உணர்ச்சி பூர்வமாக சிந்தித்தால்? குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் நிதானத்துடன் சிந்தித்தால்!

 பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

நபி வழியில் நம் தொழுகை, நபி வழியில் நம் ஹஜ், நபி வழியில் நம் ஜகாத் என்றெல்லாம் நூல்கள் வந்து விட்டன.


அது போல் நபி வழியில் நம் ஜிஹாது என்று கூட நூல்கள் வந்திருக்கின்றதா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் ஜிஹாது பெயர்களால் ஏராளமான நூல்கள் வந்து அதி வேகமாக விற்பனையாகியுள்ளன. புதிது புதிதாகவும் விற்பனையாகிக் கொண்டுமிருக்கின்றன.


உணர்ச்சிகளைத் துாண்டி ஜிஹாது என பேசும் உரைகளைத்தான் இளைஞர்கள் விரும்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் ரசிக்கிறார்கள். மக்களை கவர வேண்டும். கை தட்டலை பெற வேண்டும். அல்லாஹு அக்பர் கோஷம் அதிர வேண்டும். வீரப் பேச்சு என எல்லாரும் பேச வேண்டும். விண்ணை முட்டியது என கூற வேண்டும்.

அப்படியானால் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் சுற்றி வளைத்தாவது உணர்ச்சிகளைத் துாண்டி ஹைய அலல் ஜிஹாது. மீண்டும் கர்பலா என்று காஜித்து. ஜிஹாதை தொட்டுப் பேச வேண்டிய கட்டாயத்தில் உலகம் முழுவதும் உள்ள பேச்சாளர்கள் நிலை ஆகி விட்டது. 

அவை இளைஞர்களிடம் ஏற்படுத்தியுள்ள தவறான தாக்கங்களையும், அதனால் உலகத்தில் நடந்து வரும் விரும்பத்தகாத சம்பவங்களையும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் அனைவரும் அறிவீர்கள். அதில் ஒன்றுதான் சமீபத்தில் கரை ஒதுங்கி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அய்லான் குர்தி என்ற பெயருடைய 3 வயதுச் சிறுவனின்   சடலம்



வெள்ளிக் கிழமையன்று ஜும்ஆ பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு என்ற சம்பவங்கள் இப்பொழுது உலக அரங்கில் மிகச் சாதாரணமான செய்திளாக ஆகி விட்டன.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நடந்த சம்பவங்களை கூறவில்லை. தங்களை முஸ்லிம் நாடுகள் என கூறிக் கொள்ளும் பாகிஸ்தான், பங்ளாதேஷ்,ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சிரியா, துருக்கி, குவைத் மட்டுமல்ல. சவூதி போன்ற நாடுகளில் நடந்து வரும் சம்பவங்களையே கூறுகிறோம்.


நமது அண்டை நாடுகளில் நடக்கும் இந்த சண்டைகள் யாவும் யாருடன் நடக்கின்றன. முஸ்லிம்களுக்குள் தான் நடக்கின்றன. ஷியா பள்ளிகளில் சுன்னத் ஜமாஅத்தினரும். சுன்னத் ஜமாஅத்தினர் பள்ளிகளில் ஷியா பிரிவினரும் குண்டு வைக்கிறார்கள். முஹாஜிர்கள் அன்சார்கள் என்ற பெயரால் உள்ளவர்களுக்கு மத்தியிலும் மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.


நமது அண்டை நாடுகளில் நடக்கும் சண்டைகள்தான் இப்படியா?. இஸ்லாம் தோன்றிய பூமி என பெருமைபட்டுக் கொள்ளும் அரபு நாடுகளின் நிலை என்ன? அதிலும் குறிப்பாக ஈராக், சிரியா, லிபியா,  துருக்கி  போன்ற அரபு நாடுகளின் நிலை என்ன?  இவற்றின் நிலை பகிரங்கமாக ஆகி இருக்கிறது. மற்ற நாடுகளின் நிலை பகிரங்கமாக ஆகவில்லை.  இந்த ரமழானில் கூட குவைத்திலுள்ள பள்ளிவாசலிலும் குண்டு வெடித்தது.

மக்காவிலுள்ள முஅல்லா கபரஸ்தான், மதீனாவில் உள்ள பகீ கபரஸ்தான் ஆகிய இரண்டிலும் ஒவ்வொரு வியாழன் வெள்ளியில் மீண்டும் கர்பலா களம் நடந்து விடுமோ என்ற அச்ச நிலைதான் உள்ளது.


அந்த அளவுக்கு ஈரான் ஷியா முஸ்லிம்கள் சவூதி போலீஸுடனும் முதவ்வாக்கள் எனும் மார்க்க அறிஞர்களுடனும் போராட்டம் செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் பார்வையில் ஜிஹாது செய்து கொண்டிருப்பார்கள். நோன்பு மற்றும் ஹஜ்ஜுடைய காலங்களில் ராணுவமும் வந்து ஈரான் ஷியா முஸ்லிம்களுடன் போராடும்.



பலஸ்தீனத்தில் தினமும் மோதல்கள்  நடந்த கொண்டிருக்கின்றன.  பெரும்பாலும் யூதப் படைகளுடனான மோதல்கள் தான் இருந்தாலும் 10 ஆண்டுகளுக்கு முன்  பலஸ்தீனத்தில் நடந்த மோதல் யாருடன் நடந்தது. யூதர்களுடனா நடந்தது?  

ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கும் சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களுக்குமா மோதல் நடந்தது? அந்த மோதலில் ஜுமுஆ தொழுது கொண்டிருந்தபொழுது  ஆறு பள்ளிவாசல்களில் குண்டு வைத்தார்களே அவர்கள் யார்?

ஒரே கொள்கை உடைய முஸ்லிம்கள்தானே.  அரசியல் காரணத்தால்  2 அணிகளாக ஆகி விட்டார்கள்.  அதனால் ஜிஹாது பெயரால் 6 பள்ளிவாசல்களில் குண்டு வைத்து விட்டார்கள்.  இப்பொழுது கூட துருக்கியில் குர்து முஸ்லிம் அரபு முஸ்லிம் என மோதல்கள் நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

எனவேதான்  போர்களும் படிப்பினைகளும் என்ற  தலைப்பிலான இந்த தொடரில்  நபி(ஸல்) அவர்களுடைய வாழ்நாளில்  நடந்தவைகளெல்லாம் போர்களா?  

நபி(ஸல்) அவர்களுடைய  வாழ்நாளில் நடந்த போர்கள் தரும் படிப்பினைகள் போன்ற தலைப்புகளில் நீங்கள் ஆய்வு செய்வதற்காக நமக்கு தெரிந்தவைகளை தொடராக தொகுத்து தர எண்ணி உள்ளோம். 

இன்றைய சூழலை பயன்படுத்தி நாம் ஆய்வு செய்ததை உங்களிடம் திணிக்கவில்லை.  நிச்சயமாக நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காகவே வரலாற்றை தொகுத்து தருகிறோம். ஆகவே இதனை படிக்காதீர்கள்.  ஆம் வரலாற்றை கதை போல் படிக்காதீர்கள்.  சிந்தித்து ஆய்வு செய்யும் வண்ணம் படியுங்கள்.




இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்து வளர்ந்து அதனை விட்டு வெளியேறினார்கள். மதினாவுக்குச் சென்று இஸ்லாமிய ஆட்சி அமைத்தார்கள். இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தினார்கள்.

சுற்றியுள்ள நாடுகளின் மீது போர் தொடுத்தார்கள். மக்கா மீதும் போர் தொடுத்து வெற்றி பெற்றார்கள். அந்த இறைத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்தான் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது லகத் கான லகும் பீ ரஸுலில்லாஹி உஸ்வதுல் ஹஸனா என்று அல்லாஹ் நம்மைப் பார்த்து கூறியுள்ளான். (திரு குர்ஆன் 33:21)




அல்லாஹ்வுடைய தூதர் நமக்கு முன் மாதிரி (உதாரணம்)என்றால் எல்லா வகையிலும்தான் முன் மாதிரி. எனவே நாம் எந்த ஒரு நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க பாடுபட வேண்டும். இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த பாடுபட வேண்டும். அதற்காக அந்த நாட்டில் போர் புரிபவர்களாக ஜிஹாது செய்பவர்களான இருக்க வேண்டும்.

அல்லது போருக்கான - ஜிஹாதுக்கான ஆயத்த வேலைகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் என்றால் அவனிடத்தில் இந்த போர் குணம் ஜிஹாது எண்ணம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் முழுமையான முஸ்லிம். இப்படி ஒரு கருத்தை இஸ்லாமிய கொள்கையாக சிலர் போதித்து வருகிறார்கள். 




இந்தக் கருத்தை உணர்ச்சி பூர்வமாக சிந்தித்தால் இது மார்க்க ரீதியாகவும் சரியாகப்படுகிற மாதிரிதான் தோன்றும். அதனால்தான் உலக முஸ்லிம்களில் ஒரு சிலரின் பார்வையும் இது சரிதானே என்பது போல் ஆகி இருக்கிறது. குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் நிதானத்துடன் சிந்தித்தால் இஸ்லாம் காட்டியுள்ள சரியான வழிக்கு முரணானதா சரியானதா இது என்பது தெளிவாகத் தெரியும். 

திரு குர்ஆன் 33:21 வசனத்தை முழுமையாக படியுங்கள் யா(ருக்கு முன் மாதிரி?


எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதியாக நம்பி அல்லாஹ்வை அதிகமாக நினைவும்  (திக்ரும்) செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு பின்பற்றி நடக்க வேண்டிய அழகிய முன் மாதிரி (உதாரணம்)நிச்சயமாக அல்லாஹ்வின் துாதரிடமே இருக்கின்றது.  


(தொடரும் இறைவன் நாடினால்)

நன்றி மக்கள் உரிமை

முஸ்லிம்கள் நடத்தியது போர்களா? போராட்டங்களா?  1தொகுப்பு அபு இஸ்ரா

அடுத்த தலைப்பு 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு