நாம் கட்டுப்படுவது யாருக்கு? அல்லாஹ்வுக்கா அமைப்புத் தலைவர்களுக்கா?


யூதர்களோடு செய்த இந்த ஒப்பந்தம் இன்றைய உலகுக்கு. இந்தியா போன்ற நாட்டிற்கு ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவதற்கு மிக மிக அவசியம் என்பது வரை பார்த்துள்ளோம். பத்ரு எப்படி ஏற்பட்டது என்பதை தெளிவாக அறியத்தான் அதற்கு முந்தைய நிகழ்வுகளை விரிவாகப் பார்த்து வருகிறோம்.


பத்ரு போருக்கான எந்த ஆயத்தத்தையும் முஸ்லிம்கள் செய்யவில்லை. பத்ரு போருக்கு முன் தினம் வரை போர் புரிய வேண்டும் என்ற எண்ணம் அல்லாஹ்வின் துாதருக்கும் அவர்களுடைய ஸஹாபாக்களுக்கும் இருந்தது இல்லை. ஆனால் அதற்கு முன்னால் செய்த பல்வேறு முயற்சிகள் இருக்கின்றன. அந்த முயற்சிகளும் வரலாற்றில் போர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதிரி முயற்சிகளை அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் ஏன் செய்தார்கள்?


அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் ஒரு காலத்திலும் யாரையும் எதிர்த்து போரிட வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருக்கவே இல்லை. அந்த எண்ணம் இருந்திருந்தால் மக்காவில் அதற்கு ஒரு படையை உருவாக்கி இருக்கலாம். அவர்களை எதிர்த்து போராடி இருக்கலாம். ஊர் நீக்கம் எனும் சமூக பகிஷ்காரம் செய்தபொழுதும் அதையும் பொறுமையாக ஏற்றுக் கொண்டார்கள். ஸபுர் (பொறுமை) செய்து சகித்துக் கொண்டார்கள். இது அல்லாஹ்வின் துாதர் (ஸல்) மட்டும் எடுத்த தனிப்பட்ட முடிவு என்று சொல்ல முடியாது.


ஏனெனில் அல்லாஹ்வின் துாதரை அல்லாஹ்தான் வழி நடத்துகிறான். எந்த ஒரு செயலை அல்லாஹ்வின் துாதர் (ஸல்) செய்தாலும் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த அனுமதி, வழி காட்டல் என்பதுதான். அப்படி இருந்தாலும் ஒரு சில நேரங்களிலே ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் துாதரிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் துாதரே இந்த மாதிரி நீங்கள் எங்களுக்கு கட்டளை இடுகின்றீர்கள். இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த கட்டளையா? அனுமதியா? அல்லது உங்கள் விருப்பப்படி சொல்கின்றீர்களா? என்று கேட்டு தெரிந்து கொள்வார்கள். இந்த மாதிரி சம்பவங்களை ஹதீஸ்களிலே நாம் காணலாம். இதை ஏன் இப்பொழுது குறிப்பிடுகிறோம்?


அல்லாஹ்வுடன் நேரடி தொடர்பிலிருந்த தலைமையின் முடிவைக் கூட ஜீரணிக்க முடியாமல் அதிருப்தி அடைந்து மாற்றுக் கருத்துக்  கூறிய வரலாறுகள் இருக்கின்றது. அப்படி இருக்கும்போது இன்றைய தலைமையின் முடிவுக்கு மாற்றுக் கருத்துக்கள் மனதில் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. விமர்சனங்கள் வருவதை குறை சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் நாம் ஏற்றுள்ள தலைமை எடுத்துள்ள முடிவுகள் நமக்கு பாதகம் போல் தோன்றும்

... தலைவர் பேராசிரியார் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி, தமுமுக தலைவர் மவுலவி ஜே.எஸ்.ரிஃபாயி, மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது மற்றும் மமக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர்  சென்று செய்து கொண்ட ஒப்பந்தப்படி நாம் செயல்படும்போது நாம் யாருக்கு கட்டுப்படவர்களாக ஆவோம்? முஸ்லிம்களின் நலனுக்காக பாடுபடும் நாம் முஸ்லிம்கள் போட்டியிடும் சில தொகுதிகளில் மற்ற வேட்பாளர்களுக்காக பணி செய்ய வேண்டியது இருக்கின்றதே.


