகளே! உங்களது குடியிருப்புகளுக்குள் நுழைந்து விடுங்கள் என ஓர் எறும்பு சொன்னது. இதை
அல்லாஹ் குர்ஆனில் சொல்லிக் காட்டி உள்ளான் என்றால் சாதாரண விஷயமா?
முன்மாதிரிக்காக மனித சமூகத்தின் நேர்வழிக்காக விண்ணிலிருந்து இறங்கிய மிகச்
சிறந்த மாபெரும் வேதத்தில் மிகச்சிறிய எறும்பின் உரையாடல் இடம் பெற்றுள்ளது
என்றால் அது சாதாரண விஷயம் அல்ல.
தனது
கூட்டத்தின் மீது சுலைமான் (அலை) அவர்களது படையினர் செல்வார்கள் என்று உணர்ந்த
அந்த எறும்பு தனது கவ்முகளை தமது வசிப்பிடங்கள் உள்ளே நுழைந்து விடுமாறு அறிவுரை
கூறியது.
அது தனது உயிரை மட்டும் பற்றிக் கவலைப்படவில்லை. தனது முழு இனத்தைப்
பற்றியும் கவலைப்பட்டுள்ளது. அக்கறை கொண்டுள்ளது.
அதனால் எச்சரித்துப் புத்திமதி
சொன்னது. அதுமட்டுமல்ல தப்பிக்கும்
வழியையும் தெளிவுபடுத்தியது. சமுதாயத்தின் நலனுக்காகவும்,
வெற்றிக்காகவும் உழைக்கக் கூடிய ஜமாஅத்தினருக்கு. இந்த
எறும்பின் மூலம் இதுமட்டுமல்ல இன்னும் பலவித கல்வியை பல்வேறு படிப்பினைகளை,
வழிகாட்டுதல்களை அல்லாஹ் தந்துள்ளான்.
எறும்பு
சொல்வதைக் கேட்ட சுலைமான்(அலை) அவர்கள் புன்னகை சிந்தி சிரித்தார்கள் ஏன்?
மனிதர்களின் குணம் என்ன? டேய் அவனுக வர்ரானுக நம்மை மிதித்து கொன்று விடுவானுவோ
என்றுதான் சொல்வார்கள். எறும்பு என்ன சொன்னது? அவர்கள் அறியாத நிலையில் என்று
சொன்னது. அந்த வார்த்தையைக் கேட்டுத்தான் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்
சுலைமான்(அலை) அவர்கள். மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் புன்னகையுடன் கூடிய
சிரிப்பு.
தன்னைப் பற்றியும் தனது படையைப் பற்றியும் அந்த எறும்பு கொண்டிருக்கும் நல் எண்ணத்தினால் சுலைமான்(அலை) அவர்களது மனம் மகிழ்ந்தது.
அதனால்தான் அவர்கள் புன்னகைத்தார்கள்.
அந்த எறும்பு சுலைமான்(அலை) அவர்களும் அவரது
பட்டாளங்களும் வேண்டுமென்றே எறும்புப் புற்றை தகர்க்கப் போவதில்லை. மாறாக அவர்களை
அறிமாலேயே நடக்கும் என்று விளக்கியது. அதன் மூலம் சுலைமான் (அலை) அவர்கள் மற்றும்
அவரது பட்டாளங்களைப் பற்றி நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியது.
எனவே மற்றவர்களைப்
பற்றி நல் எண்ணம் கொள்ள வேண்டும். குறிப்பாக நன்மக்களைப்
பற்றிய தப்பான எண்ணங்களை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். இது ஒவ்வொரு
முஸ்லிமின் மீதும் கடமையாகும். தகுதியில் குறைந்தவர்களிடமும் கல்வி இருக்கும் படிப்பினைகள் அவற்றை ஏற்க வேண்டும்
என்பதே இந்த எறும்பின் கூற்றின் மூலம் அறிகிறோம்.
அபூ உமாமா (ரழி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்: ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது அமரர்களும், விண்ணிலுள்ளோரும், மண்ணிலுள்ளோரும், புற்றிலுள்ள எறும்புகளும் மற்றும் மீன்கள் உட்பட அனைத்துமே
மக்களுக்கு நலவைப் போதிப் போருக்காகப் பிரார்த்தனைப் புரிகின்றன. (திர்மிதி:2609)
ஹுத்
ஹுத் பறவை வந்து செய்தி கூறியதும் சுலைமான்(அலை) என்ன சொன்னார்கள்? நீ உண்மையை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா?
என ஆராய்வோம் என்றார். இதிலும் இன்றைய உலகுக்கு மாபெரும் படிப்பினை உள்ளது.
வாட்ஸப் உலகில் பல செய்திகள் வந்து விழுகின்றது. உடனே அது பரப்பப்படுகிறது சர்வ சாதாரணமாக அவைகளை
சற்றும் ஆராயாமல் அதை நாம் பிறருக்கு அப்படியே பார்வேடு செய்கிறோம். அதனால் இந்த சமூகத்தில் ஏற்பட போகும் விளைவுகளைப் பற்றி யாரும் துளியும் சிந்திப்பதில்லை. எந்த ஒரு செய்தியையும் அதன்
உண்மை நிலை அறியாமல் முடிவு எடுத்து விடக் கூடாது என்பதே இதன் மூலம் உள்ள படிப்பினையாகும்.
