பிற மத பிரேத ஊர்வலமும் நபிகள்(ஸல்) நாயகமும்.



இந்திரா காந்திக்குப் பிறகு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் சுஷ்மா ஸ்வராஜ் இறந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” )

இந்தியாவில் முஸ்லிம் அல்லாத சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பல ஜாதிகளாக இருக்கிறார்கள். இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் போது விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்த நூற்றாண்டிலும் அவர்களிடையே கலவரங்கள் நடக்கின்றன. வேறு சாதியினரின் உடல்களை எங்கள் தெரு வழியாகக் கொண்டு செல்லக் கூடாது என்று ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களே சாதியின் பெயரால் வெட்டு குத்துக்களில் இறங்கி விடுகிறார்கள்.

உயிருடன் இருக்கும் போது நடமாடுவதற்கு அனுமதியளித்தவர்கள். இறந்த உடலுக்கு அந்த உரிமையை வழங்க மறுத்து விடுகிறார்கள். அவர்களில் ஒரு ஜாதியின் பிணம் இன்னொரு சாதியின் கோயில் வழியாகவோ, குடி இருப்பு வழியாகவோ கொண்டு செல்ல முடிவதில்லை. சாதிக் கலவரம் வெடித்து விடுகிறது.

நபி (ஸல்) வர்களை கொலை செய்ய முயற்சி செய்த சமுதாயத்தவர்களிடம் நபிகள்(ஸல்) நாயகம் எப்படி நடந்து கொண்டார்கள்? என்பதைப் பாருங்கள்.

மதீனாவில் மன்னராக இருந்த நபி(ஸல்) வர்களை பல வகைகளிலும் கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் யூதர்கள். மதீனாவில் உருவான இஸ்லாமிய அரசை ஆரம்ப அரசை அழிக்க ஒழிக்க நினைத்து பலப் பல முயற்சிகள் செய்தவர்கள் யூதர்கள். இப்படி இஸ்லாத்திற்கு எதிராக யூதர்கள் செய்த சதிகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் தோழர்களுடன் இருந்தபொழுது ஒரு பிரேத ஊர்வலம் கடந்து சென்றது. உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். தோழர்களும் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடம் (இறந்தவர் வேறு மதத்தவர்) கொண்டு செல்லப்படுவது யூதருடைய பிரேதம் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவர் மனிதரில்லையா?'  அதுவும் ஓர் உயிர் அல்லவா? என்று கேட்டு பதிலளித்தார்கள் இந்த வரலாறு தெரியாதவர்கள் நம்மில் யாரும் இல்லை.


ஆட்சித் தலைவராக அரசராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். நமக்கு புரியும் பாஷையில் சொல்வதென்றால் ஆளுங்கட்சியாக இருந்தார்கள். அவர்களின் எதிரி சமுதாயமாக யூதர்கள் இருந்தனர்.


எதிரி சமுதாயம், அதுவும் சிறுபான்மை சமுதாயம் அதைச் சார்ந்த ஒருவரின் உடல் ஆளும் அரசர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் தயக்கமோ, அச்சமோ இல்லாமல் கொண்டு செல்கின்றார்கள். முஸ்லிம் அரசின் அதிபர் வசிக்கும் வீடு இருக்கும் தெரு வழியாக மஸ்ஜிதுன் நபவி என்ற நபியின் பள்ளி வழியாக எடுத்துச் சென்றார்கள்.


முஸ்லிம்களின் மனித நேயத்தை அனுபவப் பூர்வமாக அறிந்திருந்ததால் தான் சிறுபான்மை சமுதாயத்தவராகவும் எதிரி சமுதாயத்தவராகவும் இருந்தவர்களால் இப்படி நடந்து கொள்ள முடிந்தது.


பிற மத பிரேதம் கடந்து செல்லும் போது உள்ளத்தில் வெறுப்பைச் சுமந்து கொண்டு வேண்டா வெறுப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் அமைதி காத்தார்களா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த உடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியதன் மூலம் உளப்பூர்வமாகவே அனுமதித்தார்கள் என்பதை உணரலாம்.


இந்த இடத்தில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தினர் ல பகுதிகளில் ஈடுபடும் நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டி நினைவூட்டாமல் இருக்க முடியாது.