உள்ளூர் மக்கள் நலனுக்காக பாடுபட்ட நாம் உள்ளூர்க்காரர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இடத்தில் வெளியூர்க்காரருக்கு பாடுபட வேண்டியது இருக்கின்றதே. நமது தலைமை செய்த முடிவு நமக்கு இப்படி ஒரு நெருக்கடி நிலையை ஏற்படுத்தி இருக்கின்றதே. உள்ளம் விரும்புவதற்கு மாற்றமாக உதடுகள் அசைய வேண்டியது இருக்கின்றதே. இப்படியான சிந்தனைகளால் நமது மனம் ஏற்க மறுக்கும். 


இந்த நேரத்தில் நமது முடிவுகள் இஸ்லாத்தின் அடிப்படையில் சரியா தவறா? நாம் கட்டுப்படுவது அல்லாஹ்வுக்கா அமைப்புத் தலைவர்களுக்கா? என்ற கேள்விகளும் வருகின்றது. எனவே இந்த விஷயத்தில் இஸ்லாமிய அடிப்படையில் தெளிவு கண்டு பிறகு செயல்படுவது அவசியமாகின்றது. ஆகவே இஸ்லாமிய வரலாற்றைப் பார்ப்போம். தெளிவு பெறுவோம். அதைப் பின் பற்றி செயல்படுவோம்.
ஹுதைபியா உடன்படிக்கையின்போது பல சூடான சூழல்கள் ஏற்பட்டது. முஸ்லிம்கள் பல முறை கொந்தளித்தார்கள். கொதிப்பும் உணர்ச்சி கொந்தளிப்பும் நபித்தோழர்களை அக்கினிப் பிழம்பாக ஆக்கியது. எந்த அளவுக்கு? நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் துாதர் இல்லையா? என்று உமர்(ரலி) அவர்கள் நபியைப் பார்த்து கேட்கும் அளவுக்கு நிலைமை சூடாக ஆனது. பல கட்டங்களாக பேச்சு வார்த்தைகள்  நடந்தது. இறுதியில் ஒப்பந்தம் எப்படி இருந்தது?
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று ஒப்பந்தத்தின் துவக்கத்தில் எழுதும்படி அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்படி எழுதக் கூடாது. இறைவா! உன் திருப்பெயரால்.. என்று மட்டும்தான் எழுத வேண்டும். றஹ்மான் றஹீம் (அளவற்ற அருளாளன நிகரற்ற அன்புடையோன்) என்றெல்லாம் எழுதக் கூடாது என்றான் குறைஷிகளின் துாதன். அவன் விருப்பப்படியே எழுதப்பட்டது.
 "இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்' என்று எழுதும்படி நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். குறைஷிகளின் துாதன் சுஹைல், அல்லாஹ்வின் தூதர் என்று எழுதக் கூடாது. ”அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது' என்றுதான் எழுத வேண்டும் என்று கூறினான். இதுவும் அவன் சொன்னபடியே எழுதப்பட்டது.
"எங்களை இறையில்லத்திற்குச் செல்ல விடாமலும் அதை நாங்கள் தவாஃப் செய்ய விடாமலும் தடுக்கக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஒப்பந்தம் எழுதச் சொன்னார்கள். உடனே குறைஷிகளின் துாதன் சுஹைல், இதை ஏற்க முடியாது என்றான். ஆக உம்ரா செய்யாமல் திரும்பிச் செல்ல வேண்டும்  என்ற நிலையே ஒப்பந்தமாக ஆனது.
"எங்களிடமிருந்து அதாவது குறைஷிகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கமான இஸ்லாத்தில் சேர்ந்து இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பி தந்து விட வேண்டும்' என்றான் சுஹைல். ஆக முஸ்லிம்களின் தலைமையான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் விருப்பத்திற்கு மாற்றமாகவும் குறைஷிகளின் துாதன் கூற்றுப்படியும் ஒப்பந்தம் எழுத முடிவு ஆனது. இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகாத நிலையில் இஸ்லாத்தை ஏற்றவராக கால்களில் விலங்குகளுடன் ஒருவர் வந்து நின்றார். அவர் யார்? குறைஷிகளின் துாதன் சுஹைலின் மகன் அபூஜந்தல்.  அவர் திருப்பி கொடுக்கப்பட்டார்.
முஸ்லிம்களிடம் ஏற்பட்ட கொதிப்புக்கும் உணர்ச்சி கொந்தளிப்புகளுக்கும் சொல்ல வார்த்தைகள் இல்லை. வெளிப்படையான பார்வையில் இந்த ஒப்பந்தங்கள் முஸ்லிம்களுக்குப் பாதகமானவையாகவே தெரிந்தது. ஸஹாபாக்களும் உடனே இவற்றை அங்கீகரிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. ஸஹாபாக்கள் இருக்கமான இதயத்துடன் திரும்பிச் சென்றார்கள். நாம் சத்தியத்தில் இருந்தும் தோல்வி கண்டு விட்டோமே என்ற வருத்தம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் இதைப் பற்றி அல்லாஹ் என்ன சொன்னான் தெரியுமா?
(நபியே!) நிச்சயமாக தெளிவான மாபெரும் வெற்றியை உங்களுக்கு நாம் தந்தோம் என்று துவங்கும் (அல்குர்ஆன் 48:1-5) வசனங்களை அருளினான். நூல்: புகாரி 4172. முஸ்லிம்கள் தோல்வி கண்டு விட்டோம் என்ற மனநிலையில் இருக்கின்றார்கள். அல்லாஹ்வோ அதற்கு மாற்றமாக ஹுதைபியா நிகழ்வை வெற்றி என்றான். நபி(ஸல்) மதீனாவுக்கு வந்து சேர்ந்த பிறகு மக்காவிலிருந்து முஸ்லிமாக ஆகி வந்த அபூ பஸீர்(ரலி) அவர்கள் ஒப்பந்தப்படி குறைஷிகளிடம் திருப்பி கொடுக்கப்பட்டார். ஒப்பந்தப்படி நடந்த நபிக்கு மகாத்தான வெற்றியையும் கொடுத்தான்.
குறிப்பிட்ட இடத்தில் நமக்கு சாதகமா பாதகமாக என பார்க்கக் கூடாது. ஒப்பந்தத்தை நிறை வேற்ற வேண்டும். ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதுதான்  நபி வழியாகும். முஃமின்களே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள் (அல் குர்ஆன் 5:1) இது அல்லாஹ்வின் கட்டளையாகும்.
நாம் போட்டியிடும் தொகுதிகளில் மற்றவர்கள் நம்மை ஆதரித்து நமது வெற்றிக்கு பாடுபட  வேண்டும். மற்ற தொகுதிகளில் நாம் அவர்களை ஆதரித்து அவர்களது வெற்றிக்குப் பாடுபட  வேண்டும். இப்படி நேரடியாகவும் விரிவாகவும் எழுதப்படாத ஒப்பந்தத்துக்கு சுருக்கமான  பெயர்தான் கூட்டணி.
எனவே இஸ்லாமிய வரலாற்றை பின்பற்றி ஒப்பந்தத்தை செயல்படுத்த கூட்டணி தர்மத்தை செயல்படுத்த வேண்டும். அப்படி செயல்படுத்தும்போது நாம் யாருக்கு கட்டுப்பட்டவர்களாக ஆகின்றோம்? அல்லாஹ்வுக்கும் அவனது துாதருக்கும் கட்டுப்பட்டவர்களாக ஆகின்றோம். அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களாக ஆகின்றோம். மேலோட்டமாகப் பார்த்தால் பாதிப்பு போல் தெரியும். நபி வழியில் அல் குர்அன் ஒளியில் பார்த்தால் அல்லாஹ்வின் அருள் தெரியும். ஆகவே நாம் அல்லாஹ்வின் அருள் பெற பாடுபடுவோம். ஈருலகிலும் வெற்றி பெறுவோம்.
தொடரும் இன்ஷாஅல்லாஹ்
நன்றி ; மக்கள் உரிமை

ஏப்29,மே5,2016


அடுத்த தலைப்பு 

 முந்தைய தலைப்பு 

குமாரசாமி கால்குலேட்டர்களை கொடுத்து தீர்ப்பு கூறச் சொல்லுமா கூட்டணி ?





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.