நபி(ஸல்) கோட்டை கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருந்தார்களா?

மதீனாவில் ஸஹாபிகளில் யாராவது ஒருவர் மாறி மாறி வந்து இரவில் கண் விழித்து நபி(ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பல இரவுகள் இவ்வாறு கழிந்து கொண்டிருந்தது. இப்படி இருக்கும்பொழுது ஒரு இரவில் அல்லாஹ்விடமிருந்து வஹி வந்தது.


“.. அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்..”( திரு குர்ஆன்  5;67)  


மனிதர்களால் அல்லாஹ்வின் துாதரை கொலை செய்துவிட முடியாதவாறு மனிதர்களிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான் என்ற உத்தரவாதத்தை அல்லாஹ் தந்து விட்டான். இந்த வசனம் ஒரு முன்னறிவிப்புமாகும். கடைசி வரை நபி(ஸல்) அவர்கள் கொலை செய்யப்படவில்லை. அல்லாஹ்வின் விதிப்படியிலான அஜல் வந்துதான் மரணம் அடைந்தார்கள். முன்னறிவிப்பும் நிறைவேறியது.


இந்த வசனம் வந்த உடன் இறைவனின் துாதர் அல்லாஹ் நமக்கு பாதுகாப்பு அளித்து விட்டான். இனி மனிதர்களுடைய பாதுகாப்பு தேவை இல்லை என்று முடிவு எடுத்தார்கள். அதன் பிறகு அல்லாஹ்வின் துாதருடைய செயல்பாடுகள் அனைத்தும் திறந்த புத்தகமாக இருந்தது. யாருடைய பாதுகாப்பும் கிடையாது. எங்கு போனாலும் பாதுகாப்பு என்பது கிடையாது. துணைக்கு ஆட்கள் இன்றி தனியாகவே போனார்கள். ஏன்? இதில் என்ன படிப்பினை இருக்கிறது? என்ன முன் மாதிரி இருக்கிறது?


சொல்லக் கூடிய கொள்கையில் சொல்லக் கூடியவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர்களது உள்ளத்தில முதலில் உறுதி இருக்க வேண்டும். இதுதான் நமக்கு இதில் படிப்பினைகள், முன் மாதிரிகள் இருக்கின்றது. 

உதாரணத்திற்கு இன்று கடவுள் இல்லை என்று சொல்லக் கூடியவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களது தேவைக்கு மறைமுகமாகவும் மாறு வேஷத்திலும் கடவுளை வணங்கக் கூடியவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். சாமியார்கள் ஜோதிடக்காரர்கள் சொல்படி மேலாடைகளையும் அதன் கலர்களையும் மாற்றி வருவதைப் பார்க்கிறோம். தான் சொல்லக் கூடிய கொள்கையில் தனக்கே நம்பிக்கை இல்லை என்றால் அந்தக் கொள்கை எப்படி வளரும்?


ஒருவர் ஒன்றைச் சொன்னால் அவருக்கு அதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும். இதை இறைவனின் இறுதித் துாதரின் வாழ்க்கையில் காணலாம். அல்லாஹ்வின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நான்கு பேர் என் பின்னால் வருவதை நான் விரும்பவில்லை. அசிங்கமாக இருக்கிறது. வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். என் பின்னால் யாரும் வர வேண்டாம் என மேடைகளில் வீர வசனம் பேசுவார்கள். அல்லாஹு அக்பர் முழக்கங்கள் பெறுவார்கள். ஆனால் மேடையை விட்டு இறங்கியதும் பின்னால் பந்தாவாகவும் பாதுகாப்பாகவும் பத்து பேரை வர வைத்திருப்பார்கள். வரக் கூடிய அந்த அந்த ஆட்களிடம் வர வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். வீட்டு வாசலில் செக்யூரிட்டி வைத்திருப்பார்கள். அரசு செலவில் ஏ.கே.47 பாதுகாப்பு வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காக தங்கள் வாகனத்தின் கண்ணாடிகளை தாங்களே ஆள் வைத்து உடைப்பார்கள். அப்படிச் செய்து அரசு பாதுகாப்பு பெற்றிருக்கக் கூடியவர்களைப் பார்க்கிறோம்.


நபி(ஸல்) அவர்களோ தாங்களே எண்ணினார்கள். நமக்கு நான்கு பேர் பாதுகாப்புக்கு இருந்தால் நல்லது என்று. பாதுகாப்புக்காக தோழர்களை வைத்தும் இருந்தார்கள். மனிதர்களிடமிருந்து நபியே உம்மை நாம் பாதுகாப்போம் என்ற வசனம் அருளப்படுகிறது. வசனம் அருளப்பட்டதும் கூடாரத்திலிருந்து தலையை வெளியே நீட்டிச் சொன்னார்கள். நீங்களெல்லாம் திரும்பிச் செல்லுங்கள் என்று. வசனம் இறங்கிய உடனேயே சொன்னார்கள். மக்களே! என்னிடமிருந்து திரும்பிச் செல்லுங்கள்! அல்லாஹ் என்னை நிச்சயமாகப் பாதுகாத்து விட்டான்என்று  (ஸுனனுத் திர்மிதி)


இதன் பிறகு நபி(ஸல்) கோட்டை கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருந்தார்களா? இல்லை, இல்லவே இல்லை. சாதாரண குடிசைகளில்தான் வாழ்ந்தார்கள். மிகச் சாதாரணமாக வீதிகளில் போய் வந்தார்கள். போர்க் களங்களில் கலந்து கொண்டார்கள். தங்கள் உயிரைக் காக்க எந்த முயற்சிகளும் செய்யவில்லை. இருந்தாலும் மற்ற முஸ்லிம்களுக்கு ஆபத்து உள்ளதை எண்ணிப் பார்த்தார்கள். நபி (ஸல்) அவர்களின் உயிருக்கு மட்டுமல்ல ஆபத்து இருக்கவில்லை. அனைத்து முஸ்லிம்களுக்கும் ஆபத்து இருந்தது.


இதைப் பற்றி உபை இப்னு கஅப் (ரழி) கூறுகிறார்கள். ”நபி (ஸல்) அவர்களும் முஹாஜிர் தோழர்களும் மதீனாவில் அன்சாரிகளின் ஆதரவைப் பெற்றுக் கொண்டார்கள். இதைச் சகித்துக்கொள்ள முடியாமல் குறைஷிகளும், மற்ற அரபுகளும் ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்த்தனர். இதன் காரணமாக நபித்தோழர்கள் இரவு தூங்கும் போதும் காலையில் விழிக்கும் போதும் தற்காப்புக்காக ஆயுதங்களைத் தங்களுடன் வைத்திருந்தனர்” என்று. 


நபி அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பு வந்து விட்டது. மதீனாவில் வாழக் கூடிய முஸ்லிம்களுக்கு ஆபத்துகள் இருந்தது. இந்த ஆபத்துகளை நீக்க வேண்டும் என்றால். எதிரிகளின் எதிர்ப்புகளை எதிர்த்து போர் புரிந்துதான் ஆக வேண்டும். அல்லது அவர்களது பலத்தை குறைக்க வேண்டும். அவர்களைக் கொல்லா விட்டாலும் அவர்கள் நம்மைக் கண்டு அஞ்சக் கூடிய ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும்.


அப்படியானால் அவர்கள் நம்ம பகுதி வழியாகத்தான் வியாபாரத்துக்கு போகிறார்கள். நமது சொத்துக்களையும் பொருள்களையும் மக்காவில் பிடிங்கி விட்டார்கள். கோடிக் கணக்கில் நம்மிடமிருந்து பிடுங்கப்பட்ட பொருள்களையும் சேர்த்து எடுத்துக் கொண்டுதான் வியாபாரம் செய்கிறார்கள். 

கோடிக் கணக்கில் பிடுங்கப்பட்ட நமது பொருளிலிருந்து நாம் ஒரு லட்சத்தை மீட்டினால் தப்பா? எந்த தப்பும் கிடையாது. அது நமது உரிமையும் கூட. வழிப்பறி செய்தல் என்பது வேறு வழி மறித்து மீட்டுதல் என்பது வேறு. இந்த வித்தியாசம் புரியாதவர்கள்தான். அறிஞர்கள் போர்வையில் உள்ள அறிவிலிகள்தான். கொள்ளையடித்தார்கள் வழிப்பறி செய்தார்கள் என்று சொல்லித் திரிகிறார்கள்.


எல்லாரையும் வழி மறிக்கவில்லை. யார் முஸ்லிம்களுடைய சொத்துக்களை பறித்தார்களோ? யார் முஸ்லிம்களை கொலை- செய்தார்களோ? யார் முஸ்லிம்களை நாடு கடத்தினார்களோ? யார் பலரை ஊனமாக ஆக்கினார்களோ? அந்த மாதிரியான சொந்த ஊர்வாசிகளான மக்காவாசிகளை மட்டுமே இலக்கு வைத்தார்கள். எத்தனையோ வியாபார கூட்டங்கள் போகும். அதை கண்டு கொள்ள மாட்டார்கள்

ரசூல்(ஸல்) அவர்கள் குறி வைத்தது குறைஷிகளைத்தான். மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்து வந்த நபித் தோழர்களான முஹாஜிர்களெல்லாம் ஒரே ஒரு துணியை மட்டும் தோழில் போட்டவர்களாக இருந்தார்கள். ஒரு பேரித்தம் பழம்தான் ஒரு நாளின் மொத்த உணவு என்று இருந்தார்கள். இப்படியெல்லாம் ஆனதற்கு காரணம் என்ன?


முஹாஜிர்களெல்லாம் பிறவியிலேயே பிச்சைக்காரா்களா? ஏழைகளா? கிடையாது. மக்காவில் நல்ல வசதியாக செல்வந்தர்களாக இருந்தவர்கள். மதீனா வந்து வீடு வாசல் இல்லாமல் ஆனார்கள். பள்ளிவாசல் திண்ணையில் தங்கி அஸ்ஹாபுஸ் ஸுப்பா. திண்ணைத் தோழர்கள் என்ற பெயருடன் வாழ்ந்தார்கள். மதீனாவாசிகளுடன் சகோதரர்களாக சேர்த்து விடப்பட்டார்கள். இவர்களெல்லாம் யார்

இலவசங்கள் என்றும் விலையில்லா பொருள்கள் என்றும் சொல்கிறார்களே அது போல் உள்ளவற்றை வாங்கி வாழ்ந்தவர்களா? மக்காவில் இருந்து விரட்டப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு மக்காவில் தகுதிக்கு தக்கவாறான வீடுகள் இருந்தது. சொத்துக்கள் இருந்தன. வசதி வாய்ப்புகள் இருந்தன. உணவுக்கு கஷ்டம் இல்லாத நல்ல வாழ்க்கை வாழ்ந்தார்கள். எல்லா வசதிகளும் இருந்தும். மக்கா காபிர்களால் விரட்டி அடிக்கப்பட்டதால் இந்த கதிக்கு ஆளானார்கள்.


மதீனா வந்த பின் மக்களை சீரமைப்பது. அவர்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை செய்து கொடுப்பது. வீடு வாசல் என தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுப்பது. பள்ளிவாசல் கட்டுவது. இப்படி இந்த பணிகள்தான் செய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் மக்கா காபிர்கள் சும்மா இருக்கவில்லை. சும்மா இருக்க விடவில்லை. எனவே நபி(ஸல்) அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். என்ன முடிவு?
தொடரும் இன்ஷாஅல்லாஹ்

                                    நன்றி ; மக்கள் உரிமை

                                       முந்தைய தலைப்பு 

சஅது(ரலி) அவர்களிடம் இருந்த பெரிய ஆயுதம் எது தெரியுமா?



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.