மேலும் ஒரு சம்பவம் இது நபி(ஸல்)
காலத்தில் நடந்தது. இதைக் கூறி உரையின் ஒரு பகுதியை நிறைவு செய்கிறேன். ஹாரிஸ்
என்றொரு நபி தோழர் ஒரு கிராமத்திலிருந்து வந்தார். நல்ல குணம் உடையவர் நபி(ஸல்) அவர்கள் கரங்கள் தொட்டு இஸ்லாத்தை ஏற்றார்.
தன்னுடைய செல்வத்திலிருந்து ஜகாத் தொகையை கணக்கிட்டு நபி(ஸல்)
அவர்களிடம் ஒப்படைத்தார். பிறகு அவர் தன் கிராமம் சென்றார்.
அங்கு அவரின் போதனையால் அந்த கிராமமே
இஸ்லாத்தை ஏற்றது. நபி(ஸல்) அவர்கள் அந்த கிராமத்தில் யாரெல்லாம்
இஸ்லாத்தை தழுவி உள்ளார்களோ அவர்களிடம் ஜகாத் தொகையை வசூலித்து வர வலீத் (ரலி) என்ற ஸஹாபியை
அனுப்பினார்கள்.
அவர்
வருவதை அறிந்த கிராம மக்கள் அல்லாஹுவின் தூதர் அனுப்பிய தூதர் வருகிறார் வாருங்கள்
வரவேற்போம்” என்று அந்த கிராம மக்கள் அனைவரும் அந்த ஊர் நுழைவு வாயிலில்
தங்களின் ஜகாத் தொகைகளை கையில் வைத்துகொண்டு கூடி நின்றார்கள் அந்த கிராம மக்களின் பெரும் கூட்டத்தை
பார்த்த வலீத் (ரலி) “நமக்கு
எதிராக இம்மக்கள் போர் தொடுக்க அல்லவா வந்துள்ளனர்” என்று எண்ணிக் கொண்டார். அவர்களின் அருகில் கூட நெருங்காமல்
அப்படியே திரும்பி விட்டார்.
நபிகளாரிடம் வந்து “அந்த கிராமம் நமக்கு
எதிராக போர் தொடுக்க நின்று கொண்டுள்ளது என்று தவறான செய்தியைக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஹாரிஸ் (ரலி) அவர்களும் நல்ல
குணமுடையவர், அந்த கிராம மக்கள் பற்றியும் நல்லவிதமாக தான் பேசப்படுகிறது என்று எண்ணினார்கள்.
அப்போது இஸ்லாமிய படைத்தளபதியாக இருந்த ஹாலித் இப்னு வலீத் (ரலி) அவர்களை அழைத்தார்கள். அந்த கிராமத்திற்கு படையோடு
செல்லுங்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் அவர்களின் உண்மையான நிலை அறியாமல் அவர்கள்
மீது தாக்குதல் நடத்திவிட வேண்டாம் அவர்களாக தாக்குதல் நடத்தினால் திருப்பி
சண்டையிடுங்கள்” என்று கூறி அனுப்பி வைத்தார்கள். ஹாலித்
இப்னு வலீத் (ரலி) தலைமையில் பத்தாயிரம் பேர் கொண்ட போர்ப் படை அந்த கிராமம் நோக்கி சென்றது. அந்த கிராம மக்கள் அனைவரும் இஸ்லாத்தை தழுவியுள்ள செய்தி
அறிந்த ஹாலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் நபிகளுக்கு செய்தி அனுப்பினார்கள்.
“வலீத் (ரலி) அவர்கள் கொண்டுவந்த செய்தி தவறானது இங்குள்ள மக்கள் அனைவரும் முஸ்லிம்களே வலீத் (ரலி) அவர்கள் இந்த கிராமத்திற்குள் நுழையவே இல்லை” என்ற செய்தியை நபிகளுக்கு அனுப்பினார்கள்.
இப்படி பட்ட சம்பவங்கள் நமக்கு பல படிப்பினைகளைக் கூறுகிறது.
இது தவறாக நடந்துவிட்டது என எண்ணலாம், ஆனால் வலீத் (ரலி) அவர்களின் கூற்று உண்மை என நம்பி அவர்களின் மீது போர் தொடுத்திருந்தால் ,இஸ்லாமிய வராலற்றில் ஒரு
மாபெரும் பிழை நிகழ்திருக்கும். கரும்புள்ளி விழுந்திருக்கும்.
ஒருவர் கூறும் ஊர்ஜிதமற்ற செய்தியால் ஒரு போரே
மூண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் பல சர்வதேச
செய்தியாலனாலும் சரி இஸ்லாமிய செய்தியானாலும், நம் ஊரிலேயே நடக்கும் செய்திகள் எவையானாலும் அவைகள் ஆராயப் படவேண்டும் கூறுவது யாராக இருந்தாலும்
கூறப்படும் செய்தி அதன் தரம் பற்றி ஆராய வேண்டும் .இப்படிப்பினை எனக்கும் சேர்த்து
தான் மற்றவை அமர்வுக்குப் பின்.
http://mdfazlulilahi.blogspot.in/2017/07/blog-post.html
Comments