இறந்தவர் தங்கள் மதத்தவர் என்றாலும் மதத்தால் ஒன்று சாதியால் வேறு என்பதால் பிற சாதி சவ ஊர்வலம் தங்கள் தெரு வழியாகக் கொண்டு செல்லப்படுவதைக் கடுமையாக எதிர்க்கும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

இனவெறியைத் தூண்டிவிட்டு நமது தெருவில் அவர்களின் பிணம் செல்லலாமா? என்று அறிவு இல்லாத மக்களின் உணர்ச்சிகளை துாண்டி விட்டு உசுப்பேற்றி விடுகின்றனர். அதனால் பிணங்கள் பந்தாடப்படுகின்றன. மேலும் பிணங்கள் விழுகின்றன.

பண்பு வந்து நபி இடத்தில் பணிவினை கேட்டு செல்லும் என்ற புகழுக்குரிய முஹம்மது நபி(ஸல்) இறந்து விட்டவர் விஷயத்தில் என்ன சொன்னார்கள்?

உங்களில் ஒருவர் ஜனாஸாவை (பிரேதத்தை)க் கண்டும் அதனுடன் நடந்து செல்லப் போவதில்லை என்றால் அவர் அதைக் கடந்து செல்லும்வரை அல்லது அது அவரைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவருக்கு முன்னால் (பூமியில்) வைக்கப்படும் வரை எழுந்து நிற்கட்டும் என்று சொன்னார்கள். 


நற்குணத் தாயகம் நபிகள் நாயகம் சொன்ன இந்த நபி வழியில் நடப்பவர்கள் முஸ்லிம்கள். அதனால் தான் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி அதுவும் பள்ளிவாசல் இருக்கும் தெரு தான் பிற மத பிரேதம் செல்லும் வழி என்று இருந்தால். பிரேதத்தை எடுத்துச் செல்ல பிற மத மக்களுக்கு எந்த அச்சமும் இருப்பதில்லை. சர்வ சாதாரணமாகப் பிரேதத்தை எடுத்துச் செல்கிறார்கள்.

இதன் காரணமாக மற்ற மதத்தினர் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் நஞ்சென வெறுத்த நிலை மாறியது. ந்த நிலை ஏற்பட்டபின்தான் அவர்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு மீனாட்சிபுரங்களெல்லாம் ரஹ்மத் நகராக மாறி வருகின்றன.   

ஆகவே நபி வழி நடப்போர் சுஷ்மா சுவராஜ் போன்றவர்கள் மரணங்களை விமர்சிப்பதில்லை.

நபித் தோழர்கள் இருவர் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் எழுந்தார்கள். அப்போது அவர்களிடம் 'இது இந்நாட்டில் அபயம் பெற்ற (காபிரின்) ஜனாஸாவல்லவா?' எனக்கேட்கப்பட்டது. அதற்கு அவ்விருவரும், 'நபி(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா சென்றபோது எழுந்து நின்றார்கள்; அப்போது அவர்களிடம் அது யூதரின் ஜனாஸா எனக் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் மனிதரில்லையா?' எனப் பதிலளித்தார்கள் என்றார்கள். 1312.
.
ஒரு ஜனாஸாவில் பங்கேற்றபோது அபூ ஹுரைரா(ரலி) மர்வானுடைய கையைப் பிடித்தார். ஜனாஸா (தரையில்) வைக்கப்படுவதற்கு முன் இருவரும் அமர்ந்துவிட்டார்கள். அங்கு வந்திருந்த அபூ ஸயீத்(ரலி) மர்வானின் கையைப் பிடித்து 'எழுந்திரு! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் (உட்காருவதைத்) தடுத்துள்ளார்கள் என்பதை இம்மனிதர் (அபூ ஹுரைரா) நன்கு அறிந்திருந்தும் இவ்வாறு செய்தி)ருக்கிறார்' எனக் கூறினார். உடனே 'அபூ ஸயீத்(ரலி) உண்மையுரைத்தார்' என அபூ ஹுரைரா(ரலி) கூறினார் புஹாரி: 1308 ஆமிர் இப்னு ரபீஆ (ரலி)


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு