நிற்கதியாகி விட்டவர்களுக்கு நிரந்தர நிவாரணம் எது ?










மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிடமிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அல்குர்ஆன் 4:1

பலமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டு, பூமி, தான் சுமந்திருப்பவைகளை (எல்லாம் வெளியில் ) எறிந்து விடும்போது, மனிதன் திடுக்கிட்டு 'இதற்கென்ன நேர்ந்தது? (ஏன் இவ்வாறு அதிர்ந்தது?) என்று கேட்பான். அல்குர்ஆன் 99:1-3

வாடிக்கையான அந்த வேடிக்கைகள்.

கிழக்காசிய நாடுகளை குறி வைத்தாற்போல் தாக்கியுள்ள பூகம்பமும் கடல் கொந்தளிப்பும் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்பொழுதெல்லாம் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று பார்வை இடுவதும் செல்ல இயலாதவர்கள் அறிக்கை வெளியிடுவதும் நிதி திரட்டுவதும் வாடிக்கை. அந்த வாடிக்கையான வேடிக்கைகளைத்தான் இப்பொழுதும் பல அமைப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. கிரிமினல் வழக்குகளில் சிக்கி முன் ஜாமீன் பெற்றுள்ளவர்களில் சிலர் பூகம்ப நிதி கேட்டு வீதிகளில் உலவி வருவதையும் இதன் மூலம் அரசிடம் நற்பெயர் பெற முயன்று வருவதையும் பார்க்கிறோம்.

தொண்டரணி என வைத்திருப்பது எதற்கு?

இந்த வேடிக்கைகளுக்கு மத்தியில் த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ்வின் அறிக்கையும் த.மு.மு.க. தொண்டர்களின் செயல்பாடுகளும் வித்தியாசமாக உள்ளன. ஜவாஹிருல்லாஹ்வின் அறிக்கை வெறும் வெற்று வேட்டு அறிக்கையாக இல்லாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு த.மு.மு.க. தொண்டர்களை அனுப்பி மீட்பு பணிகளில் ஈடுபடச் செய்திருப்பதைப் பார்க்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். அமைப்புகளில் தொண்டரணி என வைத்துள்ளவர்கள் அந்த தொண்டர் அணியை இதுபோன்ற நேரங்களில் மக்களுக்கு தொண்டாற்ற முடுக்கி விடாமல் தொண்டரணி என வைத்திருப்பது எதற்கு? சிந்தித்து த.மு.மு.க.வைப் பார்த்து படிப்பினை பெற வேண்டும்.

இயற்கை அல்ல இறைவனின் கை.

கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த பூகம்பமே வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றால் இதுவே மக்கள் வாழும் நிலத்தில் ஏற்பட்டிருந்தால் என்ன கதி ஆகி இருக்கும்? நில நடுக்கத்திற்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி கடற்கரைக்குச் சென்று பலியாகிவிட்டதையும். கடல் அலைகளைக் கண்டு வெருண்டோடி வீட்டில் புகுந்தவர்கள் நில நடுக்கத்தில் பலியாகவிட்டதையும் செய்திகளாகப் பார்க்கிறோம். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் இதை இயற்கையின் சீற்றம் என்று சொல்லி முடித்து விட்டார்கள். இதைத்தான் இறை நம்பிக்கையாளர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இறை நம்பிக்கையாளர்களில் யாரும் இது இறைவனின் கோபப் பார்வை. இயற்கை வேலை செய்யவில்லை இறைவனின் கை வேலை செய்துள்ளது என்று எந்த இறை நம்பிக்கையாளரும் துணிந்து சொல்லவில்லை.

இது எதனால் வந்தது?

இது பற்றி, 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இறை வேதமாம் திருக்குர்ஆனில் அன்றே இடம் பெற்று விட்டது. உங்களை பூமி விழுங்கி விடாதென்றோ, அல்லது உங்கள்மீது கல்மழை பொழியாதென்றோ, நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? என்று 17:68 வது வசனத்திலும் அல்லது மற்றொரு தடவை, உங்களை கடலில் கொண்டு போய், கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக, உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? என்று 17:69 வது வசனத்திலும் அல்லாஹ் கேட்கிறான். இது எதனால் வந்ததென்றால் மனிதர்களின் கைகள் தேடிக் கொண்ட (தீய செயல்களின்) காரணத்தால், கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின என்று 30வது அத்தியாயம் 41 வசனத்தில் கூறியுள்ளான்.

ஒரு ஆயிரம் கூட நிதி திரட்ட தேவை இல்லை.

1400 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த இறை வசனம் கூறும் உண்மைகளை எடுத்துச் சொல்ல இதுவா நேரம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வேலையையா செய்யச் சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். ஆம் இதுதான் நேரம். ஆனால் இதை எப்படிச் சொல்ல வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்களோ அப்படிச் சொன்னால்தான் பலன் தரும். நிற்கதியாய் ஆகி விட்டவர்களுக்கு அரசு தரப்பிலான 156 கோடிகளாகட்டும் அமைப்புகளெல்லாம் திரட்டி தந்திடும் கோடான கோடிகளாகட்டும் நிவாரணமாகி விடுமா? இந்த கோடிகள் முழுமையும் பாதிக்கப்பட்டவர்களைச் சென்று சேருமா? சேர்ந்தாலும் நிச்சயமாக இவைகளெல்லாம் உடனடியான நிரந்தரமான நிவாரணங்களையும் தீர்வுகளையும் தருமா? என்றால் தராது. நபி வழியே நல்ல தீர்வுகளாகும். நபி வழியை செயல்படுத்தினால் ஒரு கோடி அல்ல ஒரு ஆயிரம் கூட நிதி திரட்ட தேவை இல்லை.

நபி(ஸல்) அவர்கள் வழங்கிய நிவாரண திட்டம்.

ஓட்டு மொத்தமாக நிற்கதியாய் வந்து நின்ற மக்கத்து முஹாஜிர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இது மாதிரி நிதி திரட்டிக் கொண்டிருக்கவில்லை. வீடு வாசல்களை மனைவி மக்கள்களை இழந்து நிற்கதியாய் வந்து நின்ற மக்காவாசிகளுக்கு நபி(ஸல்) அவர்கள் வழங்கிய நிவாரண திட்டமே இன்றைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்புகளுக்கும் சரியான உடனடியான நிரந்தர நிவாரணங்களும் தீர்வுகளுமாகும். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரை என் சகோதரனாக அல்லது சகோதரரியாக ஏற்று என் வீட்டுக்கு அழைத்துச் சென்று என் குடும்பத்தில் ஒருவராக வைத்துக் கொள்கிறேன் என்று ஒவ்வொரு முஸ்லிமும் முன் வர வேரண்டும். அப்படி முன் வந்தால், மேலே குறிப்பிட்டுள்ள ஆயத்துகளை மட்டுமல்ல, இன்று சுனாமி அலை எனும் நீரால் கொந்தளித்த கடல் தீயாக கொதித்து கொந்தளிப்பது பற்றிய (81:6) ஆயத்து உட்பட இன்னுமுள்ள ஆயத்துகளையும் ஹதீஸ்களையும் தெளிவாகச் சொல்லாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கி விட்டு செய்யும் உபதேசம் எளிதில் எடுபடும். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கி விட்டு உபதேசம் செய்தால் எளிதில் ஏற்றுக் கொள்வார்கள். இதுதான் மனித இயல்பு.

அரிய வாய்ப்பு இது.

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வகுத்தளித்த நிவாரண திட்டம் இது. அண்ணல் நபியே அழகிய முன் மாதிரி என்பது மேடைப் பேச்சுகளுக்கு கொடுக்கப்படும் வெறும் அலங்கார தலைப்புகள் அல்ல. எனவே நிற்கதியாய் நிற்பவர்களில் ஒருவரை நாங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராய் ஏற்றுக் கொள்கிறோம் என்று முஸ்லிம்கள் செயல்வடிவம் கொடுத்தால் இஸ்லாத்தைப் பற்றி அறியாத உலகில் உள்ள முஸ்லிம் அல்லாத ஆட்சியாளர்களின் கவனம் இஸ்லாத்தின் பக்கம் திரும்பும். இதன் மூலம் முஸ்லிம் அல்லாத ஆட்சியாளர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி அறியச் செய்திட முடியும். அதற்கான அரிய வாய்ப்பு இது.

அவரும் இதுபோல் உதவக் கூடியவராக ஆகி விடுவார்.

பொறுப்பெடுத்தல் என்பது வாழ்நாள் முழுவதும் என்பது அல்ல. இது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். உழைக்கவே முடியாதவர் என்றால் அவரை வாழ்நாள் முழுவதும் வைத்து பராமரிக்க வேண்டும் அதற்குரிய மகத்தான கூலி அல்லாஹ்விடம் உண்டு. உழைக்க தகுதி உடையவர் என்றால் அவர் மனம் ஒரு நிலைக்கு வரும்வரை சும்மா இருப்பார். பிறகு அவருக்கு என ஒரு வேலையையோ தொழிலையோ காட்டி விட்டால் நன்றியுடன் ஈடுபட்டு நமது தேவைகளிலிருந்து விடுபட்டு அவரும் இதுபோல் உதவக் கூடியவராக ஆகி விடுவார்.

சுவர்க்கத்தில் இப்படி இருப்போம்.

கருத்து வேறுபாடுகளை காரணம் காட்டி சமுதாயத்தை கூறு போட்டு வசூல் ராஜாக்களாக வலம் வந்து கொண்டிருக்கும் சுயநலவாதிகளிடம் இந்த நபி வழியை எதிர் பார்க்க முடியாது. கலிமாச் சொன்னவர்கள் அனைவரையும் முஸ்லிம்களாக ஏற்று செயல்படும் த.மு.மு.க, முஸ்லிம் லீக் போன்ற சமுதாய அமைப்புகள்தான் இதை செயல்படுத்த முன் வர வேண்டும். அனாதைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டவர்களும் நானும் சுவர்க்கத்தில் இப்படி இருப்போம் என தனது இரு விரல்களைக் காட்டி நபி (ஸல்) கூறியுள்ள ஹதீஸ்களை முஸ்லிம்களிடம் எடுத்துச் சொல்லி தயார் படுத்திட வேண்டும். நபி(ஸல்) அவர்கள் வகுத்தளித்த நிவாரண திட்டத்தை ஆட்சியாளர்களுக்கு எத்தி வைத்து அணுமதி பெற வேண்டும். இந்த நபி வழியை செயல்படுத்த எந்த அமைப்பு முன் வந்தாலும் நிற்கதியாய் ஆகி விட்டவர்களில் ஒருவரை என் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்ள நான் தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.