இஸ்லாமிய போர் என ஒரு போர் இருக்கிறதா?
ஸஹாபாக்கள் காலத்தில் நடந்துள்ள போர்களில் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது
நபி(ஸல்) அவர்களைப் பின் பற்றி அவர்கள் ஏவல்படி நடந்த போர்களும் உண்டு. அதற்கு
மாற்றமாக நடந்த போர்களும் உண்டு.
அதாவது நபி(ஸல்) அவர்கள் விரும்பாத, ஏவாத, மார்க்கத்தில்
அனுமதிக்கப்படாத பெண்கள் தலைமையேற்று சென்ற போர்களும் உண்டு. இவற்றை போர்
என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர. இவற்றையெல்லாம் இஸ்லாமிய ஜிஹாது (அறப்போர்கள்) என்ற
பார்வையில் பார்க்கக் கூடாது.
மனிதன் என்ற அடிப்படையில் மனிதனின் மூளை தனக்கு சாதமாக சிந்திக்கும் இது மனித
இயல்பு யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும்
தனக்கு சாதாகமாக சிந்திப்பது இயல்பானது. நிதர்சனமான இந்த உண்மைக்கு நபி(ஸல்) அவர்கள்
மரணித்த உடன் நடந்த நிகழ்வையே உதாரணமாகப் பார்க்கலாம்.
அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது
நபி(ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை கேட்ட உடனேயே இல்லை என்று
மறுத்தார்கள் உமர் (ரலி) அவர்கள். இந்த வரலாற்று நிகழ்ச்சியை நம்மில்
அதிகமானவர்கள் அறிந்து வைத்திருக்கிறோம்.
இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது உண்மை.
இதை மறுத்தது யார்? சாதரணமானவரா? உமர் (ரலி) அவர்கள்தான்
மறுத்தார்கள். ஏன் மறுத்தார்கள். இறைத் தூதர் மரணித்து விட்டார்கள் என்பதை ஏன்
நம்ப மறுத்தார்கள்
அவரது உள்ளம் இறைத் தூதர்
மரணிக்கக் கூடாது என்று ஆசைப்படுகிறது. அவர்கள் உள்ளம் அதனை விரும்பவில்லை.
யார்தான் இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறந்து போவதை விரும்புவார்கள். எனவே
அதற்கு சாதகமாக சிந்தித்தார்கள்.
ஆனால் இது அல்லாஹ்வின் விதி அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இது
குர்ஆனுடைய வசனங்களுக்கு முரணானது என்பது அப்பொழுது அவர்களது சிந்தனைக்கு
வரவில்லை. அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் வந்து
"எவர்
முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள்
இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ
அவர் அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன்
இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்'' என்று
அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கூறிவிட்டுப் பின்வரும் வசனங்களை
ஓதிக்காட்டினார்கள்.
”இன்னக மய்யிதுன்வ் வஇன்னஹும் மய்யிதுான்” (நபியே)
நிச்சயமாக நீரும் மரணிப்பவரே.
நிச்சயமாக
அவர்களும் மரணிப்போரே.'' (39:30)
”வமா
முஹம்மதுன் இல்லா ரஸுலு(ன்) கத்கலத் மின் கப்லிஹிர் ருஸுல்...”
முஹம்மது(ஸல்) தூதர்
தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் பலர்
(காலம்) சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு
விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த
வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன்
நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான் (3:144)
(நூல்:
புகாரி 3668)
இப்படி குர்ஆன் வசனங்களை எடுத்தச் சொன்னதும் உமர்
(ரலி) அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இதுதான் அவர்களிடமிருந்த சிறப்பு.
ஸஹாபாக்களிடமிருந்த மிகப் பெரிய சிறப்பு என்ன? தவறே செய்யாத மலக்குகளின் நிலை என்பது கிடையாது. தவறு
செய்வார்கள். ஆனால் வேண்டும் என்றே செய்ய மாட்டார்கள். தெரியாமல் தவறு செய்து
விட்டால் எடுத்துச் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வார்கள். சம்பந்தப்பட்டவர்களிடம்
அதற்காக வருத்தமும் தெரிவிப்பார்கள். இறைவனிடத்திலே தவ்பா செய்வார்கள். இதுதான்
ஸஹாபாக்களிடம் உள்ள மிகப் பெரிய சிறப்பு.
மலக்குகள் போல் தவறே செய்யாத மனிதனை அல்லாஹ் படைத்து. அவன் தவறே செய்யாமல்
வாழ்ந்து விட்டால். இதில் அந்த மனிதனுக்கு எந்த சிறப்பும் கிடையாது. தவறு செய்யும்
தன்மையும் சிந்தனையும் அதற்கேற்ற வாய்ப்பும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் இருந்தும்.
தவறு செய்யாமல் மனதை கட்டுப்படுத்த வேண்டும். அப்படியும் தவறு செய்து விட்டால்.
உடனே வருந்த வேண்டும். இறைவனிடத்திலே தவ்பா செய்து மீள வேண்டும். இதுதான் சிறந்த
அம்சம். இப்படி வாழ்வதில்தான் சிறப்பு இருக்கிறது. இந்த சிறப்புக்களை
ஸஹாபாக்களிடம் காணலாம்.
இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறப்புக்குப் பிறகு ஹஸன் (ரலி) ஹுஸைன்
(ரலி) ஆகியவர்களின் கர்பலா போன்ற போர்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அலி (ரலி)
அவர்களுக்கு எதிராக படை திரட்டிய ஜமல் யுத்த சம்பவங்கள் நடந்தன.
இறைத் தூதர் முஹம்மது
நபி(ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்று உமர் (ரலி) அவர்கள் கூறியதும் இறைவனுடைய
வார்த்தைகளை அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் ஆதாரமாக சொல்லிக் காட்டினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் விளங்கி ஏற்றுக் கொண்டார்கள். இது மாதிரி இறைவனுடைய
வார்த்தைகளை எடுத்துக் கூறி விளங்க வைக்கும் சம்பவங்கள் அங்கே நடைபெறவில்லை. அதனால்தான்
கர்பலா ஜமல் போன்ற போர்கள் நடந்து விட்டன.
கர்பலா ஜமல் போன்றவை மார்க்கத்துக்கு முரணாக நடந்து விட்ட
தவறுகள். இவற்றை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான். நாடினால் தண்டிப்பான். அதில்
மூக்கை நுழைப்பதற்கு நமக்கு அனுமதி இல்லை. அந்த விஷயங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு இது தவறு. இவர்
கிரிமினல், இவரது செயல் மார்க்கத்துக்கு முரணானது. இப்படி
தீர்ப்புகள் சொல்வதற்கும் விமர்சனங்கள் செய்வதற்கும் நமக்கு அதிகாரம் இல்லை.
அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்தால் எது சரி என்பதை எடுத்துச் சொல்லலாம். எது சரி
என்பது பற்றி இப்பொழுது நாம் பேசக் கூடாது.
தில்க உம்மதுன் கத்கலத் லஹா மா கஸபத் வலகும் மாகஜப்தும் வலா துஸ்அலூன அம்மா
கானூ யஃமலூன். ”அவர்கள் சென்று விட்ட சமுதாயம் அவர்கள் செய்தது அவர்களுக்கு
நீங்கள் செய்தது உங்களுக்கு அவர்கள் செய்தது பற்றி நீங்கள் விசாரிக்கப்பட
மாட்டீர்கள்” என்று சென்று விட்ட சமுதாயம் பற்றி அல்லாஹ் (குர்ஆனில்2:134) கூறி விட்டான்.
இனிமேல் நாம் என்ன செய்ய இருக்கிறோமோ அதுதான் நமக்கு கிடைக்கும். நமக்கு
மறுமையில் என்ன கிடைக்கும் என்ற கவலைதான் நமக்கு இருக்க வேண்டும். அதை
விட்டு விட்டு. அவருக்கு என்ன கிடைக்கும் இவருக்கு என்ன கிடைக்கும் என்று யூகிக்கின்ற உரிமை
நமக்கு இல்லை. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இதன் மூலம் நமக்கு என்ன படிப்பினை
என்றுதான் பார்க்க வேண்டும்.
இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் ஏராளமான போர்கள் நடந்திருப்பதை
நாம் வரலாறுகளில் பார்க்கிறோம். அந்த வரலாற்று உண்மைகளை அந்தக் கால வல்லுனர்கள்,
வரலாற்று ஆசிரியர்கள், ஸஹாபாக்களுக்கு பின்னால் வாழ்ந்த மனிதர்கள் எழுதி
வைத்துள்ளார்கள். அவர்கள் எதனை எழுதி வைத்திருக்கிறார்களோ அதனை படித்துதான்
நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதைத் தவிர அந்தக்
காலத்துக்குப் போய் அதை உரசிப் பார்க்கின்ற எந்த ஒரு கருவியும் நம்மிடம் கிடையாது.
இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
வரலாற்றில் பதியப்பட்டவைகளில் ஒன்றிரண்டு விஷயங்கள் முரணாகத் தோன்றலாம். ஒன்றிரண்டு
விஷயங்கள் தவறாகக் கூட தோன்றலாம். அந்தக் காலத்துக்குப் போய் அதை உரசிப்
பார்க்கின்ற எந்த ஒரு கருவியும் நம்மிடம் கிடையவே கிடையாது.
அதனால் முரண்பாடாகத் தெரியும்
இரண்டு விஷயங்களில் எது சரி என ஒருவர் மனதுக்கு தெரிகிறதோ அதை அவர் சொல்வார். இவருக்கு
முரணாகப்படுவது இன்னொருவருக்கு சரியாகப்படலாம் எனவே
அதை எடுத்து அவர் சொல்வார். இன்னொருவர் இரண்டுமே தப்பு என்று சொல்லலாம். இதுதான் வரலாறுகளுக்கு உள்ளநிலை.
பொதுவாக வரலாறுகளுக்கு உள்ள தலையெழுத்தே ஒருவர்
சொல்வதை ஒருவர் மறுப்பார். ஒருவர் சொல்வதை பலர் மறுப்பார்கள்.
பலர் சொல்வதை ஒருவர் மறுப்பார். இஸ்லாத்தின்
பார்வையில் வரலாறுகளை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். எது இஸ்லாம்
சம்பந்தப்பட்ட வரலாறாக வருகிறது. அதில் குர்ஆன் ஹதீஸ்களுக்கு முரண்படாத
வாசகங்களையும் கோணத்தையும் கடை பிடிக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நமது சமுதாயம் கடந்த காலங்களிலிருந்தே வரலாற்று பதிவுகளுக்கு முக்கியத்துவம்
கொடுக்கவில்லை. உதாரணமாக இஸ்லாமிய போர்கள் என்று எழுதுவார்கள் பேசுவார்கள். அது
என்ன இஸ்லாமிய போர்கள்? இஸ்லாமிய போர் என ஒரு போர் இருக்கிறதா?
அப்படியானால் இந்துப்
போர் என இருக்க வேண்டும். கிறிஸ்துவ போர் இருக்க வேண்டும். புத்த மத போர் இருக்க
வேண்டும். எந்த மதப் பெயரிலும் போர் இல்லை. அந்த மதங்களைப் பற்றி வரும்போது. அந்த
போர்களுக்கெல்லாம் வேறு வேறு பெயர் சொல்வார்கள்.
இந்து மதத்தில் போர் நடந்ததாகச் சொன்னால் அதற்கு மஹாபாரதப் போர் என்று பெயர். கிறிஸ்துவ
மதத்தில் போர் நடந்துள்ளது என்றால் அதற்கு சிலுவைப் போர் என்று பெயர்.
அதே நேரம் முஸ்லிம்களுடைய
வரலாற்றில் நடந்துள்ள சம்பவம் என்றால் மட்டும் அதை இஸ்லாமிய போர் என்று மதச் சாயம் பூசுவார்கள். இதை முஸ்லிம்களும் அப்படித்தான் சொல்கிறார்கள் எழுதுகிறார்கள். எனவே முதலில் இறைத் தூதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்தவைகளெல்லாம் போர்களா? என்பதை ஆய்வு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.
தொடரும் இன்ஷாஅல்லாஹ்
நன்றி
மக்கள் உரிமை
முந்தைய தலைப்பு
அல்லாஹ் நாடினால் மன்னிப்பான். நாடினால் தண்டிப்பான்.
அடுத்த தலைப்பு
பக்கா படிக்கு முக்கா படி அளக்கிறானா?
அடுத்த தலைப்பு
பக்கா படிக்கு முக்கா படி அளக்கிறானா?
Comments